ADS 468x60

01 December 2020

நாம் விவசாயத்தில் சாதிக்கும் தருணம் இது.

என்னதான் மாற்றம் வந்தாலும் நாம் உண்டுவாழ உணவு தேவை, அந்த உணவை உற்பத்தி செய்ய விவசாயிகள் தேவை. நாம் ஒவ்வொருவரும் நாள்தோறும் மூன்று வேளைக்கு சாப்பிட்டு உயிர்வாழ, கோடிக்கணக்கான இலங்கை மக்களின் பசியைப் போக்கும் மாபெரும் சேவை புரிபவர்கள் விவசாயிகள். நம் உழவர் பெருமக்கள், அன்னபூரணியைப் போல, வயிற்றுக்கு உணவு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் வறுமையின் பிடியில் இருந்து இன்னும் மீண்டபாடில்லை. இதற்காக பல திட்டங்களை அரசு தனியார் என அனைவரும் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விவசாயிகள் விவசாயத்தில் புதிய வகையில் சிந்திக்க வேண்டும். அவர்களது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

எமது நாட்டில் குறிப்பாக விவசாயிகளுக்கு ஏராளமானப் பிரச்னைகள் உள்ளன. கட்டுப்படியாகாத விவசாயம், மழை, வெள்ளம், வறட்சி, உழவுத் தொழில் தெரிந்த வேலையாட்கள் இல்லாத நிலைமை, விளைந்த பொருட்களை விரைவாக விற்பனையாக்க முடியாமல் அல்லல்படுவது போன்ற சவால்களையெல்லாம்; சொல்லி மாளாது. பருவ கால மழை அதிகமாகப் பெய்தும், அது இல்லாமல் காய்ஞ்சும் காயப்படுத்துகிறது. நல்ல முற்றிய விதைகள் கிடைப்பதில்லை. போதிய நீர்ப்பாசன வசதியின்மை, அறுவடை செய்த பொருளை விற்பனை செய்ய முடியாமல் அலைவது, திகைப்பது, திண்டாடுவது மிக மிக வேதனைக்குரிய உண்மை. விவசாயத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டால், தாங்கிக் கொள்ள முடியாது. வாழ்வாதாரமே நசிந்து விட்டால் எதிர்காலம் இருண்டுபோக, வாழ்வதை விட சாவதே மேல் என்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.விவசாயிகளின் வேதனைகளும், துயரங்களையும் பார்த்துக்கொண்டு மத்திய அரசும் சும்மா இருக்கவில்லை.

விவசாய பயிர்களுக்கு இடர் மற்றும் அனர்த்தம் ஏற்பட்டு அழியுமானால், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணம் வழங்கி, விவசாய பெருங்குடிமக்களைக் காப்பாற்ற திட்டங்கள் வலுவாக இருக்க வேண்டும். அதாவது இடர்பாடுகள் வந்தாலும் சமாளிக்கும் சூழ்நிலை ஏற்பட வேண்டும். நமது விவசாய உற்பத்திகளை மிகைப்படாமல் சந்தைப்படுத்த ஒவ்வொரு, 5-6 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாயிகளுக்கென கிராமப்புற சில்லரை விவசாய விற்பனைக் கூடம் அவசியமாகத் அமைத்துக்கொடுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் எல்லா கிராமப்புற சந்தைகளையும் இணைத்து விற்பனை வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இன்று பல விவசாயப் பெருங்குடி மக்கள் தற்கொலை என்னும் அவலத்திலிருந்து மீண்டு எழுவதற்கு முயல்கின்றனர். இன்றய அளவில் தற்சார்புடன் அல்லது சுய தன்னிறைவுடன் வாழ இளம் தலைமுறையினர் தீர்மானிக்கின்றனர். இன்னும் இன்னும் படித்த பல இளம் விவசாயிகள் சூறாவளியாகக் களம் இறங்கவேண்டும்.

உதாரணத்துக்கு பார்ப்போமானால், நம் ஊர்களில், ஒரு விவசாயி ஒரு பயிரை தன் நிலத்தில் விளைவித்தால், அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு விவசாயியும், அதே பயிரை விளைவிக்கத் துவங்கி விடுவர். இதன் விளைவாக விவசாயப்பொருட்களின் விலை சரியத் துவங்கியது. குறிப்பாக நம் ஊர்களில் விளையும் விளையும் மிளகாய்(கொச்சிக்காய்) அத்தனையும் விற்ற பிறகும் கூட, அந்த விவசாயிகளின் வருமானம், குறிப்பிட்ட அளவைத்தாண்டுவதில்லை.

ஆனால் நாம் அடிப்படையில் உற்பத்திப்பொருட்களுக்கு பெறுமதி சேர்ப்பதனை செய்யத் தவறிவிடுகின்றோம். எனவே, இந்த விவசாயிகள் ஒரு சங்கத்தை உருவாக்கலாம். தங்களிடம், 24 மணி நேர மின் வசதி இருப்பதால், அவர்கள் மின் இணைப்பைப் பெற்று அதைப் பயன்படுத்தி, மிளகாய்த் தூளைத் தயாரிப்பது பொருத்தமாக இருக்கும். அது நஷ்ட்டத்தை உண்டுபண்ணாமல் பெறுமதி சேர்த்து வருவாயை அதிகரிக்கும்.

ஆகவே இதற்கான பதனிடும் இயந்திரங்களை வாங்கி, அதை பொதிசெய்யும்; வேலையையும் செய்யலாம்;. இதுவரையில், மொத்தமாய் குறித்த விலைக்கு மாத்திரமே விற்ற நாம், இப்போது, 3-4 மாத கால முயற்சிக்குப் பின், அதேயளவு மிளகாயில், மிளகாய்த்தூள் விற்று, அதிக ரூபாய் வருமானம் பெறலாம். இத்தகைய விவசாயிகளின் உழைப்பைப் பார்த்து, அனைவரும் பிரமிப்பு அடைவர். இது சாதாரண காரியம் அல்ல. ஆழ உழுவதை விட அகலமாக உழுது, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, பருவத்தை பயிர் செய்து, பிரமாண்ட சாதனைப் படைக்கலாம் நம் விவசாயிகள். தீவிரமான, கடுமையான வேலையின் மூலம், நம் விவசாயிகள் இதுவரையில் இல்லாத வகையில் உணவு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யலாம்;. ஆந்த வகையில் எமது ஜனாதிபதி விவசாயத்துக்கு முக்கியம் கொடுக்கும் தேசிய கொள்கையினை வகுத்துள்ளமை இன்னும் எமது எதிர்கால விவசாயத்தை வளப்படுத்த போதுமானது.

இந்த நிலையில், சோர்ந்து, நலிந்து போய் விட்ட விவசாயிகளுக்கு, தனியார்களும் புலம்பெயர் உறவுகளும் தாமாக முன்வந்து முதலீடு செய்யவும், இப்போதைய அரசு விரும்பம் தெரிவிக்கின்றது. எனினும், ஒட்டு மொத்தமாக விவசாயிகள் வளமாக வாழ வேண்டும் என்ற எண்ணம், எல்லார் மனதிலும் உருவாகியுள்ளது என்பது நிச்சயம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நாம் இணைந்து செயல்படுவோம். விவசாய விளைபொருட்களாகவோ, கால்நடை வளர்ப்பாகவோ இருக்கலாம்.

இன்று பல இறக்குமதிகள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், உள்ழூர் உற்பத்திக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆகவே நாம் அவற்றை உணர்ந்து எமது உண்மையான தொழிலை வழப்படுத்தி நாமும் நலமாக முன்னேறி நாட்டையும் கட்டியெழுப்பவேண்டும். ஆகவே விவசாயிகளின் மேம்பாட்டோடு தொடர்புடைய அனைத்து வழிகளிலும் நாம் கவனம் செலுத்தி விவசாயிகளைக் கொண்டாடி, அவர்கள் வாழ்வில் வளம் ஓங்கச் செய்வோம். விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கச் செய்வோம். 'உழவர்கள் உழவைக் கைவிட்டுவிட்டால், இந்த நாட்டில் துறவிகளும், சன்னியாசிகளும் கூட வாழ முடியாது' என்று, திருக்குறளில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

விவசாயமே செல்வத்தைத் தருகிறது; அறிவை வளர்க்கிறது. விவசாயமே மனித வாழ்வின் அடிப்படை. விவசாயிகளே, நீங்கள் வாழ்க வளமுடன் என்று அவர்களைக் கொண் டாடுவோம்!

0 comments:

Post a Comment