ADS 468x60

18 May 2022

நீதியும், நியாயமும் இருந்தால் மட்டுமே, சுற்றுலாத்துறை மீட்சிபெறும்!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு டொலர்வருவாயை ஈட்டித்தரும் பல நாடுகள் அந்நாட்டு மக்களை இலங்கை குறித்து கவனமாகச் செயற்படும்படி அறிவுறுத்தியுள்ளனர். நியூசிலாந்து அரசாங்கமும் அவுஸ்திரேலியா அரசாங்கமும் இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளதுடன், அவசர தேவைக்கு தவிர இலங்கைக்கு விஜயம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், வெளிநாட்டவர்கள் தாக்கப்படக்கூடிய பொது இடங்கள் என்பனவும் நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை முழுவதும் பதிவாகியுள்ள அதிகளவான வன்முறைகள் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டன் இதேபோல் எச்சரிக்கை பயண வழிகாட்டிகளை அந்த மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் அனைவரும் தயக்கமின்றி சுற்றுலா செல்லும் தலமாகத் தெரிவு செய்யும் உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டது. கோவிட் தொற்றுநோயின் முதல் ஆண்டு சுற்றுலாவை மீளக்கொண்டுவருவது உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கனவாக மாற்றியிருந்தாலும், தொற்றுநோய் பரவியதால் அதன் பின்னர் சுற்றுலாத் துறை புத்துயிர் பெற்றது. உலக சுற்றுலாத் துறை வளர்ச்சி  முழு வீச்சில் இருந்தபோதும், உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கையின் தோற்றம் மாறாமல் இருந்தது. எவ்வாறாயினும், அண்மைக்காலமாக நாடு முழுவதும் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் சுற்றுலாத் தலமாக இலங்கையின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய இரு நாடுகளும் வழங்கிய பயண வழிகாட்டிகளில் இருந்து எமது நாட்டின் நிலமையினை அளவிட முடியும்.

இலங்கையின் அதிக வருமானம் ஈட்டித்தரும் செல்வந்த நாடுகள், தமது பிரஜைகளை இவ்வாறு அறிவுறுத்தும்போது, இந்த நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் பாரியளவில் காணப்படுகின்றன. இலங்கைக்கான பயணம் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற இந்த அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் பரவ சில நிமிடங்களே ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மிக ஆபத்தானது.

கொவிட் தொற்றின் பின்னர் மீண்டு வராத நிலையில் இருந்த இலங்கை சுற்றுலாத்துறை கடந்த 9 ஆம் திகதி இரவு தீவைப்பு உள்ளிட்ட ஆத்திரமூட்டும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களால் கடும் அடியை சந்தித்துள்ளது. இந்த அடியின் அதிர்ச்சியை, பெட்ரோல் கேனைக் கையில் எடுத்துக்கொண்டு, வெறுப்புணர்ச்சியால் ஆத்திரமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளையும், சொத்துக்களையும் தேடித் தேடித் தீயிட்டு அவற்றையெல்லாம் அழித்துவிடும் கலவரக்காரர்களால் உணரப்படுவதில்லை. இந்த நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுற்றுலாவையே தங்கள் தொழிலாக நம்பி இருக்கின்றனர். சுற்றுலா ஹோட்டல் தீப்பிடிக்கும் காட்சிகள் உலகம் முழுவதும் பரவும் போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அச்சத்தை வன்முறையாளர்கள் உணர்வதில்லை. அத்தகைய பேரழிவை மாற்றுவது எளிதானது அல்ல.

அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிக்க யாரும் தயங்கக் கூடாது. காலி முகத்திடல் கோட்டகோகம மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து அரசியல்வாதிகளும், நேரடியாக சம்பந்தப்பட்ட அனைவரும், பதவி வேறுபாடின்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இச்சம்பவத்தை சாக்காக வைத்துக்கொண்டு பகல் முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, தீ வைப்பு, கொள்ளை, தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நீதியும், நியாயமும் இருந்தால் மட்டுமே, மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புகழ்பெற்ற நாடாக நாட்டை மாற்ற முடியும்.


0 comments:

Post a Comment