உலக வரைபடத்தில் எங்கோ நடக்கும் அதிகாரப் போட்டிகள், எமது வீட்டுச் சமையலறையில் எவ்வாறு கண்ணீரை வரவழைக்கின்றன என்பதை ஒரு கதையாக அல்ல, எமது கண்முன்னே நடக்கும் நிதர்சனமாகப் பகிர்ந்துகொள்ளவே ஒரு சக பயணியாக வந்திருக்கிறேன். ஆபிரிக்காவின் கறுப்புச் சூரியன், மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ஒருமுறை கூறுவார், "சுதந்திரம் என்பது வெறுமனே சங்கிலிகளை அறுத்துக்கொள்வதல்ல; அது மற்றவர்களின் உரிமைகளை மதித்து, அவர்களையும் வாழவைக்கும் வகையில் வாழ்வது" என்று. ஆனால், இன்றைய உலக அரசியலில் அந்த மதிப்பு எங்குமே இல்லை. உலக அரசியல் செயல்முறைகள் இன்று வெறும் சித்தாந்தங்களால் மட்டுமல்ல, நிலம், எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களின் உரிமையாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன. இன்று, இந்த வளங்களுக்குச் சர்வதேச உரிமையாளர்களை உருவாக்கும் ஏகாதிபத்தியச் செயல்முறை, ஒரு அப்பட்டமான போர் நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனுடைய இறுதி விளைவை, தொலைதூரக் கிராமங்களில் உள்ள, எந்தவொரு உலக அரசியலும் அறியாத அப்பாவி சாதாரண குடிமக்களாகிய நாமே ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
எனக்கு
ஒன்று மட்டும் மிகத் தெளிவாகப் புரிகிறது. எரிபொருள் என்பது வெறும் ஆற்றல் மூலமோ அல்லது இயந்திரங்களை
இயக்கும் திரவமோ அல்ல,
அது ஒரு தேசத்தின் இறையாண்மையையும் இருப்பையும்
தீர்மானிக்கும் மிகக் கொடிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. தங்கள் நாட்டில்
எரிபொருள் என்ற ஒற்றை வளம் இருப்பதன் காரணமாகவே, தங்கள் உயிரையும் பதவிகளையும் இழந்த உலகத் தலைவர்களைப்
பற்றிய இரத்தக் கறைகளுடனான தகவல்களால் அரசியல் வரலாறு நிரம்பிக் கிடக்கிறது.
எண்ணெய்க்காக எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் சாதாரண மக்களின் கண்ணீரில்தான்
முற்றுப்பெறுகின்றன.
உண்மையிலேயே, இன்று உலகளவில் எழுந்துள்ள இந்த எரிபொருள்
நெருக்கடி என்பது கப்பல்கள் வராததால் ஏற்பட்ட ஒரு தற்காலிகப் பற்றாக்குறை
மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த
உலகப் பொருளாதார அமைப்பின் வீழ்ச்சிக்கான ஒரு அபாயச் சங்கு; ஒரு முன்னோடியாகவே நாம்
அதனை அங்கீகரிக்க வேண்டும். சில சமயங்களில்,
அமைதியாக
இயங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு நாட்டில் உள்ள ஜனநாயக அரசாங்க அமைப்புகளை, வேண்டுமென்றே ஆட்டம் காணச் செய்து
அழிப்பதற்கான ஒரு சர்வதேசச் சதியாகவும் இது உருவெடுத்துள்ளது. ஐரோப்பா மற்றும்
மத்திய கிழக்கை மையமாகக் கொண்டு இன்று எரியும் போரின் தீப்பிழம்புகள், உலக வல்லரசுகளின் அதிகார வெறி மற்றும்
புவிசார் அரசியல் அதிகாரப் போராட்டத்தின் விளைவுகள் ஆகும். இந்த வல்லரசுகளின்
சதுரங்க விளையாட்டின் அதிர்வுகளை,
இன்று
கொழும்பில் உள்ள ஆடம்பர நுகர்வோரும் சரி,
தொலைதூரக்
கிராமத்தில் உள்ள சாதாரண விவசாயியும் சரி,
ஒன்றாகவே
உணரத் தொடங்கியுள்ளனர்.
மேற்கத்திய
நாடுகள் விதிக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கும், அதனை எதிர்க்கும் ரஷ்யா போன்ற ஏனைய
எரிசக்திப் பெருநிறுவனங்களின் எதிர்வினைகளுக்கும் மத்தியில், உலக எண்ணெய் சந்தை மிகக் கொடூரமாக
நிலையற்றதாகிவிட்டது. எரிசக்தி ஏகாதிபத்தியத்தை உருவாக்குவதற்காக வல்லரசுகளால்
செய்யப்படும் நியாயமற்ற இராணுவத் தலையீடுகளை,
இன்று
தட்டிக்கேட்கவும் யாருமில்லை, கண்டிக்கவும்
யாருமில்லை.
இந்த
நெருக்கடியை ஒரு ஆழமான அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இது சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையேயான
அதிகாரப் பகிர்வுப் போராட்டத்தின் ஒரு மோசமான பக்க விளைவு என்பது தெள்ளத்தெளிவாகப்
புரிகிறது. மேற்கத்திய நாடுகள் தங்களின் சுயநலத்திற்காகக் கையாளும் சில அரசியல்
உத்திகளால் எரிசக்தி விநியோகச் சங்கிலிகள் தடைபடும்போது, அது எம்மைப் போன்ற வளரும் நாடுகளின்
கழுத்தைத்தான் நேரடியாக நெரிக்கிறது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் எண்ணெயின்
விலை வெறும் ஒரு டொலர் அதிகரிக்கும்போது, அது ஒரு இலங்கை
விவசாயியின் உழவு இயந்திரத்திற்குத் தேவைப்படும் டீசலின் அளவையும், ஒரு ஏழை மீனவனின்
படகிற்குத் தேவைப்படும் மண்ணெண்ணெயின் அளவையும் நேரடியாகக் குறைத்துவிடுகிறது. இது ஒரு வகையான நவீன கால
அடிமைத்தனம். சக்திவாய்ந்தவர்களின் குளிரூட்டப்பட்ட அறைகளில் எடுக்கப்படும்
முடிவுகள், ஏழை நாடுகளின்
போக்குவரத்து மற்றும் விவசாயத்தின் உயிர்நாடியையே முடக்குகின்றன. சரியான முகாமைத்துவம் இல்லாவிட்டால்
ஒட்டுமொத்த அமைப்பும் கூடச் சரிந்துவிடக்கூடும்.
கிராமப்புறங்களில்
வாழும் எமது சாதாரண மக்களுக்கு, இந்தச் சர்வதேச
அரசியல் சூதாட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சிந்தும் வியர்வையின் பலனை, அறுவடையை நகரத்திற்குக் கொண்டு செல்ல ஒரு
வாகனம் இல்லாததற்கும், வாடகைக்கு
அமர்த்தும் வாகனத்திற்கு இரண்டு அல்லது மூன்று மடங்கு வாடகையைச் செலுத்த
வேண்டியிருப்பதற்கும் பின்னால் இந்த உலகளாவிய வல்லரசுகளின் நெருக்கடியே
மறைந்திருக்கிறது. எரிபொருள் விலை
உயர்வு என்பது வெறுமனே போக்குவரத்துச் செலவில் ஏற்படும் அதிகரிப்பு மட்டுமல்ல; அது சந்தையில் விற்கும்
ஒரு கட்டு மரக்கறிகள் முதல், எமது குழந்தையின் பாடசாலைப் பாடப்புத்தகம்
வரை எல்லாவற்றின் விலையையும் உயர்த்தும் ஒரு சங்கிலித் தொடர் விளைவாகும். இதற்கிடையில், இந்த நெருக்கடியைத் தங்களுக்குச் சாதகமாகப்
பயன்படுத்தி, சாதாரண மக்களின்
இரத்தத்தை உறிஞ்சும் இடைத்தரகர்கள் பெருக்கமும் எமது
பொருளாதாரத்தைச் சீரழிக்கிறது. இது குறித்து எமது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆழமான
சமூகப் புரிதல் உள்ளதா என்பதே இன்று என் முன்னால் நிற்கும் மிகப்பெரிய
கேள்வியாகும்.
நிச்சயமாக, உலகில் உள்ள பல முன்னேறிய நாடுகள் இந்தக்
கொடிய ஆபத்தை ஏற்கனவே உணர்ந்து, விழிப்படைந்து
மாற்று நடவடிக்கைகளை நாடியுள்ளன. சில ஐரோப்பிய நாடுகள் இலவசப் பொதுப் போக்குவரத்தை
வழங்குவதன் மூலம் தனியார் வாகனங்களின் பயன்பாட்டைத் திட்டமிட்டு ஊக்கமிழக்கச்
செய்கின்றன. மற்றவை வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்
மூலம் தேசிய எரிபொருள் சேமிப்புத் திட்டங்களைச் வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன.
இது ஏதோ காசை மிச்சப்படுத்தும் வெறும் சிக்கன நடவடிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைப்பின் சரிவைத் தடுப்பதற்காக
ஒரு தேசமாக அவர்கள் எடுக்கும் ஒரு கூட்டு உயிர்வாழும் உத்தியாகும். இலங்கை போன்ற
பொருளாதார ரீதியாகப் போராடும் நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் இன்னும் அவசியமானவை.
முழு அமைப்பையும் பராமரிக்கும் அதே வேளையில்,
நெருக்கடியை
நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த முறையாக அவை தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் அமுலாக்கம் எந்தவித சமரசமுமின்றி
முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆனால், எமது நாட்டில் உள்ள சூழ்நிலையை ஆராயும்போது, இத்தனை சர்வதேச நெருக்கடிகளுக்கு
மத்தியிலும் நாம் இன்னும் கடந்தகால ஆடம்பர நுகர்வு முறைகளையே குருட்டுத்தனமாகப்
பற்றிக்கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. எரிபொருள் என்பது ஒரு
வரையறுக்கப்பட்ட வளம் என்பதையும்,
அதனை
நாம் வீதியிலே புகையாக ஊதித் தள்ளும்போது நாட்டின் பெறுமதிமிக்க அந்நியச் செலாவணி
மிகக் கொடூரமாகக் கரைகிறது என்பதையும் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம்
இது. நகர்ப்புறத்துப் படித்த வகுப்பினரும் சரி, கிராமப்புறத்து மக்களும் சரி, இது தொடர்பாக ஒரே முடிவுக்கு வர வேண்டும். தனிப்பட்ட இன்பத்தை விட
தேசத்தின் உயிர்வாழ்வு மிகவும் முக்கியமானதாக இருக்கும் இக்காலத்தில், எரிபொருளைச் சேமிப்பது என்பது
ஒரு தேசபக்திச் செயலாகும்.
அல்லது, அது ஒவ்வொரு குடிமகனது தேசியப் பொறுப்பு
என்றே கூறலாம்.
உண்மையில், இந்த மாபெரும் நெருக்கடியை ஒரு
அரசாங்கத்தால் மட்டும் தனித்து நின்று சமாளிக்க முடியாது. இங்கு மக்களின்
பொறுப்புதான் முதன்மையானது. ஆடம்பரத்திற்காகத் தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக்
குறைத்து, பொதுப்
போக்குவரத்திற்குப் பழகுவது, தேவையற்ற
பயணங்களைத் தவிர்ப்பது, மற்றும் ஆற்றல்
சேமிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகியவை இன்றைய தவிர்க்க முடியாத
தேவைகளாகும். இந்த ஒட்டுமொத்த அமைப்பும் நம் கண்முன்னே சரிந்து விழுவதற்காகக்
காத்துக்கொண்டிருப்பதை விட, அதனைப்
பாதுகாப்பதில் எமது பொதுமக்கள் முன்னின்று வழிநடத்த வேண்டிய தீர்க்கமான தருணம்
இது.
இது
குறித்து எமது பாடசாலை மாணவர்களுக்கும், நாளைய தேசத்தைத் தாங்கப் போகும் இளைய
தலைமுறையினருக்கும் உரிய கல்வியைப் புகட்டுவது மிகவும் அவசியமானதாகும். இந்த
எரிபொருள் நெருக்கடி என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, அது நமது பொறுப்பற்ற வாழ்க்கை முறையை
உடனடியாக மாற்றும்படி நம்மை நிர்ப்பந்திக்கும் இயற்கை மற்றும் புவிசார் அரசியலின்
ஒரு கடுமையான அறிகுறியாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளை
நோக்கியும், சூரிய ஒளி, காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
ஆதாரங்களை நோக்கியும் நாம் நகர்வது என்பது இனி ஒரு மாற்று விருப்பத் தேர்வு அல்ல; அதுவே எமது தேசத்தின் எதிர்காலத்திற்கான ஒரே
உயிர்வாழும் வழியாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தொடர்ச்சியான கவனத்தைச்
செலுத்த வேண்டும்.
இந்த
விழிப்புணர்வுச் செய்தியை கிராமப்புற மக்களிடம் ஆழமாகக் கொண்டு சேர்ப்பதில் எமது
ஊடகங்களுக்கும், சமூகத்
தலைவர்களுக்கும், ஒவ்வொரு
உள்ளூராட்சிச் சபை பிரதிநிதிகளுக்கும்
பெரும் பொறுப்பு உள்ளது. இருளைப் பழிக்காமல் ஒரு அகல் விளக்கையாவது ஏற்றுவது போல, எண்ணெய் விலை உயர்வைப் பற்றிப் புகார்
கூறிக்கொண்டு வீதிகளில் நிற்பதை விட,
எம்மிடம்
கிடைக்கக்கூடிய வளங்களை எவ்வாறு முழுமையாகப் பயன்படுத்துவது என்பது குறித்து நாம்
விவாதிக்க வேண்டும். கூட்டுப் போக்குவரத்து அமைப்புகளை எவ்வாறு உருவாக்குவது, இணையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒண்லைன் மூலமாகவும் இ கொமர்ஸ் வர்த்தகங்கள் மூலமாகவும்
பயணங்களைக் குறைத்து வணிகத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து நாம்
சிந்திக்க வேண்டும். குறிப்பாக, கிராமத்து
விவசாய உற்பத்திகளை ஒரு புதிய வர்த்தக வலயம் ஊடாக நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பது பற்றி நாம்
செயலாற்ற வேண்டும். இந்த 'ஆற்றல் ஒழுக்கம்' கிராமப்புற எளிய சமூகத்திலிருந்து, நகரத்தில் உள்ள பிரம்மாண்டமான நிறுவனங்கள்
வரை பரவ வேண்டும். இத்தகைய ஒரு தேசியத் திட்டம் அவசரமாக எமது தேசத்திற்குத் தேவைப்படுகிறது.
மேற்கத்திய
நாடுகள் பின்பற்றும் இத்தகைய நவீன முறைகளை,
நமது
நாட்டின் கலாச்சாரத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு நிச்சயமாக மாற்றியமைக்க
முடியும். அறிஞர் தோமஸ் அவர்கள் கூறுவார், "ஒரு தேசத்தின் உண்மையான
பலம் அதன் இயற்கை வளங்களில் இல்லை,
அந்த
வளங்கள் அற்றுப்போகும் போது அந்த மக்கள் காட்டும் விவேகத்திலேயே
தங்கியிருக்கிறது" என்று. ஆம் உறவுகளே,
இந்தப்
பொருளாதாரப் பேரழிவும் எமது முடிவல்ல;
இது
எமது தேசத்தின் மீண்டெழு திறனை நிரூபிப்பதற்கான
ஒரு களமே! ஒன்றிணைவோம், வீண்
நுகர்வுகளைத் தவிர்ப்போம், மாற்று
ஆற்றல்களைக் கண்டறிவோம். உலக வல்லரசுகளின் சுயநல விளையாட்டுகளுக்குப் பலியாகாமல், எமது தேசத்தை ஒரு வலிமையான, தற்சார்பு கொண்ட தேசமாக உயர்த்துவோம்!
நன்றி!
வணக்கம்!
உங்கள்
அன்பின், சி.தணிகசீலன்


0 comments:
Post a Comment