ஆனால், தேசிய எல்லையைத் தாண்டி சர்வதேச அளவிலான ஒரு நிகழ்வை முன்னெடுக்கும் வாய்ப்பு 2017ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்தபோது, அந்த அனுபவத்தின் பரிமாணம் முற்றிலும் வேறொன்றாக இருந்தது. மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலங்கையைச் சேர்ந்த 25 துறைசார் அதிகாரிகளை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று பயிற்றுவிக்க வேண்டிய பொறுப்பு அது. இரண்டு வாரங்களுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சித் திட்டம், மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு கல்வி மற்றும் பயிற்சிப் பயணமாகத் தெரிந்தாலும், அதன் பின்னணியில் இருந்த உழைப்பும் ஒருங்கிணைப்பும் மிக விரிவானவை.
அந்த அதிகாரிகளைத் தங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்கள், நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்கான பல்கலைக்கழக நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகள், பயணத்துக்கான விசா நடைமுறைகள், தங்குமிடம், உணவு, பாதுகாப்பு என ஒவ்வொரு சிறிய விடயத்தையும் கவனமாக ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. இத்தனை அம்சங்களையும் ஒழுங்கமைத்து, வெற்றிகரமாகப் பயிற்சி அளித்து, இறுதியில் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்த அந்தச் செயற்பாடு, இன்றுவரை பசுமரத்தாணி போல் என் நினைவில் பதிந்திருக்கிறது.
சர்வதேச அளவில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல் என்பது சாதாரண ஒரு விடயம் அல்ல; அதற்குள் பல சவால்கள் புதைந்திருக்கின்றன. புரியாத இடம், புரியாத மொழி, தெரியாத வழி எனப் பல சிக்கல்களைக் கடந்து ஒரு நிகழ்வின் முழுப் பொறுப்பையும் தோளில் சுமக்கும்போது, அங்கே சென்றடைந்த பிறகும் ஒருங்கிணைப்பாளரால் முழுமையான மகிழ்ச்சியோடு இருக்க முடிவதில்லை. "கூத்தாடிக்குக் கூத்தாடி மகிழ்ச்சி இருக்காது" என்பதுபோல, பொறுப்பின் சுமை மனதின் ஓரத்தில் எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கும்.
ஆனால், ஒரு முரண்பாடான நிதர்சனம் அங்கே வெளிப்படும்: அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லாம் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எந்தவிதப் பொறுப்பும் அங்கே இருப்பதில்லை; அவர்கள் கற்றலிலும் பயணத்தின் அனுபவங்களிலும் தங்களை இலகுவாக ஒப்படைத்துக் கொள்ள முடியும். ஒருங்கிணைப்பாளனுக்கோ ஒவ்வொரு கணமும் முன்னெச்சரிக்கையும் கவனமும் தேவைப்படும்.
இருப்பினும், இந்தப் பயணத்தில் ஒரு நுட்பமான ஏக்கமும் இல்லாமல் இல்லை. மற்றவர்களுக்குப் பல அனுபவங்களை உருவாக்கிக் கொடுக்கும் அதே வேளையில், அந்த அனுபவங்களைத் தானும் நிம்மதியாக அனுபவிப்பதற்கான சந்தர்ப்பமும் நமக்குக் கிடைக்க வேண்டும் அல்லவா? பொறுப்புகளின் நடுவே நின்றுகொண்டு, அந்தத் தருணங்களின் சுவையை முழுமையாக உள்வாங்க முடியாமல் போகும் கணங்கள், ஒருங்கிணைப்பாளனின் வாழ்வில் தவிர்க்க முடியாத நிழல்களாகவே வருகின்றன.
ஆகவே, ஆற்றல்களையும் திறன்களையும் ஒருங்கிணைப்பதில் ஒருவன் தன்னை வளர்த்துக்கொள்ளும்போது, அது வெறும் தொழில்சார் திறமையாக மட்டும் நின்றுவிடுவதில்லை; மிகப்பெரிய ஆளுமையாகவே பார்க்கப்படுகிறது. சிக்கல்களுக்கு நடுவே தெளிவைத் தக்கவைத்து, பலரையும் வழிநடத்தி, அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைக்கும் அந்த வலிமை, மனித ஆளுமையின் உயரத்தைக் காட்டுகிறது. அத்தகைய ஆளுமை எனக்குள் இருப்பதைப் பல தருணங்களில் நான் நிரூபித்திருக்கிறேன், கண்டுபிடித்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்.


0 comments:
Post a Comment