ஆனால், அன்பின் உறவுகளே,
இந்தப் பாடலில் உள்ள ஆவல், இன்றைய சந்தைச்
சூழலுக்குச் சற்றே பொருந்தாததாக உள்ளது. ஏன் தெரியுமா? தங்கம்
வாங்க வருபவர்கள் விலையை அறிந்து கொண்டு, ஓடிச் செல்லும்
ஒரு சூழல் தான் இன்று ஏற்பட்டிருக்கின்றது!
விலை நிலவரத்தை
எடுத்துப் பார்ப்போம். 2024 ஜனவரியில், 24 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை
சுமார் ரூ. 182,000 ஆக இருந்தது. ஆனால்,
ஒரே வருடத்தில், 2025 ஜனவரி இறுதியில் அதன்
விலை ரூ. 215,000 ஆக மாறியது. இந்த
விலையேற்றம் சடுதியாக உயர்ந்து, 16.10.2025 நிலவரப்படி,
24 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் ரூ. 410,000
ஆகவும், 22 கெரட் ஒரு பவுணின் விலை சுமார் ரூ.
380,000 ஆகவும் பதிவாகியிருக்கிறது. இந்த
ஆண்டில் மாத்திரம் தங்கத்தின் விலை அதிகரிப்பு 60 சதவீதத்திற்கும்
மேற்பட்டதாகப் பதிவாகியுள்ளது!
எதிர்வுகூறல்
என்னவென்றால், இவ்வார இறுதியிலோ அல்லது அடுத்த வார முற்பகுதியிலோ 22 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 400,000 ஐத் தொடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விலை
அதிகரிப்பு இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும்
பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில், தங்கம் என்பது
பெரும்பாலும் முதலீட்டு மூலமாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால், தமிழர்களுக்கு மட்டுமே, தங்கம் சம்பிரதாயங்களுடன்
பின்னிப் பிணைந்த ஒரு அங்கமாக உள்ளது. இதனால்தான்,
வரவிருக்கும் திருமண வைபவங்களுக்குத் தயாராகும் குடும்பங்கள் பெரும்
நெருக்கடியைச் சந்திக்கின்றன. குறிப்பாக, தாலியில்
சேர்க்கும் மாங்கல்யம் என்பது திருமணம் நெருங்கி வரும் காலப்பகுதியில்
பொன்னுருக்கப்பட்டுச் செய்யப்படுவது வழக்கம். இந்தச் சடங்குகளுக்குத் தயாராகும்
வேளையில்தான் இந்தச் சடுதியான விலையேற்றம் அவர்களுக்குச் சவாலாக மாறியுள்ளது.
சரி, இந்த
விலையேற்றத்திற்குச் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் என்ன? தங்கத்தின் விலைக்கும், அமெரிக்க டொலரின்
பெறுமதிக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உண்டு. சர்வதேச பொருளாதார
மந்தநிலைகள், பணவீக்கம் மற்றும் உலகளாவிய அரசியல் பதட்டங்கள்
தங்கத்தின் விலையை எப்போதும் உயர்த்துகின்றன.
இதற்குச்
சமீபத்திய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. 1979 – 1980 காலப்பகுதியில் சர்வதேச
பொருளாதார மந்த நிலை, ஈரானியப் புரட்சி, ஆப்கானிஸ்தான் மீது சோவியத்தின் படையெடுப்பு போன்ற காரணங்களால், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 226 டொலரிலிருந்து 850
டொலர் வரை சடுதியாக அதிகரித்தது. ஆனால்,
இந்த விலையேற்றம் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.
அமெரிக்காவின்
பெடரல் வங்கியின் தலைவராகச் செயலாற்றிய போல் வோல்கர் மேற்கொண்ட "வோல்கர் ஷொக்" எனப் பிரபல்யம் பெற்ற முடிவுகளினால், அதாவது வங்கிகளின் வட்டி
வீதங்களை அவர் உயர்த்தியதன் விளைவாக, 1980 ஜனவரியில் 850
டொலராக இருந்த விலை, 1982 ஆம் ஆண்டுக்குள் 297
டொலர்களாக வீழ்ச்சியடைந்தது. இந்த விலை சீராக்கத்துக்கு சுமார்
இரண்டு வருட காலப்பகுதி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வரலாற்றுச்
சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால், எந்தவொரு சடுதியான விலையேற்றமும் நீண்ட
காலம் நிலைத்திருப்பதில்லை. ஆகவே, எமது
அன்பின் உறவுகளே, இந்தப் பொருளாதாரச் சவாலை நாம்
பொறுமையுடனும், விவேகத்துடனும் எதிர்கொள்ள வேண்டும். திருமண வைபவங்களை எளிமையாக நடத்துவதற்கோ, முதலீட்டுத்
திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கோ, ஒரு சமூகமாக
நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும்.
நன்றி.



0 comments:
Post a Comment