இது
வெறுமனே ஒரு சமூகத் தேவையாக மட்டும் பார்க்கப்படாமல், இலங்கையின் பேரியல் பொருளாதாரத்தை (Macroeconomic revitalization) உயிர்ப்பிப்பதற்கான
ஒரு சக்திவாய்ந்த உத்தியாகக் கருதப்பட வேண்டும். தொழில் சந்தையில் நிலவும் பாலின
இடைவெளியைக் குறைப்பதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வருமானம் கணிசமானது என்பதுடன், அது நேரடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின்
(Gross Domestic Product - GDP) வளர்ச்சிக்கும்
வறுமை ஒழிப்புக்கும் பங்களிக்கின்றது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய தடையாக
இருப்பது, பயன்படுத்தப்படாத மனித
மூலதனமாகும் (Untapped Human
Capital). இலங்கையில் பெண்களின் தொழிற்படைப் பங்கேற்பு விகிதம் (Female Labour Force Participation - FLFP)
31.6% என்ற மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது.
இந்த
இடைவெளியை நிரப்புவதன் மூலம் எட்டக்கூடிய பொருளாதார நன்மைகள் குறித்து சர்வதேச
நிதி நிறுவனங்கள் தெளிவான மதிப்பீடுகளை வழங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின்படி, இலங்கை தனது தொழிற்படைப் பங்கேற்பில் உள்ள பாலின
இடைவெளியைக் குறைத்தால், நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி (GDP) சராசரியாக 35% அதிகரிக்கக்கூடும். இந்த எண்ணிக்கை ஒரு
சாதாரண புள்ளிவிபரம் அல்ல; இது நாட்டின்
பொருளாதார வெளியீட்டில் ஒரு மாற்றத்தைக் குறிக்கும் திருப்புமுனையாகும்.
இது
இலங்கையைத் தற்போதுள்ள குறைந்த நடுத்தர வருமான நிலையிலிருந்து (Lower-middle-income status) உயர் வளர்ச்சிப்
பாதைக்கு இட்டுச் செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது. தெற்காசியாவிற்கான உலக வங்கியின்
(World Bank) ஆய்வுகளும்
இந்தக் கருத்தை வலுப்படுத்துகின்றன. பிராந்தியத்தில் பெண்களின் தொழிற்படைப்
பங்கேற்பை ஆண்களுக்கு நிகராக உயர்த்தினால்,
பிராந்திய
மொத்த உள்நாட்டு உற்பத்தி 51% வரை
அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒப்பிடக்கூடிய
பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் பெண்களின் தொழிற்படைப் பங்கேற்பில் 10 சதவீதப் புள்ளி அதிகரிப்பு ஏற்பட்டால் கூட, அது சுமார் 16% மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்புக்கு வழிவகுக்கும்
என்று கணிக்கப்பட்டுள்ளது.
சில விமர்சகர்கள்,
தற்போதைய
பொருளாதார நெருக்கடி நிலையில் சமூக உள்கட்டமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களில்
முதலீடு செய்வது சாத்தியமற்றது என்றும்,
இது
அரசாங்கத்திற்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் வாதிடலாம். மேலும், கலாசார விழுமியங்கள் மற்றும் குடும்பக்
கட்டமைப்புகள் காரணமாகப் பெண்கள் வேலைக்குச் செல்வதை விடப் பிள்ளைப் பராமரிப்பில்
ஈடுபடுவதே சிறந்தது என்ற பழமைவாதக் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இந்த வாதங்கள் பொருளாதார யதார்த்தத்தைப்
புறக்கணிப்பவையாகவே உள்ளன. முதலாவதாக,
பிள்ளைப்
பராமரிப்பில் செய்யப்படும் முதலீடு ஒரு செலவு அல்ல, அது அதிக வருமானம் தரும் ஒரு முதலீடாகும். ஒவ்வொரு 1 டொடாலர் (Dollar) முதலீட்டிற்கும் 7.30
டொடாலர்
வரை வருமானம் கிடைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இரண்டாவதாக, சட்ட நவீனமயமாக்கல் என்பது
அரசாங்கத்திற்குச் செலவு வைக்கும் விடயமல்ல;
மாறாக, அது பொருளாதாரத் தடையை நீக்கும் ஒரு
நடவடிக்கையாகும். உதாரணமாக, இரவு நேர வேலைக்
கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் நிர்வாகச் சுமைகளைக் (Administrative burden) குறைப்பது, பிபிஓ (BPO) மற்றும் விருந்தோம்பல் (Hospitality) போன்ற உயர் வளர்ச்சித் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க
உதவும். எனவே, இந்தச்
சீர்திருத்தங்களைச் சமூக நலத்திட்டங்களாக மட்டும் பார்க்காமல், பொருளாதாரத் திறனை அதிகரிக்கும் கருவிகளாகப்
பார்க்க வேண்டும்.
முன்மொழியப்பட்ட கொள்கைத் தொகுப்பானது, குறைந்த பெண் தொழிற்படைப் பங்கேற்பிற்கான (FLFP) மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP)
வளர்ச்சியைத்
தூண்டும் ஒரு பொறிமுறையாகச் செயல்படுகின்றது.
சட்ட
நவீனமயமாக்கல் மூலம், பெண்களை
வேலைக்கு அமர்த்துவதில் உள்ள நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் செலவுகள் போன்ற
கேள்வியின் பக்கமுள்ள தடைகள் (Demand-side
constraints) நீக்கப்படுகின்றன. இது பொருளாதாரத் திறனுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக
இருக்கும் செயற்கையான தடைகளை அகற்றுவதற்குச் சமமாகும்.
அதேவேளை, பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களில்
செய்யப்படும் முதலீடு, விநியோகப்
பக்கமுள்ள முதன்மைத் தடையான (Supply-side
constraint) ஊதியமில்லாத பராமரிப்புச் சுமையை (Unpaid
care burden) நீக்குகின்றது. இது பெண்கள் முறையான தொழிற்படையில் இணைய வழிவகுப்பதுடன், ஒட்டுமொத்தத் தொழிலாளர் உற்பத்தித்
திறனையும் அதிகரிக்கின்றது. குறிப்பாக,
பிள்ளைப்
பராமரிப்புத் துறையில் முதலீடு செய்வது இரட்டைப் பொருளாதார நன்மையை வழங்குகிறது.
அது பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்குவதுடன், பராமரிப்புப் பொருளாதாரம் (Care economy) என்ற புதிய,
உயர்தர
வேலைவாய்ப்புத் துறையையும் உருவாக்குகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
குறிப்பிடத்தக்கப் பெருக்க விளைவை (Multiplier
effect) ஏற்படுத்தும்.
வேலைத் தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பது
பொருளாதார வளர்ச்சியின் மற்றுமொரு முக்கிய அங்கமாகும். சர்வதேச தொழிலாளர்
ஸ்தாபனத்தின் 190வது சாசனத்தை (ILO C190) அங்கீகரிப்பதன் மூலம், பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் கணிக்கக்கூடிய ஒரு வேலைச்
சூழல் உருவாக்கப்படுகின்றது.
வன்முறை
மற்றும் துன்புறுத்தல்களுடன் தொடர்புடைய பொருளாதாரச் செலவுகள், பணியாளர் விலகல் (Turnover) மற்றும் வேலைக்கு வராமை
(Absenteeism) ஆகியவற்றைக்
குறைப்பதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கின்றது. பாதுகாப்பற்ற பணியிடங்கள்
பெண்களின் தொழில் முன்னேற்றம் மற்றும் வேலையில் நீடித்திருத்தலை விகிதாசாரமற்ற
முறையில் பாதிக்கின்றன. இத்தகைய மறைமுகச் செலவுகளைக் (Hidden costs) குறைப்பது வணிக
நிறுவனங்களின் இலாபத்தன்மையை அதிகரிப்பதோடு,
தேசியப்
பொருளாதாரத்திற்கும் வலுவூட்டும். எனவே,
பாதுகாப்பான
பணிச்சூழல் என்பது ஒரு தார்மீகக் கடமை மட்டுமல்ல, அது ஒரு புத்திசாலித்தனமான வணிக உத்தியுமாகும்.
பெண்களின் தொழிற்படைப் பங்கேற்பை அதிகரிப்பது வறுமை
ஒழிப்பிற்கான (Poverty
reduction) மிகவும் பயனுள்ள மற்றும் நிலையான கருவிகளில் ஒன்றாகும். பெண்களின் வருமானம்
குடும்ப நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டில் விகிதாசாரமற்ற நேர்மறையான தாக்கத்தை
ஏற்படுத்துகின்றது என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. பெ
ண்களின்
வேலைவாய்ப்பில் ஏற்படும் 10 சதவீதப் புள்ளி
அதிகரிப்பு, வறுமையில் 1 சதவீதப் புள்ளி குறைப்புடன் தொடர்புடையது
என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையின் தற்போதைய வறுமை நிலைகளைக்
கருத்தில் கொள்ளும்போது, பெண்
தொழிற்படைப் பங்கேற்பில் ஏற்படும் கணிசமான அதிகரிப்பு, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான குடும்பங்களை
வறுமையிலிருந்து மீட்டெடுக்கும். பெண்களின் வருமானம் பொதுவாகக் குடும்பத்தில், குறிப்பாகப் பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில்
மீண்டும் முதலீடு செய்யப்படுகின்றது. இது வறுமை கடத்தப்படுவதைத் தடுத்து (Breaking the transmission of poverty), செழிப்பான ஒரு
தலைமுறைச் சுழற்சியை உருவாக்குகின்றது. குறிப்பாக, இந்தக் கொள்கைகள்,
சுரண்டலுக்கு
அதிகம் ஆளாகக்கூடிய மற்றும் முறையான,
பாதுகாப்பான
வேலைவாய்ப்பு தேவைப்படும் அரைத் திறன் மற்றும் உழைப்பு மிகுந்த தொழில்களில் (Semi-skilled and labour-intensive
industries) உள்ள பெண்களுக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான
இரவு வேலை விருப்பங்களை வழங்குவதன் மூலமும்,
ஊதியமில்லாத
பராமரிப்புச் சுமையைக் குறைப்பத மூலமும்,
இந்தச்
சீர்திருத்தங்கள் பெண் சனத்தொகையில் மிகவும் வறிய பிரிவினரின் பொருளாதார விலக்கலை
(Economic exclusion) நேரடியாகக்
குறிவைக்கின்றன.
இலங்கையின் தேசியச் செழிப்பிற்கான ஒரு மூலோபாய முதலீடாகவே (Strategic Investment) இந்தச் சீர்திருத்தங்களைக்
கருத வேண்டும். பல தசாப்தங்களாகப் பெண்களின் தொழிற்படைப் பங்கேற்பை
மட்டுப்படுத்திய கட்டமைப்பு மற்றும் சட்டத் தடைகளைத் தகர்ப்பதன் மூலம், அரசாங்கம் ஒரு பாரிய பொருளாதார இலாபத்தை (Economic dividend) விடுவிக்க முடியும்.
சட்ட நவீனமயமாக்கல், பிள்ளைப் பராமரிப்பில்
அதிக வருமானம் தரும் முதலீடு மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சாசனத்தை (ILO C190) அங்கீகரிப்பதன் மூலம்
பாதுகாப்பான பணியிடங்களை நிறுவுதல் ஆகிய மும்முனை அணுகுமுறையின் ஒருங்கிணைந்த
விளைவு, மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் பில்லியன் கணக்கான டொடாலர் (Dollar)
அதிகரிப்புக்கு
வழிவகுக்கும். அதுமட்டுமன்றி, இது மிகவும்
சமத்துவமான, மீள்திறன் கொண்ட
(Resilient) மற்றும்
வறுமையற்ற ஒரு சமூகத்தையும் உருவாக்கும். அடையாள ரீதியான நடவடிக்கைகளுக்கு (Tokenistic gestures) அப்பால் சென்று, ஒரு விரிவான, ஒருங்கிணைந்த கொள்கை அணுகுமுறையை மேற்கொள்வதே இலங்கையின்
முழுமையான பொருளாதாரத் திறனை அடைவதற்கான தெளிவான பாதையாகும். இந்த மாற்றத்தை
ஏற்றுக்கொள்வது என்பது பெண்களுக்கான உரிமையை வழங்குவது மட்டுமல்ல, அது தேசத்தின் எதிர்காலத்திற்கான
அத்திவாரத்தை இடுவதாகும்.


0 comments:
Post a Comment