ADS 468x60

10 December 2020

வாழ்க்கையில் கொரோணாவுடன் சேர்ந்து பயணிப்பது சாத்தியமா

உலகின் பல நாடுகள் கொரோணாவுக்கு எதிராகப் போராடி முடியாமல் சோர்ந்துபோய் அந்தப் போராட்டங்களை மக்களினுடைய கையில் தற்போது ஒப்படைத்துள்ளனர். இனி மக்களே அவற்றோடு போராடி வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆக இந்தக் கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் நாம் தொடர்ந்து போராடி வருகிற போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணவில்லை என்பதுதான் உண்மை. எனவே பலர் கேட்கும் கேள்வி எப்படி வாழ்ந்தால் கொரோணா பாதிப்பில் இருந்து விலகி நாமும் குடும்பம் நடாத்தலாம் என்பதே! அதற்கான பதிலாகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

நாம் அவதானித்ததன் அடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நம் நாட்டில் இத்தொற்று சற்று தணிவதைப் போலத் தோன்றிய போதிலும் கொழும்பு மற்றும் கம்பகாவில்; அது மீண்டும் விஸ்வஷரூபம் எடுக்து கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் ஆரம்பித்தது நமக்கு அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போன்று பெரிய அளவில் நாம் பாதிக்கப்படவில்லை என்ற போதிலும் இந்நோயின் தாக்கம் இப்போதைக்கு நம்மை விட்டு விலகாது என்றே தெரிகிறது. அதற்கு மக்கள் தயாராகவேண்டும்.

உலகில் நூற்றுக்கணக்கான நாடுகள் பாதிக்கப்பட்ட பட்டியலில் காணப்பட்டாலும், பசிஃபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனீசியா, துவாலு, சோலமன் தீவுகள், வனுவாத்து, கிரிபாத்தி, மற்றும் தொங்கா உள்பட மொத்தம் 12 நாடுகளை இந்நோய் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தவகையில் பார்ப்போமானால் எமது நாட்டுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற போதிலும் ஐனாதிபதி அவர்களின் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் முப்படையினருடன் இணைந்து சிறப்பான முறையில் இதனைக் கட்டுப்படுத்தி வருவதை யாரும் மறுக்க இயலாது.

நாம் என்ன நடவடிக்கைகளை தீவிரமாகச் செயற்படுத்தினாலும், இந்தத் தொற்று நம்மை விட்டு முற்றாக அகழ்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனமே கணித்துள்ளபடியால் அத்தகைய சூழலுக்கு நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கு பலகோடி ரூபாய்க்களை விலைகொடுத்துள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளதை நீடிக்கவேண்டும் எனச் சிலரும், விடுவிக்கப்படவேண்டும் என சிலரும் பரிந்துரைத்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பொருளாதாரமும் கூட மீட்சியடைவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்பதால் 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதற்கு ஏற்ப புதிய நடைமுறைக்கு நாம் மாறத்தான் வேண்டும்.

இந்தத் தொற்று ஏற்பட்டபின்னர் பல அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளே ஆட்டம் கண்டு அதன் பொருளாதாரம் மாத்திரமல்ல அரசியலும் மாறிவிட்டது. அந்தவகையில், உலகின் ஆகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் சுமார் 20 சதவீதத்தினை எட்டியுள்ள வேளையில் இலங்கையினுடைய நிலைமையும் முறைசாரத் தொழிற் துறையில் சுமார் 70 வீதம் வேலை இழப்பு நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக உலகில் 88 மில்லியனாக இருந்த வறுமை 115 மில்லியனாக கூடியுள்ள அதே நேரம் இது 2021 இல் 150 மில்லியனாக அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையில் 2019 இல் 8.9 வீதமாக இருந்த வறுமைக்குட்பட்டோர் 13 சதவீத அதிகரிப்பைக் கொண்டிருக்கும் எனவும் அது 8,90,000 வறியவர்களாக அதிகரிப்பார்கள் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இத்தகைய சூழ்நிலையை சமாளிப்பதற்கு நமது அன்றாட செலவினங்களை குறைத்துக்கொண்டு வாழ்க்கை நடைமுறையை நாம் மிகவும் கவனமாகத் திட்டமிடவேண்டியது அவசியமாகும்.

கடந்த மார்ச் மாதம் நம் நாட்டில் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து ஆயிரக் கணக்கானோர் 'ஒன்லைன்' எனப்படும் இணைய வழியில் புதிதாக வியாபாரங்களைத் தொடக்கியுள்ளனர் உண்மையிலேயே வியக்கத்தக்க ஒரு விடயம்தான். எனNவு மிகக் குறைவான முதலீட்டிலான இதுபோன்ற, காலத்திற்கேற்ற தொழில் முறைகளை பரிசீலிப்பதும் விவேகமான ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பொருட்களை வாங்கும் போது பிரபலமான வியாபாரச் சின்னங்களுக்காக அதிக அளவில் பண விரயம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர். நாம் இந்த தொற்று நீங்கும் வரை மிக அவதானமாக எமது குடும்ப மற்றும் நாட்டுச் செலவீனங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, சுகாதார ஆலோசனைகள் மற்றும் அரசின் பாதுகாப்புச் சட்டதிட்டங்களுக்கு அமைய நாம் ஒவ்வொருவரும் சுகாதார ரீதியில் நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொண்டு பாதுகாப்பாக இருக்கும் பொழுது வீடம் நாடும் பாதுகாப்பாக இருக்கும்.

அதே சமயத்தில் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்க முடியாத பட்சத்தில் அத்தகைய இடங்களில் முககவசம் அணிவது மற்றும் ஒன்றுகூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற அம்சங்களுக்கு இன்னும் கொஞ்சம் நாள்களுக்கு நாம் முன்னுரிமை வழங்கத்தான் வேண்டும் – வேறு வழியில்லை! கல்வி நடவடிக்கைகளை இயன்றளவு தொய்வில்லாமல் கொண்டு செல்ல வீட்டில் உள்ளோர் பிள்ளைகளை வழிப்படுத்த வேண்டும். புத்திஜீவிகள் சமுக ஆர்வலர்கள், முதலீட்டாளர்கள் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கி தொழிலற்று சிரமப்படும் மக்களுக்கு விடிவெள்ளியாக இருக்க உத்திகளை கையில் எடுக்க வேண்டும். ஏனெனில் நாம் கொரோணாவிற்கு ஒதுங்காது விழிப்புடன் அதை அனுசரித்து வாழப்பழகுவதே சிறந்த முறையாகும்.

0 comments:

Post a Comment