2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு அவதானிப்புகளும் விமர்சனங்களும் திருப்திகரமான நிலையை வெளிப்படுத்தவில்லை. நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூகச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த வரவு–செலவுத் திட்டத்தை வெறுமனே நம்பிக்கையளிப்பதாக வர்ணித்துவிட முடியாது. ஏற்கனவே சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலைத் தாக்கம் மரக்கறி விலை உயர்வுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், அரசாங்கத்தின் ஒவ்வொரு குறைபாட்டுக்கும் காலநிலையைக் காரணமாகக் காட்டிவிட முடியாது.
விவசாயிகளும் பொதுமக்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், மருத்துவத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் மீதான தமது அதிருப்தியை நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த திங்கட்கிழமை (23) முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், அரச சுகாதாரச் சேவையில் நிலவும் நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான முரண்பாடுகளை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (Government Medical Officers’ Association – GMOA) குற்றச்சாட்டின்படி, மருத்துவ அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளவில்லை. அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டத்தில், முன்னர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட சில கொடுப்பனவுகளும் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என அச்சங்கம் தெரிவிக்கிறது.
மருத்துவ அதிகாரிகள் முன்வைக்கும் பிரதான கோரிக்கைகளில் ஒன்று, இடையூறு, கடமைக்குக் கிடைக்கும் தயார்நிலை மற்றும் போக்குவரத்துக்கான கொடுப்பனவு (Disturbance, Availability and Transport – DAT Allowance) தொடர்பானதாகும். தற்போது மருத்துவ அதிகாரிகளுக்கு மாதாந்தம் 70,000 ரூபா இக்கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. ஜனாதிபதி தனது வரவு–செலவுத் திட்ட உரையில் இதனை மேலும் 25,000 ரூபாவால் அதிகரித்து, மாதாந்தக் கொடுப்பனவை 95,000 ரூபாவாக உயர்த்த முன்மொழிந்துள்ளார்.
ஆனால், 2018ஆம் ஆண்டு முதல் 120,000 ரூபா DAT கொடுப்பனவு வழங்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது. எனவே, அந்த 120,000 ரூபா கொடுப்பனவில் எஞ்சியுள்ள 50,000 ரூபாவையும் ஆலோசகர் மருத்துவர்கள், நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தரநிலை மருத்துவ அதிகாரிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
மேலும், 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 2/99 இன் கீழ் மருத்துவ அதிகாரிகளையும் உள்ளடக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். இந்தச் சுற்றறிக்கையின் அடிப்படையில் முதலாம் தரப் பதவிகளில் பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு போக்குவரத்துக் கொடுப்பனவு பெறுவதற்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த 26 ஆண்டுகளாக மருத்துவ அதிகாரிகள் இந்தச் சுற்றறிக்கையின் பயன்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இவை புதிதாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அல்ல என்றும், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் என்றும் அச்சங்கம் வலியுறுத்துகிறது. நிறைவேற்று தரத்திலுள்ள ஏனைய அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் கொடுப்பனவுகளையும் மருத்துவ அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் வாதமாகும்.
இதற்கு மேலதிகமாக, அரச விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கான நிலுவைக் கொடுப்பனவுகள், மேலதிக கடமைக்கான கொடுப்பனவுகள், மருத்துவர்களைப் பாதிக்கும் வரி விதிப்பு முறைமையில் மாற்றங்கள் மற்றும் சம்பளத் திருத்தங்கள் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கைக்கெனத் தனியான மருத்துவ சேவையை (Sri Lanka Medical Service) உருவாக்குதல், மருத்துவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துதல், மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையைத் தீர்த்தல் மற்றும் அரச சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணி முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற விரிவான முன்மொழிவுகளையும் மருத்துவ அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
மருத்துவத் துறையினரின் இக்கோரிக்கைகள் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களின் பின்னணியில் உள்ள நியாயங்களை ஆராய்வது அவசியமானது. அதேவேளை, இத்தகைய வேலைநிறுத்தங்கள் அரச வைத்தியசாலைகளின் வழமையான சேவைகளைப் பாதிக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. இதன் நேரடியான பாதிப்பை எதிர்கொள்வது சாதாரண பொதுமக்களே.
குறிப்பாக, கொழும்புக்கு வெளியே உள்ள மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும், தனியார் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத அல்லது அதற்கான பொருளாதார வசதியற்ற மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலர் மருத்துவப் பரிசோதனைகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்து வைத்தியசாலைகளை அடைகின்றனர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்கனவே பெரும் சுமையாக உள்ளன. எனவே, அரச சுகாதாரச் சேவையையே அவர்கள் பெரிதும் நம்பியிருக்கின்றனர்.
கால் முறிவு அல்லது முதுகுத்தண்டுப் பிரச்சினை போன்ற கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தாலும், தனிப்பட்ட வாகனத்தில் பயணம் செய்வதற்கான வசதி இல்லாத காரணத்தால் பேருந்தில் பயணம் செய்து வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை பலருக்கு ஏற்படுகிறது. வாடகை வாகனத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அதற்கான பணத்தைத் திரட்டுவதற்காக நகைகள் அல்லது ஏனைய பெறுமதியான பொருட்களை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் குடும்பங்களும் உள்ளன. இத்தகைய மக்களுக்கு வைத்தியசாலை வேலைநிறுத்தம் என்பது ஒரு சாதாரண நிர்வாகப் பிரச்சினையல்ல; அது அவர்களின் உடல்நலம், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையையே பாதிக்கும் ஒரு நெருக்கடியாகும்.
மறுபுறத்தில், மருத்துவர்கள், விசேட மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையின் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தங்களுக்குரிய கொடுப்பனவுகளையும் நலன்களையும் பெறுவதற்கு நியாயமான உரிமை கொண்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அவர்கள் அதிக மன அழுத்தம் நிறைந்த சூழலில் பணியாற்றுகின்றனர். பல சந்தர்ப்பங்களில் போதிய உறக்கமின்றி, உணவுக்கான நேரமின்றி, நீண்ட காலம் குடும்பத்தினரிடமிருந்து விலகி கடமையாற்ற வேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது. முறையான தங்குமிட வசதிகள் இல்லாத இடங்களில் பணியாற்றும் மருத்துவர்களும் உள்ளனர். இத்தகைய சூழல்கள் சில மருத்துவர்கள் தனியார் மருத்துவப் பணிகளில் ஈடுபட வேண்டிய நிலையை உருவாக்குகின்றன.
எனினும், இத்தகைய நிர்வாகப் பிரச்சினைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் தொடர்வது இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பின் தரத்தையும் செயற்திறனையும் பாதிக்கிறது. மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மட்டும் தீர்வு காண்பது போதுமானதல்ல. நிர்வாக மற்றும் நிர்வாகமல்லாத நிலைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நியாயமான, சமமான மற்றும் வெளிப்படையான அணுகுமுறை உறுதிப்படுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை என்பது மருத்துவர்களை மட்டும் சார்ந்ததல்ல; தாதியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பிலேயே அதன் செயற்பாடு தங்கியுள்ளது.
இந்தப் பிரச்சினை மருத்துவர்களுக்கு அல்லது மருத்துவ அதிகாரிகளுக்கு மட்டுமே உரியதல்ல. இலங்கையின் ஒட்டுமொத்த அரச துறையிலும் காணப்படும் நிர்வாகக் குறைபாடுகளின் ஒரு வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும். அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகள், கொடுப்பனவு வேறுபாடுகள், பதவி உயர்வில் காணப்படும் தாமதங்கள், ஆளணி பற்றாக்குறை, தொழில் முன்னேற்ற வாய்ப்புகளின் குறைபாடு மற்றும் நிர்வாகத் தீர்மானங்களில் காணப்படும் தாமதங்கள் ஆகியவை நீண்டகாலமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக உள்ளன.
அரச சேவை என்பது நாட்டின் நிர்வாகத்தின் முதுகெலும்பாகும். மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியச் சேவைகளை வழங்குவதும், அரசாங்கத்தின் கொள்கைகளையும் அபிவிருத்தித் திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதும் அரச ஊழியர்களின் பங்களிப்பிலேயே தங்கியுள்ளது. எனவே, அரச ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணிப்பது அரச சேவையின் செயற்திறனையே பலவீனப்படுத்தும்.
அரசாங்கம் இப்பிரச்சினைகளை வெறுமனே தொழிற்சங்கப் போராட்டங்களாகக் கருதாமல், நீண்டகால அரச துறைச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அணுக வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நிலவும் கொடுப்பனவு முரண்பாடுகள், சேவை நிபந்தனைகள் மற்றும் ஆளணி முகாமைத்துவப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். நிதி வளங்களின் வரம்புகளையும் அரசாங்கத்தின் பொருளாதாரப் பொறுப்புகளையும் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் நியாயமான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அதேவேளை, தொழிற்சங்கங்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல், தெளிவான கால அட்டவணை மற்றும் வழங்கப்படும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புக்கூறல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, சுகாதாரச் சேவை போன்ற அத்தியாவசியத் துறைகளில் தொழிலாளர் உரிமைகளையும் பொதுமக்களின் சிகிச்சை பெறும் உரிமையையும் ஒரே நேரத்தில் பாதுகாக்கும் வகையிலான தீர்வுகள் அவசியமாகின்றன. மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; அதேவேளை, பொருளாதார வசதியற்ற நோயாளிகள் சிகிச்சையின்றி தவிக்கும் நிலையும் தவிர்க்கப்பட வேண்டும்.
இறுதியாக, அரச சேவையின் தரம் என்பது ஊழியர்களின் எண்ணிக்கையாலோ அல்லது ஒதுக்கப்படும் நிதியாலோ மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. நியாயமான பணிச்சூழல், திறமையான நிர்வாகம், சமமான வாய்ப்புகள், பொறுப்புணர்வு மற்றும் பொதுமக்களை மையப்படுத்திய சேவை வழங்கல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அது கட்டமைக்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செவுத் திட்டம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அதில் அறிவிக்கப்படும் வாக்குறுதிகள் நடைமுறையில் மக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் பயனளிக்க வேண்டும். அரச சேவையை மறுசீரமைப்பதற்கும், சுகாதாரத் துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் இப்போது தீர்மானமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.


0 comments:
Post a Comment