ADS 468x60

07 November 2025

2026 வரவுசெலவுத் திட்டம்- மக்களின் தேவைக்கான காலக்கெடு

இன்று நான் எடுத்துக்கொண்ட விடயம், எமது நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கப் போகும் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு பற்றியது. ஆம், இன்று (நவம்பர் 7) மதியம் 1:30 மணிக்கு, நாட்டின் தலைவரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அனுர குமார திசாநாயக்க அவர்கள், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டச் சமர்ப்பிப்பு சார்ந்து உரையாற்றி இருக்கிறார்.

அன்பின் உறவுகளே, இந்த உரை, ஒரு சாதாரண அறிக்கை அல்ல. இது, நம் நாட்டு மக்களின் அடுத்த வருடத்திற்கான வாழ்வாதாரம், அபிவிருத்தித் திட்டங்கள், மற்றும் அரசாங்கத்தின் பார்வை ஆகியவற்றை நிர்ணயிக்கப் போகும் ஆவணம். இது தற்போதைய நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தச் சமர்ப்பிப்புடன் எமது வேலை முடிந்துவிடவில்லை. இதுதான் மக்களுக்கான எங்கள் போராட்டம் ஆரம்பிக்கும் முக்கியமான தருணம்.

ஏனெனில், இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மீது, நவம்பர் 8ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரைக்கும் பல கட்டங்களாக விவாதங்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. இந்த விவாதக் காலம், மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான சனநாயகக் கடமையாகும்.

இந்தக் காலக்கெடுவில், ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் - அவர் எந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் - அந்தப் பிரதேசத்துக்கு, அந்த மக்களுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்கள், குறைகள், மற்றும் வளர்ச்சிக்கான தேவைகள் சார்ந்து ஆணித்தரமான கருத்துக்களை அங்கே முன்வைக்க வேண்டும்.

இது மக்கள் பிரதிநிதிகளுடைய பிரதான கடமை. அவர்கள் நிச்சயமாக இந்தக் கலந்துரையாடல்களில் பங்குபற்ற வேண்டும். எமது பாதிக்கப்பட்ட மக்களுடைய குறைகள் அங்கே பிரதிபலிக்கப்படுகின்றனவா என்பதை ஆராய வேண்டும்.

அன்பின் உறவுகளே, இப்போது எமது மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க நான் விரும்புகிறேன். நீங்கள் அனைவரும், ஆளும் தரப்பாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், கரிசனையோடு எங்களுடைய பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளுக்கு 2026 இல் தீர்வினைப் பெறுவதற்கான ஆதாரப்பூர்வ விடயங்களை முன்னிறுத்த வேண்டும் என வேண்டிக் கொள்ளுகின்றேன்.

டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு இந்த விவாதம் வாக்கெடுப்புடன் முடிவடையும். அதற்கு முன்பாக, மக்களின் குரல் பலமான ஓசையாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி எப்ரஹாம் லிங்கன் கூறியது போல, "அரசாங்கம் என்பது மக்களுக்காக, மக்களால் ஆனது." அந்த அடிப்படைத் தத்துவத்தை, எமது மக்கள் பிரதிநிதிகள் ஒருபோதும் மறக்கக் கூடாது. நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இந்த நேரத்தில், மக்கள் சார்பாக நின்று, நீதிக்காகப் போராடுங்கள்.

இந்த வரவுசெலவுத் திட்ட விவாதக் காலம், எமது மக்களின் எதிர்காலத்தை, குறிப்பாக அபிவிருத்தித் தேவைகளைத் தீர்க்கும் சாத்தியமான காலமாக மாற வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு, மக்களாகிய நாம் அனைவரும் விழிப்புடன் இருந்து, எமது பிரதிநிதிகள் மீது அழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்: காலக்கெடு டிசம்பர் 5. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையில் இருந்து தவறாமல், எமது மக்களின் தேவைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

நன்றி.

0 comments:

Post a Comment