ADS 468x60

17 November 2026

வரவு செலவுத் திட்டம் 2027- நிதி மீட்சியைப் பொருளாதார வளர்ச்சியாக மாற்றுமா அரசாங்கம்?

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (Budget 2027), அண்மைக்கால வரவு செலவுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நிதிச் சந்தை ஆய்வு நிறுவனமான JB Securities இன் Murtaza Jafferjee, இதனைத் தனது நினைவிலுள்ள சிறந்த வரவு செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மதிப்பீடு, வெறுமனே அரசாங்கத்தின் அரசியல் வெற்றியாகப் பார்க்கப்பட முடியாது. மாறாக, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரச கடன் தவணை செலுத்தத் தவறிய நிலை (Sovereign Default), சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

எனினும், ஒரு வரவு செலவுத் திட்டம் சிறந்ததாக மதிப்பிடப்படுவதற்கான அளவுகோல் அதன் நிதி இலக்கங்கள் மட்டுமல்ல. அது மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்துகின்றது, உற்பத்திப் பொருளாதாரத்தை எவ்வாறு விரிவுபடுத்துகின்றது, வேலைவாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகின்றது, தனியார் முதலீட்டை எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பவையே அதன் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கின்றன. எனவே, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் அரசாங்கத்தின் சாதனைகளைப் பாராட்டுவதுடன் நின்றுவிடாமல், அதன் அமுலாக்கத் திறன், நீண்டகாலப் பொருளாதார நோக்கு மற்றும் சமூகப் பொருளாதார விளைவுகள் ஆகியவற்றையும் மையப்படுத்த வேண்டும்.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் மிக முக்கியமான சாதனை அரச நிதி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகும். 2025ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை (Budget Deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 68 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாகும். 2022ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.2 சதவீதமாக இருந்த அரச வருமானம், 2025ஆம் ஆண்டில் 16.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளை, அரச வருமானத்தில் வட்டி செலுத்துவதற்காகச் செலவிடப்பட்ட பங்கு 2022ஆம் ஆண்டில் 79.1 சதவீதமாக இருந்த நிலையில், 2026 செப்டெம்பர் மாதத்தில் 39.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அத்துடன், 2022ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 114 சதவீதமாக இருந்த மத்திய அரசாங்கத்தின் கடன் அளவு, 2025ஆம் ஆண்டின் இறுதியில் 95 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவை அனைத்தும் அரச நிதி ஒழுங்கில் (Fiscal Discipline) ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றன. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இவ்வளவு விரைவாக அரச நிதியை மீளமைப்பது எளிதான காரியமல்ல. வருமானத்தை அதிகரித்தல், செலவினங்களைக் கட்டுப்படுத்துதல், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதிக் கொள்கை ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றின் மூலம் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.

ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், நிதி நிலைமை சீரடைதல் என்பது பொருளாதார நெருக்கடி முழுமையாக முடிவடைந்துவிட்டது என்பதற்கான சான்றல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 95 சதவீதமாகக் காணப்படும் அரச கடன் இன்னமும் இலங்கையின் பொருளாதார ஆற்றலுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும். 2027ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் சேவைக்கான தேவை 2,986 மில்லியன் டொடாலராகக் குறைவடைந்தாலும், 2028ஆம் ஆண்டில் அது மீண்டும் 3,574 மில்லியன் டொடாலராக அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தற்போதைய நிதி முன்னேற்றத்தை நிரந்தரமான பாதுகாப்பு நிலையாகக் கருத முடியாது.

இந்தப் பின்னணியில், அரசியல் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் கவனத்திற்குரியவை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 'வெறும் பொய்களின் தொகுப்பு' என விமர்சித்ததுடன், அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகரித்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நாட்டைவிட்டு வெளியேறிய முதலீட்டாளர்கள், கடன் மறுசீரமைப்பின் நிபந்தனைகள், நெல் கொள்வனவு விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் எனப் பல விடயங்களை அவர் முன்வைத்துள்ளார்.

இவற்றில் பல கேள்விகள் நியாயமானவையாகும். குறிப்பாக, மக்களின் வாழ்க்கைச் செலவு, விவசாயிகளின் உற்பத்திச் செலவு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களின் நிதிச் சுமை, மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை அரசாங்கத்தின் பொருளாதார மதிப்பீட்டில் முக்கிய இடம் பெற வேண்டும். எனினும், ஒரு வரவு செலவுத் திட்டத்தை மதிப்பிடும்போது கடந்தகால அரசியல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனத்திற்கும், தற்போதைய நிதிக் கொள்கையின் அடிப்படைத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் இடையில் வேறுபாடு காணப்பட வேண்டும். அரசாங்கத்தின் கடந்தகாலச் செயற்பாடுகளை விமர்சிப்பது அவசியமானதுதான். ஆனால் அதனுடன் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள், மாற்று வருமான இலக்குகள் மற்றும் செலவின முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட வேண்டும்.

மறுபுறம், பொருளாதார நிபுணரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இந்த வரவு செலவுத் திட்டம் பாரம்பரியமான அணுகுமுறையிலிருந்து வெளியேறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி வங்கி (Development Bank), வீடமைப்பு நிதி நிறுவனம் (Housing Finance Institution) மற்றும் உரிய மறுசீரமைப்பு பொறிமுறை ஆகியவை இல்லாமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விமர்சனங்கள் முக்கியமானவை. ஏனெனில், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால் அரச வருமானத்தை அதிகரிப்பதுடன் மட்டும் முடிவடைவதில்லை. உற்பத்தித் துறைகளுக்கு நீண்டகால நிதி வழங்குதல், புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குதல், ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் மற்றும் முதலீட்டுக்கான நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவையும் அவசியமானவை.

இங்கு எதிர்க்கட்சியின் விமர்சனங்களில் காணப்படும் முக்கியமான குறைபாடு, வரவு செலவுத் திட்டத்தின் நிதி இலக்குகளுக்கு மாற்றாக வேறுபட்ட எண்ணிக்கையிலான முன்மொழிவுகள் முன்வைக்கப்படாததாகும். விமர்சனங்கள் அரசியல் ரீதியாக அவசியமானவையாக இருந்தாலும், அவை மாற்றுப் பொருளாதாரத் திட்டத்துடன் இணைக்கப்படும்போதே தேசியப் பொருளாதார விவாதத்திற்கு வலுசேர்க்கும்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதார மீட்சியைப் பாதிக்கக்கூடிய வெளிப்புற அதிர்ச்சிகளும் தொடர்கின்றன. ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) மூடல் உலகளாவிய பெற்றோலியக் கப்பல் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்தைப் பாதித்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையின் எரிபொருள் விலைகளில் ஏற்படாமல் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் 147 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. இது சர்வதேச அரசியல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு நிலைமைகள் இலங்கை போன்ற இறக்குமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1,853 மில்லியன் டொடாலர் உபரியாகக் காணப்பட்ட நடப்புக் கணக்கின் (Current Account) நிலை, 2026ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 420 மில்லியன் டொடாலர் பற்றாக்குறையாக மாறியுள்ளது. பணவீக்கம் (Inflation) 2025 டிசெம்பரில் 2.1 சதவீதமாக இருந்த நிலையில், 2026 ஒக்டோபரில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் (Cyclone Ditwah) ஏற்பட்ட சேதங்களும் இழப்புகளும் சுமார் 3.4 பில்லியன் டொடாலர் என மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும், 2027 பெப்ரவரியில் எல் நினோ (El Niño) தாக்கம் உச்சமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எதிர்பார்க்கிறது. இதனுடன், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டம் (Extended Fund Facility) 2027 மார்ச் மாதத்தில் முடிவடையவுள்ளது.

இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும் இலங்கை இன்னமும் வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பொருளாதார அமைப்பைக் கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. எனவே, நிதி ஒழுங்கைப் பேணுவதுடன் வெளிநாட்டு நாணய இருப்பை வலுப்படுத்துதல், ஏற்றுமதியை அதிகரித்தல், இறக்குமதிச் சார்பைக் குறைத்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, கடந்த ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.4 சதவீதமாகப் பதிவான முதன்மை நிதி உபரி (Primary Surplus), அரசியல்வாதிகளால் மேலதிகமாகச் செலவிடக்கூடிய நிதியாகக் கருதப்படக்கூடாது. அது எதிர்கால பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு நிதி இடைவெளியாகும் (Fiscal Buffer). டிட்வா சூறாவளியின் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக 2027ஆம் ஆண்டில் முதன்மைச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13.6 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. 2028ஆம் ஆண்டிலிருந்து அது மீண்டும் 13 சதவீதத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இலக்கும் முக்கியமானது. இந்த இலக்கை அடைவதற்காக அத்தியாவசியமான சமூகச் செலவினங்களைக் குறைப்பதைவிட, பயனற்ற அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதும் அரச நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிப்பதும் அவசியமாகும்.

இங்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் முக்கியமான காரணி அதன் அமுலாக்கமாகும். எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியபடி, 2026ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான 17 வாக்குறுதிகளில் ஐந்து மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், இதற்காக 28.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான நிர்வாகப் பிரச்சினையை வெளிப்படுத்துகின்றது. நிதி ஒதுக்கீடு செய்துவிட்டால் அபிவிருத்தி ஏற்பட்டுவிடாது. ஒதுக்கப்பட்ட நிதி உரிய காலத்தில், உரிய நோக்கத்திற்காக, அளவிடக்கூடிய பெறுபேறுகளுடன் செலவிடப்பட வேண்டும்.

அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் முகாமைத்துவம் தொடர்பான சட்டமூலம் (State-Owned Business Enterprises Management Bill) மற்றும் அரச–தனியார் கூட்டாண்மைச் சட்டம் (Public-Private Partnership Act) ஆகியவற்றின் அமுலாக்கமும் தாமதமடையக்கூடாது. அதேபோன்று, இறக்குமதிப் பொருட்கள் மீதான செஸ் வரியை (Cess) படிப்படியாக நீக்கும் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்தில் 499 வரி வகைப்பாடுகளுக்கு செஸ் வரி நீக்கப்படவுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடும். ஆனால், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் போட்டித்திறன், வரி வருமானத்தின் நிலைத்தன்மை மற்றும் இறக்குமதிச் சார்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டே இவை அமுல்படுத்தப்பட வேண்டும்.

2027ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவின ஒதுக்கீடு 2 ட்ரில்லியன் ரூபாவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தப் பெருந்தொகை ஒதுக்கீடு பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தாது. அதன் மூலம் உருவாக்கப்படும் வீதிகள், பாலங்கள், நீர்ப்பாசன வசதிகள், கல்வி மற்றும் சுகாதார உட்கட்டமைப்புகள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை மக்களின் உற்பத்தித்திறனையும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, கிராமிய மற்றும் பிராந்தியப் பொருளாதாரங்களை தேசியப் பொருளாதாரத்துடன் இணைக்கும் முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இதற்கான மாற்றுத் தீர்வுகள் சில தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். முதலாவதாக, ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்படும் நிதி, அதன் செலவின அளவை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், அடைய வேண்டிய பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு முறைக்கு (Performance-Based Budgeting) மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் காலக்கெடு, பொறுப்பான நிறுவனங்கள், அளவிடக்கூடிய இலக்குகள் மற்றும் பொதுமக்கள் அணுகக்கூடிய முன்னேற்ற அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.

இரண்டாவதாக, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கான நீண்டகால நிதி வசதியை மேம்படுத்த அபிவிருத்தி நிதி நிறுவனமொன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, விவசாயம், உணவுப் பதப்படுத்தல், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் துறைகளுக்கு குறைந்த செலவிலான முதலீட்டு நிதி கிடைக்கச் செய்வது அவசியமாகும். பெண்கள் தலைமையிலான தொழில்முயற்சிகள் மற்றும் இளைஞர்களின் புத்தாக்க முயற்சிகளுக்கும் தனியான நிதி அணுகல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மூன்றாவதாக, அரச வருமான அதிகரிப்பு என்பது வரி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் மட்டுமே அடையப்படக்கூடாது. வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குதல், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துதல், முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளைப் படிப்படியாக முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டுவருதல் மற்றும் அரச கொள்முதல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வருமானத்தை விரிவுபடுத்த வேண்டும்.

நான்காவதாக, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புற மையங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் பிற பின்தங்கிய பிராந்தியங்களில் உள்ள உற்பத்தி வளங்களை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய அபிவிருத்தி மாதிரிகள் உருவாக்கப்பட வேண்டும். விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல், மீன்பிடி வளங்களைப் பயன்படுத்துதல், கிராமிய சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் சந்தை அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவை இதன் முக்கிய கூறுகளாக அமைய வேண்டும்.

ஐந்தாவதாக, கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் மனிதவள அபிவிருத்தி ஆகியவை எதிர்காலப் பொருளாதாரத்தின் அடித்தளமாகக் கருதப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச சேவைத் துறைகளில் இலங்கை இளைஞர்களுக்கான திறன் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, நாட்டுக்குள்ளேயே உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இறுதியாக, அரசாங்கம், எதிர்க்கட்சி, தனியார் துறை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையில் பொருளாதாரப் பொறுப்புக்கூறல் (Economic Accountability) தொடர்பான பொதுவான இணக்கப்பாடு உருவாக்கப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான காலாண்டு அறிக்கைகள் நாடாளுமன்றத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் வெறும் அரசியல் அறிவிப்புகளாக இல்லாமல், கண்காணிக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளாக மாற்றப்பட முடியும்.

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டுவரும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரச நிதி ஒழுங்கு மற்றும் பொருளாதார நிலைப்படுத்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றது. எனினும், கடன் சுமை, வெளிநாட்டு நாணயத் தேவை, பணவீக்கம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற சவால்கள் இன்னமும் தீர்க்கப்பட வேண்டியவையாக உள்ளன.

ஒரு சிறந்த வரவு செலவுத் திட்டத்தின் உண்மையான வெற்றி அதன் பக்கங்களில் காணப்படும் பில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகளில் இல்லை; அந்த நிதி மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் அளவிடக்கூடிய மாற்றத்திலேயே உள்ளது.

அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதனைச் சிறப்பாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்போது அரசாங்கத்திடம் உள்ளது. எதிர்க்கட்சியின் பொறுப்பு குறைகளைச் சுட்டிக்காட்டுவதுடன் முடிவடையக்கூடாது; மாற்றுத் தீர்வுகளையும் முன்வைத்து அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். அதேவேளை, தனியார் துறையும் பொதுமக்களும் நாட்டின் பொருளாதார மீட்சியில் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.

இலங்கைக்கு இப்போது தேவைப்படுவது மேலும் ஒரு சிறந்த வரவு செலவுத் திட்டம் மட்டுமல்ல; உருவாக்கப்பட்ட திட்டங்களைத் துல்லியமாக அமுல்படுத்தி, நிதி மீட்சியை நிலையான பொருளாதார வளர்ச்சியாகவும், பொருளாதார வளர்ச்சியை மக்களின் செழிப்பாகவும் மாற்றக்கூடிய பொறுப்பான ஆட்சிமுறையாகும்.

0 comments:

Post a Comment