நாடொன்றின் பொருளாதார வலிமையை மதிப்பிடுவதற்கான முக்கிய அளவுகோல்களுள் ஒன்றாக ஏற்றுமதி வருமானம் விளங்குகின்றது. இறக்குமதிச் செலவுகளைச் சமன்செய்து, வெளிநாட்டு நாணய இருப்பை பலப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தித் துறைகளுக்கு உலகச் சந்தை அணுக்கத்தை (market access) ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த ஏற்றுமதித் துறை, இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிச் செயற்பாட்டில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. சுதந்திரம் பெற்று ஏழரை தசாப்தங்களைக் கடந்தும், இந்நாடு இன்னமும் வளர்முக நாடாகவே தொடர்வதற்கு, கடந்த கால ஆட்சியாளர்களது திட்டமிடலின்மையும் நிலையற்ற கொள்கை உருவாக்கமும் பெரிதும் காரணமாக அமைந்துள்ளன. இந்நிலையில், இற்றைக்கு நாடு கடந்து வரும் பொருளாதார மறுசீரமைப்புச் செயற்பாட்டில், ஏற்றுமதி வருமான அதிகரிப்பு குறிப்பிடத்தக்க திசைகாட்டியாக அமைந்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் (Export Development Board – EDB) தரவுகளின்படி, இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொடாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்தாண்டு இதேகாலப்பகுதியில் இவ்வருமானம் 11.52 பில்லியன் டொடாலராக இருந்தமையுடன் ஒப்பிடுகையில், இது 4.26 சதவீத வளர்ச்சியைக் குறிக்கின்றது. இவ்வளர்ச்சி பொருட்கள் மற்றும் சேவைகள் என்ற இரு பிரதான துறைகளிலும் பிரதிபலிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொருட்கள் ஏற்றுமதி 3.63 சதவீதத்தால் அதிகரித்து 9.41 பில்லியன் டொடாலராகவும், சேவைகள் ஏற்றுமதி 6.59 சதவீதம் அதிகரித்து 2.60 பில்லியன் டொடாலராகவும் பதிவாகியுள்ளது. சேவைகள் துறையின் ஒப்பீட்டளவில் அதிகமான வளர்ச்சி வீதம், நாட்டின் ஏற்றுமதி அடித்தளம் பாரம்பரிய பொருட் தொழில்களைத் தாண்டி பல்வகைப்படுத்தப்பட்டு வருவதற்கான ஆரம்ப அறிகுறியாகவே கருதப்பட வேண்டும்.
இந்த ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட மூலோபாய அணுகுமுறை (strategic approach) ஒன்று செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் வகுக்கப்பட்ட ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம், பாரம்பரிய ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதிகளைத் தாண்டி, உலகளாவிய தேவை கூடிய எட்டு புதிய துறைகளை முன்னுரிமைப்படுத்தியுள்ளது. மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள், கனிமச் சார்ந்த கைத்தொழில்கள், இறப்பர் தொழில்நுட்பங்கள் மற்றும் கப்பல் கட்டுமானம், நறுமணப் பொருட்கள், மின்சார-இலத்திரனியல் கூறுகள், பதப்படுத்தப்பட்ட உணவு-பானங்கள், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியன இத்துறைகளில் அடங்கும். இணைந்தவாறு, சுங்கத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் (digitalization), பிராந்திய அறிவுசார்-தளபாட மையமாக இலங்கையை மாற்றும் முதலீட்டு நடவடிக்கைகள், மற்றும் கிராமிய-நடுத்தர உற்பத்தியாளர்களை நேரடி ஏற்றுமதிச் சந்தையுடன் இணைக்கும் நிதி-தொழில்நுட்ப உதவித் திட்டங்களும் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றன. 2030ஆம் ஆண்டளவில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொடாலராக அதிகரிக்கும் இலக்கை நோக்கி இப்பல்வகைப்படுத்தல் மூலோபாயம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஏற்றுமதி வளர்ச்சித் தரவுகளை எதிர்கொள்கையில், மாறுபட்ட கருத்துக்களும் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு தரப்பினர், சதவீத அடிப்படையிலான வளர்ச்சி புள்ளிவிபரங்கள் உண்மையான கட்டமைப்பு மாற்றத்தை (structural transformation) பிரதிபலிக்கவில்லை எனவும், உலகச் சந்தைப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் அல்லது நாணய மதிப்பு மாற்றம் போன்ற வெளிக்காரணிகளால் இவ்வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் எனவும் வாதிடுகின்றனர். இவ்வாறான கவலை நியாயமானது என்றாலும், தரவுகள் வெறும் ஒரு துறையிலோ, ஒரு காலகட்டத்திலோ மட்டுப்படாமல், பொருட்கள் மற்றும் சேவைகள் எனும் இரு துறைகளிலும் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுவதால், இது தற்செயலான ஏற்ற இறக்கத்தை விட, ஒரு திட்டமிட்ட கொள்கை உந்துதலின் விளைவாகவே கருதப்பட வேண்டும் என்பது தரவுகள் தரும் சான்று.
மற்றொரு தரப்பினர், புதிய முன்னுரிமைத் துறைகள் அடையாளம் காணப்பட்டாலும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு (skills development), மற்றும் தொழில்நுட்ப மாற்று வளர்ச்சி இன்னமும் போதிய அளவு வேகமெடுக்கவில்லை என்றும் விமர்சிக்கின்றனர். இது ஓரளவு உண்மையாக இருக்கக்கூடும் என்றபோதும், சுங்கத் திணைக்கள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய உற்பத்தியாளர் இணைப்புத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பது, கொள்கை வகுப்பாளர்கள் இக்குறைபாட்டை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றது. மூன்றாவதாக, ஏற்றுமதி வளர்ச்சியின் பயன்கள் பெருநகர மையங்களிலேயே குவிந்துவிடலாம் என்ற அச்சமும் முன்வைக்கப்படுகின்றது. இக்கவலை குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் முக்கியத்துவம் பெறுகின்றது.
இக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, ஏற்றுமதி வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகள் ஊக்குவிக்கத்தக்கவையாக இருப்பினும், அதன் பலன்களை நாடு தழுவிய அளவில், குறிப்பாக பிராந்திய அளவில் சமமாகப் பரவச் செய்வதே அடுத்த கட்டச் சவாலாக அமைகின்றது. இதற்கு, மோட்டார் உதிரிப்பாகங்கள் மற்றும் இறப்பர் தொழில்நுட்பம் போன்ற புதிய முன்னுரிமைத் துறைகளுக்கான உற்பத்திக் கிளஸ்டர்களை (production clusters) மாவட்ட மட்டத்தில் ஏற்படுத்துவது ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வாக முன்வைக்கப்படலாம். வடக்கு-கிழக்கு மாவட்டங்களில் ஏற்கனவே S4IE போன்ற திறன் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சிறு-நடுத்தர தொழில் அடித்தளத்தை, இப்புதிய ஏற்றுமதித் துறைகளுடன் நேரடியாக இணைப்பதன் மூலம், பிராந்திய பங்களிப்பை உறுதிப்படுத்த முடியும். மேலும், ஏற்றுமதிச் சந்தைத் தகவல் (market intelligence) மற்றும் தர உறுதிப்பாட்டு (quality certification) சேவைகளை மாவட்ட செயலகங்கள் ஊடாக மையப்படுத்திய வலையமைப்பாக (decentralized network) விரிவுபடுத்துவதும் கருதத்தக்கது. அத்துடன், சேவைகள் ஏற்றுமதியில் காணப்படும் வலுவான வளர்ச்சியை மேலும் பயன்படுத்திக்கொள்ள, டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் இளைஞர் திறன் மேம்பாட்டை பிராந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக விரிவுபடுத்துவது நீண்டகால பலனை உறுதிசெய்யும்.
ஏற்றுமதி வருமான அதிகரிப்பு தொடர்பான தரவுகள், நாட்டின் பொருளாதாரம் சரியான திசையில் நகர்ந்து வருவதற்கான குறியீடாக அமைந்துள்ளது. ஆயினும், இவ்வளர்ச்சி நிலைபேறானதாக மாறுவதற்கு, மூலோபாயத் திட்டமிடலுடன் கூடிய தொடர்ச்சியான முகாமைத்துவமும், பிராந்திய அளவிலான சமவாய்ப்பு உறுதிப்பாடும் இன்றியமையாதவை. ஏற்றுமதித் துறையின் இன்றைய போக்கு, நாட்டின் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மைக்கான உறுதியான அடித்தளத்தை எடுத்துரைக்கின்றது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.



0 comments:
Post a Comment