ADS 468x60

23 March 2026

உரம் இல்லாத உலகம் — ஒரு உணவு அச்சுறுத்தல்

நண்பர்களே, உறவினர்களே,

உலகின் மிகப் புகழ்வாய்ந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவரான ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் ஒரு முறை சொன்னார்: "The long run is a misleading guide to current affairs. In the long run, we are all dead."நீண்ட காலத்தை நம்பி இன்றைய நெருக்கடியை அலட்சியப்படுத்தாதீர்கள், ஏனென்றால் நீண்ட காலத்தில் நாம் எல்லோரும் இறந்திருப்போம். இந்த வார்த்தைகள், இன்று, இந்த நிமிடம், நம் அனைவர் வாழ்க்கையிலும் ஒரு கூர்மையான எச்சரிக்கையாக ஒலிக்கின்றன.

உலக ஊடகங்கள் இரான் போரையும், ஹோர்முஸ் நீரிணையின் மூடல் பற்றியும் பேசுகின்றன. எண்ணெய் விலை ஏறுகிறது என்று தலைப்புச் செய்திகளில் அலற்றுகின்றன. உண்மைதான், நிச்சயமாக! உலகின் இருபது சதவிகிதம் எண்ணெய் — தினசரி கிட்டத்தட்ட இரண்டு கோடி பீப்பாய்கள் — இந்த ஒரே நீரிணை வழியாக செல்கிறது. ஆனால், இந்த செய்திகளுக்கு அப்பால், ஊடகங்கள் இன்னும் முழுமையாகப் பேசாத ஒரு மிகவும் ஆழமான நெருக்கடி மறைந்திருக்கிறது. அது எண்ணெய் அல்ல. அது உணவு. அது உரம். அது    நம் வயல்களின் உயிர்நாடி.

"வயிறு காலியானால் புத்தியும் காலியாகும்" என்று நம் முன்னோர் சொன்னார்கள். இன்று அந்த வார்த்தைகள் ஒரு தேசத்தின் எதிர்காலத்தையே வரையறுக்கின்றன.

பாரசீக வளைகுடா பகுதி — இரான், கத்தார், சவூதி அரேபியா, ஒமான் — இவை உலகின் மிக முக்கியமான நைட்ரஜன் உர ஏற்றுமதியாளர்கள். யூரியா மற்றும் அம்மோனியா ஏற்றுமதியில் இந்தப் பகுதி தனியாக முப்பது முதல் முப்பத்தைந்து சதவிகிதம் வரை பங்களிக்கிறது. ஆசிய நாடுகள் மட்டுமே வளைகுடா யூரியா ஏற்றுமதியில் முப்பத்தைந்து சதவிகிதத்தையும், கந்தக ஏற்றுமதியில் ஐம்பத்து மூன்று சதவிகிதத்தையும், அம்மோனியா ஏற்றுமதியில் அறுபத்து நான்கு சதவிகிதத்தையும் நம்பியிருக்கின்றன.

இன்று, ஹோர்முஸ் நீரிணையின் மூடல் காரணமாக, கடல் வழி போக்குவரத்து தடைப்பட்டிருக்கிறது. கத்தாரின் உலகின் மிகப் பெரிய யூரியா ஆலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா அதன் மூன்று யூரியா ஆலைகளின் உற்பத்தியைக் குறைத்திருக்கிறது. வங்கதேசம் அதன் ஐந்து உர ஆலைகளில் நான்கை மூடியிருக்கிறது. மாதந்தோறும் கிட்டத்தட்ட முப்பது முதல் நாற்பது லட்சம் டன் உர வர்த்தகம் தடைப்பட்டிருக்கிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். உரத்தின் விலை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்நூறு டொலராக இருந்தது, இன்று எழுநூறு டொலரை தாண்டியிருக்கிறது — ஒரு மெட்ரிக் டன்னுக்கு. 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இது மேலும் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் உயரலாம் என்கிறார்கள்.

நிச்சயமாக, இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இவை நம் விவசாயிகளின் கண்ணீர்.

இப்போது கேளுங்கள், நண்பர்களே. யுக்ரைன் போர் ஏற்கனவே உர உற்பத்தியை சிதைத்திருந்தது. உலகின் முன்னணி உர உற்பத்தியாளர்களான ரஷ்யாவும் யுக்ரைனும் போரில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் இப்போது, விரிவடைந்த மத்திய கிழக்கு மோதல், அந்த காயத்தில் உப்பை தூவுகிறது. "ஒரு துன்பம் போகும் முன்னே மற்றொரு துன்பம் வரும்" என்ற தமிழ் பழமொழிக்கு இதுவும் ஒரு சாட்சி.

இனி, இந்த நெருக்கடி ஏன் இவ்வளவு ஆழமானது என்று புரிந்துகொள்வோம். வேதியியல் உரம் என்பது பெட்ரோலிய தொழிற்சாலையின் நேரடி துணை விளைபொருள். LNG — திரவமாக்கிய இயற்கை எரிவாயு — நைட்ரஜன் உரம் தயாரிக்கும் அடிப்படை மூலப்பொருள். கத்தார் தனது LNG ஆலைகளை இழந்தபோது, அது யூரியா ஆலைகளையும் இழந்தது. இது ஒரு அட்டை மனை போல சரிகிறது — ஒன்று விழுந்தால், அனைத்தும் விழும்.

"ஒட்டக வடம் கிணற்றில் விழுந்தால் தூக்க முயலாதே" என்று சொல்வார்கள் — நீண்ட நாட்களாக நம்பியிருந்த ஒரு கட்டமைப்பு திடீரென முறிந்தால், எளிதில் சரிசெய்ய முடியாது. உர இறக்குமதி வழி மாற்றம் அவ்வளவு எளிதல்ல. உர கையிருப்பு எங்கும் இல்லை — எந்த நாட்டிலும் மூலோபாய கையிருப்பு கிடையாது. இது ஒரு வேடிக்கையான முரண்நகை: நாடுகள் எண்ணெய்க்கு மூலோபாய கையிருப்புகளை வைத்திருக்கின்றன, ஆனால் உரத்திற்கு அல்ல — அதுவும் உணவின் தாய் என்று அறியும்போது கூட.

இடைத்தரகர்களின் வேடிக்கையும் இங்கே இணைந்துகொள்கிறது. உர விலை உயரும்போது, முகாமைத்துவம் பலவீனமான நாடுகளில், உள்நாட்டு இடைத்தரகர்கள் விலையை மேலும் உயர்த்தி விவசாயிகளை சுரண்டுவார்கள். இது மட்டும் அல்ல — டீசல் விலை உயரும்போது, டிராக்டர் இயக்க செலவு கூடும், விளைபொருட்கள் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு கூடும், விளைவு: அரிசி, கோதுமை, மக்காச்சோளம் விலை ஏறும். "விலை ஏறும்" என்று சொல்வது எளிது — ஆனால் வீதியில் கூலி வேலை செய்யும் ஒரு குடும்பத்திற்கு அது என்னவென்று தெரியுமா? அது ஒரு வேளை சாப்பாட்டை குறைப்பது. அது குழந்தையை பாடசாலையிலிருந்து விலக்குவது. அது ஒரு தலைமுறையின் கனவை நொறுக்குவது.

இலங்கை 2020–21 ஆண்டுகளில் இதை கசப்பாக அனுபவித்தது. வேதியியல் உரத்தை ஒரே நாளில் நிறுத்திவிட்டு, இயற்கை உரத்திற்கு மாற முயற்சித்தபோது, விளைச்சல் சரிந்தது. தீர்வு அவ்வளவு எளிதானது அல்ல — பல தசாப்தங்களாக வேதியியல் உரத்திற்கு பழகிய மண்ணும் பயிர்களும், ஒரு சட்டத்தால் மாற மறுக்கின்றன. ஐரோப்பிய இஸ்ரேலும் கூட அதன் மேம்பட்ட விவசாய தொழில்நுட்பத்தால் — ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து விவசாயம் — இந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியவில்லை என்கிறார்கள். உண்மையிலேயே, அரிசி விளைவிக்க வேண்டுமென்றால், மண் வேண்டும், நீர் வேண்டும், உரம் வேண்டும் — இவை மாற்றமுடியாதவை.

இப்போது, நடுநிலையோடு சிந்திப்போம். இந்த நெருக்கடி நம்மை என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறது?

முதலில், குறுகிய காலத்தில், FAO — ஐக்கிய நாட்டின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு — ஏற்கனவே வழிகாட்டியிருக்கிறது: மாற்று வர்த்தக பாதைகளை உருவாக்குவது, சந்தை கண்காணிப்பை வலுப்படுத்துவது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவது, பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு இலக்கு நிவாரணம் அளிப்பது. இவற்றை நாம் வலயம் வாரியாக, பிரதேசம் வாரியாக அமுல்படுத்தல் வேண்டும். திணைக்களங்கள் இந்த நெருக்கடியில் தூங்கினால் மக்கள் பசியில் விழிப்படைவார்கள்.

நடுத்தர காலத்தில், நாம் ஒரு மீண்டெழும் விவசாயக் கட்டமைப்பை உருவாக்கவேண்டும். இதன் பொருள் என்னவென்றால் — உள்நாட்டு கம்போஸ்ட் உற்பத்தி, கடற்பாசி அடிப்படையிலான உரங்கள், மண் சுகாதாரத்தை மீட்டெடுக்கும் நடைமுறைகள். இவை ஒரே நாளில் வேதியியல் உரத்தை மாற்றாது, ஆனால் நீண்ட காலத்தில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கும்.  இ-கொமர்ஸ் தளங்கள் வழியாக விவசாயிகளுக்கு நேரடி சந்தை வாய்ப்புகள் வழங்கி, இடைத்தரகர்களை விலக்கவேண்டும். ஒண்லைன் சந்தைகளில் விளைபொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும்போது, அனைவருக்கும் நன்மை.

நீண்ட காலத்தில், சுரண்டல் சட்டங்கள் வேண்டும் — யாரும் நெருக்கடியில் இடைத்தரகர்களாக இலாபமடையாமல் இருக்க. பக்கவாட்டு பொருளாதாரம் — Bio-energy உற்பத்தி, கரும்பு எத்தனால் போன்றவை — சில எரிசக்தி கவலைகளை குறைக்கும். ஆனால் மிக முக்கியமாக, இலங்கை ஒரு தேசிய உணவுப் பாதுகாப்பு சபையை உருவாக்கி, அது சர்வதேச சந்தை நகர்வுகளுக்கு உடனடியாக வினையாற்றும் ஆற்றல் கொண்டிருக்கவேண்டும்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க, இராஜதந்திர முயற்சிகள் அவசியம். உலகின் அனைத்து தரப்பினரும் இதில் ஈடுபட வேண்டும். ஏனென்றால், இது ஒரு தேசத்தின் பிரச்சினை அல்ல — உணவு உலகளாவியது.

நண்பர்களே, ஒரு கடைசி சிந்தனை.

நெல்சன் மண்டேலா சொன்னார்: "It always seems impossible until it is done."ஒவ்வொரு பெரும் சவாலும் தோல்வியைப் போல் தெரியும், செய்யப்படும் வரை.

இன்று உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு அரசியல் பேச்சுத் தலைப்பல்ல. இது தேசிய பாதுகாப்பின் அடிப்படை தூண். ஒரு நாடு அதன் மக்களுக்கு உணவை உறுதி செய்யாவிட்டால், அனைத்தும் மண்ணாகும். நம் குழந்தைகள் பாடசாலையில் படிக்கிறார்களா என்று கேட்கிறோம் — ஆனால் அவர்கள் வெறும் வயிற்றுடன் பாடசாலை செல்கிறார்களா என்று கேட்கிறோமா? நாம் இப்போது செயல்படாவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

நன்றி. வணக்கம்.

0 comments:

Post a Comment