இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார ரீதியில் தேசிய சராசரிக்குப் பின்னடைந்த நிலையிலேயே தொடர்ந்து வருகின்றன. யுத்தத்தால் சிதைந்த உள்கட்டமைப்பு, தொழில் வாய்ப்புகளின் பற்றாக்குறை, மூலதனப் பற்றாக்குறை மற்றும் பிராந்திய இணைப்புக்குறைவு ஆகியன இப்பிராந்தியங்களின் அபிவிருத்தியை நீண்டகாலமாக முடக்கி வைத்திருந்தன. இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தை (Integrated Regional Development Programme) நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து (International Development Association – IDA) நூறு மில்லியன் அமெரிக்கன் டொடாலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு முடிவாக அமைந்துள்ளது. இந்த நிதியுதவி, ஒரு எண்ணிக்கை மட்டுமன்று; முப்பதாண்டு காலப் பொருளாதார இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப முயலும் லட்சக்கணக்கான மக்களுக்கான ஒரு நம்பிக்கைக் கீற்று.
வடக்கு,
கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான இந்த நிதியுதவி தனித்தியங்கும்
ஒரு தருணமாக வழங்கப்படவில்லை. 2026ஆம் ஆண்டு முதல்
2031ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு 1,000 மில்லியன் அமெரிக்கன் டொடாலர்களை வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஏற்றுக்கொண்டுள்ள
விரிவான வேலைத்திட்டத்தின் (Country Partnership Framework) ஒரு
பகுதியாகவே, இந்த நூறு மில்லியன் டொடாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தசாப்த கால நோக்கிற்கமைய வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமிடல் என்பதையும்,
தற்செயலான ஒரு அறிவிப்பல்ல என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இந்தக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும்
உலக வங்கி குழுமத்துக்கும் இடையில் இடம்பெற்ற கடன் உடன்படிக்கை பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக
நிறைவடைந்துள்ளமை, இருதரப்பு நம்பகத்தன்மையின் அடையாளமாகவும்
கருதப்படலாம். நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த
யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பது, இந்தத் திட்டம்
மிக உயர் மட்டத்திலிருந்தே கண்காணிக்கப்படும் ஒரு முன்னுரிமைத் திட்டமாக அமையும் என்ற
எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பயன்கள்
பல்பரிமாணம் கொண்டவை. பொருளாதார
சாத்தியக்கூறுகளைக் கொண்ட துறைகளை வலுப்படுத்துதல், நுண்,
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக முயற்சிகளை (Micro,
Small and Medium Enterprises – MSMEs) ஊக்குவித்தல், பொருளாதார வாய்ப்புகளை விரிவாக்குதல், மற்றும் பிராந்தியத்
தொடர்பாடல்களை (Regional Connectivity) மேம்படுத்துதல் ஆகியன
இத்திட்டத்தின் மையக் குறிக்கோள்களாக அமைந்துள்ளன. அத்துடன் நிலையான
பிராந்திய அபிவிருத்தி ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும்
நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, மற்றும் உள்ளூர்
கைத்தொழில் போன்ற துறைகளில் இயங்கும் மக்கள், இத்திட்டத்தின்
நேரடிப் பயனாளிகளாக அமையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து வருடத் திட்டம், ஒரு தலைமுறையாக பொருளாதார
விளிம்பில் வாழ்ந்த மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டமாக அமைய வேண்டும் என்பதே பொது
எதிர்பார்ப்பு.
இருப்பினும்,
இத்தகைய பாரிய அளவிலான வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள் குறித்து,
சமூகத்தின் ஒரு பகுதியினரிடையே நியாயமான கேள்விகளும் எழுகின்றன.
இலங்கையின் கடன் சுமை ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், மேலும் ஒரு கடன் உடன்படிக்கை நாட்டின் நிதிப் பொறுப்பை அதிகரிக்குமா என்ற கவலை
சிலரிடையே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் வடக்கு,
கிழக்கு மாகாணங்களுக்கு அறிவிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள்,
முகாமைத்துவக் குறைபாடுகள், வெளிப்படைத்தன்மையின்மை
மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக முழுமையாக அமுல்படுத்தப்படாமல் நின்றுவிட்ட அனுபவங்களும்
இதற்குப் பின்னணியில் உள்ளன. இத்திட்டமும் அத்தகைய தலைவிதியை
எதிர்கொள்ளுமா என்ற ஐயப்பாடு நியாயமானதே.
எனினும்,
இந்த அச்சங்கள் இத்திட்டத்தின் மதிப்பைக் குறைக்கும் காரணங்களாக அமையலாகாது.
முதலாவதாக, இது ஒரு நேரடி மானியமல்ல; சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் நிதியுதவி பொதுவாக மிகக் குறைந்த வட்டி விகிதத்திலும்,
நீண்டகால திருப்பிச் செலுத்தல் காலப்பகுதியிலும் வழங்கப்படுவதால்,
இது சந்தைக் கடன்களுடன் ஒப்பிடும்போது நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கின்றது.
இரண்டாவதாக, முன்னைய திட்டங்களின் தோல்விகள் முகாமைத்துவக்
குறைபாடுகளால் ஏற்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்வதே, எதிர்காலத்தில்
அத்தகைய குறைபாடுகளைத் தவிர்ப்பதற்கான பாடமாக அமைய வேண்டுமே தவிர, புதிய வாய்ப்புகளை மறுப்பதற்கான காரணமாக அமையக்கூடாது. உலக வங்கியின் திட்டங்கள் பொதுவாக கண்காணிப்பு, மதிப்பீடு
(Monitoring and Evaluation) மற்றும் நிதி வெளிப்படைத்தன்மைக்கான கட்டமைப்புகளுடன்
இணைக்கப்பட்டிருப்பதால், உள்ளூர் நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலையும்
இது வலுப்படுத்தக்கூடும்.
இத்திட்டம் உண்மையான பயனை அளிக்கவேண்டுமெனில், சில கட்டமைப்பு ரீதியான நடவடிக்கைகளும்
இணைந்து அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியம். முதலாவதாக,
திட்ட நிதியின் ஒதுக்கீடு மற்றும் செலவினம் தொடர்பான தரவுகள்,
மாதாந்த அல்லது காலாண்டு அடிப்படையில் பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய
வகையில் வெளியிடப்பட வேண்டும். இரண்டாவதாக, திட்ட முகாமைத்துவக் குழுக்களில் மாவட்ட செயலகங்கள், பிராந்திய அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின்
பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்; இதனால் மேலிருந்து
கீழ் நோக்கிய திட்டமிடலுக்குப் பதிலாக, தேவை அடிப்படையிலான திட்டவடிவமைப்பு
சாத்தியமாகும். மூன்றாவதாக, நுண்,
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக முயற்சிகளுக்கான நிதி வசதிகள்,
வெறும் கடன் வழங்கலுக்கு மட்டும் மட்டுப்படாமல், திறன் அபிவிருத்தி (Skills Development), சந்தைப்படுத்தல்
ஆதரவு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும். நான்காவதாக, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் ஈடுபட்டுள்ள
சமூகங்களுக்கு, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்களைத் தாங்கிக்கொள்ளக்கூடிய
உள்கட்டமைப்பு முதலீடுகள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஐந்தாவதாக,
இளைஞர் மற்றும் பெண்கள் தலைமையிலான தொழில்முனைவை ஊக்குவிக்கும் தனித்துவமான
உபதிட்டங்கள், இப்பிராந்தியத்தின் மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கு
உதவும்.
இத்திட்டத்தின் வெற்றி, ஒதுக்கப்படும் நிதியின் அளவில் மட்டும்
தங்கியிராது; அது அமுல்படுத்தப்படும் விதத்திலேயே தங்கியுள்ளது. வெளிப்படைத்தன்மை, பங்குதாரர் ஈடுபாடு, மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு
ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் இத்திட்டம் நகர்த்தப்பட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு
இது ஒரு திடமான அடித்தளமாக அமையக்கூடும். மாறாக, முன்னைய திட்டங்களைப் போன்று அறிவிப்புகளுக்கும் அமுலாக்கத்திற்கும் இடையிலான
இடைவெளி தொடர்ந்தால், இந்த வாய்ப்பும் வரலாற்றின் ஒரு பக்கத்தில்
மறைந்துவிடும் அபாயமும் இல்லாமலில்லை.
இறுதியில்,
முப்பதாண்டு கால பொருளாதார இடிபாடுகளுக்கு மத்தியில் வாழும் வடகிழக்கு
மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரு படி முன்னெடுக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள
இந்த ஐந்து வருடத் திட்டம், சரியான நிர்வாகத்துடன் அமுல்படுத்தப்பட்டால்,
ஒரு தலைமுறையின் பொருளாதார எதிர்காலத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்டதாக
அமையும். இந்த முன்னெடுப்பிற்காக மக்கள் சார்பாக உலக வங்கிக்கு
எமது பாராட்டையும் நன்றியினையும் தெரிவிப்பதுடன், இந்த நம்பிக்கையை
நிதர்சனமாக்கும் பொறுப்பு, இனி அரசாங்கத்தினதும் உள்ளூர் நிர்வாகத்தினதும்
கரங்களில் உள்ளது என்பதையும் இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.


0 comments:
Post a Comment