நாங்கள் மிகச் சிறுவர்களாக இருந்த காலத்தில், எங்கள் ஊர்க் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பஜனை நிகழ்வு மிக விமரிசையாக நடக்கும். அதைத் தொடர்ந்து, பகவத் கீதையின் ஒவ்வொரு அத்தியாயமாக விரிவுபடுத்திச் சொல்லப்படும் அந்த உபதேச நேரத்திற்காகவே நாங்கள் ஆவலோடு காத்திருப்போம். அந்த இளமைப் பருவத்தில், அந்தத் திவ்யமான சூழலில் அமர்ந்து பகவத் கீதையை நான் பல தடவைகள் வாசித்திருக்கிறேன்; ஆழமாகச் செவிமடுத்திருக்கிறேன். அன்றைக்குக் கேட்ட அந்த ஆன்மீகக் குரல்கள் இன்று என் வாழ்வின் பல திருப்பங்களில் ஒரு வெளிச்சமாகத் திகழ்கின்றன.
அதில் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து, இன்றைக்கும் எனக்கு மிகப்பெரிய பலனைக் கொடுக்கும் ஒரு உன்னத உபதேசம் உண்டு. வாழ்வில் ஒருவருக்குத் துன்பமும் துயரமும் வருகின்ற பொழுது, மனம் தளர்ந்து துவண்டு விடுவது மனிதனின் பொதுவான குணம். ஆனால், போர்க்களத்தில் அத்தகையதொரு நிலைக்குத் தள்ளப்பட்டு, செயலற்று நின்ற அர்ஜுனனை ஆற்றுப்படுத்துவதற்காகக் கிருஷ்ண பகவான் கூறிய அந்த அமுத மொழிகள் இன்று என்னை மீண்டுமொருமுறை ஈர்த்துள்ளது.
இதற்குக் காரணம் உண்டு. சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு அன்பர், தன் வாழ்வில் எதிர்கொள்ளும் வேதனைகளையும் தாங்க முடியாத துன்பங்களையும் என்னிடம் கூறி மிகவும் கவலையோடு புலம்பினார். அவரைப் பார்த்த அந்த நிமிடம், என் சிறுவயது ஆலயம், அங்கே ஒலித்த கீதை ஓசை, கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொன்ன அந்த ஆறுதல் வார்த்தைகள் எல்லாமே என் நினைவுக்கு வந்து போனது. அப்போதுதான் எனக்குள் ஒரு எண்ணம் உதித்தது—இந்த ஆன்மீகத் தத்துவத்தை எனக்கே உரித்தான ஒரு அனுபவமாக வைத்துக் கொள்ளாமல், நிச்சயமாகப் பொதுவெளியில் ஏனையோருக்கும் சொல்ல வேண்டும்; துயரத்தில் வாடும் பல இதயங்களுக்கு இது ஒரு ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
வாழ்வின் எந்த ஒரு கணத்திலும் எதிர்பாராத துயரங்களும், தாங்க முடியாத வேதனைகளும் நம்மைச் சூழ்ந்து கொள்வதுண்டு. அந்தத் தருணங்களில் மனம் சோர்ந்து, "ஏன் எனக்கு இந்தச் சோதனை?" என்று துவண்டு போவது மனித இயல்புதான். ஆனால், அந்தத் துயரத்திற்கு முன்பாக மண்டியிடாமல், அந்தத் துன்பத்திற்கே ஒரு துன்பத்தைக் கொடுத்து அதனை விரட்டியடிக்கும் ஆன்மீகப் பெருவழி ஒன்றை நமது இதிகாசங்களும் ஆன்மீகப் பேரறிவும் நமக்குக் கற்றுத் தருகின்றன. அதனை நாம் "துன்பத்திற்குத் துன்பம் விளைவித்தல்" என்ற உன்னதத் தத்துவமாக உணர்கிறோம்.
குருதி தோய்ந்த போர்க்களத்தில், சொந்தங்களின் பிரிவையும் எதிர்கால அச்சத்தையும் நினைத்து அர்ஜுனன் மனம் தளர்ந்து அமர்ந்தான். அவனது கவலை அவனது ஆன்மபலத்தை உலுக்கியது. அந்த வேளையில், எம்பெருமான் கிருஷ்ணன் அவனுக்கு வழங்கிய உபதேசம் வெறும் போர்க்களத்திற்கான அறிவுரை மட்டுமல்ல; அது தலைமுறை தலைமுறையாக மனிதகுலம் எதிர்கொள்ளும் அத்தனை கவலைகளுக்குமான மாமருந்து.
"பலனை எதிர்பாராமல் உனது கடமையைச் செய்" என்றார் கண்ணன். கவலையில் மூழ்கி நிகழ்காலக் கடமையிலிருந்து விலகுவதுதான் துன்பத்திற்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பலம். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகப் பார்க்கும் சமநிலைப் பக்குவமே (ஸ்திதப்பிரக்ஞை) துயரத்தை எதிர்கொள்ளும் முதற்கவசம்.
நம்மைத் துயரப்படுத்துவது உடலும் மனமும் சார்ந்தவை மட்டுமே; அழியாத ஆன்மாவின் உண்மையை உணர்ந்தவனுக்கு மரணமோ, இழப்போ எத்தகைய அச்சத்தையும் தர இயலாது என்பதை கீதை ஆணித்தரமாக உணர்த்துகிறது.
இதற்கு மிகச் சிறந்த சான்றாக மகாபாரதத்தில் பாண்டவர்களின் வாழ்க்கையைக் காண முடிகிறது. சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டு, ராஜ்யத்தை இழந்து, பன்னிரண்டு ஆண்டுகள் காடும் ஒரு ஆண்டு மறைவு வாழ்வும் என்று அவர்கள் பட்ட அவமானங்கள் சாதாரணமாகக் கடந்துவிடக் கூடியவை அல்ல. ஆனால், அவர்கள் ஒருபோதும் விதியைக் நொந்து அழுது புலம்பவில்லை. மாறாக, தங்கள் மீது திணிக்கப்பட்ட அத்தனை இன்னல்களையும் தர்மத்தின் வழி நின்று பொறுமையோடும் அடங்காத விடாமுயற்சியோடும் எதிர்கொண்டார்கள். அவர்களின் அசைக்க முடியாத அந்தத் தர்ம நிஷ்டை, அவர்களுக்கு வந்த துன்பத்தையே தலைகுனியச் செய்தது.
இதே ஆழமான கருத்தைத்தான் நமது முப்பாட்டன் வள்ளுவனும் இரண்டே வரிகளில் உலகிற்குப் பரிசளித்தான்:
"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்"
துன்பம் தன்னைத் தேடி வரும்போது மனம் கலங்கி அஞ்சாதவர்கள், அந்தத் துன்பத்திற்கே கடும் துன்பத்தைக் கொடுத்து அதனை ஓட்டிவிடுவார்கள் என்பதே இதன் உள்ளர்த்தம்.
ஆகவே, அன்பானவர்களே, இன்று உங்களைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருப்பது போலத் தோன்றலாம்; வேதனைகள் உங்களை முடக்கிப் போடலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி—துன்பம் என்பது உங்களை அழிக்க வந்த முடிவல்ல, உங்களை ஆளுமைப்படுத்த வந்த உலைக்களம். கண்நீரைத் துடைத்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மனத்தின் ஆழத்திலிருந்து எழும் விசுவாசத்தையும், விடாமுயற்சியையும் ஆயுதங்களாக ஏந்துங்கள். உங்களைச் சோதிக்கும் அந்தத் துன்பத்திற்கே உங்கள் வெற்றியின் மூலமாகத் துன்பத்தைக் கொடுங்கள்.
வெற்றி என்பது எங்கோ தொலைவில் இல்லை; உங்கள் நிமிர்ந்து நிற்கும் துணிச்சலில்தான் அது காத்துக்கொண்டிருக்கிறது.


0 comments:
Post a Comment