இலங்கை தற்போது அதிக பணவீக்கம் நிறைந்த நாடாக கருதப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார். ஜூன் 2021 இல் 5.2 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் 2022 க்குள் 54.6 சதவீதமாக அதிகரித்தது, நாடு இந்த உயர் பணவீக்க நிலையை இப்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதன்படி, இலங்கை தற்போது உலகில் அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட 10 நாடுகளில் வீழ்ந்து ஆசிய பிராந்தியத்தில் அதிக பணவீக்கத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.
ஒரு வருடத்திற்குள் நாட்டில் பணவீக்கம் 50 வீதமாக அதிகரித்திருப்பதன் அர்த்தம், இலங்கைப் பிரஜை ஒருவர் தனது பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக கடந்த வருடம் 25,000 ரூபாவைச் செலவிட்டிருந்தால், அது தற்போது 50,000 ரூபாவாக இரட்டிப்பாகியுள்ளது. இந்த காலகட்டத்தில், ரூபாயின் மதிப்பும் பாதியாக சரிந்துள்ளதால், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பணவீக்கத்தின் அழுத்தத்தை உணர்கிறார்கள்.
நம் நாட்டுக்கே ஏன் இப்படி நடந்தது? சிறிய சிறிய வேலை அல்லது விவசாயம் அல்லது சுயதொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில் எளிமையான வாழ்க்கையைக் கொண்டிருந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இப்போது அடிக்கடி மோசமான கனவைக் காண்கிறார்கள். இந்த நாட்டு மக்களில் குறைந்த எண்ணிக்கையானவர்கள் கிடைத்ததை விட அதிகமாக செலவழிக்கவும், வீண் செலவு செய்யவும் பழக்கப்பட்டாலும், பெரும்பான்மையான மக்கள் அப்படி இல்லை. அவர்கள் அன்றாடம் வாழ்ந்து வந்த எளிய வாழ்க்கை முறையை, நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்கள் கூட்டம் அவர்களிடமிருந்து பறித்துவிட்டது.
நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்ற திட்டங்களை உருவாக்காமல், போலியான வளர்ச்சிப் பணிகளுக்கு மக்களை பழக்கப்படுத்தினர். மற்றும் அடுத்த வாக்கெடுப்பில் வெற்றிபெற ஒரு நலன்புரி பொருளாதாரம் முறையை எப்போதும் வைத்திருந்தனர். ஆனால் பெரும்பாலான நாடுகள் உலகின் பொருளாதாரப் போக்குகளை அங்கீகரித்து அதற்கேற்றவாறு மாற்றியமைத்த அதே வேளையில், இலங்கையின் பெரும்பாலான தலைவர்கள் மக்களை நலன்புரி அரசு கனவில் வைத்திருந்தனர். அதன் விளைவுகளில் ஒன்று, நாடு தாங்க முடியாத பொருளாதாரச் சுமையுடன் நஷ;டத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் அதிகரித்துள்ளமை.
இப்போது இந்த நிலையை மாற்றுவது எளிதல்ல. அப்படி மாற்ற முற்பட்டாலும்; மக்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பது உறுதி. இந்த நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் அர்ப்பணிப்பும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் பலர் தங்களின் சலுகைகளையும் ஆசிகளையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சொகுசு வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். இவர்கள் சகல சௌகரியங்களையும் பெற்று, சிறிதளவு பணம் கிடைத்தால் போதும் பல்வேறு 'டீல்கள்' மூலம் அபரிமிதமான செல்வத்தை ஈட்டுவார்கள் என்பது நாட்டின் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனாலேயே இந்த நிலை உண்மையில் மாற வேண்டும் என்று எழுப்பப்பட்ட குரல் போராட்டமாக வளர்ந்து அந்த போராட்டம் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அடுத்து ஆட்சிக்கு வரும் தற்காலிக அரசாங்கம் இந்தப் போக்குகளை உணர்ந்து சரியான முடிவுகளை எடுக்கச் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பேரழிவிற்கு வழி வகுக்கும்.
இந்த நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது மற்றும் அதன் விளைவாக நாட்டிற்கு டொலர் வரத்து வெகுவாகக் குறைந்து நிலைமையை சரியாக நிர்வகிக்கத் தவறியதன் விளைவாக உலகின் முதல் 10 மிகை பணவீக்க நாடுகளுக்குள் வந்தது. இவ்வளவு கடுமையான நெருக்கடிக்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கும் வளர்ச்சித் திட்டங்களை கைவிடாதது பொருளாதாரத்தை திட்டமிடுவதில் அரசின் மோசமான நிர்வாகத்திற்கு சிறந்த உதாரணம்.
குறைந்த பட்சம் இப்போது முறையான பொருளாதார முகாமைத்துவத்துக்கான திட்டமிடலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். மாறாக கடுமையான அடக்குமுறை சட்டங்களை கொண்டு வந்து பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு முன்னுரிமை கொடுத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் எதிர்பார்த்த பலன்களை அடைவது மிகவும் கடினம். போராட்டம் என்ற போர்வையில் நடத்தப்படும் வன்முறை, கலவரச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அத்தகைய போராட்டத்திற்குக் காரணமான அடிப்படைப் பிரச்சினைகளை நாம் மறந்துவிடக் கூடாது.
தற்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அனைத்துத் தரப்பினராலும் அறிமுகப்படுத்தப்படும் உண்மையான பொருளாதாரத் திட்டத்தின் மூலமே நாட்டை அதிக பணவீக்கத்திலிருந்து காப்பாற்ற முடியும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச அர்ப்பணிப்பு தேவைப்படும் தருணம் வந்துவிட்டது. காலதாமதமின்றி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அரசியல் செய்ய நாடே இருக்காது.
0 comments:
Post a Comment