ADS 468x60

15 July 2022

நாட்டின் சாமானிய மக்கள் இப்போது வேண்டுவது எது!

இன்று மக்கள் பல பிரச்சினைகளோடு வாழவில்லை, இறந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்த மக்கள் நம்பி வாக்களித்த தலைவன் கைவிட்டு சென்றதால் அனாதரவாக நிற்கின்றனர். இதனை இன்னும் சிலரது இராஜபோக வாழ்க்கைக்காக அரசியல் செய்ய முற்படுகின்றனரே தவிர, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு யாரும் முடிவுகட்டுவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

அடுத்ததாக அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் போரில் நாட்டின் கவனம் திரும்பியுள்ளது. தற்போது மும்முனைப் போராக உள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் வேட்புமனுக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளபடி, அரசியலமைப்பின் பிரகாரம், ஒருவருக்குமேல் களமிறங்குவார்களானால், பாராளுமன்ற உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் வேட்பாளர்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். 50 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறும் வேட்பாளர் மீதமுள்ள ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றத்தின் ஊடாக இந்த செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும் வரை தற்போதைய பிரதமரே பதில் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் அதுவே சாசனம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளியேற நிர்ப்பந்திக்கும் வகையில் நாட்டில் மக்கள் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியும் சேர்ந்தே இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே தற்போது பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அனைத்து கட்சித் தலைவர்களின் கோரிக்கையாகும். இல்லாவிட்டால் நாட்டில் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் சாமானிய மக்கள் இப்போது விரும்புவது நீண்டகாலமாகத் தம்மை அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் அரசைத்தான்.  பொதுமக்கள் எதிர்பார்க்கும் நியாயமான ஆட்சிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழிவகுக்க வேண்டும். தாங்கள் முன்வைத்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கிறார்கள்.

இதனால், இப்போது நமது நாடு மிகவும் நெருக்கடியான தருணத்தில் கொண்டு நிற்பாட்டப்பட்டுள்ளது. நாட்டை இந்தப் பேரழிவிற்குக் கொண்டு வந்த அனைத்துப் பிரச்சினைகளும் அப்படியே இருக்கும் போதே இது இப்படி நிறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் வரிசைகள் இன்னும் அப்படியே உள்ளன. என்றோ ஒரு நாள் பெட்ரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே அந்த வரிசையில் உள்ளவர்களிடம் உள்ளது. லிட்ரோ எரிவாயு விநியோகத் திட்டம் இப்போது நடைமுறையில் உள்ளது, அது எரிவாயு வரிசைகளை மெலிதாகக் குறைக்கிறது. அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பிட்ட வகை அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினசரி கூலி வேலை செய்து, சுயதொழில் செய்து வந்த பலரின் வருமானம் முடங்கியுள்ளது. பொது போக்குவரத்து சேவைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இயங்குகின்றன. இதனால் ரயில் பயணம் மரணத்துடன் கூடிய வாழ்க்கைப் பயணமாக மாறியுள்ளது. பாடசாலைகள்; மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே இயக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார பணவீக்கம் உலகின் அனைத்து நாடுகளையும் விஞ்சியுள்ளது. என இன்னும் பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டுபோகலாம்.

சில மாதங்களுக்கு முன்பு நம் நாடு இந்த நிலையில் இல்லை. ஆனால் அதற்கு முன்னரே, நாட்டின் பொருளாதாரம் இந்த நிலையை அடையும் என்று நாட்டின் பொருளாதார ஆய்வாளர்கள், அறிஞர்கள் கூறிய கணிப்புகள் எல்லாம் பெரிதாக ஒன்றும் ஆகவில்லை. பொருளாதாரம் குறித்து முடிவெடுக்கும் புத்திசாலிகளால் புரிந்து கொள்ள முடியாதது நாட்டின் துரதிஷ;டம். இயற்கை உரப் புரட்சி என்று அழைக்கப்படும் ஒரு கொள்கை இருக்கும் பொருளாதாரத்தை மலையிலிருந்து கீழே தள்ளும் ஒரு முடிவாகவே நோக்கப்படுகின்றன, இந்த முடிவு நாட்டினை பஞ்சத்திற்கு இட்டுச் செல்கிறது என்று வெளிப்படுத்திய ஆய்வாளர்களின் கருத்துக்களை ஊடகங்கள் உட்பட பல அரசியல் தலைவர்களால் கேலி செய்யப்பட்டது. 

இதனால் இந்த முட்டாள்தனமான அரசியல் முடிவுகளின் விளைவுகளை இந்நாட்டின் அப்பாவிப் பொது மக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. அந்த முடிவுகளை எடுத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளும் மிகச் சிறப்பாக வாழுகின்றனர்;. ஆகவே எதிர்வரும் இடைக்கால அரசாங்கம் இந்தக் குறைபாடுகளை உணர்ந்து மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயற்பட வேண்டுமென நாட்டில் nhடங்கியுள்ள மக்கள் போராட்டம் உரத்த குரலில் கூறிவருகின்றது.

எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நாட்டை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்வதே முதலில் நடக்க வேண்டும். அது ஜனாதிபதி மற்றும் நாட்டின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் உள்ள ஏகோபித்த பொறுப்பாகும். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து தரப்பினரும் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதனைத் தவிர்த்து, நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கவனமாக இந்த போராட்டத்தினை நகர்திச் செல்ல முன்னேற வேண்டும். இதனால் அடுத்த சில நாட்களில் அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். பொறுமை இல்லாமல் எந்த வெற்றியையும் அடைய முடியாது இது வரலாறு சொல்லும் பாடம்.

0 comments:

Post a Comment