ADS 468x60

20 December 2020

கோவிட்டிற்கு எதிரான போரில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்.

நாம் அம்மை நோய், டெங்கு, எலிக்காய்சல், பறவைக்காய்சல் என பல தொற்றுக்கள் தோன்றி குறுகிய காலத்தில் குறுகிய பாதிப்புக்களுடன் அவற்றை வெற்றி கண்டுள்ளோம். ஆனால் இன்று புதுவிதமாக ஆடவைத்துக்கொண்டிருக்கும் தடுப்பு மருந்துகளும் இல்லாத இன்றய நிலையில் இவற்றோடு போராட அனைத்து நாடுகளும் பல பல கோணங்களில் தம்மை தயார்படுத்தி சில நாடுகள் 'தலைக்கு மேல் வெள்ளம் போன நிலையில்' தட்டுத்தடுமாறி இன்று பல அதிர்வான பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளன. இருந்தாலும் எவ்வளவு ஆயுதங்களை மனிதர்களை அழிக்க உருவாக்கி சாதித்து வந்தாலும், கொவிட்டுக்கு எதிரான இந்தப்போராட்டத்தினை எந்த ஆயுதத்தினாலும் முடக்க முடியாத ஒரு நிலையினை வளர்ந்த நாடுகளுக்கே சவாலாக்கியுள்ளமை அபூர்வமாக உள்ளது.

அந்த வகையில், நாம் அறிந்தவைதான் கடந்த 12 மாதங்களில், முழு உலகமும் 100 ஆண்டுகளில் என்றுமில்லதவாறு எதிர்கொண்ட மிகப்பெரிய தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருவது. 2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) சீனாவில் நவம்பர் 2019 இல் உருவானது என்று ஆய்வுகள் கருத்திடுகின்றன. 2019 டிசம்பரின் பிற்பகுதியில், இந்த புதிய வகையான கொரோனா வைரஸின் விஞ்ஞான ரீதியாக ஊர்ஜிதமானது. 

இது என்ன வகையான பாதிப்புக்களை உண்டாக்கியுள்ளது.

ஒரு வருடகாலத்தில் கொவிட்-19, இது சந்தேகத்திற்கு இடமின்றி நம் வாழ்நாளில் கண்டிராத மிக மோசமான தொற்றுநோயாக உருவெடுத்துள்ளது, ஆனால் இது உலகம் எதிர்கொண்ட மிக ஆபத்தான தொற்றுநோயா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஏனெனில், 1918 ஃப்ளூ தொற்றுநோய் என்று அழைக்கப்படும் ஸ்பானிஷ் காய்ச்சல் பெப்ரவரி 1918 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. நான்கு தொடர்ச்சியான பேரலைகளில், இது 500 மில்லியன் மக்களை முற்றாகப் பாதித்தது.

 அந்த நேரத்தில் இந்தப்பாதிப்பானது, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்கு (1/3) அண்மித்திருந்தது, அந்தத் தொற்றுக் காரணமாக 17 தொடக்கம் 50 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாகவும் தகவலூடாக நம்பப்படுகின்றது. 

இன்றய உலக மக்கள் தொகையானது 100 ஆண்டுகளில் 4.33 மடங்கு அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட 1.8 பில்லியனிலிருந்து 7.8 பில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அகவே 100 ஆண்டுகளுக்கு முன்பு 17 மில்லியன் இறப்புகள் இன்று 74 மில்லியன் இறப்புகளுக்கு சமமாகப் பார்க்கப்படவேண்டும். எனவே இவ்வாறான ஒரு பின்னணியில், தற்போதைய உலக மக்கள்தொகையில் ஏற்பட்டுவரும் இறப்பானது, ஒரு சதவீதமாக (இது தற்போது 1.57 மில்லியனாக உள்ளது) இருப்பது ஒப்பீட்டளவில் கணிசமாகன அளவு குறைவு என்றே கொள்ளவேண்டும். 

இருப்பினும், அன்றய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இன்று நாம் இருப்பது போல் மேம்பட்ட, முன்னேற்றமடைந்த மற்றும் அறிவார்ந்த, உலகம்  இருக்கவில்லை ஆனால் அவையனைத்தும் உள்ள இன்றய காலகட்டத்தில் கொவிட்-19 ஐ நாம் ஒரு வினைத்திறனான மற்றும் ஒரு சிறந்த வழியில் கையாண்டிருக்க வேண்டாமா? ஏன கேட்கத்தோணுகின்றது.

இதனை முகாமை செய்யத்தவறியமைக்கான காரணங்கள்

ஆகவே சில விடயங்களை நாம் அவதானிக்கலாம், அதாவது இன்றய உலகளாவிய சூழலில், கொவிட்-19 எதிர்பாராத விதமாக பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளதனை அவதானிக்கலாம். குறிப்பாக மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட 50 நாடுகளில் தற்போதைய தொற்றுநோயை நன்றாக அல்லது மோசமாக கையாள பின்வரும் எட்டு காரணங்களை அடையாளம் காணலாம்,:

1. திறமையான அரசியல் தலைமை (அல்லது அது இல்லாதது)

2. இடர் முகாமைத்துவத் திறன் (அல்லது அதன் பற்றாக்குறை)

3. முதிர்சி பெற்ற தேசிய கலாச்சார அணுகுமுறை (அல்லது அது இல்லாதது)

4. மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் அளவு

5. தேசிய ரீதியில் உள்ள செல்வம்

6. சனத்தொகை அடர்த்தி

7. நாட்டின் பரப்பளவு

8. பிற தொற்றுநோய்களைக் கையாள்வதில் உள்ள அனுபவங்கள்.


தொற்றைக் குறைக்க கையாழும் விதங்கள்

இதுவரை, கொவிட்-19 தொற்றுநோயை சிறப்பாகக் கையாண்ட நாடுகள் எவை? எனப் பார்ப்பதற்கு, பல நாடுகளிடையே மிகவும் மாறுபட்ட அளவிலான மக்கள் தொகை மற்றும் பரப்பினை ஒரு புறமாக வைத்துக்கொண்டு, ஒரு நாட்டிற்குள் மொத்த பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இறப்புகளைப் பார்ப்பதன் மூலம், தொற்றுநோயைக் கையாளுவதன் செயல்திறனைத் தீர்மானிப்பது அர்த்தமற்றது. அதற்கு என்ன பண்ணலாம் 'ஒரு மில்லியன் மக்களுக்கு ஏற்படும் மொத்த இறப்புகள் என்ன' என்பதனை வைத்து  ஆய்வுசெய்வதே பகுப்பாய்விற்கான சிறந்த அளவுகோலாகக் கருதப்படலாம். 

டிசம்பர் 9, 2020 அன்று வெளியிடப்பட்ட அறிக்கைப்படி, அனைத்து நாடுகளும் தங்கள் அறிக்கையில் அதன் பாதிக்கப்பட்டோரின் நேர்மையான தகவலை ஒரு மில்லியனுக்கான இறப்பு விகிதத்தின் அடிப்படையில வெளிப்படுத்தி இருந்தன. (reference: https://www.worldometers.info/coronavirus/)

கோவிட்-19 இன் மோசமான செயல்திறன் காரணமாக ஒரு மில்லியன் மக்களுக்கு என கணிக்கப்பட்ட இறப்புக்களின் அடிப்படையில் இழப்புகள் பின்வரும் இரண்டு சிறிய ஐரோப்பிய நாடுகளினூடாக எடுத்துக்காட்டுகின்றது.

பெல்ஜியம் ஒரு மில்லியனுக்கு 1,508 இறப்புகள்

சான் மரினோ ஒரு மில்லியனுக்கு 1,443 இறப்புகள்.

அதே ஆய்வில், உலக சராசரி இறப்புக்கள் ஒரு மில்லியனுக்கு 201 ஆக இருக்கின்றது. அந்தவகையில் இலங்கையில் ஒரு மில்லியனுக்கு 7 இறப்புகள் மாத்திரமே பதிவாகியுள்ளன, இது ஒப்பீட்டளவில் மிகவும் நல்ல ஒரு கையாளல் என்றே சொல்லவேண்டும்.

உலகின் மிகப்பெரிய (28 மில்லியனுக்கும் அதிகமான) மக்கள்தொகை கொண்ட 50 நாடுகளின் அடிப்படையில், பின்வரும் (மிக மோசமாகப் பாதிப்படைந்த நாடுகள் தொடக்கம் மிகச் சிறந்த நாடுகள்வரை) வரிசையில், ஒரு மில்லியன் மக்களுக்கு இறப்புகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தலாம்:

 1. பெரு 1,097

2. இத்தாலி 1,014

3. ஸ்பெயின் 998

4. UK 912

5. அமெரிக்கா 885

6. அர்ஜென்டினா 882

7. பிரான்ஸ் 862

8. மெக்சிகோ 856

9. பிரேசில் 836

10. கொலம்பியா 746

11. ஈரான் 606

12. போலந்து 559

13. தென்னாப்பிரிக்கா 376

14. கனடா 340

15. உக்ரைன் 326

16. ஈராக் 308

17. ரஷ்யா 306

18. ஜெர்மனி 242

19. துருக்கி 181

20. மொராக்கோ 172

21. சவுதி அரேபியா 171

22. இந்தியா 102

23. பிலிப்பைன்ஸ் 79

24. இந்தோனேசியா 66

25. எகிப்து 66

26. அல்ஜீரியா 57

27. நேபாளம் 56

28. ஆப்கானிஸ்தான் 49

29. பங்களாதேஷ் 42

30. மியான்மர் 40

31. பாகிஸ்தான் 38

32. சூடான் 30

33. கென்யா 29

34. ஏமன் 20

35. ஜப்பான் 19

36. உஸ்பெகிஸ்தான் 18

37. எத்தியோப்பியா 15

38. மலேசியா 12

39. தென் கொரியா 11

40. அங்கோலா 11

41. கானா 10

42. மடகாஸ்கர் 9

43. நைஜீரியா 6

44. டி.ஆர் காங்கோ 4

45. மொசாம்பிக் 4

46. உகாண்டா 4

47. சீனா 3

48. தாய்லாந்து 0.9

49. வியட்நாம் 0.4

50. தான்சானியா 0.3

உலகின் மிக மோசமாக கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த, பணக்கார மற்றும் நன்கு வளர்ந்த நாடுகளைப் பார்ப்பது வியப்பாகவும் குழப்பமாகவும்தான் இருக்கும். 

அதே நேரத்தில் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள ஏழை மற்றும் அபிவிருத்தி அடைந்துவுருகின்ற, குறைவளர்த்தி கொண்ட நாடுகளில் சில குறைந்தளவான தொற்றெண்ணிக்கை மற்றும் இறப்புக்களைளே பதிவாகியுள்ளன.  ஒருவேளை, இந்த நாடுகளின் குறைவான ஜனநாயக அரசியல் அமைப்புகள் மற்றும் வேறுபட்ட சமீபத்திய தொற்றுநோய்களைக் கையாள்வதில் ஏற்பட்ட அனுபவம் ஆகியவை இந்த நாடுகளுக்கு மேற்கத்திய உலகத்தை விட சிறந்த கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியது எனக் கொள்ளலாமல்லவா.


நிகழ இருக்கும் மாற்றங்கள் என்ன

இந்தக் கொவிட் தொற்றால் என்ன மாற்றங்கள் நிகழ்நதுகொண்டிருக்கின்றது என்பதனை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் என்ன மாற்றங்கள் இன்னும் நிகழலாம் என்பதனை பலரும் வியப்போடு எதிர்பார்க்கின்றார்கள். அந்தவகையில், ஊர்ஜிதமான தரவுகளின் அடிப்படையில், உலகளவில், இந்த கொவிட்-19 தொற்றுநோய் இதுவரை ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்றுள்ளது. 

இருப்பினும் இதனிடையே பலர்; எதிர்பார்த்ததை விட மருத்துவ அறிவியல் வேகமாக முன்னேறி வருகிறது. மக்கள்தொகையில் 65% வீதம் முதல் 75% வீதம் வரை, நோயெதிர்ப்பு சக்தியை அடைய வைரஸுக்கு எதிராக தடுப்பூசி அல்லது அதற்கான மாற்று வழி உடனடி தேவை என்று (WHO) உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. சில நாடுகள் தங்கள் மொத்த மக்கள் தொகையில் 70% வீதமானவர்களுக்கு தடுப்பூசி தேவை என்று முடிவு செய்துள்ளன. ஒரு சில தடுப்பூசிகள் இப்போது உலகம் முழுவதும் தேசியரீதியான ஒப்புதல் நிலைக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இராஜ்யம் - 2020 டிசம்பர் 8 ஆம் தேதி, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெறுவதற்காக, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கடையில் கிளார்காக சேவைசெய்த தொண்ணூறு வயதான மார்கரெட் கீனன் என்பவர், இங்கிலாந்தில் உள்ள யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் கோவென்ட்ரியில் முன்னுரிமை அடிப்படையில் முதலாவது கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட உலகின் முதல் நபர் ஆனார். அவர் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பெற்றார், அதன் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு இங்கிலாந்து ஆனது. 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நான்கு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் (முதல் டோஸ்) நோக்கத்துடன் 50 தடுப்பூசி மையங்களுடன் இங்கிலாந்து இந்த நடவடிக்கையைத் தொடங்கியது. இது இங்கிலாந்தின் 66 மில்லியன் மக்கள்தொகையில் 6 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஒன்றை வழங்குவதற்காக, இங்கிலாந்துக்குப் பிறகு இரண்டாவது நாடாக ரஷ்யா உருவாகி வருகிறது. ரஷ்ய ஜனாதிபதியின் கூற்றுப்படி, 2020 நவம்பர் நடுப்பகுதியில் ரஷ்யா முழுவதும் உள்ள மருத்துவத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான டோஸ் கிடைக்கும், ஆனால் ரஷ்யாவின் தொற்றுநோய்க்கான மையமான மாஸ்கோ நகரத்தில் இதற்கென முக்கிய கவனம் செலுத்துகிறது.

அமெரிக்கா விரைவில் இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவைப் இந்தவிடயத்தில் பின்தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டபடி ஃபைசர் அதன் தடுப்பூசியின் பாதி அளவை அனுப்ப எதிர்பார்க்கிறது என்று வோல் ஸ்ட்ரீட் சஞ்சிகை தெரிவித்துள்ளது. மருத்துவ செய்தி தளமான ஸ்ரேட் கூறுவதென்னவெனில்; கொவிட்டுக்கு எதிராக களத்தில் உள்ள முன்னணி அமெரிக்க சுகாதாரத் தொழிலாளர்களின் கருத்துப்படி 20 மில்லியன் மக்களுக்கு டிசம்பர் மாதத்தில் தடுப்பூசி போடுவதாக தற்போதைய நிர்வாகத்தின் உறுதிமொழி நம்பத்தகாததாகத் தெரிகிறது என்பதே. 

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 100 மில்லியன் தடுப்பூசி சொட்டுக்களைப் உற்பத்திசெய்து பெற்று 2021 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் அவற்றை நிறைவேற்றுவதென்பது மிகவும் யதார்த்தமானதாகத் தெரிகிறது. ஃபைசர் தயாரிப்பானது இரட்டை டோஸ் தடுப்பூசி முறையாகும் மற்றும் பெரும்பாலும், இந்த 100 மில்லியன் நபர்கள் முதல் டோஸுக்குப் பிறகு, 19 முதல் 42 நாட்களுக்குள் தங்கள் இரண்டாவது டோஸைப் பெற வேண்டும். எனவே அமெரிக்காவின் மக்கள் தொகையில் 70 வீதம் சிறந்த தடுப்பூசி இலக்காகக் கொள்வதானால் 232 மில்லியன் மக்கள் பயனடைவர்;. ஆகையால், அமெரிக்கா 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் தடுப்பூசி இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என்பதே உண்மை.

இந்த விடயத்தில் ஏனைய உலக நாடுகள் இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் அமெரிக்காவைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை 249,000 டோஸ் வரை கனடா பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறது. அதன்பிறகு கனடியர்கள் தடுப்பூசி போடத் தொடங்குவார்கள். 

ஐரோப்பிய மருத்துவ நிறுவனம் (The European Medicines Agency -EMA)  2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விநியோகிக்கும் நோக்கில், 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் தடுப்பூசிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவிக்க திட்டமிட்டுள்ளது. 

கொவிட்-19 க்கு எதிரான மெக்ஸிகோவின் தடுப்பூசி பிரச்சாரம் 2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் முன்பே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கோவிட் -19 க்கு எதிராக பிரேசில் தனது நாடு தழுவிய நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்க முன்வந்துள்ளது. கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கி அறிமுகப்படுத்த வேண்டிய சீனாவின் தேவை மற்ற நாடுகளிலிருந்து சற்று வேறுபட்டது, ஏனெனில் இந்த நாடானது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், வைரஸின் பரவலை முன்னேற்றகரமாக நிறுத்தியுள்ளது. ஜப்பானும் கொரியாவும் 2021 மார்ச் இறுதிக்குள் கொவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிக்கத் தொடங்குகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன, அவை இறுதி சோதனை கட்டத்தில் உள்ளன, மேலும் இது கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்து தேவையான ஒப்புதல்களைப் பெற மூன்று மாதங்கள் ஆகலாம் என கணிப்பிடப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு, (ஆதாரம்: கொவிட்-19 மீட்புக்கான ஆராய்ச்சி- Research for COVID-19 Recovery) கூறுவதென்னவெனில், 'கொவிட்-19 இலிருந்து சிறப்பாக மக்களை மீட்டெடுப்பதற்கு, சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது, சமூகப் பாதுகாப்புகளை உயர்த்துவது, பொருளாதார வாய்ப்புகளைத் திட்டமிடுவது, பன்மைத்தன்மைவாய்ந்த கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் சமூகத்தை மேம்படுத்துவதற்குமான தைரியமாக எடுக்கும் முயற்சிகளைப் பொறுத்தது' ' தற்போதைய உலகளாவிய தொற்றுநோயிலிருந்து, குறிப்பாக அமெரிக்கா போன்ற மிகவும் வளர்ந்த நாடுகளால் செய்யப்பட்ட தவறுகளிலிருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்று உள்ளது. அது உலகளாவிய ரீதியிலான ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானம் முன்னேற்றங்கள் ஆகியவை (அரசியல் அல்ல) தற்போதைய தொற்றுநோயிலிருந்து மீண்டு எதிர்கால வேறு தொற்றுநோய்களை எதிர்கொள்ளத் தயாராகும் உலகின் சிறந்த வாய்ப்பைக் நாம் அனைவரும் உணரவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது.

ஆகவே இவ்வாறான பின்னணியில் எமது நாடு மற்றும் மாவட்டம் எவ்வாறு போராட தயாராக உள்ளது என்பதனை நினைத்துப்பார்க்க வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தடுப்பு மருந்துகள் தருவிக்கப்பட்டுவிட்டால் எவ்வாறு, யாருக்கு மற்றும் எப்படி விநியோகிப்பது என்ற திட்டம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றே வரும். ஆகவே அது சார்ந்த கருசனை கொண்ட மக்களாக நாம் மாறவேண்டும். இவற்றை மிக நலிவுற்றவர்களில் தொடங்கி மிக அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் என்ற வகையில் பட்டியலை தயார்படுத்தி அதனை நாளுக்கு நாள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் இந்தத் திட்டமிடலை அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து தகமை வாய்தவர்களின் வளிகாட்டலுடன் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கும் போது நிச்சயமாக எமது மக்களின் குழப்பமில்லாத உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பினை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment