நாம் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்டு அயல் நாடுகளுக்குக் கூட ஜீரணித்துக்கொள்ள முடியாமல் பலர் முன்வந்து உதவுகின்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வெட்கப்படவேண்டியதே. அனைத்து இலங்கையர்களும் இப்போது மிருகத்தனமான ஆட்சியின் சகாப்தத்தின் கடைசி சில அத்தியாயங்களை கடந்து செல்கின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துன்பப்படும் இந்த நாட்டு மக்களை விடுவிக்க ஒரு புதிய அரசியல் நகர்வினை எடுக்க வேண்டும். இனி பாராளுமன்றத்தில் அது நடக்கும் என நம்புகிறோம்.
எமது தமிழ் தலைவர்கள் பலரிடம் வீண்பேச்சை அதிகம் பார்க்கின்றோம். செயற்பாட்டை பார்க்கவே முடிவதில்லை. எனக்குப் புரியவில்லை 13, 14, 20, 21 எந்த வகையில் பசிக்கிற வயிற்றுக்கு பால் வார்க்கும், தொழில் இல்லாதவர்க்கு தொழில் வழங்கும், ஆகவே அரசியல் செய்வதற்கு நடந்வற்றையே வைத்து எத்தனை நாளைக்கு நாடகம் நடத்துவது? நடக்கப்போவதை யாராவது சிந்திக்கின்றார்களா என்றால் தெரியவில்லை. எல்லோரும் சட்டம் பேசுகின்றார்கள், சட்டவாக்கம் பற்றிப் பேசுகின்றார்கள் அது எந்த வகையில் பொருளாதார, உற்பத்தி, தொழில்வாய்ப்பு, வர்த்தகம் பற்றிய நெருக்கடியில் ஊசலாடும் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்பதே மக்கள் வியப்போடு பார்க்கும் ஒன்று.
அதுபோல், நம் நாட்டு மக்கள் பிறப்பிலிருந்தே 'துன்பம்' என்ற வார்த்தையுடன் ஒன்றாகப் வந்தவர்கள். ஆதனால் நம் நாட்டு மக்களுக்கு 'துன்பம்' என்பது இப்போது மிகவும் பரிச்சயமான ஒன்றாகிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த நாட்டை ஆண்ட முட்டாள் மற்றும் ஊழல் அரசியல்வாதிகளால் நாம் சாகும் நாள் வரை பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் வந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் அரசாங்கங்களின் கீழ் வாழ்ந்த எமது நாட்டு மக்கள் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்ட ஒரு கூட்டமாகவே இருந்துள்ளோம். நம் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வந்த பல்வேறு அரசியல்வாதிகள் 'சட்ட வரைதல்' என்ற துருப்புச் சீட்டைக் காட்டி மக்களை ஏமாற்றியதுபோல, செழிப்பு, ஆசியாவின் அதிசயம், 'ஒரே நாடு, ஒரே சட்டம்', 'சிங்கப்பூர் ஆக்குவோம்' போன்ற அழகான வார்த்தைகளின் ஜாலம் கடந்த சில ஆண்டுகளாக நம் கவனத்தை ஈர்த்தது அதனால் இன்று ஏமாந்து நிற்கின்றோம்.
பெப்ரவரி 4, 1948 இல், காலனித்துவமாக இருந்த இலங்கை சுதந்திரம் பெற்றது. அன்று முதல் நம் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்களா? இல்லை. பல்வேறு அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கும் அராஜகத்துக்கும் எமது நாட்டு மக்கள் தொடர்ந்தும் ஆளாகியிருந்தனர். கோரிக்கைகளுக்காகவும் நீதிக்காகவும் பேசிய மக்களுக்கு எண்ணற்ற முறை தோட்டாக்களால் பதில் அளிக்கப்பட்டது. நாட்டில் துன்பப்படும் அப்பாவி மக்களுக்காக எந்தவித குறையுமில்லாமல் சட்டம் எப்போதும் செயல்படுகிறது. ஆதனால் அரசியல்வாதிகள் தங்களின் தவறுகளை மறைக்க எப்போதும் நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
அடுத்து வந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் தவறுகளை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு அவர்களை தண்டித்ததாக வரலாறுகள் இல்லை. அவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவே நிரூபிக்கப்பட்டது, அதற்கான சாட்சிகள் இல்லை. மேலும், கொரோனா போன்ற தொற்றுநோய்கள் தங்கள் தவறு அல்ல, மக்களின் தவறு என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். அவர்கள் விரும்பியபடி பொருட்களின் விலையை உயர்த்தினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் அவர்கள் விரும்பியபடி சட்டங்களை உருவாக்குவதுதான். நள்ளிரவு 12.00 மணிக்கும் அதன் பின்னரும் விலை அதிகரிக்கப்பட்டது. இவர்கள் எப்போதும் தனது நண்பர்களை தொழிலதிபர்களை இலாபமீட்டவைத்து குஷpப்படுத்தினர். அதிகாரத்தால் நாட்டு மக்களின் கழுத்தை நெரிப்பது அவர்களின் பொழுது போக்கு. அதுபோக பணத்துக்காக, ஒரு பாக்கெட் அரிசிக்காக, மதுப் போத்தல்களுக்காக நம் நாட்டு அப்பாவி மக்களை பலிகடா ஆக்கினார்கள்.
இன்றைக்கு நம் நாட்டு மக்கள் இந்த கொடுமையான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோல்ஃபேஸ் போராட்டம் இதற்கு அளப்பரிய பங்களிப்பை அளித்தது. இது கட்சி சார்பற்ற போராட்டம். இதற்காக நாடு முழுவதும் உள்ள மக்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் இந்த ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஜூலை 9 அன்று போராளிகளும் நாட்டு மக்களும் தமது பலத்தை வெளிப்படுத்தினர். இந்நாட்டு ஆட்சியின் முக்கிய மையங்களாக இருந்த ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகங்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். நாட்டின் அரசியல் பலத்தை விட மக்கள் சக்திதான் பலம் வாய்ந்தது என்பதை அப்போதுதான் நம் நாட்டு அரசியல்வாதிகள் சரியாகப் புரிந்துகொண்டார்கள். அங்கு நுழைந்த பொதுமக்கள் நாற்காலி, மேஜைகளில் ஏறி புகைப்படம் எடுத்தனர். சிலர் குளியல் தொட்டியில் குதித்து குளித்து, தங்கள் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் உலகுக்குக் காட்டினார்கள். மற்றவர்கள் அங்கிருந்த உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். ஏன்னைப்பொறுத்தளவில்; இதில் எந்த தவறும் பார்க்கவில்லை. இதற்குக் காரணம், நம் நாட்டில் அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே இருந்த இந்த சுகங்களை அவர்கள் மட்டும் அனுபவித்ததுதான். இவை பொதுப் பணம், பொதுச்சொத்து.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து நம் நாட்டின் எரியும் பிரச்சினைகளுக்கான பதிலை நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். திருட்டு, விரயம், ஊழல் என்ன இவர்கள மூலம் ஒழியும் என நம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை.
இப்போது நாம் செய்ய வேண்டியது நாம் தவறு செய்த இடத்தைத் திருத்துவதுதான். அரசியல்வாதிகள் சுரண்டல், விரயம், ஊழல், திருட்டை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். நாட்டின் இழந்த வளங்களை மீட்டெடுக்க வேண்டும். சுற்றுலாத் தொழில், விவசாயத் தொழில், ஆடைத் தொழில் மற்றும் இதர தொழில்கள் மீண்டும் வலுப்பெற வேண்டும். இழந்த 'டொலர்களை' நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டை ஒன்றிணைக்க வேண்டும். ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதில் இனி பலன் இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பேச்சால் அல்ல செயலால் வேலையை காட்ட வேண்டியது இப்போது அவசியம்.
0 comments:
Post a Comment