ADS 468x60

27 December 2020

கொரோணா நெருக்கடியை வென்றெடுக்க தொழிலுக்கு உதவும் தொழில்நுட்பங்கள்.

மனிதனை மனிதன் சந்திக்க முடியாத, நாடுகளுக்கிடையில் நேரான தொடர்புகள் இல்லாத நிலையில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கிவிடுமோ என்ற அச்ச நிலை ஏற்பட்டு முற்றாக அவை ஸ்தம்பித்திருந்தன.

ஆனால் அவை ஏற்கனவே வளர்சியடைந்த தொழில்நுட்பத்தினை துணையாகக்கொண்டு மீண்டும் இந்த புதிய இயல்பு நிலையில் வளர்ந்து தொடர்ந்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். இவற்றுக்குள் மக்கள் தங்களை பழக்கிக்கொண்டு பாதுகாப்பாக தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த பொருட்களை வாங்கவும் விற்கவும் இந்த தொழில்நுட்பம் பலவகையிலும் உறுதணையாக இருந்து வருகின்றமையை இந்தக் கட்டுரையின் ஊடாக எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் நாமும் நம்மை கொண்டுவரும் பொழுதே நாம் இந்த கொடிய நெருக்கடியினை வெற்றிகொள்ள முடியும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் அறிந்த வகையில், உலகில் 2019 டிசம்பரில்தான் சீனாவின் வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் 19 ஆனது, ஒரு சில மாதங்களுக்குள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்று பாதித்துள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி ஏற்பட்ட பரபரப்பு மற்றும் அச்சநிலை காரணமாக நாடுகளை முடக்கும் ஒரு நிலைக்கு கொண்டு சென்றதனால் அந்தந்த நாடுகளின் பல வர்த்தக நடவடிக்கைகளையும் அதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய உற்பத்திகளையும் தற்காலிகமாக நிறுத்த நிர்பந்தித்தன. 

எமது நாட்டின் முற்றுமுழுதான முடக்கம் காரணமாக 2020 ஆம் ஆண்டு முழுவதுமாக பல தொழில்கள் இழப்பை சந்திக்க வழிவகுத்தது. ஆரம்பகால கணக்கீட்டின்படி இந்த கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எமது பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கணிப்பீட்டில் குறைந்தபட்சம் 2.4% சதவீத்த்தினை இழக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளமை கவலை தருகின்றது.

அப்போதிருந்து, சமூகங்களுக்கு இடையிலான தொடர்புகளில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் இடைவெளி உலகளாவிய பொருளாதாரத்தின் பல அம்சங்களை மிக மோசமாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்தக் காலங்களில் பணவீக்க விகிதங்கள் உயர்ந்து வருவது நிதிப் பரிமாற்றம் மற்றும் பல சிரமங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி போன்ற காரணிகளுக்கு வழிவகுத்தது.

ஆகவே இவ்வாறான பாரிய பொருளாதார இழப்புகள் குறிப்பாக சுற்றுலா மற்றும் சர்வதேச வர்த்தகம் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் பல குறிப்பிடத்தக்க தடைகளை ஏற்படுத்தி இந்த ஆண்டு முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, 2020 யூன் நடுப்பகுதியில் இருந்து 2020 யூலை இறுதி வரை, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தொழில்களில் குறிப்பிடத்தக்க இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளன.

எனவேதான், இந்த வருடம் முழுவதுமாக பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு, அவற்றின் மொத்த உற்பத்தி வெளியீடுகள் குறைந்துவிட்டன. எடுத்துக்காட்டாக, உற்பத்தித்துறை (Manufacturing) 23% வீதம் சரிவினைச் சந்தித்துள்ளது, உதாரணமாக கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் (Coke and refined petroleum products ) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர அடிப்படை உலோகங்கள் மற்றும் அணியும் ஆடைகள் உள்ளிட்ட உற்பத்தி நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 30% வீதத்துக்கும் அதிகமாக குறைவடைந்துள்ளன.

ஆனால் இவ்வாறான ஒரு நெருக்கடியான காலங்களுக்குள் அன்றாட உள்ளூர் (இலங்கை சார்ந்த) மற்றும் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளைத் தொடரவும், தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் மாற்று தொழில்நுட்ப முறைகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர், இவற்றின் ஊடாக  நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை குறைக்கவும் சமாளிக்கவும் அவர்களுக்கு உதவுகின்றன.

புதிய இயல்பு நிலையும் தொழில் நுட்பங்களின் தேவையும்.

கொவிட்டுடன் சேர்ந்து பயணிப்பதற்கான கருவிகள்- 

சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தியது, இதன் விளைவாக இலங்கை மக்களில்; பெரும் பகுதியினர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவின் கீழ் இருந்தனர், இதன் காரணமாக நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

எனவே, இந்த முடக்கம் காரணமாக மாற்று தகவல்தொடர்பு முறைகளின் தேவை ஏற்பட்டது. சூம்-(ZOOM), ஸ்கைப்-(Skype) மற்றும் மைக்ரோசொஃப்ட் ரீம்ஸ்- (Microsoft Teams) சாதனங்கள் என்பன போன்ற தொழில்நுட்ப ஒத்துழைப்பு கருவிகளின் பயன்பாடு அதிகரித்ததால், வீடியோ கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் ஆகியனவற்றின் தேவை நிறுவனங்களிடையே அதிகரித்தது.

இந்த ஊடக, தொடர்பாடல் கருவிகள் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவின. இது ஒரு மாற்று, தெளிவான மற்றும் குறைந்த விலையில் தகவல்தொடர்பு முறையை பயன்படுத்த நிறுவனங்களை அனுமதித்தது, இது நிறுவனங்களுக்கு அன்றாட கூட்டங்களில் மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் (வெபினார்கள்-Webinars) நேர்முகத் தேர்வுகள் மற்றும் பல காரியாலய கலந்துரையாடல்களை செவ்வனே கொணடு செல்ல அவர்களுக்கு உதவியது. 

ஆகவே இவ்வாறான புதிய தொடர்பாடல் கருவிகளைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை நிறுவனங்கள் ஒரு புதிய போட்டித்தன்மையுடன் புதிய கோணத்தில் நடாத்திச் செல்ல இந்த தொழில்நுட்ப சாதனங்கள் கைகோர்த்து வருகின்றன.

ஒரு உண்மையான தகவலை நாம் இங்கு பார்க்கலாம், அதாவது மைக்ரோசாப்டின் கூற்றுப்படி, கொவிட்-19 தொற்றுநோய் பரவ ஆரம்பிக்கும் வரை, மைக்ரோசாப்ட் நிறுவனம் படிப்படியாக, நிலையான வேகத்தில் வளர்ந்துகொண்டு வந்தன. அதனடிப்படையில் நவம்பர் 2019 இல், மைக்ரோசொப்ட் பாவனையாளர்கள் 20 மில்லியன் செயற்பாட்டில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நாடுகள் முடக்கங்களை அறிவித்தது வரை, இந்த மென்பொருளின் புகழ் வானளாவ அதிகரித்து, அதனால் மார்ச் மாதத்திற்குள் 44 மில்லியன் பயனர்களை இது எட்டியது அதைத் தொடர்நது ஏப்ரல் மாதத்திற்குள் 75 மில்லியனாக உயர்ந்தது.

நிதியினைக் கையானுவத்கான தொழில்நுட்ப பாவனை 

கோவிட் 19 தொற்றுநோய்க்குப் பிறகு நிறுவனங்களின் நிதிப்பிரச்சினைகளைச் சமாளிக்க ஃபிண்டெக்- The Fintech (Financial Technology) (நிதி தொழில்நுட்பம்) பெரும் பங்கைக் கொண்டிருந்தது. சுய தனிமைப்படுத்தலானது பல நபர்களை தங்கள் அன்றாட நடவடிக்கைகளான ஷொப்பிங் அல்லது உணவகத்திற்குச் செல்வதற்கான மாற்று முறைகளைக் கண்டறியும் வழிவகைகளை காட்டியது.

இந்த தொற்றிடர், சுயதனிமை, மக்களுக்கிடையிலான முடக்கம் போன்ற இந்த பெரிய நெருக்கடியை சமாளிக்கவேண்டிய மக்களிடையே வித்தியாசமான ஒரு தேவை படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக, பேபால் (PAYPAL), ஸ்ட்ரைப் (Stripe) போன்ற இணையவாயிலான கட்டண சேவைகளின் அதிகரித்த அறிமுகம் அல்லது ஃப்ரீமி( FriMi) மற்றும் டயலொக் ஈசட் காஷ்( Dialog eZ Cash) கட்டண முறைகள், பிளாக்செயின்கள் மற்றும் பிடஸ்கொயின்கள்- (bitcoins) உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸ்கள்- (cryptocurrencies) போன்ற முறைகளுடன் இணைந்து (தனியுரிமை பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன), இணையவழி கட்டண வழிவகைகளை தத்தமது வர்த்தகங்களில் மேம்படுத்திக்கொள்ளுவதனில் வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாடுபடுகின்றன.

இவ்வாறான நேருக்கு நேரில்லாத புதிய தொடர்பாடல் முறையானது இணையவழி வர்த்தகம் போன்ற புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வர்த்தக செயற்பாடுகளையும் அதன் இலாபநட்டங்களையும் பராமரித்து வளர்த்தெடுக்க உதவி வருகின்றது.

சமூக ஊடகங்கள் மூலமான வர்தகம்

நாடு முழுவதும் முடக்கப்பட்டதன் விளைவாக சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் குறித்து பல நுகர்வோர், வாடிக்கையாளர்கள் அவற்றைப் பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களின் பயன்பாட்டில் கடும் அதிகரிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, நிறுவன வர்தகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க இந்த சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

எமது நாட்டின் பல வர்த்தகங்கள்;, குறிப்பாக உணவு மற்றும் சில்லறை தொழில்களில், வாடிக்கையாளர்களுக்கு, சேவையின் தொடக்க நேரம், ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாது நகரும் விநியோக முறைகள் மற்றும் சாத்தியமான சலுகைகள் அல்லது தள்ளுபடிகள் போன்ற காரணிகள் தொடர்பான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்த தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஒரு யுத்தியைக் கையாண்டுதான் நாடு முற்றாக முடக்கப்பட்ட நிலையிலும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களையும் சேவைகளையும் அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து விற்க முடிந்தது.  இதனால் அவர்களது வர்த்தக செயற்பாட்டுத் தொடர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

கொரோணாவில் இருந்தான ஊழியர்களின் பாதுகாப்பு- 

இந்த தொற்று நோய் பரவுவதில் கட்டுப்பாடு இல்லாததால், பணியாளர்கள் வேலைச் சூழலுக்குள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது அவசியம். ஆந்தவகையில் தொழில்நுட்பம், மீண்டும், இந்த சூழலில் தொழில்முனைவோருக்கு பெரிதும் உதவி வருகின்றது.

சில எளிய எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம், வெப்பமானிகள் போன்ற கருவிகளைப் தொடர்சியாகப் அவர்களை பரிசோதிப்பதில் பயன்படுத்துதல், ஊழியர்கள் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும் அல்லது முகமூடி அணிய வேண்டும் என்பனவற்றுடன் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்கின்ற பயிற்சிகளை வீடியோ பதிவுகள் மூலம் ஊழியர்களுக்கு அனுப்புதல் போன்ற பாதுகாப்பு விடயங்களை மின்னஞ்சல் அல்லது மெசஞ்சர்; போன்ற இணைய ஊடகங்கள் மூலம் தொடர்சியாக நினைவூட்டி நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க பல முயற்சிகளையும் யுத்திகளையும் பாவித்து வருகின்றனர்.

இருப்பினும், 'வீட்டிலிருந்தவாறே வேலை'- Work From Home என்கின்ற புதிய வேலை கலாச்சாரம் நிறுவன முகாமையாளர்களை ஆரம்பத்தில் மிகவும் சிக்கலானதாக ஆக்கியிருந்தது. இதன்காரணமாகவே, நவீனமயமாக்கப்பட்ட அணுகுமுறைகளின் அறிமுகம் இந்த சில மாதங்களில் புதிதாக எழுந்தது. 

எடுத்துக்காட்டாக, வீடியோக்கள், புகைப்படங்கள், புஐகு கள் மற்றும் Pனுகு கள் போன்ற ஆதாரங்களைக் கொண்டு வழிகாட்டப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாதுகாப்பு நிலைகளை சரிபார்க்கவும் பகுப்பாய்வு செய்யவும் மற்றும் கவனிக்கப்பட வேண்டிய ஏதேனும் மாற்றங்களைக் கண்டறியவும் தொழிலாளர்களின் நாளாந்த தரவுகளைச் சேமித்தல் மற்றும் அவற்றை பகுப்பாய்வு செய்து அறிக்கையிடல் முறைகள் கொண்டுவரப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களை திருப்திப்படுத்தவும் செய்கின்றன, எனவே இவை அனைத்தும் இழந்துபோன தமது ஊழியர்களின் உற்பத்தித்திறனைத் தக்கவைக்க வர்த்தக நிறுவனங்களுக்கு உதவின.

கண்காணிப்பு மற்றும் தடயமறிதல் வழிமுறைகள்

கொரோனா வைரஸ் முதன்முதலில் 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, பல நாடுகள் ஸ்மார்ட்போன் 'அப்ஸ்' APPS பயன்பாடுகளை வடிவமைக்கத் தொடங்கின, அவை வைரஸின் அறிகுறிகளைக் கண்டறிவதைச் மையமாக் கொண்டமைந்தன. குறிப்பாகப் பார்ப்போமானால், சில 'அப்ஸ்' பயன்பாடுகளில் இலங்கையில் உள்ள மைஹெல்த்- MyHealth, அல்லது சர்வதேச அளவில், சிங்கப்பூரில் டிரேஸ்டுகெதர்- TraceTogether , அமெரிக்காவிலிருந்து கோவிட்வாட்ச்- CovidWatch  மற்றும் இந்தியாவில் இருந்து ஆரோக்யா சேது- ஆகியவை குறிப்பிடத்தக்கன.

இந்த பயன்பாடுகள், ஊழியர்களால் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யப்படலாம், குறிப்பாக சில்லறை விற்பனை நிலையங்கள் அல்லது உணவகங்கள் போன்ற இடங்களில், பாதுகாப்பு சோதனை கருவியாக செயல்பட முடியும், ஊழியர்களிடமிருந்தும் வைரஸைக் கொண்டு செல்லக்கூடிய எந்தவொரு நபரையும் அடையாளம் காண வர்த்தக நிறுவனங்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் உதவுகிறது.

இவை தவிர, வங்கிகள் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்கள் போன்ற நிறுவனங்களிலும் பல கியூஆர் குறியீடு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதாவது, வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி விற்பனை நிலையங்களில் கிடைக்கும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வார்கள், எனவே விற்பனை செய்யும் இடத்திற்குச் செல்லாமலேயே அவர்கள் கொள்வனவு செய்யும் வழிகள் அறிமுகமாகி வருகின்றன. இவ்வாறான நவீன தொழில்நுட்ப முறைகள் வைரஸில் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது, எனவே, வர்த்தக நிறுவனங்கள் பாதுகாப்பாக நடவடிக்கைகளைத் தொடர முடிகின்றது.

ஆகவே இன்று உலகப் பொருளாதாரம் ஒரு சவாலான நேரத்தை கடந்து செல்கின்ற நிலையில், உலகளாவிய மந்தநிலையின் தாக்கத்தால் இனி வரும் ஆண்டில்கூட பொருளாதார சவால்களை இரட்டிப்பாக்க முடியும்.

எவ்வாறாயினும், ஏறக்குறைய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்ப மாற்றீடுகள் கிடைப்பதானது நிறுவனங்கள் தங்கள் அன்றாட பரிவர்த்தனைகளை பராமரிக்கவும் தொடரவும் உண்மையிலேயே உதவி வருகின்றது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு இந்த புதிய இயல்புக்கு அல்லது மாற்றத்துக்கு ஏற்ப உதவுவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே, இங்கு வர்தகங்கள் எதிர்கொள்ளக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை குறைக்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது என்பதனை நாம் உறுதியாக நம்பலாம்.

0 comments:

Post a Comment