இயற்கை உரத் திட்டம் அரசின் முக்கிய திட்டமாக இருந்தாலும் அப்பாவி விவசாயிகளை அது மிகப் பாதித்தது. இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நாட்டில் இரசாயன உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு காரணமாக ஒரு மூட்டை உரத்தின் விலை ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை உள்ளது. உரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட அகிலவிராஜ் காரியவசம் குழு மேற்கொண்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நம் நாட்டில் விவசாயம் இருந்தாலும் விவசாயம் இல்லாத நிலை காணப்படுகின்றது. அதாவது விவசாயம் ஒரு தொழிலாக வளரவில்லை. விவசாயி தனது பாரம்பரிய அறிவைப் பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு அறுவடை செய்கிறார். இது நாட்டின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை விலை கொடுத்து ஒரு விவசாயி உரம் வாங்க முடியாத நிலை உள்ளது. இது மக்கள் மத்தியில் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய சூழ்நிலை அல்ல.
விவசாயிக்கு தேவையான தண்ணீர், உரம், விதைகளை தாமதமின்றி வழங்கினால், நாடு விரும்பிய விளைச்சலை அறுவடை செய்ய முடியும் என்பது இரகசியமல்ல. ஆனால், உரம் பெற தண்ணீர் கிடைக்க, விதை கிடைக்காமல் விவசாயி போராட வேண்டியுள்ளது. அதற்கும் மேல், விவசாயத்தை பாதுகாக்க ஆபத்தான காட்டு விலங்குகளுடன் போராட்டம்; மற்றும் அறுவடையை உhயி விலைக்கு விற்கும் போராட்டம் என எல்லாமே ஏழை விவசாயிகளுக்கு போராட்டம் மாத்திரம் மிச்சம்.
இவ்வாறான நிலையில் இந்நாட்டை விவசாய நாடு என்று கூறுவது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்பது கேள்விக்குறியே. இந்த ஆண்டு உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அமெரிக்காவின் நிதி அமைச்சரும், திறைசேரி செயலாளருமான ஜேனட் ஹெலன் தெரிவித்துள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். உணவு இல்லாத நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இவை தவிர உக்ரைன் மீதான இரஸ்யாவின் ஆக்கிரமிப்பு, எதிர்காலத்தில் உலக அளவில் மிகப்பெரிய உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஒருபுறம், எம் தாய்நாடு உணவு இல்லாத நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இந்த நாட்டின் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்.
இந்த நிலைக்கு என்ன செய்யலாம்? நமக்கு இயற்கையாகக் கிடைத்த பூமியில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பயிரிட வேண்டும். அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். உரப் பிரச்சினைக்குத் தீர்வு காண பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு, ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஒரு மூட்டை ரசாயன உரம் ரூ.10,000-க்கு வழங்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்படியானால் அது மிகப் பயனுள்ள ஒன்றாக அமையும் என நம்புகின்றேன்.
0 comments:
Post a Comment