ADS 468x60

08 December 2020

கொரோணாவில் இருந்து விடுதலைக்கு! புதிய பொருளாதார யுக்தி தேவை.

கொவிட்டின் உலகலாவிய பின்னணி

நாம் அனைவரும் இந்த புதிய நெருக்கடியால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். மனச்சோர்வடைந்துள்ளோம். அதிகரித்து வரும் மரணங்கள், தொற்றுக்கள் பதட்டத்தினையும் பயத்தினையும் ஏற்படுத்தி இயல்புநிலையைக் குலைத்து வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவினை சந்தித்து வருமான மார்க்கம் எல்லாம் தடைப்பட்ட நிலையில் மக்களின் வாழ்வாதாரம் வீழத்துவங்கியுள்ளது. இதற்கிடையே அரசாங்கத்தின் சில பல நடவடிக்கைகள் மக்களிடையே நம்பிக்கையூட்டும் அதே நேரம் அரச சேவையின் சில வினைத்திறனற்ற சேவைகள் இந்த நிலைமையில் விசனத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமையில் இருந்து மீள என்ன வகையான புதிய பொருளாதாரக் கட்டமைப்பினை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதனையே இக்கட்டுரையில் தரவிரும்புகின்றேன்.

தற்போதைய இருண்ட பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டால், இது ஒரு போதும் ஏற்படாத புதியதொன்றாகவும் மற்றும் சுவாரஸ்யமானதாகவும் தெரிகிறது. சமீபத்திய உலக வரலாற்றின் போது, தொற்றுநோய்கள் உள்ளிட்ட பேரழிவுகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன, அவற்றை வெல்ல மனித இனம் எப்போதும் அதற்கான வழிகளைக் கண்டறிந்து வந்துள்ளது. எனவே, கோவிட் -19 கூட இறுதியில் இல்லாமற்போய்விடும்;. எவ்வாறாயினும், இந்தத்தொற்றுக் காரணமாக தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை இலங்கை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பது ஒரு பெரிய கேள்வியாகும்.

புத்திசாதுரியமான துணிவான முடிவுகள் தேவை

நாட்டை முடக்குவதை தொடர முடியுமா? இதற்கு புத்தியுள்ள ஒவ்வொருவரின் பதிலும், அவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி அது இல்லை என்றே வரும். சுகாதார அதிகாரிகள் முடிவுகளை எடுக்கிறார்கள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். பொருளாதார பேரழிவுகளைத் தவிர்ப்பதற்காக நாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்குவதனைவிட, பகுதியளவான சுகாதார பாதுகாப்புக் கருதிய முடக்கத்துடன் தொடர்ந்து செயல்படுவதே உலக சுகாதார அமைப்பு உட்பட நிபுணர்களின் கருத்தும் பரிந்துரையும் ஆகும். செல்வந்த நாடுகள் கூட முழுமையான மூடுதல்களுக்கு ஆதரவாக ஒருபோதும் இருக்கவில்லை. தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்தால் ஏற்கனவே நாடு கொந்தளிப்பில் உள்ளது மற்றும் பொருளாதார சரிவுக்கு விடை காண அதிகாரிகள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையுடன் அத்தியாவசியம் என்றால் மாத்திரம் அந்தப் பகுதிகளில் மாத்திரம் முடக்குதலைத் தொடர அரசாங்கம் ஒரு தைரியமான முடிவை எடுத்துள்ளது. இதன்படி பொதுமக்கள் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும், இருப்பினும் மிக முக்கியமாக, அவர்களின் வாழ்வாதாரம் எந்தவித இடையூறும் இல்லாமல் பராமரிக்கப்பட வேண்டும். எது எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரத்தில் வைரஸின் தாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படத்தான் வேண்டும். எனவே, சவாலை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு புதிய பொருளாதார கட்டமைப்பை உணர்வுபூர்வமாக ஆராய வேண்டிய நேரம் இப்பொழுது வந்துவிட்டது.

எதிர்கட்சிகளின் பொதுப்பிரச்சினைக்கான ஆதரவின் ஒருங்கிணைந்த தேவை

ஒரு நாட்டின் அரசி நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவர்கள் அந்த மக்களின் குரலாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறை, ஒரு முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு பொதுவான நெருக்கடியில் மீட்பர்களாக செயல்படுவது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில், அறியாத மற்றும் சந்தர்ப்பவாத எதிர்க்கட்சிகள் பொதுவான எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவதற்குப் பதிலாக தவறான கூற்றுக்களை பரப்புகிறது. இந்த தவறான குற்றச்சாட்டுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய தீங்கை அவர்கள் முற்றிலும் புறக்கணிக்கிறார்கள் என்பதனையே காட்டுகின்றது.

இன்று பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து, அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு அசைவிற்கும் எதிராக மோசமாக கோஷமிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் பொதுவான பிரச்சினைகளைச் சமாளிக்க எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டத்தையும் கொண்டு வருவதாகத் தெரியவில்லை. இது இன்று மாத்திரமல்ல காலாகாலமாக நடந்துவருகின்ற ஒன்றுதான். மக்கள் அவற்றை முற்றிலுமாக நிராகரித்திருந்தாலும், ஊடக விளக்கங்கள், அரசியல் பேச்சு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடக ஈடுபாடுகள் மூலம் எதிர்க்கட்சகளானது அரசின் முன்னெடுப்புக்களில் சகதியை உருவாக்குகிறது. 

கோவிட் -19 இன் பொருளாதார தாக்கம் முழு உலகையும் ஆச்சரியப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு பணக்கார நாடுகள் வாழ்க்கைக்கான உதவிகளை வழங்க முடியும் என்றாலும், இலங்கை போன்ற வளரும் நாடுகள் நிவாரணப் பொதிகளை வழங்க போராடி வருகின்றன. ஆரம்ப பாதிப்பு மற்றும் கிட்டத்தட்ட முழு மீட்புக்குப் பிறகான, இரண்டாவது தாக்குதல் பேரிடியை நெருக்குதலைத் தந்துள்ளது. இலங்கை அதன் பல பொருளாதார முனைகளில் குறுகிய காலத்திற்குள் பாராட்டத்தக்க ஒரு முன்னேற்றத்தை அடைந்திருந்தது, ஆனால் பின்னர் அது மீண்டும் ஒரு புதிய கொந்தளிப்பிற்குள் தள்ளப்பட்டது.

இலங்கையின் பொருளாதார இலக்கு

தொழில்முனைவோர் வெற்றியைப் பற்றிய ஒரு எழுச்சியூட்டும் சொல் 'இலககை உயர்வாக வை வெற்றியும் உயர்வாக இருக்கும்'. இதேபோல், 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் திட்டங்களை முன்வைத்து, பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கத்தின் நோக்கம் அடுத்த ஆண்டில் ஆறு சதவிகிதம் அடைவினை எட்டுவது நம்பிக்கைக்குரியது என்றார். அடையவேண்டிய இலக்கு என்னவோ ஆகப்பெரிதாக இருப்பினும்;, மேல்நோக்கிச் செல்லும் அந்த செயற்பாட்டை அரசாங்கம் நம்பிக்கையுடன் உயர்த்தியுள்ளது. இருப்பினும், தற்போதைய தொற்று நிலைமை, உலகளாவிய பொருளாதார மந்தநிலை, இவற்றால் அரசாங்க வருவாயில் ஏற்பட்ட தளர்வு, பொது நலச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் இலக்கை அடைய முயற்சிக்கும்போது ஆராயப்பட வேண்டிய இன்னும் பிற தடைகள் போன்ற பிற சவால்களும் உள்ளமை கவனிக்கத்தக்கது.

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்காக விரிவடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) முந்தைய கணிப்புகள் சொல்லுகின்றன ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி இவை சரியான அறிக்கையாக இருக்காது என சொல்லப்பட்டது. இலங்கை போன்ற குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளாக வகைப்படுத்தப்படும் வளரும் நாடுகளில் அக்கறை செலுத்தி, அதிகாரிகள் விரைவான மூலோபாய தீர்வுத் திட்டங்களைக் கொண்டு வராவிட்டால் நமது நாடு சிக்கலில் மூழ்கிவிடும். ஆதற்காக பொருளாதார மீட்புக்கான ஜனாதிபதி பணிக்குழு இந்த கடுமையான பிரச்சினையில் இடைவிடாமல் செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்த உயரிய இலக்கினை அடைய முடியும்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் திட்டங்கள் வெளிநாட்டு வருவாய்க்கு பதிலாக உள்ளூர் தொழில் மற்றும் விவசாயத் துறைகளை மேம்படுத்தி அவற்றினூடாக நாட்டை முன்கொண்டு வர கவனம் செலுத்தியுள்ளன என்பது ஒரு ஆறுதல். உள்ளூர் கைத்தொழில், சேவைகள் துறை மற்றும் விவசாயத் துறைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வர்த்தக வியாபார சமூகத்தை அஞ்சாமல் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என நம்பப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கும் அதே வேளையில், அரசாங்கம் பல சிறப்பு சலுகைகள் மற்றும் சலுகைகள் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக எமது தமிழ் பிரதேசங்களில் முதலீட்டாளர்களின் பார்வை மிக மிகக் குறைவாகவே உள்ளமை நாம் அறிந்ததே. ஆகவே இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி எமது வளங்களை நாமே பயன்படுத்த முந்திக்கொள்ளும் தருணம் இது. அதற்கான வாசல் இன்று திறந்துள்ளமை வரவேற்கத்தக்கது. அதன் மூலம் வழியின்றி அங்கலாய்க்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பினைப் பெறும் சந்தர்பங்களை உருவாக்கி எமது வறுமையை விரட்ட போராடிய தியாகத்துக்கு சொந்தக்காரர்களாகலாம் என்பது எனது கருத்து.

இந்த முக்கியமான கட்டத்தில், சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது, இதற்காக அரசாங்க செலவினங்களைக் குறைப்பது ஒரு முக்கிய தேவையாக இருந்து வருகின்றது. கடந்த ஆட்சிகளில் பொது நிதியானது பெருமளவில் வீணடித்திருந்ததாக இப்போது குற்றம் சுமத்தப்படுகின்றது. அதனால் ஆட்சியின் முதல் ஆண்டிலேயே, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இந்த வீண் செலவுகளைக் குறைப்பதில் தனிப்பட்ட ஆர்வத்தை கொண்டுள்ளமையினால் இதற்கான வேறு மார்க்கத்தினைக் கண்டுபிடிப்பதில் முயற்சியாக உள்ளமையினைக் கவனித்தோம்

புதிய பொருளாதாரக் கட்டமைப்புக்கான திட்டமிடல்

இந்த இக்கட்டான கட்டத்தினை மீட்டெடுத்து அடுத்த நிலைக்கு முன்னேறி, விரைவாக இயல்பு நிலைக்கு வருவதற்கு, அரசாங்க இயந்திரங்கள் இதுவரை காட்டிய எந்தவொரு அர்ப்பணிப்பையும் தாண்டி செல்ல வேண்டியுள்ளது. இந்தக் கொரோணா இரண்டாவது அலையின் தோற்றம் மீண்டும் அரசாங்கத்தை ஒரு பாதகமான நிலைக்குள் தள்ளி வைத்திருக்கிறது. நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதால் மருத்துவ மற்றும் அதனோடு சேர்ந்த ஏனைய செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும், உலர் உணவு வளங்கல் மற்றும் பிற பணம் வழங்கல், நிவாரணப் பொதிகளின் விநியோகம் அரசாங்கத்துக்கு தாங்க முடியாத சுமையாக மாறியுள்ளது.

பொருளாதார இழப்புகளை முழுமையாக மீட்டெடுப்பதானது நோய் எவ்வளவு விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும். வேலையின்மை, வேலை இழப்பு காரணமாக வறுமை நிலைகள், மோசமான கடன்கள், கல்விக்கு ஏற்பட்ட இடையூறு மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் ஆகியவற்றினை மீட்டெடுப்பது திறம்பட எதிர்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். இதற்கு முன் பல சவால்களை எதிர்கொண்டு, தடைகளை வென்ற வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. 

ஆகவே இன்றய நிலையில் எமக்குத் தேவையானதெல்லாம், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனநிலையில் சோர்வு ஏற்படாமல் நம்பிக்கையினை தூண்டி அவர்களை தளர்வடையாமல் செய்வதே முதற்கட்டமாக இருக்க வேண்டும். அதுவே இன்று முதனிலைப்படுத்த வேண்டிய ஒன்றாக உள்ளது. எனவே, மக்களின் நம்பிக்கையை உயர்த்த அனைவரும் அயராது முயற்சி எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் பொருளாதார கட்டமைப்பில் எப்பொழுதும் ஒரு கழுகுப் பார்வையினை வைத்திருக்க வேண்டும். கொரோனா வைரஸுக்கு முந்தைய பொருளாதாரத்திற்கு வெறுமனே திரும்ப வேண்டுமா அல்லது அதற்கு மேல் நாடு வளர்சி பெற விரும்புகின்றதா? என இரு இலக்குகளை வைத்துப் பார்க்கவேண்டும். முதலில் நாம் வைரஸ் ஏற்படுவதற்கு முன்பு இருந்த அதே நிலைக்குத் திரும்ப வேண்டும், பின்னர் கோவிட் -19 இன் தொடக்கத்திலிருந்து கிடைத்த பல வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். எடுத்துக்காட்டாக, தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கை சம்பாதித்த உலகளாவிய அங்கீகாரத்துடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகள் செழிக்கும் என்று பல சுற்றுலாத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதேபோல், உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மற்றும் ஆடை சந்தைகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சேவைகள், கைத்தொழில் மற்றும் விவசாயத் துறைகளில் அரசாங்கத்தின் தற்போதைய ஆர்வம் மற்றும் அதுசார்ந்த உந்துதல் வெற்றிகரமாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் மிகச்சிறந்த கொள்கை முடிவுகள் இருந்தபோதிலும், பொதுமக்களின் பொதுவான கருத்துப்படி எமது பொருளாதார வளர்சிக்கு  'முக்கிய தடையாக', இருப்பது, இந்த அத்தனை செயல்முறைகளையும் மெதுவாக்கும் பொது சேவையின் வினைத்திறனற்ற ஆதரவே. எனவே, இந்த செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அழுத்தம் அரச உயர் அதிகாரிகளால் திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில நாடுகள் நெருக்கடிக்கு பயனுள்ள எந்தவித நடவடிக்கைகளையும் காட்டவில்லை மற்றும் இக்காலகட்டத்தில்; மோசமாக செயல்பட்டன. ஆயினும்கூட, இலங்கை, ஜனாதிபதியின் முழு அர்ப்பணிப்புடன், நிலைமையைக் கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். அரசாங்கம், சுகாதாரத் துறைகள், முப்படையினர்;, காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இதற்காக கிட்டத்தட்ட பத்து மாத காலப்பகுதியில் பெரும் தியாகத்தை செய்தனர், தொடர்ந்து அதைச் செய்கிறார்கள். எனவே, கொடிய வைரஸைத் தடுக்க அல்லது குணப்படுத்த ஒரு தடுப்பூசி மூலம் அல்லது இல்லாமல் நாடு முழுமையாக மீட்க எமெக்கெல்லாம் ஒருவன் எப்பொழுதும் இருக்கின்றான் என நம்பிக்கை கொள்வோம்.


0 comments:

Post a Comment