ADS 468x60

25 August 2025

சட்டம் என்பது எப்போதும் நீதியை நிலைநாட்டுவதற்காகவே இருக்க வேண்டும்.

 வணக்கம்! அன்பின் உறவுகளே!

இந்த நேரத்தில்தமிழ்த்திரை உலகப் பிரபலத்தின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன. "ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்."

இன்றைய உலகின் மிகவும் பலமான சக்திகளில் ஒன்று எதுவென்று கேட்டால், ஒரு கணம் நாம் மௌனிக்கலாம். ஆனால், அந்த மௌனம் கலைந்தவுடன் எழும் ஒரு சொல் சட்டம்! ஆம், ஒரு மனிதனின் நடத்தை, ஒரு சமூகத்தின் கட்டமைப்பு, ஒரு தேசத்தின் எதிர்காலம் என எல்லாவற்றையும் தீர்மானிக்கும் மிக ஆழமான, அடிப்படை சக்தி அதுதான். சட்டம் என்பது வெறுமனே ஒரு சில விதிகளின் தொகுப்பல்ல. அது ஒரு சமூகத்தின் இதயம், ஒரு தேசத்தின் ஆன்மா. அது நீதிக்கும், அமைதிக்கும், பாதுகாப்புக்கும் வேலி போடும் ஒரு கவசமாக தொழிற்படுகின்றது.

சட்டம் என்பது எப்போதும் நீதியை நிலைநாட்டுவதற்காகவே இருக்க வேண்டும். சட்டமும், நீதியும் பிரிக்க முடியாதவை. ஒரு சமூகத்தின் இயக்கம் சுமுகமாக இருக்க வேண்டுமென்றால், அந்த சமூகத்தின் ஒவ்வொருவரும் சட்டத்தை மதித்து, அதற்கு அடிபணிய வேண்டும். இது வெறுமனே அரசினால் விதிக்கப்பட்ட ஒரு கட்டுப்பாடல்ல, இது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படை பண்பு.

ஆனால், அன்பின் உறவுகளே, நம் நாட்டின் கடந்த காலத்தைப் பார்த்தால், சட்டம் எப்போதும் சமமான முறையில் செயற்பட்டதா? என்ற கேள்விக்கு நம் இதயம் தடுமாறித்தான் பதிலளிக்கும். கடந்த எழுபத்தாறு ஆண்டுகளாக, நம் அரசியல் வரலாற்றில் பல மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் என்று எத்தனையோ சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை வெறுமனே அரசியல் பேச்சுகளாகவும், அறிக்கைகளாகவும் மட்டுமே முடிந்துவிட்டன. சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. காரணம், அரசியல்வாதிகளின் வர்க்க ஒத்துழைப்பு. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், எதிர்க் கட்சியின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது, பதிலுக்கு அவர்களும் அதேபோல் நடந்து கொள்வது என, சட்டம் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இரையானது.

ஆனால், வரலாறு எப்போதும் ஒரே திசையில் பயணிப்பதில்லை. சில அலைகள் கரையைத் தாண்டிப் போகும்போதுதான், புதிய மணல் படிந்து ஒரு மாற்றம் நிகழ்கிறது. கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிகழ்வு, அத்தகையதொரு அலைதான். இந்த நாட்டின் அரசியல், சமூக மற்றும் நீதித்துறை வரலாற்றில் இது ஒரு தனித்துவமான திருப்புமுனை. சமூக ஊடகங்களில் "ரணில் கைது", "ரணில் ரிமாண்ட்" எனப் பேசப்பட்ட தலைப்புச் செய்திகள், பல தசாப்தங்களாக சமூக மாற்றத்தை கனவு கண்ட சமூக முற்போக்காளர்களின் கனவை நிறைவேற்றியது. ஆம்! இந்தத் தலைப்புச் செய்திகள் சாதாரணமானவை அல்ல. இவை ஒரு நாட்டின் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றத்தின் வெளிப்பாடு.

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கொள்கை வெறுமனே ஒரு புத்தகத்தின் வாசகமல்ல, அது நடைமுறையில் சாத்தியமான ஒரு உண்மை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது. இந்த இடத்தில், உலக அரசியலில் ஒரு அசைக்க முடியாத தலைவராக இருந்த சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஒரு முறை குறிப்பிட்டதைப் போல, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, தூய்மையான அரசு அத்தியாவசியம். சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும். ஒரு நீதிபதிக்கு எப்படி ஒரு சட்டமோ, அதே சட்டம் ஒரு பிரதமருக்கும் பொருந்தும்.” இந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை!

நமது நாட்டிலும், சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் முன்னாள் அரச தலைவராக இருந்தாலும், முன்னாள் பிரதமராக இருந்தாலும், அல்லது சக்திவாய்ந்த நபராக இருந்தாலும், சட்டம் தன் கடமையிலிருந்து விலகக் கூடாது.

ஆனால், இந்த நிகழ்வுக்குப் பிறகு நடந்த அரசியல் நாடகங்களைக் கவனித்தீர்களா? ஒருகாலத்தில் ஊழல் மிகுந்த ஆட்சியாளர் என ரணில் விக்ரமசிங்கே அவர்களை விமர்சித்த சஜிதின் சமகி ஜன பலவேகய, இப்போது திடீரென அவரது புனிதத்தன்மையைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளது. அதேபோல், மத்திய வங்கித் திருடர்களை தண்டிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ இப்போது ரணிலின் பக்கம் நிற்பது வேடிக்கையானது. இது, ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் முகங்களில் ஏற்பட்ட அச்சத்தை வெளிப்படுத்துகிறது.

ஆனால், இந்த அச்சம் ஒரு நல்ல அறிகுறி. எதிர்காலத்தில், கொள்கைரீதியான, தூய்மையான அரசியல் இந்த நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நமது நம்பிக்கை தொடர்கிறது. ஒரு அழகான நாடு, ஒரு வளமான வாழ்க்கை என்ற அந்த அரசியல் கருப்பொருள் வெறும் முழக்கமல்ல. அது ஒரு தேசத்தின் அசைக்க முடியாத இலக்கு.

அந்த இலக்கை நோக்கிப் பயணிப்பதில், சட்டம் மிகவும் முக்கியமானது. அது எந்தப் பதவியில் இருப்பவருக்கும் ஏற்றபடி வளைந்து கொடுக்கக்கூடாது. நீதியான சமூகத்தை உருவாக்குவதுதான் ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதை விட மிக மிக முக்கியமானது. இது ஒரு ஆரம்பம்தான், ஒரு புதிய விடியலின் தொடக்கம். இந்த மாற்றம் நம் அரசியல் குப்பைகளை அகற்றி, ஒரு நியாயமான சமூகத்தை உருவாக்க உதவும்.

அன்பின் உறவுகளே! அரசியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் இல்லாத, ஒரு துப்பரவான இலங்கையை நாம் உருவாக்க வேண்டும். அந்தப் பொறுப்பு இப்போது அரசியல் தலைவர்களை விடவும், நம் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு முறையும், ஒரு தூய அரசியல் தலைவனை, கொள்கைவாதியை அடையாளம் கண்டு ஆதரிக்கும்போதே, இந்த மாற்றத்தை நாம் உறுதிப்படுத்த முடியும். சட்டத்தை மதிக்கும் தலைவர்களையும், அதன் ஆளுகையை உறுதிப்படுத்தும் தலைவர்களையும் ஆதரிப்பதே நமது பொறுப்பு.

நன்றி!

 

0 comments:

Post a Comment