ADS 468x60

14 March 2025

பொருளாதார மீட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வளர்ச்சி திட்டங்கள்

இலங்கையின் பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக கடும் நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் நிலைமையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. 2025 ஆம் ஆண்டில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் வேகமடைந்து வருகின்றது. இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இணைந்து முன்னெடுக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட கடன் நிதி வசதிச் செயற்றிட்டம் (Extended Fund Facility – EFF) என்பதே ஆகும்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட மீளாய்வில், இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு, 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையில் பரிசீலனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக, இலங்கைக்கு நான்காம் கட்டமாக 334 மில்லியன் டொலர் நிதி விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுவிப்பு, நாட்டின் பொருளாதார மீட்சி திட்டத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுக்கும் வலுவான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது. கடந்த தேர்தல் காலங்களில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்தால், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் இடைநிறுத்தப்பட்டு நாட்டின் சர்வதேச நிதி ஆதரவு கடுமையாக பாதிக்கப்படும் என எதிரணியினர் பரப்பிய தகவல்களுக்கு மாறாக, தற்போதைய அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிசெய்துள்ளது.

இதன் மூலம், அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ நிபுணத்துவம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் கென்சி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னேறி வருகின்றன என்றும், பொருளாதார மீட்சி உறுதியாக நடைமுறையில் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெகு சிறந்த முறையில் வீண்விரயங்களை கட்டுப்படுத்தி, அரச வளங்களை முறையாகப் பயன்படுத்துமாறு உறுதி செய்துள்ளது. இதன் பயனாக, பணவீக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது, நாட்டின் வருமானத் திரட்சி அதிகரித்து வருகிறது, அந்நிய செலாவணிக் கையிருப்பு மேம்பட்டுள்ளது. இந்த நிதி விடுவிப்பு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது. தொழில் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சர்வதேச நாணய நிதியத்தின் நான்காம் கட்ட நிதி விடுவிப்பு இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் புதிய காலத்திற்கான அடிப்படை எனக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்திருந்தது. 2022-23 காலப்பகுதியில், அந்நிய செலாவணிக் கையிருப்பு மிகக் குறைந்த அளவில் இருந்தது. இதன் காரணமாக, எரிபொருள், மருந்து, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதில் நாடு கடும் சிக்கல்களை எதிர்கொண்டது. ஆனால், தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொண்ட திட்டமிடலின் காரணமாக, தற்போதைய நிலைமைகள் முழுமையாக மாறிவிட்டன.

இந்த சூழலில், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுப் பிரதானி பீட்டர் ப்ரூவர், இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் தொடர்ச்சியாக வளர்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்றும், வறுமை குறைவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் நம்பிக்கையைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த சில மாதங்களில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தித் திறன் (GDP) மேம்பாடடைந்துள்ளதையும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் (SMEs) கட்டமைப்பு மிகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளதையும் சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பீடு வெளிப்படுத்தியுள்ளது.

அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மைக்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ள ஆதரவு, எதிர்காலத்தில் நிதி உதவிகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும். இதன் மூலம், இலங்கையின் பணவீக்க நிலைமை மேலும் கட்டுப்படுத்தப்படும் என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்துவதற்காக, அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. நாட்டின் முக்கியமான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை அடிப்படை கட்டமைப்புகளுடன் இணைத்து இ கொமர்ஸ் மற்றும் தொழில்துறை விரிவாக்கத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், விவசாய துறையின் மேம்பாட்டை உறுதி செய்யும் விதமாக, தொழில்நுட்ப ஆதாரமாக விளைபயிர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள், தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பீட்டர் ப்ரூவர் இதனை உறுதிப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை வம்சாவளி தொழிலாளர்கள், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தால் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறும் நிலை உருவாகும் எனக் கூறியுள்ளார்.

அதற்கமைய, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக வளர்ந்து வருவதோடு, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வலுவான ஒத்துழைப்பு நிலைமை உருவாகி வருகிறது. இதன் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கடந்த காலங்களில் ஏற்பட்ட எதிர்மறையான பார்வை மாறிவிட்டதாக சொல்லலாம்.

இவ்வாறான வளர்ச்சியுடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளும் பொருளாதார முகாமைத்துவம் உறுதியான மற்றும் நீடித்த முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது. நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து உறுதியாக வளர்ந்து வருவதால், இலங்கையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது உறுதி.

0 comments:

Post a Comment