தற்போதைய ஜனாதிபதி இன்று பதவி விலகுவதாக உறுதியளித்துள்ளார். அப்படி நடந்தால் அரசியலமைப்பு விதிகளின்படி புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும். அனைத்துக் கட்சி அல்லது சர்வகட்சி சேர்நது ஒன்றிணைந்து அவசரகால ஆட்சியை அமைத்த பின்னர் பதவி விலகுவதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார். இப்படி நடந்தால், அதன்பின்னர் அரசியல் சாசன விதிகளின்படி, புதிய பிரதமரும் நியமிக்கப்பட வேண்டும். இவற்றை ஒரு சில மணி நேரங்களிலோ, ஒரு நாளிலோ செய்து முடிக்க முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்குச் சிறிது கால அவகாசம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும், அந்த நேரத்தில் நாடு அராஜகமாகிவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் எமது நாடு ஒரு முக்கியமான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மற்றும் இரண்டு ஆபத்தான விடயங்களை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சமூக அமைதியின்மை பரவுவதும் அதன் மூலம் மக்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவதும் முதல் ஆபத்து. இரண்டாவது ஆபத்து என்னவென்றால், சர்வதேச அளவில் நாடு பெற வேண்டிய பொருளாதார ஆதரவு தொடர்பான பல முக்கியமான தருணங்கள் இந்தக் காலகட்டத்தில் நடந்துள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை இந்த விவாதங்களை தொடர முடியாது. மேற்படி விடயங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இன்று நாட்டில் இடம்பெறும் மக்கள் போராட்டத்தை நல்ல எடுத்துக்காட்டான விடயமாக ஏற்றுக்கொண்டாலும், அதைச் சரியாகக் கையாள முடியாவிட்டால், அதல பாதாளத்திற்குச் சென்று விடுவோம். இது தொடர்பான பல உலக அனுபவங்கள் உள்ளன. ஈராக் மக்கள் சர்வாதிகாரி சதாம் குசைனை தூக்கி எறிந்ததை ஆதரித்து, சதாமின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு ஆரவாரம் செய்தனர். ஆனால் அதன்பின்னர் அங்கு ஆட்சிக்கு வந்த தலைவர்கள் எவருக்கும் நாட்டை கட்டியெழுப்பும் திறமை இருக்கவில்லை. அதன் பின்னர் மக்கள் தமக்கு தம் நாட்டை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சாதம் காலம் கேட்கிறார்கள். லிபியாவின் நிலைமையும் வேறுபட்டதல்ல. தற்போதைய லிபியர்கள் கடாபி ஆட்சியைக் கோருகின்றனர். ஆனால் நிச்சயம் எமக்கொரு கோட்டா வேண்டுமென யாரும் கேட்க்கப்போவதில்லை. இருந்தாலும் ஒரு சிறந்த நிலையான மாற்றங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மேற்கண்ட நாடுகளில் இருந்து எடுக்கலாம்.
இதுவரை அரசியல் கட்சிகளும், வர்த்தக நிறுவனங்களும் அதிகாரத்திற்காகப் பல போட்டிகளிலும் இறங்கியிருப்பதைக் காணலாம். சிலர் தங்கள் கட்சியில் இருந்து ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க முயற்சிக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் கட்சியில் இருந்து பிரதமரை நியமிக்க துடிக்கிறார்கள். மற்றவர்கள் புதிய அரசாங்கத்திற்கு போட்டியிடுகின்றனர். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி புதிய அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பம் சில அரசியல் இயக்கங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதையும் காணமுடிகிறது. இந்தநிலையில்; இந்த நாட்களில் அதிகாரத்திற்கான கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன. உண்மையில் இன்று மக்களுக்கு இருக்கும் தேவையினை கருத்தில்கொள்ளாமல் அல்லது அதைப் பொருட்படுத்தாமல் மற்றும் நாட்டின் நெருக்கடியைப் பார்க்காமல் அதிகாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தவறாக உணரப்படுகின்றது.
அரசியல் ஸ்திரத்தன்மைக்கான தீர்வு செயல்பாட்டில் இரண்டு முக்கிய நிலைகள் உள்ளன. இந்த நாட்டினை ஆள ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவுவது முதல் வேலை. ஆதற்கு அடுத்து இரண்டாவது சந்தர்ப்பம் தேர்தலை நடத்தி நிலையான அரசாங்கத்தையும் நிலையான அரச தலைவரையும் நியமிப்பது. பொதுவாக மக்கள் ஆணை இல்லாமல் நிலையான தலைவர்கள் மற்றும் அரசுகளை நியமிக்க வாய்ப்பு இல்லை. ஆணை இல்லை என்பதன் ஒரு பொருள் என்னவென்றால், அது ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியல்ல என்பதாகக் கொள்ளவேண்டும். மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளுக்கும், கட்சிகளுக்கு இடையே பொதுவான உடன்பாட்டை எட்டுவதே சிறந்த வழி. விவாதிக்கக்கூடிய வகையில், ஆனால் இப்போது பொதுவான ஒருமித்த கருத்தை அடைவதே மிகவும் கடினமான ஒன்றாக மாறி இருக்கின்றது.
எது எவ்வாறு இருந்தாலும் போராட்டக்காரர்களின் அபிலாiஷகளுக்கு முக்கியம் செலுத்தி எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள வேண்டும். போராட்டத்தையோ, போராடுபவர்களையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த மாற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சக்தியாக அவர்களை ஒப்புக்கொள்வது முக்கியம். இந்த போராட்டக்காரர்களிடம்; இருந்து ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் முக்கிய கோரிக்கை அவர்களின் முன்மொழிவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது வேண்டுதலை, ஆலோசனைகளைத் தவிர்த்து அதனால் ஏற்படும் அரசியல் மாற்றம் இன்னொரு போராட்ட அலையை ஏற்படுத்தினால்; எல்லாம் கலைந்து போகும். ஆகவே இது இன்று கவனமாக வெல்ல வேண்டிய ஒரு அரசியல் போர் என்று சொல்லலாம்.
படித்த இளைஞர்களும், சமுக சேவகர்களும் சொல்லுவதை அரசியல்வாதிகளும், கட்சிகளும் கேட்கவில்லை நேற்று இன்று அந்தக் கேள்விகளுக்கு பதிலில்லாமல் நாட்டைவிட்டு, வீட்டைவிட்டு ஒளிந்து ஓடும் நிலை எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட ஒரு அபாயமணி! மக்கள் அடித்துத் துரத்துமுன் நாம் இந்த கதிரைக்குப் பொருத்தமில்லை என நினைப்பவர்கள் உங்கள் ஒளித்து ஓடும் தலைவரின் வழியைப்பின்பற்றுவதே சிறந்தது.
0 comments:
Post a Comment