ADS 468x60

13 December 2020

அரசதுறை ஊழியர்கள் வினைத்திறனுடன் செயற்படுகின்றனரா?

கடந்த காலங்களில் மோசமான அரசதுறை நிர்வாகமும் பயனற்ற அரசாங்கத்தின் கொள்கைகளும்; இலங்கையில் பொருளாதார வளர்ச்சியினை மந்தமடையச் செய்துள்ளன. கடந்த 66 ஆண்டுகளில், இலங்கையின் சராசரி தனிநபர் வருமான வளர்ச்சி கிட்டத்தட்ட 3.6% சதவீதமாகவே இருந்துவந்துள்ளது. 

இது ஒரு நாட்டின் மக்கள்தொகையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை. இந்த விகிதத்தில், நாட்டில் ஒரு சராசரி நபர் உண்மையான வருமானத்தை இரட்டிப்பாக்க சுமார் 20 ஆண்டுகள் ஆகும்  என பொருளியலாளர்கள் அஞ்சுகின்றனர். இது ஒரு நீண்டகாலமாகும், இருப்பினும், இலங்கை 7% சதவீதமாக வளர முடிந்தால், வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்கும் காலம் 10 ஆண்டுகள்தான், அது 10% சதவீதமாக இருந்தால், அந்த காலம்7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

எமது நாட்டில் குறிப்பாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக அதன் போட்டித்தன்மையையும் வர்த்தகத்தை எளிதாக்குவதையும் விரும்பினால். மேலும், அரச நிறுவனங்கள் திறமையும் தகுதியும் உடைய பணியாளர்களுடன் பணியாற்ற வேண்டும். சில அரசு ஊழியர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாலும், இலங்கை தன்னை முன்னேற்றிக்கொள்வதில் பல அதிகாரத்துவ தடைகளை எதிர்கொள்கிறது, இதன் விளைவாக லஞ்சம், ஊழல் மற்றும் பிற வளர்ச்சி சிக்கல்களைத் எதிர்கொண்டு வருவது நாம் அறிந்ததே.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம் சிறப்பாக செயல்பட அரசாங்கம் தனது பங்கை திறம்பட செய்ய வேண்டும். புதிய அரசின் 'சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை' ஆவணம் ஒரு விரிவான குறிக்கோள்களையும் அவற்றை அடைவதற்கான சில உத்திகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆவணம் சர்வதேச போட்டித்தன்மையில் நாட்டின் குறைந்த தரவரிசையை அங்கீகரிக்கிறது, மேலும் அதன் தரவரிசையை உயர்த்துவதாக உறுதியளிக்கிறது. போட்டியை ஊக்குவிப்பதன் மூலமும், வெளிப்படைத்தன்மையை செயல்படுத்துவதன் மூலமும் அரசாங்கம் ஊழலை அகற்றும் என்று அது கூறுகிறது. 

ஆந்தவகையில் அரசதுறையில் உள்ள மனிதவள அபிவிருத்தித்; திட்டத்தை உருவாக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இந்த வாரம் ஒப்புதல் அளித்தது, இது பலரால் வரவேற்கப்படும் அதே நேரம், அவர்களது செயல்திறனை மேம்படுத்துவதற்கு அரச துறைக்கு இன்னும் பெரிய அளவிலான தொழிலில் தகைதேர்ந்தவர்கள்; தேவைப்படுகிறது, அத்தோடு நாட்டுக்கு உடனடி பெறுபேறுகளைப் பெற அவை சார்ந்த புதிய  சீர்திருத்தங்கள் அவசரமாக தேவைப்படுகின்றது.

அண்மையில் (17 நவம்பர் 2016 நிலவரப்படி) இடம்பெற்ற புள்ளிவிபரக் கணக்கெடுப்பின்படி, 1,109,475 பேர் - இலங்கையின் படையினரைத் தவிர, அரசாங்க மற்றும் அரைஅரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களில், 65.3% வீதம் பேர் மத்திய அரசிலும், 34.7% வீதம் பேர் மாகாணசபைக்குட்பட்ட பதவிகளையும் வகித்துள்ளனர். 

அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 55.1% வீதமானவர்கள் ஆண்கள், 44.9% வீதமானவர்கள் பெண்கள். மத்திய மற்றும் மாகாண அரச துறையையும் தனித்தனியாக பரிசீலிக்கும்போது, இந்த சதவீதங்களில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. மாகாண அரசதுறையில் பணிபுரிவோரில், 61.6% வீதமானவர்கள் பெண்கள், மத்திய அரசில் பெரும்பான்மையானவர்கள் 64% வீதம் ஆண்கள்  என தரவு கூறுகின்றது.

அரசதுறை நோக்கி பலரும் முன்வைக்கும் ஒரு குறைபாடு என்னவெனில், அது அரசதுறையில் பணிபுரியும் ஊழியர்கள் நாட்டின் பொருளாதார இலக்கினை அடைந்துகொள்வதற்னான அபிவிருத்தியுடன் அவர்களின் கல்வி, தகுதி மற்றும் திறன்கள் ஒத்துப்போகின்றதா? என்பதே. எடுத்துக்காட்டாக, புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுப்படி மொத்த அரச துறையில் பணிபுரிவோரில் 35% வீதமானவர்கனள் வெறும் உயர்தர தராதரத்தினையே கொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது.

இதேபோல், அரச மற்றும் அரை அரசு துறை ஊழியர்களில் நான்கில் ஒருவர் (26.2ம%) மட்டுமே பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள் என்றும், அதிலும் ஏறக்குறைய 290,000 பேர் அதாவது பாதிக்கும் மேற்பட்டவர்கள் (கிட்டத்தட்ட 54ம%) கலைத் துறையில் தங்கள் அடிப்படை பட்டத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுமார் 14% பேர் முகாமைத்துவ மற்றும் வர்த்தக துறையில் தமது; பட்டங்களைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 10% வீதத்தினர் மாத்திரம் விஞ்ஞானத் துறையில் இருந்து வந்தவர்கள் எனக் கணடுபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே இவற்றுடன்; அதிக வயோதிப சனத்தொகையினைக் கொண்ட எமது நாட்டில் முன்னெடுக்கும் கொள்கை அமுலாக்கத்திற்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது. அதனை வென்றெடுக்க ஒவ்வொரு அபிவிருத்தி செயற்பாட்டுக்கும் முன்னதாக அதுசார்ந்த ஆய்வுகளையும் அபிவிருத்திகளையும் அதன் தொழிலாளர்கள் மீது கொண்டுவரவேண்டும். 

எமது ஊழியர்கள் நிச்சயம் போட்டித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எமது அரசு முன்கொண்டுவருகின்ற அனைத்து கொள்கைகளையும் திட்டமிட்டபடி முன்னெடுக்க முடியும். 

எமது நாட்டின் தாராளமயமாக்கல், முதலீட்டுச் சூழலை ஊக்குவித்தல், துறை சார்ந்த கொள்கைகளை அமுல்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட பிற நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் போன்ற பெரிய பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றினை விரைவுபடுத்த எமது அரசதுறை அதிகாரிகளின் தகைமைகள் இத்திட்டத்தினை செயற்படுத்தும் வேலைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால் அது மிகவும் சவாலானவை என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 

எனவே இலங்கையின் பொருளாதாரம் கணிசமான அளவில் வளர புதிது புனைதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மற்றும் வணிக தொடர்பான பாடங்களின் ஆழமான அறிவு தேவை என்பதனை பல புத்திஜீவிகள் இன்று உணரத்துவங்கியுள்ளனர்.

இலங்கையின் அண்மைய பொருளாதார, சுகாதார மற்றும் அரசியல் போக்குகள், உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் எமக்கு திறந்துகிடக்கும் வாய்ப்புகளை அடிக்கடி அரச அதிகாரிகளால் புரிந்து கொள்ள இயலாமை என்பது, கொண்டுவரப்படும் அனைத்துச் சீர்திருத்தங்களையும் அதனை செயற்படுத்தும் நடவடிக்கைகளையும் தாமதப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

இன்று நாடு எதிர்கொள்ளும் கொவிட்-19 மற்றும் அதிகரித்த கடன்தொகையினை எப்படித் திருப்பிக்கொடுக்கலாம் என்று போராடும் நிலையில், வரிகளைக் ஏற்றுமதியாளர்களிடையே குறைத்து ஏற்றுமதி மற்றும் முதலீட்டை அதிகரிக்க வகைசெய்ய வேண்டும், ஆகவே இந்த அனைத்து போக்கினையும் விளங்கிக்கொண்டு, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அரச ஊழியர்களின் தகுதிகள் மற்றும் திறன்களுக்கு இடையே ஒரு சிறந்த போட்டியைக் கொண்டிருப்பது இன்னும் அவசியமாகிறது. 

புள்ளிவிபரக் கணக்கெடுப்பில் அரச துறை ஊழியர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் அதன் பயன்பாடு பற்றிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டன. இந்த சனத் தொகை கணக்கெடுப்பின்படி, 66.8மூ ஊழியர்கள் (கிட்டத்தட்ட 741,000) மட்டுமே கணினிகளைப் பயன்படுத்துவதற்கான திறனைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் சுமார் 404,000 ஊழியர்கள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்ய கணினிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆயினும் சுமார் 56.3மூ அரை துறை ஊழியர்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், அதில் 38.4மூ பேர் இணைய அஞ்சலைப் பயன்படுத்துகின்றனர்.

எமது அரசாங்கம் கடதாசிப் பரிமாற்றம் இல்லாத சேவையை வெற்றிகரமாக செயற்படுத்துவதில் அரச துறையில் பாரிய சவாலை எதிர்கொண்டு வருகின்றது. இவ்வாறு மாற்றடைந்தால் எமது உற்பத்திகளைப் பெருக்கி ஏற்றுமதியை மேலும் தடையின்றி செய்யவும் மற்றும் இலங்கையின் வர்த்தகத்தினை எளிதாக்கி முன்னேற்றமடையவும் வைக்கும். இதுவும் இன்னும் பலவும் திறமையான மற்றும் வினைத்திறனான அரச துறைறைக்கு சான்றாக இருக்கும். ஆக மனிதவள அபிவிருத்தியே நாட்டின் ஒட்டுமொத்த வளர்சிக்கும் இடரில் இருந்து மீளவும் உறுதுணையாக இருக்கும்.

அத்துடன் அமெரிக்காவைப் போன்ற ஒரு அமைப்பை நிறுவுவதன் மூலம் அரசாங்க நிறுவனங்களில் உள்ள அதிகாரத்துவ சிக்கலை தீர்க்க முடியும். வாட்டர்கேட் ஊழலுக்குப் பின்னர், 1978 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்த ஒரு நிலையை எட்டியபோது இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 

அரசாங்க நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப, அமெரிக்க காங்கிரஸ் அரசு நிறுவனங்களை கண்டும் காணாத வகையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் என்ற ஒரு அமைப்பை நிறுவியது. அரசாங்க நிறுவனங்களில் விரயங்கள், மோசடி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கண்டறிந்து தவிர்ப்பதே அவர்களின் பங்கு. இதே ஒரு சிஷ்டத்தினை நாம் நிறுவுவதன் மூலம் நிச்சயம் எமது நாட்டின் வளர்சிக்கான முழப் பங்களிப்பினையும் எமது ஊழியர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கலாம்.


0 comments:

Post a Comment