ADS 468x60

21 July 2026

வறட்சியை எதிர்கொள்ளும் இலங்கை விவசாயம்

வறண்ட மண், வெடித்துக் கிடக்கும் வயல் வரப்புகள், தண்ணீருக்காகக் காத்திருக்கும் கால்நடைகள்இவை இன்று இலங்கையின் வறண்ட வலயத்தில் (Dry Zone) வாழும் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு அன்றாட யதார்த்தமாக மாறிவிட்டன. மழைப் பொழிவின் தாளம் மாறியுள்ளது; வானிலை இனி பழைய கணக்கீட்டு முறைகளுக்குள் அடங்குவதில்லை. இந்நிலையில், மண்ணை மறுபடியும் உயிர்ப்பிக்கும் ஒரு விவசாய அணுகுமுறை உலகெங்கும் கவனம் பெற்றுவருகிறதுபாதுகாப்பு விவசாயம் (Conservation Agriculture). இது வெறுமனே ஒரு தொழில்நுட்ப மாற்றமல்ல; மண்ணுடனான மனிதனின் உறவை மறுவரையறை செய்யும் ஒரு சிந்தனை முறை.

வரலாற்று ரீதியாக நோக்கினால், இலங்கையின் வறண்ட வலயம் நீர் முகாமைத்துவத்தில் அறியாதவர்கள் அல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை பிரதேசங்களில் கட்டமைக்கப்பட்ட அடுக்கு முறைமைகள் (Tank Cascade Systems) மழைநீரை மறு பயன்பாட்டுக்காக சேமித்து வைக்கும் ஒரு பழைமையான, ஆனாலும் அறிவியல் ரீதியாக அற்புதமான நீர் முகாமைத்துவ வடிவமைப்பாக இருந்தது. அந்த மூதாதையர் அறிவின் மையக் கருத்தும் இன்றைய பாதுகாப்பு விவசாயத்தின் தத்துவமும் ஒரே இழையால் இணைக்கப்பட்டுள்ளனநீரை வீணாக்காமல் பாதுகாத்தல், மண்ணை மதித்து நடத்துதல். எனினும் காலனித்துவ காலப் பொருளாதார மாற்றங்களும், பின்னர் ஏற்பட்ட பயிர்ச் சுழற்சி முறைகளின் சிதைவும், அத்துடன் தற்போதைய காலநிலை நெருக்கடியும் இணைந்து, அந்த பாரம்பரிய அறிவை நவீன விஞ்ஞானத்துடன் மீள இணைக்க வேண்டிய தேவையை இன்று உருவாக்கியுள்ளன.

வறட்சி என்பது இன்று உலக விவசாயத்தைப் பாதிக்கும் மிகக் கொடிய இயற்கை அபாயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மழைவீழ்ச்சியின் ஒழுங்கின்மையும், தண்ணீர்ப் பற்றாக்குறையும் விவசாய உற்பத்தியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணின் வளத்தையும் குறைத்து, உயிரியல் பல்வகைமையையும் பாதித்து, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரித்து, நிலச் சீரழிவையும் துரிதப்படுத்துகிறது. இலங்கை ஏற்கெனவே பல்வேறு வறட்சிகளை அனுபவித்துள்ளது; சோளம், நெல், காய்கறிகள், பயறு வகைகள் உள்ளிட்ட பல உணவுப் பயிர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மார்ச் முதல் செப்டெம்பர் வரையான யால (Yala) பயிர்ச் செய்கைக் காலப்பகுதியில், வறண்ட வலயப் பிரதேசங்களில் வறட்சி ஓர் அடிக்கடி நிகழும் நிகழ்வாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் விவசாயிகள் தமது சாகுபடி நிலப்பரப்பைக் குறைத்தல், நடவை தாமதப்படுத்துதல், அல்லது முழுமையாக சாகுபடியைக் கைவிடுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடுகிறது. மீண்டும் மீண்டும் நிலத்தை உழுதல், பயிர் எச்சங்களை அகற்றுதல், ஒரே பயிரை மட்டும் தொடர்ந்து சாகுபடி செய்தல் ஆகிய பாரம்பரிய நடைமுறைகள் இந்நிலையை மேலும் மோசமாக்குகின்றன. மீள் உருவாகும் திறன் கொண்ட (Resilient) விவசாய அமைப்புகளை உருவாக்க வேண்டுமெனில், ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்கும் அதேவேளை மண்ணின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நடைமுறைகளை நோக்கி விவசாயம் திரும்ப வேண்டியது காலத்தின் தேவையாகியுள்ளது.

பாதுகாப்பு விவசாயம் என்பது மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடைய அடிப்படைக் கோட்பாடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நிலைபேறான விவசாய அணுகுமுறையாகும். முதலாவது கோட்பாடு, தேவையற்ற உழவை குறைத்தல் அல்லது முற்றாக நீக்குதல் மூலம் மண்ணின் இயற்கையான அமைப்பைப் பேணுவதாகும்; இது மண்ணின் கட்டமைப்பைப் பாதுகாத்து, நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளைப் பேணி, மண் அரிப்பையும் குறைக்கிறது. இரண்டாவது கோட்பாடு, பயிர் எச்சங்கள் அல்லது மூடுபயிர்கள் (Cover Crops) மூலம் மண்ணை நிரந்தரமாக மூடி வைத்தலாகும். இந்த பாதுகாப்பு அடுக்கு நீராவியாதலால் ஏற்படும் நீர் இழப்பைக் குறைத்து, மண்ணின் வெப்பநிலையைச் சீராக்கி, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, காற்று மற்றும் மழையால் ஏற்படும் மண் அரிப்பிலிருந்தும் பாதுகாக்கிறது. மூன்றாவது கோட்பாடு, பயிர் சுழற்சி, கலப்புச் சாகுபடி (Intercropping), மூடுபயிர் சாகுபடி போன்ற நடைமுறைகள் மூலம் பயிர் பல்வகைமையை மேம்படுத்துவதாகும்; இது மண் வளத்தை அதிகரித்து, ஊட்டச்சத்துச் சுழற்சியை மேம்படுத்தி, பூச்சி, நோய், களைத் தொல்லைகளையும் குறைக்கிறது. தீவிர மண் கையாளுகையைச் சார்ந்திராமல், இயற்கையின் உயிரியல் செயற்பாடுகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான மண்ணை உருவாக்குவதே இதன் மையம்.

 கோட்பாடு

விளக்கம்

1. குறைந்தபட்ச மண் தொந்தரவு (Minimum Soil Disturbance)

உழவைக் குறைத்தல் / நீக்குதல்மண் கட்டமைப்பையும் நுண்ணுயிரிகளையும் பாதுகாத்தல்

2. நிரந்தர மண் மூடுதல் (Permanent Soil Cover)

பயிர் எச்சம் / மூடுபயிர் மூலம் நீராவி இழப்பு, மண் வெப்பம், களைவளர்ச்சி குறைத்தல்

3. பயிர் பல்வகைமைப்படுத்தல் (Crop Diversification)

பயிர் சுழற்சி, கலப்புச் சாகுபடிமண் வளம் மற்றும் நோய்/பூச்சி எதிர்ப்பு மேம்பாடு

 

பொருளாதார நோக்கில் ஆராயும்போது, பாதுகாப்பு விவசாயத்தின் தர்க்கம் மிகவும் தெளிவானது. மீண்டும் மீண்டும் நிலத்தை உழுவதற்கான எரிபொருள் செலவு, இயந்திர தேய்மானம், தொழிலாள செலவு ஆகியவை பாரம்பரிய விவசாயத்தின் உற்பத்திச் செலவில் கணிசமான பங்கை வகிக்கின்றன. உழவைக் குறைப்பதன் மூலம் இச்செலவுகள் கணிசமாகக் குறைகின்றன; அதே நேரம் மண்ணின் ஈரப்பதத் தக்கவைப்புத் திறன் அதிகரிப்பதால் நீர்ப்பாசனச் செலவும் குறைகிறது. இது குறிப்பாக மூலதனப் பற்றாக்குறை மிகுந்த சிறு வைப்பிடக் குடும்பங்களுக்கு முக்கியமானது; ஏனெனில் அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி உள்ளீட்டுச் செலவுகளாகவே செலவிடப்படுகிறது. நீண்டகாலத்தில் மகசூல் நிலைத்தன்மையும் செலவுக் குறைப்பும் இணையும்போது, விவசாயக் குடும்பங்களின் நிகர வருமானமும் அவர்களது கடன் சுமையைத் தாங்கும் திறனும் மேம்படுகின்றன.

மகாத்மா காந்தி ஒரு சந்தர்ப்பத்தில் கூறியதுபோல், "இந்த பூமி ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்யப் போதுமான வளத்தைக் கொண்டுள்ளது, ஆனால் ஒவ்வொருவரின் பேராசையை யும் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை." இந்த சிந்தனை, மண் வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் இன்றைய விவசாயக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு அடிப்படை வழிகாட்டுதலாக அமைகிறது.

இருபதாம் நூற்றாண்டின் பசுமைப் புரட்சி (Green Revolution), உலக உணவு உற்பத்தியை வெகுவாக அதிகரித்தபோதிலும், தீவிர இரசாயன உரப் பயன்பாடு, அதிக நீர்ப் பாசன தேவை, மண் வளச் சி தைவு ஆகிய நீண்டகால விளைவுகளையும் விட்டுச் சென்றது என்பதை பொருளாதார வரலாற்றாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றனர். அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளப்பட்ட பாடம் தெளிவானதுஉற்பத்தித் திறனை மட்டும் இலக்காகக் கொள்ளும் விவசாயக் கொள்கை, நீண்டகாலத்தில் அந்த உற்பத்தித்திறனையே அரித்துவிடும் அபாயம் கொண்டது. பாதுகாப்பு விவசாயம், அந்த வரலாற்றுப் பிழையிலிருந்து விலகி, உற்பத்தித்திறனையும் சூழலியல் நிலைத்தன்மையையும் ஒரே சமயத்தில் இணைத்துச் செல்லும் ஒரு திருத்தும் பாதையாகக் காணப்படலாம்.

ஆரோக்கியமான மண் ஒரு கடற்பஞ்சு (Sponge) போன்று செயற்படுகிறது. மழைக்காலத்தில் தண்ணீரைச் சேமித்து, வறட்சிக் காலத்தில் அதை மெதுவாக பயிர்களுக்கு வழங்குகிறது. வெவ்வேறு வேளாண் சூழலியல் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பாதுகாப்பு விவசாயம் மண்ணின் கரிமச் சத்தை மேம்படுத்துவதையும், மண்ணின் உயிரியல் செயற்பாட்டை அதிகரிப்பதையும், நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதையும், மண்ணின் அமைப்பை வலுப்படுத்துவதையும் தொடர்ச்சியாக நிரூபித்துள்ளன. இது மழைநீர் வீணாக ஓடிப்போவதைக் குறைத்து, மேலும் அதிக அளவு நீர் மண்ணுக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது. வயல்களில் விடப்படும் பயிர் எச்சங்கள் இயற்கையான மூடுபடையாக (Mulch) செயற்பட்டு, மண்ணின் வெப்பநிலையைக் குறைத்து, களைகளையும் அடக்குகின்றன.

உலக வங்கியின் தரவுகளின்படி, உலகளாவிய இனிய நீர் பயன்பாட்டில் சுமார் 70 சதவிகிதம் விவசாயத் துறையால் எடுத்துக்கொள்ளப்படுகிறது; நீர்ப்பாசன விவசாயம் சாகுபடி நிலப்பரப்பில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டுமே உள்ளடக்கியிருந்தாலும், அது உலக உணவு உற்பத்தியில் சுமார் 40 சதவிகித பங்களிப்பை வழங்குகிறது. இது நீர் முகாமைத்துவத்தின் திறன் விவசாயத் துறையின் உற்பத்தித்திறனுடன் எவ்வளவு நேரடியாக பிணைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும், சர்வதேச எரிசக்தி முகவரகம் (IEA) தொடர்பான ஆய்வுத் தரவுகள் சுட்டிக்காட்டுவதுபோல், நிலத்தடி நீரை இறைக்கும் பாசன இறைப்பு முறைமைகள் கணிசமான அளவு எரிசக்தியைப் பயன்படுத்துகின்றன; இதனால் நீர் பாதுகாப்பும் எரிசக்தி பாதுகாப்பும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த ஒரு உபாய உறவைக் கொண்டுள்ளன. மண்ணின் இயற்கையான நீர்த் தேக்கும் திறனை மேம்படுத்தும் பாதுகாப்பு விவசாயம், இறைப்பு தேவையையே குறைப்பதன் மூலம், இந்த நீர்-எரிசக்தி-உணவு முக்கூட்டு (Water-Energy-Food Nexus) சவாலுக்கும் ஒரு நேரடித் தீர்வை முன்வைக்கிறது.

நீர் பயன்பாட்டுத் திறன் (Water-Use Efficiency) மேம்பாட்டிலேயே பாதுகாப்பு விவசாயத்தின் மிகப் பெரிய வலிமை அடங்கியுள்ளது. உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) தொடர்பான ஆய்வுத் தரவுகளின்படி, 2015/16 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் சுமார் 200 மில்லியன் ஹெக்டேயார் நிலப்பரப்பில் பாதுகாப்பு விவசாய முறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன; இது 2008/09 காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். ஆபிரிக்காவில் மட்டும் இக்காலப்பகுதியில் பாதுகாப்பு விவசாயப் பரப்பளவு 211 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளது; ஐரோப்பாவில் இது 127 சதவிகிதத்தால் விரிவடைந்துள்ளது. சோளம், கோதுமை, நெல், சோயாபீன் உள்ளிட்ட பல பயிர் முறைமைகளில், குறைந்த நீர்ப்பாசனத்துடன் அதிக மகசூலைப் பெறமுடிந்துள்ளதாக நீண்டகால ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பயிர் எச்சங்களைத் தக்கவைத்தல், குறைந்தபட்ச உழவு, பயிர் சுழற்சி, கலப்புச் சாகுபடி ஆகியன ஒன்றிணைந்து நீர் இழப்பைக் குறைத்து, ஊட்டச்சத்துக் கிடைப்பையும் மேம்படுத்துகின்றன. இந்நடைமுறைகள் கரிமப் பிணைப்பையும் (Carbon Sequestration) அதிகரித்து, விவசாயத் துறை காலநிலை மாற்றத் தணிப்புக்கும் மாற்றியமைத்தலுக்கும் ஒரே சமயத்தில் பங்களிக்க வழிவகுக்கின்றன.

படம் 1: உலகளாவிய பாதுகாப்பு விவசாய பரவலாக்கம்ஆபிரிக்கா, ஐரோப்பா (2008/09 → 2015/16)

நீர் பாதுகாப்பு என்பது இன்று வெறுமனே ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல, அது புவிசார் அரசியல் (Geopolitics) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதுகாப்புப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது. ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தொடர்ந்து சுட்டிக்காட்டுவதுபோல், காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் நீர்ப் பற்றாக்குறையும் வறட்சியும் பல பிரதேசங்களில் வாழ்வாதார நெருக்கடி, உணவுப் பாதுகாப்பின்மை, மக்கள் இடம்பெயர்வு ஆகியவற்றுக்கு பங்களிக்கும் நிலைமைகளாக மாறியுள்ளன. உணவுப் பாதுகாப்பின்மை என்பது சமூக அமைதியின்மைக்கும் இடம்பெயர்வுக்கும் ஒரு வித்தாக மாறக்கூடும் என்பதை உலகின் பல பிராந்தியங்களில் காணப்பட்ட அனுபவங்கள் உறுதிசெய்கின்றன. இச்சூழலில், உள்நாட்டு உணவு உற்பத்தி முறைமைகளை மீண்டெழு தன்மை கொண்டதாக மாற்றுவது, ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் சமூக அமைதிக்கும் அடிப்படையான ஒரு உபாய முதலீடாக கருதப்பட வேண்டும்.

ஆரம்பகட்ட மாற்றக் காலத்தில் விவசாயிகள் சிறிதளவு மகசூல் குறைவைக் கவனிக்க நேரிடலாம் என்றாலும், நீண்டகால நன்மைகள் இந்தத் தற்காலிகச் சவால்களை விட அதிகமானவை. மண்ணின் ஆரோக்கியம் பருவங்கள் கடந்து மேம்படும்போது, விவசாய உற்பத்தித்திறன் நிலையானதாகவும் மீண்டெழு (Resilience) தன்மை கொண்டதாகவும் மாறுகிறது.

பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் ஒருமுறை குறிப்பிட்டதுபோல், அபிவிருத்தி என்பது வெறும் வருமான வளர்ச்சி மட்டுமல்ல; அது மனிதர்கள் தமது வாழ்க்கையை வடிவமைக்கும் திறனையும் சுதந்திரத்தையும் விரிவுபடுத்துவதாகும். வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயக் குடும்பங்களின் சுதந்திரத்தையும் தெரிவுகளையும் மீட்டெடுப்பதற்கான ஒரு நடைமுறை வழி என்ற வகையில் பாதுகாப்பு விவசாயத்தை நோக்கிக்கொள்ளலாம்.

நவீன இலக்கத் தொழில்நுட்பங்கள் பாதுகாப்பு விவசாயத்தை வலுப்படுத்த சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. திட்டமிட்ட விவசாயம் (Precision Agriculture) செயற்கைக்கோள் தகவல்கள், ஆளில்லா விமானங்கள் (Drones), மண் ஈரப்பத உணரிகள், வானிலை முன்னறிவிப்பு, புவியியல் தகவல் அமைப்பு (GIS), இணையம் இணைந்த சாதனங்கள் (IoT), தானியங்கு நீர்ப்பாசன முறைமைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து விவசாயிகள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. நிலம் முழுவதும் சீராக நீர் அல்லது உரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இத்தொழில்நுட்பங்கள் தேவையான இடத்திலும் தேவையான நேரத்திலும் மட்டுமே உள்ளீடுகளைப் பயன்படுத்த வழிவகுக்கின்றன. இது வளப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், உற்பத்திச் செலவையும் சூழல் தாக்கத்தையும் குறைக்கிறது. திட்டமிட்ட நீர்ப்பாசனத்துடனும், வறட்சி முன்னறிவிப்புடனும், மேம்பட்ட ஊட்டச்சத்து முகாமைத்துவத்துடனும் பாதுகாப்பு விவசாய நடைமுறைகளை இணைப்பது, நீர் பற்றாக்குறை கொண்ட நிலப்பரப்புகளில் உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்க முடியும். வறட்சியைத் தாங்கும் பயிர் இனங்களும் இந்த முறைமைகளுடன் இணைக்கப்படும்போது, மாறிவரும் காலநிலை நிலைமைகளுக்கு விவசாயம் இன்னும் மீண்டெழு தன்மை கொண்டதாக மாறுகிறது.

நீர் அரிதான சூழல்களில் விவசாயத்தை மாற்றியமைத்த நாடுகளின் அனுபவங்கள் இலங்கைக்கு பயனுள்ள பாடங்களை வழங்குகின்றன. துளி நீர்ப்பாசன (Drip Irrigation) தொழில்நுட்பத்தை பரவலாக அமுல்படுத்திய நாடுகள், பாரம்பரிய வெள்ள நீர்ப்பாசன முறைகளுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவு நீரைச் சேமித்து, அதே அளவு நிலத்திலிருந்து அதிக மகசூலைப் பெற்றுள்ளன. இது நிரூபிப்பது, தொழில்நுட்ப புதுமையும் சரியான கொள்கை ஆதரவும் இணையும்போது, நீர்ப் பற்றாக்குறை ஒரு நிரந்தர வரம்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதே. இலங்கையின் வறண்ட வலயங்களிலும், குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, மொணராகலை போன்ற பிரதேசங்களிலும், சிறிய அளவிலான துளி நீர்ப்பாசன முன்னெடுப்புகள் ஏற்கெனவே சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன; இவற்றை பாதுகாப்பு விவசாய நடைமுறைகளுடன் இணைத்து விரிவாக்குவது கருதத்தக்க ஒரு கொள்கை முன்னெடுப்பாக அமையும்.

வங்காதேச பொருளாதார அறிஞர் முகமட் யூனுஸ் அடிக்கடி வலியுறுத்துவதுபோல், மாற்றம் என்பது எப்போதும் மேலிருந்து கீழாக அல்ல, அடிமட்டத்திலிருந்தே ஆரம்பமாக வேண்டும். சிறு விவசாயக் குடும்பங்களின் அன்றாட முடிவுகளிலேயே காலநிலை மீள் உருவாகும் தன்மையின் உண்மையான வேர் அமைந்துள்ளது என்பதை இச்சிந்தனை நமக்கு நினைவூட்டுகிறது.

நிரூபிக்கப்பட்ட நன்மைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பு விவசாயம் சவால்கள் இல்லாதது அல்ல. குறைந்தபட்ச உழவு அல்லது நேரடி விதைப்புக்குத் தேவையான சிறப்பு இயந்திரங்களை பல சிறு வைப்பிடங்கள் கொண்ட விவசாயிகளால் அணுக முடியாத நிலை உள்ளது. பயிர் எச்சங்கள் பெரும்பாலும் கால்நடைத் தீவனத்திற்காகவோ வீட்டுத் தேவைகளுக்காகவோ அகற்றப்படுவதால், மண்ணைப் பாதுகாக்கப் போதுமான மூடுபடை கிடைப்பதில்லை. மாற்றக் காலப்பகுதியில் களை முகாமைத்துவமும் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. அறிவுப் பற்றாக்குறையும் இன்னொரு பெரும் தடையாக உள்ளது; உள்ளூர் மண், பயிர், காலநிலை ஆகியவற்றுடன் வெவ்வேறு நடைமுறைகள் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது வெற்றிகரமான பாதுகாப்பு விவசாயத்திற்கு அவசியமாகும். பல தசாப்தங்களாக பாரம்பரிய உழவு முறைகளையே பின்பற்றி வந்த மூத்த விவசாயிகளுக்கு, புதிய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது ஒரு உளவியல் ரீதியான சவாலாகவும் அமையலாம்; நம்பிக்கை என்பது ஒரு பருவத்தில் உருவாவதல்ல, பல ஆண்டுகளின் நிரூபிக்கப்பட்ட முடிவுகளால் மட்டுமே கட்டமைக்கப்படும். எனவே, விவசாயத் திணைக்களங்களும் மாவட்ட செயலகங்களும் நடத்தும் முன்மாதிரி பண்ணைத் திட்டங்கள், சக விவசாயிகளிடையே அனுபவப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் களஞ்சிய நாட்கள் (Field Days), ஆகியன இந்த நம்பிக்கை இடைவெளியைக் குறைப்பதில் தீர்க்கமான பங்கு வகிக்கின்றன. எனவே, இதன் விரிவான அமுல்படுத்தல், வலுவான விரிவாக்க சேவைகள், விவசாயிகளுக்கான பயிற்சித் திட்டங்கள், முன்மாதிரி பண்ணைகள், ஆதரவான அரசாங்கக் கொள்கைகள், பொருத்தமான இயந்திரங்கள் மற்றும் திட்டமிட்ட விவசாயத் தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட அணுகல் ஆகியவற்றைச் சார்ந்திருக்கும். எந்தவொரு பாதுகாப்பு விவசாயத் திட்டமும் அனைத்து விவசாய முறைமைகளுக்கும் ஒரே வடிவில் பொருந்தாது என்பதால், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் சமமான முக்கியத்துவம் பெறுகிறது.

பெண் விவசாயிகள் பெரும்பாலான வளர்ந்துவரும் நாடுகளில் விவசாய உழைப்புத் திறனில் கணிசமான பங்களிப்பை வழங்கினாலும், நிலம், கடன், இயந்திரங்கள் ஆகியவற்றை அணுகுவதில் அவர்கள் தொடர்ந்து கூடுதல் தடைகளை எதிர்கொள்கின்றனர். பாதுகாப்பு விவசாயத்தின் பரவலான வெற்றி, பாலின சமத்துவத்துடன் கூடிய நிதி அணுகலையும், சிறு கடன் திட்டங்களையும், பெண்களை மையப்படுத்திய பயிற்சி நிகழ்ச்சிகளையும் சார்ந்திருக்கும். இதை உணர்ந்தே, இலங்கையின் NDC 3.0 உள்ளிட்ட பல தேசிய காலநிலைக் கொள்கை ஆவணங்கள், பாலின சமத்துவமும் சமூக உள்ளடக்கமும் கொண்ட (Gender Equality and Social Inclusion) அணுகுமுறையை காலநிலை நடவடிக்கையின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இணைத்துள்ளன.

தென்னாப்பிரிக்க விடுதலைத் தலைவர் நெல்சன் மண்டேலா குறிப்பிட்டதுபோல், "இயலாதது எனத் தோன்றும் வரையே எதுவும் இயலாததாகத் தெரிகிறது." மண்ணை மறுசீரமைக்கும் இந்த நீண்ட, பொறுமையான பயணத்தில், இச்சிந்தனை விவசாயிகளுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு ஊக்கமளிக்கும் நம்பிக்கையை வழங்குகிறது.

இலங்கை, குறிப்பாக யால சாகுபடிக் காலத்தில் நீர்ப் பற்றாக்குறை தொடர்ந்து விவசாய உற்பத்தித்திறனைக் கட்டுப்படுத்தும் வறட்சி பாதிக்கப்பட்ட வறண்ட வலயத்தில், பாதுகாப்பு விவசாயத்தை விரிவுபடுத்த மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. பயிர் எச்ச மூடுபடை இடல், குறைந்தபட்ச உழவு, பயிர் பல்வகைமைப்படுத்தல், மழைநீர் சேகரிப்பு, திட்டமிட்ட நீர்ப்பாசனம் ஆகிய நடைமுறைகளை பொருத்தமான தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் தற்போதுள்ள விவசாய முறைமைகளுடன் இணைக்க முடியும். இந்நடைமுறைகள் விவசாயிகளுக்கு வறட்சியை எதிர்கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், மண் வளத்தை மேம்படுத்தி, உற்பத்திச் செலவைக் குறைத்து, உயிரியல் பல்வகைமையையும் பாதுகாத்து, 2026-2035 காலப்பகுதிக்கான புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC 3.0) அமுல்படுத்தலுக்கும் துணைபுரிகின்றன. இலங்கையின் NDC 3.0, வழமையான நிலைமையுடன் ஒப்பிடும்போது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 20.09 சதவிகிதம் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது; இதில் விவசாயத் துறை மட்டும் 7.5 சதவிகித மாசு குறைப்புப் பங்களிப்பை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. நீர் பாதுகாப்பும் நீர்ப்பாசன முகாமைத்துவமும் இத்திட்டத்தின் முன்னுரிமை மாற்றியமைத்தல் துறைகளுள் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


படம் 2: இலங்கையின் NDC 3.0 (2026–2035) துறைவாரியான மாசு குறைப்பு பங்களிப்பு

இலங்கையின் NDC 3.0 இலக்குகளில் கணிசமான பகுதி, சர்வதேச நிதி, தொழில்நுட்பம், திறன் மேம்பாட்டு ஆதரவு ஆகியவற்றின்மீது நிபந்தனைக்குட்பட்டதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக வங்கியும் பசுமை காலநிலை நிதியமும் (Green Climate Fund) உள்ளிட்ட சர்வதேச நிதியிய அமைப்புகள், வளர்ந்துவரும் நாடுகளில் காலநிலை-நேர்த்தி வேளாண்மைக்கான (Climate-Smart Agriculture) முதலீடுகளை விரிவுபடுத்தி வருகின்றன. இலங்கை போன்ற நாடுகளுக்கு, இத்தகைய சர்வதேச காலநிலை நிதியை உள்நாட்டு வறட்சி மீள் உருவாகும் திட்டங்களுடன் திறம்பட இணைப்பது, வரையறுக்கப்பட்ட நிதிய இடத்திற்குள் இருந்தே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது.

மண் மட்டத்தில் ஏற்படும் மேம்பாடு, சந்தை மட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அறுவடைக்குப் பிந்திய இழப்புகளைக் குறைத்தல், பயிர்களின் மதிப்புக் கூட்டலை மேம்படுத்தல் ஆகியவை இலங்கையின் NDC 3.0 திட்டத்திலும் தெளிவாக முன்னுரிமையாக்கப்பட்டுள்ளன. வறட்சியைத் தாங்கிக் கொண்டு விளைவிக்கப்படும் ஒரு பயிர், சரியான சேமிப்பு, போக்குவரத்து, சந்தைப்படுத்தல் வலையமைப்பு இல்லாத காரணத்தால் அறுவடைக்குப் பின்னர் வீணாகிவிட்டால், மண் மட்டத்தில் ஏற்படும் அனைத்து முன்னேற்றங்களும் பொருளற்றதாகிவிடும். எனவே, பாதுகாப்பு விவசாயத்தை மத்திய, மாகாண, மாவட்ட செயலக மட்ட அபிவிருத்திக் குழுக்களின் ஒருங்கிணைந்த வேளாண் மதிப்புச் சங்கிலி (Agricultural Value Chain) திட்டமிடலுடன் இணைப்பதே, விவசாயிகளின் வயலிலிருந்து சந்தை வரையான முழு பயணத்திலும் மீண்டெழு தன்மையை உறுதிசெய்யும்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் கூறியதுபோல், நிலைபேறான அபிவிருத்தி என்பது ஓர் தெரிவல்ல, அது அடுத்த தலைமுறைகளுக்கான ஒரு பொறுப்பாகும். இந்த சிந்தனை, இலங்கையின் வறண்ட வலயங்களில் மண்ணையும் நீரையும் பாதுகாக்கும் பொறுப்பை இன்றைய தலைமுறையின் மீது வலியுறுத்துகிறது.

பங்காளித்துவம் கொண்ட விரிவாக்க சேவைகள், உள்ளூர் அறிவு, விஞ்ஞான ஆய்வு, தொழில்நுட்ப புதுமை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் அணுகுமுறையே எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். வளங்களைப் பாதுகாக்கும் அதேவேளை பண்ணை இலாபகரத்தன்மையையும் தக்கவைக்கும் உற்பத்தி முறைமைகளை நோக்கி நகர்வதே இன்றைய தேவை. விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளில் ஒன்றாக பாதுகாப்பு விவசாயம் இந்த இலக்கை அடைவதற்கான மிகவும் நடைமுறைச் சாத்தியமான பாதைகளில் ஒன்றை வழங்குகிறது. வலுவான வேளாண் கோட்பாடுகளை நவீன தொழில்நுட்பங்களுடனும், காலநிலை மீண்டெழு பயிர் இனங்களுடனும் இணைப்பதன் மூலம், மேலும் அதிகரித்துவரும் காலநிலை நிச்சயமற்ற தன்மையிலும் எதிர்கால தலைமுறைகளுக்கு உணவளிக்கும் திறன் கொண்ட, உற்பத்தித்திறன் மிக்க, நிலைபேறான ஒரு விவசாயத் துறையாக இலங்கையின் விவசாயத்தை மாற்றியமைக்க முடியும்.

இந்திய கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ஒருமுறை குறிப்பிட்டதுபோல், மண்ணுடன் நெருக்கமாக வாழும் ஒருவரே இயற்கையின் மொழியை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும். இலங்கையின் வறண்ட வலயங்களில் தலைமுறை தலைமுறையாக மண்ணுடன் உரையாடி வாழும் விவசாயக் குடும்பங்களே, இந்த மீள் உருவாகும் எதிர்காலத்தை உருவாக்கும் மையப் பங்காளர்களாக இருக்க வேண்டும். அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் விஞ்ஞான ஆராய்ச்சியுடனும் கொள்கை ஆதரவுடனும் இணைக்கும் ஒரு பாதையே, வறட்சியை வெறும் ஓர் அபாயமாக அல்லாமல், மண்ணையும் மனிதனையும் புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பாக மாற்றியமைக்க முடியும்.

இளைஞர் தலைமுறையின் பங்களிப்பும் இப்பயணத்தில் தவிர்க்கமுடியாதது. கிராமப்புற இளைஞர்கள் பலர் விவசாயத்தைத் தொடர்ச்சியற்ற, லாபமற்ற ஒரு தொழிலாகவே கருதி, நகர்ப்புற வேலைவாய்ப்புகளை நோக்கி இடம்பெயர்ந்துவரும் ஒரு போக்கு இலங்கையின் கிராமப்புறங்களில் தொடர்ந்து காணப்படுகிறது. பாதுகாப்பு விவசாயமும் திட்டமிட்ட விவசாய தொழில்நுட்பங்களும் இணைந்து, விவசாயத்தை ஒரு தரவு-மையப்படுத்தப்பட்ட (Data-Driven), தொழில்நுட்ப ரீதியாக நவீனமான தொழிலாக மறுவடிவமைக்கும்போது, அது இளைஞர்களுக்கு புதிய ஈர்ப்பையும் புதிய பொருளாதார வாய்ப்புகளையும் வழங்கக்கூடும். பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மாவட்ட செயலகங்கள், அபிவிருத்திக் குழுக்கள் ஆகியவை இணைந்து இளைஞர்களுக்கான காலநிலை-நேர்த்தி வேளாண் தொழில்முனைவு (Agri-Entrepreneurship) வாய்ப்புகளை உருவாக்கும்போது, கிராமப்புற பொருளாதாரமும் மறுபடியும் உயிர்ப்பெறும். மண்ணைப் பாதுகாத்தல் என்பது கடந்த காலத்தை மீட்டெடுக்கும் ஒரு செயல் மட்டுமல்ல; அது வரும் தலைமுறைகளுக்கான ஒரு பொறுப்பையும், அவர்களுக்கான ஒரு வாய்ப்பையும் ஒரே சமயத்தில் உருவாக்கும் செயலாகும்.

0 comments:

Post a Comment