ADS 468x60

19 October 2026

இணையத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே தேசியக் கடமை


இலங்கையில் சிறுவர்கள் இணையவெளியில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் இனியும் கருத்தியல் ரீதியான கவலையாக மட்டும் எஞ்சவில்லை; அவை பதிவு செய்யப்பட்ட, எண்ணிக்கையில் காட்டப்படக்கூடிய யதார்த்தமாக மாறியுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (National Child Protection Authority – NCPA) 2024ஆம் ஆண்டில் நிர்வாணப் புகைப்படங்களைக் காட்டி அச்சுறுத்தும் இணையவழிக் கொடுமைப்படுத்தல் (cyberbullying) தொடர்பாக 151 முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது. அதே ஆண்டில் இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) சமூக ஊடகங்களுடன் தொடர்புடைய 20,033 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. முதலாவது எண்ணிக்கை சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களின் தீவிரத்தன்மையையும், இரண்டாவது எண்ணிக்கை நாட்டின் இலக்கமுறை (digital) சூழலில் நிலவும் தீங்கான செயற்பாடுகளின் பரப்பளவையும் உணர்த்துகின்றன. இவ்வாறான நிலையில், சிறுவர்களை இணையத்திலிருந்து முற்றாக விலக்கி வைப்பதா, அல்லது அவர்களுக்குப் பாதுகாப்பான இணையவெளியை உருவாக்குவதா என்ற கேள்வி கொள்கை வகுப்பாளர்களின் முன் எழுந்துள்ளது.

இணையம் சிறுவர்களுக்குக் கற்றலுக்கும் திறன் விருத்திக்கும் கருத்து வெளிப்பாட்டுக்கும் உலகளாவிய தொடர்புகளுக்கும் வாய்ப்பளிக்கும் முக்கிய வளமாகத் தொடர்ந்தும் விளங்குகிறது. ஆயினும், யுனிசெப் (UNICEF) ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய ஆய்வின்படி, இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களில் 46.3 சதவீதமானோர் தாம் அறியாத நபர்களுடன் இணையத்தில் உரையாடியுள்ளனர்; 27.9 சதவீதமானோர் இணையத்தில் முதலில் அறிமுகமான ஒருவரைப் பின்னர் நேரில் சந்தித்துள்ளனர். இணையத் தனியுரிமை, பாதுகாப்பு தொடர்பான சிறுவர்களின் விழிப்புணர்விலும் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இணைய வளங்களை அணுக முடிவது வேறு; அவற்றினால் வலுவூட்டப்படுவது வேறு. தவறான தகவல்களையும் மனக்கையாளுகையையும் (manipulation) இனங்காணுதல், தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தல், பொறுப்புடன் தொடர்பாடுதல், ஆபத்தான சூழ்நிலைகளை அடையாளம் காணுதல் ஆகிய ஆற்றல்கள் இல்லாத நிலையில், இணைய அணுகலே ஆபத்தாகவும் மாறக்கூடும். இணையத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல ஆண்டுகள் நிலைத்திருக்கக்கூடியன என்பதால், சிறுவர் இணையப் பாதுகாப்பு என்பது தனியுரிமை, தகவல், பங்கேற்பு, கருத்துச் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும் மதிக்கும் உரிமைசார் அணுகுமுறையின் (rights-based approach) அடிப்படையில் அமைய வேண்டும்.

இந்தப் புள்ளிவிவரங்களை நிதானமாக நோக்கும்போது, அறியாதவர்களுடன் உரையாடுவது மட்டுமே தீங்கு என்று கருத முடியாது; இணையம் புதிய நட்புகளையும் கற்றல் வாய்ப்புகளையும் உருவாக்கும் வெளியுமாகும். ஆயினும், இவ்வாறு அறிமுகமானவர்களை நேரில் சந்தித்த சிறுவர்களின் விகிதம் கணிசமாக இருப்பதும், தனியுரிமை, பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வில் இடைவெளிகள் காணப்படுவதும் இணைத்து நோக்கப்படும்போது, தேவையற்ற தொடர்புகளுக்கும் சுரண்டலுக்குமான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. நிர்வாணப் புகைப்படங்களைக் காட்டி அச்சுறுத்தும் முறைப்பாடுகள், இணையவெளியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் தீவிர ஆபத்துகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். ஆகவே, சவால் இணையத்திலிருந்து சிறுவர்களை விலக்கி வைப்பதில் அல்ல; கற்கவும் தொடர்பாடவும் பங்கேற்கவும் அவர்களுக்கு இடமளிக்கும் அதேவேளை, இணையவழிக் கொடுமைப்படுத்தல், சுரண்டல், தீங்கான உள்ளடக்கம், தனியுரிமை மீறல்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதிலேயே உள்ளது.

இன்றைய இலக்கமுறை உலகின் முக்கிய சிக்கல்களில் ஒன்று, சிறுவர்கள் தாம் பார்ப்பவற்றைத் தாமே தெரிவு செய்வதில்லை என்பதாகும். எந்தக் காணொளிகள், பதிவுகள், விளம்பரங்கள், பரிந்துரைகள் திரையில் தோன்ற வேண்டும் என்பதை இப்போது படிமுறைத் தொடர்கள் (algorithms) தீர்மானிக்கின்றன. சிறுவர் ஒருவர் ஓர் உள்ளடக்கத்தைப் பார்த்தவுடன், அதையொத்த அல்லது அதைவிடக் கவர்ச்சியான உள்ளடக்கங்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. பயனர்களை முடிந்தவரை நீண்ட நேரம் இணையத்தில் தக்கவைப்பதே தளங்களின் வணிக நோக்கமாக இருப்பதால், சிறுவரின் கவனம் விலைமதிப்புள்ள வளமாகிறது. இந்நிலையில், பாதுகாப்புக்கான பொறுப்பு முழுவதையும் சிறுவர் மீதே சுமத்தலாமா என்ற கொள்கை சார்ந்த கேள்வி எழுகிறது. அதற்கான விடை ‘கூடாது’ என்பதே.

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்த விவாதம் உலகளவில் தீவிரமடைந்துள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகத் தடை விதிக்க வேண்டும் என்ற வாதம் அவற்றுள் முதன்மையானது. அவுஸ்திரேலியா இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்; 2025 டிசம்பர் 10 முதல், வயதுக் கட்டுப்பாடுள்ள தளங்கள் 16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்கள் கணக்குகளை உருவாக்கவோ தொடரவோ அனுமதிக்கக் கூடாது. இது எளிமையானதும் உடனடியாகப் பலன் தருவதுமான தீர்வு எனத் தடையை ஆதரிப்போர் கருதுகின்றனர். இவ்வாதத்தில் சிறுவர் நலன் மீதான அக்கறை உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆயினும், அது முழுமையான தீர்வாகாது. அவுஸ்திரேலியாவின் நடவடிக்கையும் இணையத்துக்கான தடை அல்ல; கல்வி, செய்தி அனுப்பல் உள்ளிட்ட இலக்கமுறைச் சேவைகள் தொடர்ந்தும் கிடைக்கின்றன. வயது வரம்பு என்பது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியே; அவற்றின் மொத்த வடிவமல்ல. ஐக்கிய இராச்சியம் தளங்களின் ஆபத்துகள், படிமுறைத் தொடர்களின் பொறுப்புக்கூறல், வயது உறுதிப்படுத்தல் (age assurance) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது; ஐரோப்பிய ஒன்றியம் (EU) சிறுவர்களின் தன்விவரக் கணிப்பின் (profiling) அடிப்படையிலான இலக்கு விளம்பரங்களை வரையறுக்கிறது. இவை யாவும் வயது வரம்பைத் தாண்டி, தளங்களின் வடிவமைப்பையும் வணிக நடைமுறைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையையே சுட்டிக்காட்டுகின்றன. மேலும், சிறுவர்களின் அறிவாற்றலும் தீர்மானம் எடுக்கும் திறனும் குழந்தைப் பருவத்திலும் பதின்ம வயதிலும் படிப்படியாகவே வளர்கின்றன; வயது மட்டுமே மனக்கையாளுகையை அடையாளம் காணும், இடரை மதிப்பிடும், தகவல்களைப் பாதுகாக்கும் ஆற்றலைத் தீர்மானிப்பதில்லை. அதேவேளை, சிறுவர்களைத் தீர்மானம் எடுக்க இயலாதவர்களாகக் கருதவும் முடியாது.

குடும்பமே இதற்குப் பொறுப்பு; சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கண்காணிப்பது பெற்றோரின் தனிப்பட்ட கடமை என இன்னொரு தரப்பினர் வாதிடுகின்றனர். குடும்பங்களின் பங்கு முக்கியமானதே; வயதுக்கு ஏற்ற ஆலோசனை, திறந்த உரையாடல், பொருத்தமான மேற்பார்வை ஆகியவற்றைப் பெற்றோரும் பராமரிப்பாளர்களும் வழங்க வேண்டும். எனினும், இலங்கையில் பெற்றோரிடையே இலக்கமுறை அறிவில் பெரும் வேறுபாடுகள் உள்ளன; எனவே மேற்பார்வை மட்டும் போதுமானதாகாது. கிராமிய, தோட்டப்புற, குறைந்த வருமானமுடைய சமூகங்களில் சாதனங்களுக்கும் நம்பகமான இணைய இணைப்புக்குமான அணுகல் குறைவாக இருக்கக்கூடும் என்ற இலக்கமுறை இடைவெளியும் (digital divide) தொடர்கிறது. தளங்களின் படிமுறைத் தொடர்கள் செயற்படும் விதத்தையே அறியாத பெற்றோரிடம் முழுப் பொறுப்பையும் விடுவது நடைமுறைக்கு உகந்ததல்ல.

ஒழுங்குபடுத்தல் கருத்துச் சுதந்திரத்தையும் புத்தாக்கத்தையும் பாதிக்கும் என்றும், வெளிநாடுகளில் இயங்கும் தளங்கள் மீது இலங்கையினால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் வேறு சிலர் கருதுகின்றனர். தீங்கிழைப்போரும் தளங்களும் வெளிநாடுகளில் அமைந்திருக்கும்போது, எல்லை கடந்த ஆபத்துகள் சட்ட அமுல்படுத்தலைச் சிக்கலாக்குகின்றன என்பது உண்மையே. ஆயினும், ஒழுங்குபடுத்தல் என்பது உள்ளடக்கத் தணிக்கையல்ல. தளங்களின் வடிவமைப்பு, வெளிப்படைத்தன்மை, இடர் மதிப்பீடு ஆகியவற்றைக் கோரும் தரநிர்ணயங்கள் சிறுவர்களின் தகவல், பங்கேற்பு, கருத்துச் சுதந்திர உரிமைகளுக்கு முரணானவை அல்ல; அவ்வுரிமைகளை மதித்துக்கொண்டே இடரைக் குறைக்க அவை உதவுகின்றன. ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதும், உள்நாட்டுச் சந்தைக்குச் சேவை வழங்கும் தளங்களுக்கு நியாயமான தரநிலைகளை நிர்ணயிப்பதும் எல்லை கடந்த சவாலை எதிர்கொள்வதற்கான நடைமுறை வழிகளாகும். அமுல்படுத்தல் கடினமானது என்பதற்காக ஒழுங்குபடுத்தலைக் கைவிடுவது, தளங்களின் வணிகத் தர்க்கத்தை மட்டுமே நம்பியிருப்பதற்குச் சமமானது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கெனவே சுயகட்டுப்பாட்டு நடைமுறைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டுள்ளன; எனவே மேலதிக விதிமுறைகள் தேவையற்றவை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. தளங்கள் தாமாக முன்வந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவையே. ஆனால், பயனர்களை நீண்ட நேரம் தக்கவைப்பதே வணிக நோக்கமாக இருக்கும்போது, சிறுவர் பாதுகாப்பு அந்த நோக்கத்துடன் முரண்படும் தருணங்களில் தன்னார்வ ஏற்பாடுகள் மட்டும் போதுமான உத்தரவாதத்தை வழங்க முடியாது. சுயாதீனமாகச் சரிபார்க்கக்கூடிய தரநிர்ணயங்கள், வெளிப்படையான அறிக்கையிடல், மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியன இருந்தால் மட்டுமே பாதுகாப்பு உறுதிப்பாடு நம்பகத்தன்மை பெறும்.

இவ்வாதங்களைப் பரிசீலிக்கும்போது, தனியொரு தரப்பிடம் பொறுப்பை ஒப்படைக்கும் அணுகுமுறைகள் யாவும் போதாமையுடையவை என்பது தெளிவாகிறது. சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்தவும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் சிந்திக்கவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் கற்க வேண்டும்; பெற்றோர் வழிகாட்டி, திறந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும்; பாடசாலைகள் இணையக் குடியுரிமை, தனியுரிமைப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும்; தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதுகாப்பைத் தமது உற்பத்திகளில் ஆரம்பத்திலிருந்தே உள்ளடக்கி, முறைப்பாடு செய்வதற்கான வழிகளை வழங்க வேண்டும்; இணைய சேவை வழங்குநர்கள் சிறுவர் பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பங்களிக்க வேண்டும்; அரசாங்கம் விதிமுறைகளையும் தரநிர்ணயங்களையும் வகுத்து, அவற்றின் அமுல்படுத்தலை உறுதிப்படுத்த வேண்டும். சிவில் சமூக அமைப்புகளும் தொழில்சார் சங்கங்களும் ஆய்வு, விழிப்புணர்வு, சுயாதீனக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் துணைநிற்க முடியும். பகிரப்பட்ட பொறுப்பு (shared responsibility) என்ற இந்த அணுகுமுறை, 2025இல் யுனிசெப் வெளியிட்ட வழிகாட்டலுடனும் பொருந்துகிறது.

இவ்விடயம் சிறுவர் நலனுடன் மட்டும் நின்றுவிடாமல், தேசியப் பாதுகாப்புடனும் நேரடியாகத் தொடர்புடையது. வலுவான, விழிப்புணர்வுள்ள, பொறுப்புள்ள, இலக்கமுறையில் பாதுகாப்பான இளம் தலைமுறை, பாதுகாப்பான சமூகத்தின் அடித்தளமாகும். இங்கு ஐந்து துறைகள் கவனிக்கத்தக்கவை. முதலாவதாக, சிறுவர்கள் துல்லியமான தகவல்களைப் பொய்யான, தவறாக வழிநடத்தும், திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்த்தகவல்களிலிருந்து (disinformation) பிரித்தறியக் கற்க வேண்டும். இரண்டாவதாக, இணையப் படிமுறைத் தொடர்கள் குறிப்பிட்ட கருத்துகளை வலுப்படுத்தி, சமூகப் பிளவுகளை விரிவாக்கி, சமூக ஒருமைப்பாட்டைப் பலவீனப்படுத்தக்கூடும். மூன்றாவதாக, சிறுவர்களின் தனிப்பட்ட தரவுகள் தன்விவரக் கணிப்பு, இலக்கு வைத்தல், கையாளுகை, சாத்தியமான தீங்குகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். நான்காவதாக, இணையவழிக் கொடுமைப்படுத்தல், சுரண்டல், கையாளுகை, துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; இவற்றை இலக்கமுறை உலகின் குறிப்பிடத்தக்க இடர்களாக யுனிசெப் அடையாளப்படுத்துகிறது. ஐந்தாவதாக, இணைய அச்சுறுத்தல்களைப் புரிந்துகொண்டு இலக்கமுறைக் கருவிகளைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் அறிவையும் திறனையும் வழங்குவதன் மூலம் இலக்கமுறைத் தாங்குதிறன் (digital resilience) வளர்க்கப்பட வேண்டும்.

இலங்கைக்குத் தேவைப்படுவது, நாட்டின் சமூக, பண்பாட்டு, கல்வி, தொழில்நுட்பச் சூழல்களுக்கு ஏற்ற இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பாகும். அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்கலாம்; ஆனால் அவற்றை அப்படியே பிரதியெடுக்காமல், உள்ளூர் நடைமுறைக்கு உகந்த அணுகுமுறையே உருவாக்கப்பட வேண்டும். இலக்கமுறை இடைவெளி, பெற்றோரிடையேயான அறிவு வேறுபாடுகள், பாடசாலைகளின் வகிபாகம், எல்லை கடந்த அமுல்படுத்தல் சிக்கல்கள் ஆகிய அனைத்தும் இந்த வடிவமைப்பில் கணக்கிலெடுக்கப்பட வேண்டும். ஒழுங்குபடுத்தல், கல்வி, பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றை இணைக்கும் உள்ளடக்கிய கட்டமைப்பே பயனுள்ள பாதுகாப்பைத் தரும்.

எனவே, தடையை மட்டுமே நம்பியிராமல், சிறுவர் இலக்கமுறைப் பாதுகாப்பு மற்றும் இலக்கமுறைக் குடியுரிமைக் கட்டமைப்பு (child digital safety and digital citizenship framework) ஒன்றை இலங்கை உருவாக்குவதே பொருத்தமானது. இதன் முதலாவது தூணாக, அதிக ஆபத்துள்ள இணையச் சேவைகளுக்கு இடர் அடிப்படையிலான வயது உறுதிப்படுத்தல் அமுல்படுத்தப்பட வேண்டும்; அப்போது சிறுவர்களின் தனியுரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, சிறுவர் பாதுகாப்பு இடர் மதிப்பீடுகள், வெளிப்படைத்தன்மைத் தேவைகள், தீங்கான உள்ளடக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் மூலம் தளங்களின் வடிவமைப்பும் படிமுறைத் தொடர்களும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக, வடிவமைப்பிலேயே தனியுரிமை (privacy-by-design) என்ற கொள்கையைப் பின்பற்றி, தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், செயலாக்குதல், பகிர்தல் தொடர்பான தெளிவான விதிகளுடன் சிறுவர் தரவுப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். நான்காவதாக, போலிச் செய்திகள், தனியுரிமை, இணையவழிக் கொடுமைப்படுத்தல், இணைய மோசடிகள், கையாளுகை, முறைப்பாட்டுப் பொறிமுறைகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கமுறைக் குடியுரிமைக் கல்வி பாடசாலைப் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். ஐந்தாவதாக, இணைய ஆபத்துகளைப் பெற்றோர் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்குத் துணைநிற்க உதவும் தேசிய இலக்கமுறைப் பெற்றோர் வழிகாட்டல் திட்டங்கள் நிறுவப்பட வேண்டும். ஆறாவதாக, தீங்கான இணைய அனுபவங்களைச் சிறுவர்களும் பெற்றோரும் முறையிட்டுக் காலத்தில் உதவி பெறக்கூடிய பயனுள்ள முறைப்பாடு மற்றும் நிவாரணப் பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏழாவதாக, பல்முகமை மேற்பார்வை (multi-agency oversight) பலப்படுத்தப்பட்டு, கிராமிய, தோட்டப்புற, விவசாயக் குடும்பங்கள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்களில் இலக்கமுறைச் சமத்துவமின்மை குறைக்கப்பட வேண்டும்.

இவற்றுக்கு மேலாக, அமுல்படுத்தலின் வெற்றிக்குச் சில புத்தாக்க அணுகுமுறைகளும் துணைபுரியக்கூடும். கொள்கை வகுக்கும் செயல்முறையிலேயே சிறுவர்களின் குரலைக் கேட்கும் ஆலோசனைக் குழுக்களை அமைத்தல், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலகுவாக அணுகக்கூடிய விழிப்புணர்வு வளங்களை வழங்குதல், தளங்கள் இடர் முகாமைத்துவத் (risk management) தரநிலைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதைச் சுயாதீனமாக மீளாய்வு செய்து பொதுவெளியில் அறிக்கையிடுதல் ஆகியன அவற்றுள் சில. சுயாதீன ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பொன்றும், தொடர்புடைய அனைத்துத் திணைக்களங்களும் நிறுவனங்களும் இணைந்து செயற்படும் ஒருங்கிணைப்புப் பொறிமுறையும் இவற்றுக்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இக்கட்டமைப்பு ஒருமுறை நிறைவேற்றப்படும் சட்டமாக மட்டுமன்றி, தொடர்ந்து மதிப்பிடப்பட்டுத் திருத்தப்படும் கொள்கையாகவும் இருக்க வேண்டும். தொழில்நுட்பமும் தளங்களும் வேகமாக மாறுவதால், இடைவெளிகளை இனங்காணவும் முன்னேற்றத்தை அளவிடவும் வெளிப்படையான குறிகாட்டிகளும் கால இடைவெளியிலான மீளாய்வுகளும் அவசியம். முறைப்பாடுகளின் எண்ணிக்கை, தீர்வு காணப்பட்ட காலம், பாடசாலைகளில் இலக்கமுறைக் குடியுரிமைக் கல்வியின் பரவல் போன்றவற்றைப் பொதுவெளியில் அறிக்கையிடுவது பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு, கல்வித் துறை சார்ந்த திணைக்களங்கள்,

ஒழுங்குபடுத்தல் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே தரவுப் பகிர்வும் ஒருங்கிணைப்பும் இல்லாவிடின், வெவ்வேறு இடங்களில் பதிவாகும் சம்பவங்கள் தனித்தனி எண்ணிக்கைகளாகவே எஞ்சிவிடும் அபாயம் உள்ளது. இத்தகைய முகாமைத்துவ ஒழுங்கே கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆற்றலை நிர்ணயிக்கும்.

சிறுவர்களுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே சுவர் எழுப்புவதல்ல; பாதுகாப்பான இலக்கமுறை வெளியை அமைப்பதே சிறந்த வழி. கற்றல், தொடர்பாடல், அன்றாட வாழ்க்கை ஆகிய அனைத்தும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டுள்ள சூழலில், வயது உறுதிப்படுத்தல், தளங்களின் பொறுப்புக்கூறல், படிமுறைத் தொடர்களின் வெளிப்படைத்தன்மை, தரவுப் பாதுகாப்பு, இலக்கமுறைத் திறன்கள், பெற்றோர் வழிகாட்டல், பாடசாலைக் கல்வி, அணுகக்கூடிய முறைப்பாட்டுப் பொறிமுறைகள், சுயாதீன ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றை இலங்கை வலுப்படுத்த வேண்டும். அனைத்துக்கும் மேலாக, சிறுவரே இதன் மையத்தில் இருக்க வேண்டும். பாதுகாக்கப்படவும், செவிமடுக்கப்படவும், தகவல்களை அறியவும் அவர்களுக்கு உரிமை உண்டு. கொள்கையானது பாதுகாப்பையும் வாய்ப்புகளையும் சமநிலைப்படுத்தி, சிறுவர்கள் பாதுகாப்புடன் கற்கவும் படைக்கவும் தொடர்பாடவும் பங்கேற்கவும் இடமளிக்க வேண்டும். இறுதியில், வெற்றி என்பது தொழில்நுட்ப அணுகல் எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தப்பட்டது என்பதில் அல்ல; சிறுவர்கள் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகவும் அறிவுடனும் நெறிமுறையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்த எவ்வளவு தூரம் வழிசெய்யப்பட்டது என்பதிலேயே அளவிடப்பட வேண்டும். அதுவே சிறுவர்களையும் இலங்கையின் எதிர்கால இலக்கமுறைப் பாதுகாப்பையும் ஒருங்கே வலுப்படுத்தும்.

0 comments:

Post a Comment