ADS 468x60

13 March 2025

தேற்றாத்தீவுக் கிராமம் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது?

  • இதுவரை ஒரு எம்பியை உருவாக்கமுடியாத கிராமம்
  • இதுவரை ஒரு பிரதேசசபைத் தவிசாளரைக்கூட உருவாக்கமுடியாத கிராமம்
  • இதுவரை ஒரு மாகாணசபை உறுப்பினரைக்கூட உருவாக்கமுடியாத கிராமம்
  • இதுவரை ஒரு முக்கிய அங்கத்துவத்தினைக்கூட எந்த பிரதான அரசியல் கட்சியும் ஈந்தளிக்க நினைத்துப்பார்க முடியாத கிராமம். 

நான் சில்லறைக் கட்சிகளையோ மக்கள் விரும்பாத கட்சிகளையோ இங்கு சொல்லவில்லை. ஆனால் எல்லா அரசியல்வாதிக்கும் கோயில் மேடையையும் கூட்டத்தை ஒழுங்கமைத்து நடாத்தும் கூலிப்படை இருக்கும் மட்டும் இதனை எமது மக்கள் சிந்திக்க இடம் தரமாட்டார்கள் இல்லையா?

தேற்றாத்தீவு ஒரு அரசியல் ஆதிக்கமற்ற கிராமமாகவே இருந்து வந்திருக்கிறது. இதுவரை எம் ஊரிலிருந்து எம்பி (பாராளுமன்ற உறுப்பினர்), மாகாண சபை உறுப்பினர், அல்லது பிரதேச சபை தவிசாளர் உருவாகவில்லை. எந்த ஒரு முக்கியமான அரசியல் கட்சியும் எம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை ஒரு முக்கிய அரசியல் பதவிக்கு தேர்ந்தெடுக்கவே முயற்சிக்கவில்லை.

ஆனால், எத்தனையோ அரசியல்வாதிகள் எமது கிராமத்தை தமது தேர்தல் பிரசார கூட்டங்களுக்கான ஒரு மேடையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். கோயில்களின் மேடைகள், பிரசார கூட்டங்கள், மற்றும் விழாக்கள் ஏற்பாடு செய்ய எமது மக்களை குறுகிய இலாபத்துக்குப் பயன்படுத்தினர்;. ஆனால், எமது கிராமத்தை முன்னேற்றுவதற்காக யாரும் எண்ணிப் பார்க்கவில்லை.

தேற்றாத்தீவில் அயலூரில் இருந்துவந்தவரையும் பிரதேசசபை உறுப்பினராக்கி வைத்து அழகுபார்க்கும் நமக்கு, நம்மூரில் ஒருவர் வருவதென்றால் ஏன் கசக்கின்றது? 

கோயிலுக்குத் தரும் ஸ்பீக்கரும் கொங்கிறீட்டு றோட்டும் போதுமென ஊரின் பிரதிநிதிகள் என இருப்பவர்கள் நினைக்கும் வரை, பாழடைந்த மயானமும், பன்முக நிதியில்லாத பாடசாலையும், குப்பைகொட்டும் வீதியும், மழைக்கு மானியமும் மட்டும்தான் மிச்சமாகக் கிடைக்கும். 

அது கிடைத்தால் போதும் என துதிபாடும் பலரை கடந்தகாலங்களில் கண்டுள்ளேன் வெட்கம். அதற்கு காரணம் நாம் நலிவுற்றவர்களாக இருக்கின்றோம் என்பது மட்டும்தான். பலர் அதனைப் படமெடுத்து எமது ஊரின் சீத்துமம் காட்டி வாக்குச் சேமிக்கும் பொது இடமாக மாறிவிட்டது.

எந்தக் கட்சிக்காரன் வந்தாலும் கூப்பிட்டு கூப்பிட்டு கூச்சமில்லாமல் ஊரை விற்கும் ஊதாரிகள் இருக்கும்வரை முன்னேற முடியாது. நாம் சுயபரிசோதனை செய்ய பல அக்கம் பக்கத்துக் கிராமங்களை மாத்திரம் எடுத்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்று இல்லாதவன்ட பேரையெல்லாம் சமுக ஊடகங்களில் சொல்லி வெட்கப்படும் தலைமைத்துவத்தை பரிந்துரைக்கும் சுரணைகெட்ட சமுகத்தில் வாழுகின்றோம் என நினைத்து வருத்தப்படுகின்றேன்.

நான் எமது அயல் ஊரெல்லாம் ஆல்போல் வளர்ந்து அழகுசேர்பதை நினைத்துப் பெருமைப்படுகின்றேன் நிற்க, எமது கிராமம் மிகக்குன்றி வருவதையிட்டு ஓப்பீட்டளவில் சுயபரிசோதனை செய்து வருத்தப்படுகின்றேன், காரணம் அரசியல் அநாதைகளாக கிள்ளுக்கீரையாக, பிரச்சார மேடையாக பாவிப்பதனாலாகும்.

மாங்காடு

முதலில் எனது சகோதரக்கிராமமான மாங்காட்டினை எடுத்துக்கொள்ளுவோம். அவர்களின் சிந்தனை ஆற்றல், பொருளாதார வளர்சி, கல்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊரின் பொதுக்கட்டமைப்புக்கள் என்பன சடுதியாக உயர்ந்து எமக்கு ஒரு படிப்பினையாக நிற்கும் கிராமம். அக்கிராமத்தினைக் கடக்கும்போது அதன் பௌதீக வளர்சி அப்பப்பா! என மூக்கில் விரல்வைத்து வியக்க வைக்கின்றது. அங்கு ஒரு தலைவரை வைத்து அரசியலில் அழகுபார்த்துள்ளனர் அபிவிருத்தியும் கண்டுள்ளனர், அந்த ஊரைப்பாருங்கள் குறும் காலத்தில் எத்தனை வளர்சி, எத்தனை எழுச்சி, எத்தனை மாற்றம் எல்லாம் ஊர்ப்பிரதிநிதிகளின் தலைமைத்துவத்தினாலும், அரசியல் செல்வாக்கினாலும், மக்களின் ஊக்கத்தினாலும் ஆனவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

குருக்கள்மடம்

அங்கால குருக்கள்மடம் ஒரு சிறிய கிராமம் அதில்கூட பா.ம உறுப்பினர் ஒருவரை உருவாக்கினர், பலதடவை வேட்பாளர்களைக் களமிறக்க சந்தர்பத்தினைக் கொடுத்துள்ளனர். இன்னும் முக்கிய தீர்மானிக்கும் சக்திகளாக தங்களை நிலை நாட்டி வருகின்றனர்.

செட்டிபாளையம்

செட்டிபாளையம் சொல்லவேண்டியதில்லை, எப்படி இருந்த கிராமம் விறு விறு என வளர்ந்து நிற்கின்றது. பல காலம் அங்கு தலைமைகளை உருவாக்கி பா.மன்றத்தில் அழகுபார்த்த கிராமம். அங்கு பா.மன்றம், மா.சபை போன்றவற்றுக்கு காலாகாலமாக ஆட்கள் நிறுத்தப்படுகின்றனர். அங்குலம் அங்குலமாக அங்கு அபிவிருத்திப்பணி, ஆஸ்பத்திரி, ஆலயம், பள்ளிக்கூடம், பணிமனைகள், துள்ளிவிளையாட மைதானம் என முன்னேறி இருக்கின்றது. இதனால் கல்வியில் வளர்ந்து உலகமெல்லாம் கற்றோரை கொண்டு நிரப்பியுள்ளனர்.

களுதாவளை

அடுத்தது களுதாவளை எமது சகோதரக்கிராமம், பாசமும் நேசமும் பக்தியும் வைத்துள்ள ஒரு கிராமம். அங்குகூட பா.மன்ற உறுப்பினர், மா.ச வேட்பாளர், பி.ச தவிசாளர், என அனைத்தையும் கண்டவர்கள், அதனால் அந்த ஊரை கடந்து செல்லும் போது அதன் முன்னேற்றம் கண்கூடாகத் தெரிகின்றது. வானை முட்டும் பாடசாலைகள், வைத்திய சாலைகள், பொருளாதார ம.நிலையம், விளையாட்டு மைதானம், நேர்தியான கார்பெட் பாதைகள் என எத்தனை எத்தனை. 

ஆலய முன்றல் அபிவிருத்தியின் கண்ணாடியாக சுத்தமும் சுறுக்கான முன்னேற்றமும் நடந்து அழகாக இருக்கின்றது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் நன்றாக உயர்ந்துள்ளது. அங்கு கல்வி கற்றோர் வீதம் அதிகரித்து கல்வியை விட்டு விலகுவோர் வீதம் குறைந்து அது ஒரு எழுத்தறிவு கூடிய கிராமமாக இருக்கின்றது. அதற்கு அங்குள்ள பாடசாலையின் இடையறாத பௌதிக, மனிதவள வளர்சி அதன் மேலான அரசியல் செல்வாக்கு பிரதான காரணியாக உள்ளது.

களுவாஞ்சிக்குடி

வர்தகக் கிராமம் களுவாஞ்சிக்குடி, சொல்லத் தேவையில்லை. எருவில் அதுவும் சொல்லத்தேவையில்லை காலாகாலமாக அங்கு அமைச்சர்களையும், எம்பிக்களையும் கொத்துக் கொத்தாக கொண்டுவந்த கிராமம்.

நம்ம ஊரு கிட்டவும் நெருங்க முடியாத அளவுக்கு அவர்கள் எல்லாம் முன்னேறி உள்ளனரா இல்லையா! நடுநிலையாக சிந்தித்துப் பாருங்கள்!

தேற்றாத்தீவில் ஒரு ஆயுர்வேத ஆஸ்பத்திரி ஆரம்பித்தோம் அது ஆயும் முடியும் போல் இருக்கின்றது, நாம் கடல் குளங்கள், வாவி என வற்றாக வளம் நிறை கிராமம் இதன் மூலம் செய்யப்படும் உற்பத்தியை ஊரில் கொண்டு சந்தைப்படுத்த ஒரு சந்தையை ஊரின் ஒதுக்குப்புறத்தில் கட்டினார்கள் அதில் மந்தைகள் படுக்கின்றன. பொதுமயானம் காடு மண்டிக்கிடக்கிடக்கின்றது, கால்மாடும் தலமாடும் காணாமல் போவதை கண்டும் காணாமல் இருக்கின்றனர், சொன்னால் வெட்கக்கோடு சொல்லாட்டி மானக்கேடு. 

மயானத்தை அடக்கம் செய்ய மலச்சாலை நிறைந்த இடம் இருக்கும், இங்கு மழையில் பெய்த வெள்ளமும், மக்கிய குப்பையும், குழையும் கொத்தும், ஓடும் காடுமென ஒழுங்கற்றுக் கிடக்கிறது. தலைவர்களிடம் கேட்டால் 'இடுகாடாம்' அப்படித்தான் இருக்கணுமாம் ஐயகோ! அவலம். இறுதி மரியாதையைக் கூட இடவசதியுடன் செய்ய முடியாத நிலை நமக்கு. இதை எந்த அரசியல்வாதி முழுதாய் செய்து தந்திருக்கிறார் கிடையாது.

இன்றைக்கு இருந்த இடத்தை நாளை போகும்போது காணவில்லை, அடி, பாகம், ஏக்கர் என ஆளாளுக்கு எடுக்கும் நிலை, ஆக கால்மாடும் இல்ல தலைமாடும் இல்லாத நிலைக்கு நாலாபக்கமும் மயானம் என்றும் பார்க்காமல் ஆட்டையைப் போடுறத தட்டிக்கேட்கல ஏனென்றால் ஒழுங்கான ஒரு தலைமைத்துவம் இல்லை நமக்கு!

மகாவித்தியாலய பாடசாலையின் ஓடுகள் பறந்துபோய்க்கிடக்க, பார்த்து பயந்து படிக்கும் சிறுவர்கள், பட்டிருப்புத் வலயத்தின் இளைப்பாறும் ஆசிரியர்களின் தங்குமிடமாக நல்ல ஆசிரியர்களை நியமிக்காத பாராமுகமான பாடசாலையாக, கட்டிட வசதிகளை கத்திக்கத்திக்கேட்டும் கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளின் கீழுள்ள அதிகாரிகளின் பிடியில் அனாதரவாக உள்ள, பாய்ந்து விளையாட ஒரு மைதானம் இல்லாத, பள்ளிக்கூட பாதையில் பாதிக் கல்தெரியும் கொமிசன் கொங்கிறீட் றோட்டின் உடைந்த பாதைகள் என இன்னும் கவனிப்பாரற்ற பாடசாலை எமக்கு. 

எத்தனை பலநோக்குக் கட்டிடம் இங்கு இறக்கிவிட்டுச் சென்றனர். அத்தனையும் அழிந்துபோக அழகுபார்க்கும் அதிகாரிகளும், அரசியல்பலமற்ற நாங்களும், வேறு இடத்தில் இருந்திருந்தால் அங்கு தொழிற்பயிற்சிக் கூடமும், கல்வி நிலையங்களும், அபிவிருத்தி செயற்பாடும் அரங்கேறியிருக்கும், ஆனால் கடற்கரையில் உள்ள காளி கோயில் முன்னுள்ள கட்டிடம் மூக்கறுபட்டதுபோல் களையிழந்து காட்சி தருகின்றது. குடியிருப்பிலும் இன்னும் இரண்டு கட்டங்களும் இருக்கின்றன, என்ன செய்வது நாம் யாரும் அரசியலில் இல்லையே, வெறும் வேறு அரசியல்வாதிகளுக்கு கூட்டம் ஒழுங்குபடுத்திக்கொடுக்கும், மாலைபோட்டுக் வரவேற்கும் எடுபிடிகள் மட்டும்தானே!

கத்திக் கத்தி தொண்டை கிழிந்து போனதுதான் மிச்சம், எத்தனை ஏக்கர் வயல் உப்புத்தண்ணி பட்டு உதலாமல் கிடக்கு எம்மூரில். தொடங்கிய திட்டமும் தொங்கிக்கொண்டிருக்கின்றது, உப்புத்தண்ணிக்கட்டொன்று புதிதாகப் போட்டு உபயோகம் இல்லாதிருக்கும் 200 ஏக்கர் நிலத்தை உண்டுபண்ண யார் முன்வந்தான், ஏனென்றால் அவர்களில் யாரும் எமது ஊரில் இல்லை அதுதானே! நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்பு ஆயிரக்கணக்கான டொன் நெல்லும் ஊரில் விளைந்தல் நல்லமில்லையா யாரிடம் சொல்லி அழலாம்?

குளமெல்லாம் வளமிளந்து கிடக்கின்றது, வேறு ஊரிகளில் இக்குளங்கள் இருந்திருந்தால் கதை வேறு, கட்டுக்களை புனரமைப்புச் செய்து கச்சிதமாய் வைத்திருப்பர், மீன்களை வளர்த்து மீதப்படுத்தியிருப்பர், வற்றாத நிலத்தடி நீரில் குற்றாளம் போல் குளித்திருக்கலாம், குளிர்சியான குளத்தைக்காணவும், கொள்ளை அழகுதரும் கடற்ரையை தரிசிக்கவும், வாவிக்கரையில் வளரும் தென்னை, கமுகுகளை கண்டு மண்ணை காணவும் மலைபோல் இருக்கும் கொம்புச்சந்திக்கோயிலை கும்பிடவும் சுற்றுலா வருபவர்களைக் கூட்டி, ஊர் பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருமானம் வருவதை எமது ஊரில் ஒரு தலைவன் இருந்திருந்தால் சொல்லிச் செய்விக்கலாமா இல்லையா? அப்படி அசலாய் யாருமில்லை அரசியலில் அதனால் யாவும் வெறும் கற்பனையே! என்ன நடக்கின்றது, குடிக்கிறவனும், குழப்படிக்காறனுகளும், குளத்தைவெட்டுபவனும் வளத்தை சுரண்டுபவனும் வலம்வருவதை கண்டும் காணாமல் இருக்கும் பெலமிழந்தவர்களாய் இருக்கின்றோம் மறுக்க முடியுமா?

அடுத்து குடியிருப்பு எனும் தொன்மையான தேற்றாத்தீவுக்கிராம், ஆமாம் எதற்கு அந்த ஊரைப் பயன்படுத்துகின்றனர்? ஓடி வந்து சாமான் கொடுக்கவும், கெட்ட குடிகளாக்க குடிசாராயம் கொடுக்கவும், பள்ளிக்கூடம் செல்லாத ஒரு பரிதாபக் கிராமமாக வைத்திருந்து அரசியல் செய்கின்றவர்களின் அரங்காக உள்ளது எவ்வளவு அவமானம்? வெட்கம்? 

ஒரு தலைவர் இருந்திருந்தால், போகின்ற வீதியில் புளுத்த குப்பைகளை நிரப்பாமல், பழுத்த கனிதரும் சோலைகளை பாதை இருபக்கமும் உண்டு பண்ணி, பாடசாலைக்குச் செல்லும் பள்ளிக்குழந்தைகளை ஊக்குவித்து, குடியில் குடியிழப்போரை தொழில் வல்லுனர்களாக்கி, குடியிருப்பைச்சூழ அழகுபடுத்தும் திட்டங்களைச் செய்து, கிராமிய உணவுகளை உண்டு ருசிக்க ஒரு கப்பாக கிராக்கியை அங்கு உண்டு பண்ணி, ஒரு சுற்றுலா மையமாக மாற்றி, அங்கு முழு தேற்றாத்தீவுக்குமான, கோழி, ஆடு, மீன் உற்பத்தியினை உருவாக்கிக் கொண்டுவந்து அவர்களை கைநிறைய சம்பாதிப்பவர்களாக்கி கையேந்தாத மக்களாக நலிவுறு தன்மையை நலிவுற வைத்து மாற்றுவதற்கு நம்ம ஊரில் ஒரு தலைவன் இருக்கணுமா இல்லையா?

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டு போகலாம், நாம் தவறுவிட்டதனால் பல பின்னடைவுகளை சந்தித்து எதற்று முன்னுரிமை தருவதென்று தெரியாமல் வாழுகின்றோம். ஆகவே நாம் ஒன்றாகச் சிந்திக்க வேண்டிய தருணம், இம்முறை வர இருக்கும் தேர்தலில் ஒரு தவிசாளரை நாம் ஏன் தீர்மானிக்கும் சக்pதியாக இருக்கக்கூடாது, எம்மை கிள்ளுக்கீரையாக பாவிப்பவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டாமா? 

இன்னும் நாம் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்க விரும்புகின்றோமா? அல்லது நமக்கெதுக்குப்பா தலைமையெல்லாம், நாமக்குத்தானே கோயில்கள், விளையாட்டுக்கழகங்கள், கிராம அபிவிருத்திச்சபை என்பன இருக்கின்றது அதில் தலைமை தாங்கி காலம் கடந்தால் போதாதா? சும்மா ஊருக்குள்ள யாலியா காலத்தினைக் கடத்தலாம் என்றால் என்னை மன்னித்துவிடுங்கள்... 

இதனை நான் பல அரசியல்வாதிகளிடம் பேசியிருக்கின்றேன், ஆனால் பயன்கிடைக்கவில்லை, ஏன் என்றால் அது நான் மாத்திரம் பேசிப் போதாது ஊரே பேசனுமே! ஊரே ஆமாம் எண்டு கப்சிப் என்று இருக்கும் போது உனக்கென்ன என்ற தோரணையில் நாம் அரசியல் அநாதைகளாகவே காலா காலமாக செம்பு தூக்கி வாழ்கின்றோம். மாறுவோம் மாற்றுவோம் வாருங்கள்!

நான் எமது ஊர் மேதல் கொண்ட பற்றில் எழுதிய திட்டங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

1. சுத்தமான தேற்றாத்தீவு

https://drive.google.com/file/d/11-W3CpPDRnW6WEJuwx9LlEaGXznSP9uR/view?usp=sharing

2. வடிகான் திட்டம்

https://drive.google.com/file/d/1C-9hPh_yF4roXZXyy6oCcmK1UPcTyLIZ/view?usp=sharing

3. தேத்தாத்தீவுப் பொதுச்சந்தை புனரமைப்புத் திட்டம்

https://drive.google.com/file/d/157p6B3viFvScLGCYH1PIroGTQXfHAds8/view?usp=sharing

4. தேத்தாத்தீவு உப்புத்தண்ணிக் கட்டு திட்டம்

https://drive.google.com/file/d/1t_1eg0c8HHfffBSiG16fIuhbjpqzLvVu/view?usp=sharing

0 comments:

Post a Comment