ADS 468x60

02 July 2022

பொதுப்போக்குவரத்தின் முக்கியம் இன்று உணரத்தொடங்கியுள்ளனர்.

 ஒரு கலகம் பிறக்கும்போதுதான் நியாயம் கிடைக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து. அந்தவகையில், நீண்ட வரிசைகள், காத்திருப்புக்கள், குழுக்கலவரங்கள், இறப்புக்கள் இன்னும் பல பாதிப்புக்கள் நாளாந்தம் நொடிக்கு நொடி நாட்டில் தலைதூக்கிவருகின்றன. இந்தப் பின்னணியில், இலங்கை தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியின் முக்கிய புள்ளி எரிசக்தி அல்லது எரிபொருள் தட்டுப்பாட்டினால்தான் என்பதை நாம் கடைசி வரை அறிந்திருக்கவில்லை. இன்று எரிபொருள் நெருக்கடியால் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பெறமுடியாத நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாள் எரிபொருள் தீர்ந்து விட்டால் இப்படி ஒரு விபரீதம் ஏற்படும் என்று நாங்கள் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை அன்று. 

நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் போதுதான், பொதுப் போக்குவரத்து சேவையின் முக்கியத்துவம் குறித்து இன்று பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். சுமார் நான்கு தசாப்தங்களாக, நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகளின் முக்கியத்துவம் குறித்து மிகக் குறைந்த மதிப்பீடு அல்லது பேச்சுக்களே இருந்தது. 1977க்குப் பிறகு திறந்த பொருளாதாரத்தின் வருகையுடன், இத்துறை தனித்துவமாய்; அதிக முக்கியத்துவம் பெற்றது இருப்பினும்; தனியார் வாகனத்தில் பயணம் செய்வதை ஒரு பெரிய ஆடம்பரமாகக் கருதும் வகையில் மக்களின் மனம் வடிவமைக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்துச் சேவையை ஏழை மக்களுக்காக அர்ப்பணிப்பதாகக் கருதும் வகையில் சமுதாயம் உருவானது. அதனால் அதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.

ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் பொதுப் போக்குவரத்தைப் பராமரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் மிகச் சிறிய சதவீதத்தையே ஒதுக்கியது. பொதுப் போக்குவரத்துச் சேவையானது நஸ்டத்தை உண்டாக்கும் மற்றும் சுமையான நிறுவனக் கட்டமைப்பாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. எது எப்படியாயினும், பொதுப் போக்குவரத்து சேவையின் வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான அளவுகோலாக இருந்தது குறிப்பாக நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது.

சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இலங்கை உலகில் 38வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளின்படி, நம் நாட்டின் மக்கள் தொகையில் 50 வீதம் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர்;. இதன் பொருள், பெரும்பான்மையான மக்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களாக மாறவில்லை என எடுத்துக்கொள்ளலாம். 

அபிவிருத்தி என்றால் ஒவ்வொரு குடிமகனும் தனிப்பட்ட வாகனம் வைத்திருப்பது என்ற தவறான எண்ணம் சமூகமயமாகி வருவதால் இலங்கை கடும் நெருக்கடியில்; சிக்கியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், இந்த சிறிய தீவில் மிகவும் ஈர்க்கக்கூடிய போக்குவரத்து சேவையை வடிவமைக்க எங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் ஆட்சியில் இருந்த எந்த அரசும் அதற்காக எதையும் செய்யவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் கொழும்பு நகரில் எரிவாயு விளக்குகள் நிறுவப்பட்டது மற்றும் கொழும்புக் கோட்டை மற்றும் பொரளை போன்ற நகரின் முக்கிய குறுக்குகளில்; மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவையின் தொடக்கம் மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்தது. ஆனால் இலங்கைக்கு மோட்டார் பஸ்கள் வந்ததையடுத்து பஸ் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க மின்சார பஸ் சேவையை ரத்து செய்ய கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்திருந்தது. சில பஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் நகரசபையின் கவுன்சிலர்களாக இருந்ததே இதற்குக் காரணம். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட ரொளி மின்சார பேருந்து சேவையும், டிராம் கார் சேவையும் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த ஹொங்காங், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் இன்றும் இயங்கி வருகின்றன.

இலங்கையில் ஒரு தேசிய போக்குவரத்து திட்டம் 1960 இல் வரையப்பட்டது. பொறியியலாளர் விமலசுரேந்திரவினால் லக்ஸபான மின்சாரத் திட்டத்தை அமுல்படுத்தும் வேளையில், மின்சார ரயில் அமைப்பை உருவாக்குவது குறித்தும் அன்று உரையாடல் இடம்பெற்றது. 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் மகாவலித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது தென்னிந்தியாவிற்குக் கூட மின்சாரம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதன் பின் இந்நாட்டுப் போக்குவரத்துக்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு அப்போது ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் குப்பைக்கூடைக்குள்; சென்றன. 

அதுபோல இலங்கையின் தேசிய போக்குவரத்துத் திட்டம் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கையில் நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்காக பெருமளவிலான வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டாலும், தேசிய போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிர்மாணம் செய்யப்படவில்லை. அந்தக் கட்டுமானங்கள் ஒவ்வொன்றும் ஆளும் ஆட்சியாளர்களின் தன்னிச்சையான முடிவுகளாகவே இருந்தன.

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 8,75,864 ஆகும். அதுபோல் 4,68,074 மோட்டார் சைக்கிள்கள், 1,12,005 பேருந்துகள் மற்றும் 1,175,077 முச்சக்கர வண்டிகள் இவற்றுள் குறிப்பிடத்தக்கன. இவையனைத்தும் பாவனையில் உள்ளதனால் நகர்ப்புற போக்குவரத்து இப்போது ஒரு நெருசலானதாக மாறிவிட்டது.

ஆசியாவில் மிகவும் வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா போன்ற நாடுகளில் 10 வீதம் மக்கள் மட்டுமே தனியார் வாகனம் வைத்துள்ளனர். அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள பொதுப் போக்குவரத்து என்பது அனைத்து குடிமக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை வழங்குவது என்பதாகும் மாறாக ஏழைகளுக்கு பயண வசதியை வழங்குவது அல்ல. 

இலங்கையில் நாம் அதை தலைகீழாக மாற்றிவைத்துள்ளோம். பேருந்தில் அல்லது ரயிலில் பயணிக்க சமுதாயம் பழகி விட்டது என்றால் அதற்கு காரணம் வாகனம் இல்லாததுதான் என நாம் எடைபோடுகின்றோம். ஒரு தனியார் காரின் உரிமையாளராக இருப்பது ஒருவரின் சமூக வாழ்க்கையில் ஒரு மைல்கல் அந்தஸ்த்து என ஒரு சிதைந்த சமூக சித்தாந்தத்தினை உருவாக்கி வைத்துள்ளோம். இது நமது சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான ஒரு வலுவான ஆதாரமாகும்.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டமைக்கப்பட்ட இலங்கையின் ரயில் பாதை தற்போது 1450 கி.மீ ஆக உள்ளது. இது தினசரி 350 முதல் 400 ரயில் பயணங்களை உள்ளடக்கியது. எரிபொருள் நெருக்கடி காரணமாக பேருந்து பயண நேரம் குறைவாக இருக்கும் இன்றைய நாட்களில் ரயில்கள் மிக முக்கியமான போக்குவரத்து முறையாக மாறிவிட்டன. பயணிகள் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது அதனால் மக்கள் ரயில்வே பக்கம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட சராசரி வார நாட்களில் 7 பிரதான நுழைவாயில்கள் வழியாக சுமார் 1.8 மில்லியன் மக்கள் கொழும்பிற்குள் நுழைகின்றனர். அந்தக் மக்கள் குழு கொழும்புக்குள் நுழைவதற்குப் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 5,25,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தொகையில் பெரும்பகுதி அதாவது 87 வீதம் தனியார் வாகனத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையில் சுமார் 44 வீதம், நகரத்தில் பெரும் நெருக்கடியினை உருவாக்கியுள்ளது. ஏனையோர்; பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ரயிலில் பயணம் செய்யும் தொகை 6 வீதம் ஆகும். பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதன் மூலமே மக்கள் தமது தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்தி நெருசலை தவிர்க்க முடியும்.

இலகவாகச் சொல்லப்போனால், ஒரு பேருந்தில் 50 தனியார் வாகனங்கள் மூலம் கொழும்பு நகருக்குள் வரும் மக்களை அழைத்து வர முடியும். அப்போது போக்குவரத்து நெருசல் மற்றும் செலவு மிகவும் குறைவடையம்.

கடந்த 70 வருடங்களில் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களின் விருப்பத்திற்கிணங்க, கொழும்பில் முறையான நகரத் திட்டத்தையோ, முறையான வாகனத் திட்டத்தையோ ஆரம்பிக்க அனுமதிக்கவில்லை. 2009ல் தயாரிக்கப்பட்ட தேசிய போக்குவரத்துக் கொள்கையும் செயல்படுத்தப்படவில்லை. இந்நாட்டில் போக்குவரத்துத் துறையில் சேர்க்கப்பட்ட அனைத்துப் புதிய கூறுகளும் முறையான திட்டத்தின்படி களத்தில் சேர்க்கப்படாமல் சில தரப்பினரின் நலனுக்காக அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு அமையவே செய்யப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களின் தவறினால் இலங்கையின் பயணிகள் போக்குவரத்து சேவை இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இன்று.

இன்று போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருளுக்காக மாதந்தோறும் சுமார் 550 மில்லியன் டொலர் தேவைப்படுகிறது. ஆந்தவகையில் ஒரு ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர்கள் தேவை. ஒரு வருடத்தில், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட இலங்கையின் மொத்த இறக்குமதி செலவு 20 பில்லியன் டொலர்கள். அதன்படி, இறக்குமதி செலவில் 30 வீதம் எரிபொருளுக்காக செலவிடப்படுகிறது. எரிபொருளுக்காக செலவிடப்படும் பணத்தில் 63 வீதம் மக்களின் போக்குவரத்துக்கு செலவிடப்படுகிறது. அதில் மூன்றில் ஒரு பகுதி பொருட்களைக் கொண்டுசெல்லும் போக்குவரத்திற்கும், ஏனைய மூன்றில் இரண்டு மடங்கும் பயணிகள் போக்குவரத்திற்கும் செலவிடப்படுகிறது. 

இப்போது நாம் மிகத் தெளிவாகக் கூறலாம், பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளில் 18 வீதம் மட்டுமே பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மொத்த எரிபொருள் இறக்குமதியில் 1 வீதம் ஓடும் ரயில்களுக்கு செலவிடப்படுகிறது. 18 வீதம் பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுவதைத் தவிர, மீதமுள்ள 82 வீதம் தனியார் வாகன பயணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அரசு எரிபொருளுக்காக செலவிடப்படும் பொதுப் பணத்தில் பெரும் பங்கு தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில்தான் பிரச்சனை இருக்கிறது. சிங்கப்பூரின் பொது போக்குவரத்து சேவை 85 வீதமும் மற்றும் இலங்கையின் பொது போக்குவரத்து 18 வீதமும் இருப்பது அவதானத்துக்குரியத ஆகும். அதுவே இலங்கையில் எரிபொருள் பாவனை தொடர்பான பிரதான பிரச்சினையாகும். 

நாடு பாரிய எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கிய போதும், அதிக இயந்திரத் திறன் கொண்ட வாகனங்களை தடை செய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிக இன்ஜின் திறன் கொண்ட சொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவது இந்நாட்டு அமைச்சர்களின் பொழுதுபோக்காக மாறிவிட்டது. நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய போது அதனை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. நமது நாட்டு அரசியல்வாதிகள் பெட்ரோல் அதிகம் எரியும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இது எரிபொருள் வளங்களைக் கொண்ட அரபு நாடுகளில் கூட காணப்படவில்லை. 

சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையாக சைக்கிள்களைப் பயன்படுத்துவதற்கான நகரத் திட்டம் எதுவும் இல்லை. இப்போதெல்லாம், திடீரென எழுந்து சைக்கிளில் பயணம் செய்வதின் முக்கியத்துவம் பற்றிய பேச்சு முன்னுரிமையில் இல்லை. ஏனெனில் நகர்ப்புற சமூகத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருவதற்கு இது ஒரு காரணம் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. கொழும்பு நகரில் சைக்கிள் ஓட்டுவதற்கு பயணிகளுக்கு திட்டமிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வீதிகள் எதுவும் இல்லை. ஆசியாவில், ஐரோப்பாவில், மக்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நகர்ப்புறச் சூழலைப் பாதுகாக்கவும் சைக்கிள் பாதைகளை உருவாக்குவதில் இருக்கும் நாட்டத்தினைப்போல இந்நாட்டு ஆட்சியாளர்கள் அக்கறை காட்டவில்லை. இப்போது அவர்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு வந்தது போல் சைக்கிள் நினைவுக்கு வந்தது. அடிக்கடி சீனாவுக்குப் பயணம் செய்யும் நமது ஆட்சியாளர்கள், சீன மக்கள் சிறந்து விளங்கும் பயணிகள் போக்குவரத்திற்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதனைக் கூட கவனம் செலுத்தவில்லை.

ஜப்பானின் ஜெய்கா உதவியின் கீழ் 1வீதத்துக்கும் குறைந்த வட்டியில் கொழும்பு கோட்டையில் இருந்து கடுவெல வரையிலான டவர்களில் இயங்கும் மோட்டார் ரயில் போக்குவரத்து சேவையை தற்போதைய அரசாங்கம் கைவிட்டு, அங்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட அடிப்படைப் பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கத்திற்கு இழப்பீடு வழங்கியது. மாறாக கொழும்பில் இருந்து கடுவெல வரையிலான அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டது. 

எனவே பொதுப்போக்குவரத்துக்கான மக்கியத்தினை உணரும் வேளையிது. ஆட்சியாளர்கள் முற்போக்கான எடுத்துக்காட்டான ஏற்கனவே உள்ள திட்டங்களை தூசி தட்டிப்பார்க்கவேண்டும். அரசியல் இலாபத்துக்காக போக்குவரத்துத்துறையை மாற்றியமைக்காமல் மக்கள் நலனுக்கான, நாட்டின் வினைத்திறனைக் கருத்தில்கொண்ட போக்குவரத்து முறைகள் மீதான கரிசனை அவசியமாகின்றது.


0 comments:

Post a Comment