"என்ன செல்லம்?" மரத்தின் இலைகளுக்கிடையே மறைந்திருந்த குயில் அம்மா, தனது குரலை மெருகேற்றி, வாஞ்சையோடு கேட்டது. சின்னக்குயிலின் கவலை தோய்ந்த முகம், குயில் அம்மாவின் மனதை என்னவோ செய்தது.
"அம்மா, நாங்களே ஒரு கூட்டை கட்டக்கூடாதா?" சின்னக்குயில் தன் சிறு அலகால் ஒரு கிளையை கொத்திக் கொண்டே கேட்டது. "அந்த காக்கா அன்ரி, ஒவ்வொரு நாளும் என்னை விரட்டி விரட்டி கொத்துகிறாள்! அவவின் கூட்டில் நாங்க இருக்கிறதாலதானே அவ கோபப்படுறா?" சின்னக்குயிலின் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. "எங்களுகென்றொரு வீடு இல்லாதது ஒரு குறையாக இல்லையா அம்மா?"
குயில் அம்மா, தன் குஞ்சின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று ஒரு கணம் தயங்கியது. அதன் ஆழ்ந்த கண்களில் ஒருவித வருத்தம் படர்ந்தது. "அப்படியில்ல செல்லம்" என்று மெதுவாக ஆரம்பித்தது. "எங்களுடைய அம்மா எனக்கு எவ்வாறு கூடு கட்டுவது என்று சொல்லித் தரவில்லை. அது ஒரு கஸ்ரமான வேலை. அதுக்கு நிறைய உழைப்பும், கலை அறிவும் தேவை. அதனால்தான் எனக்கு எவ்வாறு கூடு கட்டுவது என்று தெரியவில்லை. எங்களுடைய பரம்பரை மரபே அப்படித்தான். நாங்க எப்பவுமே காக்காவின் கூட்டில் தான் முட்டை இட்டு, உங்களையெல்லாம் பெத்து வளர்த்தோம்." குயில் அம்மா, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு, "அது எங்கள் குலத்தின் ஒரு வழக்கம். ஒரு இயற்கையின் நியதி" என்றது.
"அதுக்கப்பறம் ஏன் அவ எங்கள விரட்டுறா?" சின்னக்குயில் விடவில்லை. "அவ எங்கள வளர்த்தாளும், அவவுக்கு நாங்கள் பாரம் மாதிரி இருக்கிறம்."
"பாரமல்ல செல்லம்" குயில் அம்மா, சின்னக்குயிலின் தலையை தன் அலகால் மெதுவாகத் தடவியது. "இது ஒரு உறவுப் பந்தம். நாம் அவளின் கூட்டில் முட்டை இட்டாலும், நீ பிறந்ததும், நீ ஒரு குயில் என்று அவளுக்குத் தெரியும். ஆரம்பத்தில் அவ உன்னை தன் குஞ்சு போலத்தான் வளர்த்தாள். ஆனால், நீ வளர்ந்ததும், உனக்கு உன் சொந்தக் குரல் வரும்போது, உன் நிறம் மாறும் போது, நீ அவளின் இனம் இல்லை என்று அவளுக்குப் புரிகிறது. அப்போது, அவளின் தாய்மை உணர்வு, தன் சொந்தக் குஞ்சுகளின் மீது திரும்பிவிடும்."
சின்னக்குயில் குழப்பத்தோடு அம்மாவைப் பார்த்தது. "அப்ப நாங்கள் எங்கே போவது? நிரந்தரமான ஒரு இடமே இல்லையா எங்களுக்கு?"
"நிரந்தரமான இடம் எதுவுமில்லை செல்லம்" குயில் அம்மா, வானத்தை அண்ணாந்து பார்த்தது. "இந்த உலகமே ஒரு தற்காலிகமான இல்லம்தான். ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு கடமை இருக்கு. காக்காவுக்கு கூடு கட்டும் கடமை இருக்கு. குயிலுக்குப் பாடும் கடமை இருக்கு. உன் குரல், இந்த உலகத்தை அழகாக்க இருக்கு. உன் குரல் கேட்கும்போது, எவ்வளவு பேர் சந்தோஷப்படுவாங்க தெரியுமா?"
சின்னக்குயிலின் மனம் சற்றே அமைதியடைந்தது. "ஆனால், நான் பாடவும் இல்லையே இன்னும்."
"பாடுவாய் செல்லம்" குயில் அம்மா, தன் இனிமையான குரலில் ஒரு மெல்லிய சங்கீதத்தைப் பாடியது. "உனக்கான நேரம் வரும்போது, உன் குரல் தானாகவே வரும். அப்போது, இந்தக் காடு முழுவதும் உன் பாட்டைக் கேட்டு மகிழும். காக்காவும் கூட உன் பாட்டைக் கேட்டு வியந்து போகும். நீ பாட ஆரம்பித்ததும், அவளுக்கு உன் மீது கோபம் வராது. அவள் உன்னை ஒரு கலைஞனாகப் பார்ப்பாள்."
இந்த உரையாடலின் நடுவில், ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூர்மையான அலகால் மரத்தைக் கொத்திக் கொண்டிருந்தது. அதன் ஒலி, காட்டின் அமைதியைக் கலைத்தது. சின்னக்குயில் அதைப் பார்த்தது. "அந்த மரங்கொத்திக்கு கூட வீடு இருக்கு அம்மா. எங்களுக்கும் ஒரு வீடு வேணும்."
"அதுதான் செல்லம், ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கு" குயில் அம்மா விளக்க ஆரம்பித்தது. "மரங்கொத்தி தன் வலுவான அலகால் மரம் கொத்தும். அணில் கிளைகளில் பாய்ந்து செல்லும். தேனீக்கள் கூட்டமாக உழைக்கும். நமக்கு அந்த அலகோ, அந்தக் கால் வலுவோ, அந்த ஒற்றுமையோ கிடையாது. நாம் தனிமையில் வாழ்வதே எங்கள் சிறப்பு. நாங்கள் எங்கு சென்றாலும், எங்கள் பாடல் எங்களை அடையாளம் காட்டும். அதுதான் எங்களது உண்மையான வீடு."
"அப்ப நான் ஒரு பெரிய பாடகியாக ஆகணுமா?" சின்னக்குயிலின் கண்களில் ஒரு புது ஒளி தென்பட்டது.
"ஆம் செல்லம்" குயில் அம்மா மெதுவாகச் சிரித்தது. "அதுமட்டுமல்ல, நீ பாடும்போது, உன் மனம் சந்தோஷமாக இருக்கும். நீ சந்தோஷமாக இருக்கும்போது, இந்த உலகமே சந்தோஷமாக இருக்கும். மகிழ்ச்சிதான் உண்மையான செல்வம்."
சின்னக்குயில் தன் தலையை ஆட்டியது. "அப்ப காக்கா அன்ரி என்னைப் பார்த்ததும், நான் பறந்து போய்விட வேண்டுமா?"
"இல்ல செல்லம்" குயில் அம்மா, மெதுவாக சின்னக்குயிலின் தலையைத் தடவி, "உனக்கு எந்த பயமும் வேண்டாம். நீ உன் குரலால் இந்த உலகத்தை வசீகரிக்கும் போது, அவளே உன்னை மதிப்பாள். அப்போது நீ அவளுடன் சமமாக உரையாட முடியும். ஒரு நாள் வரும், அவள் உன்னைக் கோபத்துடன் விரட்ட மாட்டாள். மாறாக, உன் வருகைக்காகக் காத்திருப்பாள்."
திடீரென, காக்காவின் கூர்மையான குரல் கேட்டது. "குயிலே! இன்னும் கிளம்பவில்லையா?"
சின்னக்குயில் ஒரு கணம் பயந்தது. குயில் அம்மா அதை மெதுவாகத் தன் இறகுகளுக்குள் அணைத்துக் கொண்டது. "பயப்படாதே செல்லம்" மெதுவாகக் குயில் அம்மா, சின்னக்குயிலின் காதில் சொன்னது. "இன்று நீ அவளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. ஆனால், ஒரு நாள், நீ உன் பாடல் மூலம் அவளுக்குப் பதிலளிப்பாய். அதுதான் உன் கிளைமாக்ஸ்!"
அடுத்த சில மாதங்கள், சின்னக்குயில் குயில் அம்மாவின் அரவணைப்பில், மெல்ல மெல்லப் பாடப் பழகியது. ஆரம்பத்தில் சற்றே தடுமாறி, பின்னர், அதன் குரல் மெருகேறியது. அதன் பாடல், அந்த காட்டின் மனதை வருடியது. ஒவ்வொரு மரத்திலும், ஒவ்வொரு இலையிலும், அதன் சங்கீதம் ஒலித்தது. காட்டில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் அதன் பாடலைக் கேட்டு மயங்கின.
ஒருநாள் காலை, காக்கா அன்ரியின் கூட்டின் அருகே சின்னக்குயில் பாடியது. அதன் குரல், ஒரு இனிமையான அருவியைப் போல, மெல்ல மெல்லப் பாய்ந்தது. காக்கா அன்ரி, தன் குஞ்சுகளுடன் கூட்டிலிருந்து வெளியே வந்தது. முதலில் அதன் முகத்தில் கோபத்தின் அறிகுறிகள் தெரிந்தன. ஆனால், சின்னக்குயிலின் குரல், அதன் கோபத்தை மெல்ல மெல்ல கரைத்தது. அதன் கண்கள் விரிந்தன. ஒருவித ஆச்சரியமும், வியப்பும் அதன் முகத்தில் படர்ந்தது. அது மெதுவாகக் குஞ்சுகளிடம், "இதுதான் அந்த குயில் குஞ்சு. இப்போ எவ்வளவு அழகா பாடுது பாருங்கோ!" என்றது.
சின்னக்குயில் தன் பாடலை நிறுத்தவில்லை. அது தன் முழு உணர்வோடும், தன் முழு ஆற்றலோடும் பாடியது. காக்கா அன்ரி, மெதுவாகக் கூட்டிலிருந்து இறங்கி வந்தது. அது சின்னக்குயிலை நெருங்கி வந்தது. அதன் கண்ணில் ஒரு துளி நீர் ததும்பியது. "சின்னக்குயில்" மெல்லிய குரலில் அழைத்தது. "உன் குரல்... என் மனதை நெகிழச் செய்கிறது. நீ என் கூட்டில் இருந்தபோது, உன்னைக் கொத்தியதற்காக நான் வருந்துகிறேன். நீ ஒரு கலைஞன். உன் கலைக்கு ஈடு இணையில்லை."
சின்னக்குயில், தன் பாடலை நிறுத்தி, காக்கா அன்ரியைப் பார்த்தது. அதன் கண்களில் நன்றி உணர்வுடன் ஒரு புதுவிதமான ஒளி தெரிந்தது. "நீங்கள் எங்களை வளர்த்திருக்காவிட்டால், நாங்கள் இன்று இல்லை. நீங்கள்தான் எங்கள் முதல் ஆசிரியை" என்றது.
0 comments:
Post a Comment