ADS 468x60

23 March 2026

பேராசிரியர் சுரேஷ் உனது பதவிக்காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொற்காலமாக அமையட்டும்

மதிப்பிற்கும் மரியாதைக்குரிய சான்றோர்களே, கல்விப்புலத்து ஆளுமைகளே, அன்பு நண்பர்களே மற்றும் எனதருமை உறவுகளே!

மட்டக்களப்பின் மாண்புமிகு மண், கலைக்கும் இலக்கியத்திற்கும் மட்டுமல்ல, அறிவிற்கும் ஆளுமைக்கும் விளைநிலம் என்பதை காலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றது. ஈழத்து இலக்கிய வானில் அழியாத் தடம் பதித்த கவிஞர் நீலாவணன் பிறந்த மண்ணில் உதித்து, இன்று கல்விப் புலத்தில் சிகரங்களைத் தொட்டிருக்கும் ஒருவரைப் பற்றிப் பேசுவதிலும், வாழ்த்துவதிலும் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

வள்ளுவன் வழியில் கூறுவதானால்:

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்."

எந்தவொரு பொறுப்பையும், அதற்குரிய தகுதியும் ஆளுமையும் மிக்க ஒருவரிடம் ஒப்படைப்பதே ஒரு தலைமைத்துவத்தின் அழகு. அந்த வகையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் எனது அருமை நண்பன், உறவினன் பேராசிரியர் சுரேஷ் கணேஷ் [Prof. Suresh Kanesh] அவர்களுக்கு இந்த வாழ்த்துரையைச் சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கின்றேன். இப்பொறுப்பிற்கு இவரை விடவும் பொருத்தமான ஒருவரை எனது வாழ்நாளில் நான் கண்டதில்லை.

கற்சேனை பாலர் பாடசாலை புனரமைப்பின்போது

சோதனைகளைக் கடந்து சாதனைகளைச் சுவைத்த பயணம்

வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கை அல்ல. சுரேஷின் பயணம் என்பது பல சோதனைகளையும், சவால்களையும் தாண்டி வந்த ஒரு வீரம் செறிந்த பயணமாகும். உள்ளேயும் வெளியேயும் பல நெருக்கடிகளை முறியடித்து, தேற்றாத்தீவு மண்ணில் மணமுடித்து, கல்வியின் ஒவ்வொரு படிக்கட்டுகளையும் ஏறி இன்று இந்த உன்னத நிலையை அவர் எட்டியிருக்கின்றார்.

அவரது கல்வித் தகைமைகள் உலகத் தரத்திலானவை:

  • Bachelor of Economics (Hons) - கிழக்குப் பல்கலைக்கழகம்
  • Master of Economics - கொழும்புப் பல்கலைக்கழகம்
  • PhD - குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (QUT, அவுஸ்திரேலியா)
  • UK Professional Standard of Teaching and Learning Support in HE (FHEA, UK)

உலகிலேயே மிகச்சிறந்த கல்வித் தரத்தைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்று, சர்வதேச கற்பித்தல் தரச் சான்றிதழ்களைத் தன்வசம் வைத்திருக்கும் சுரேஷ், அந்த அத்தனை அறிவாற்றலையும் தனது தாய் மண்ணின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க முன்வந்திருப்பதுதான் இங்கு நாம் கொண்டாட வேண்டிய உன்னத விஷயம்.

நெல்சன் மண்டேலா அவர்களின் புகழ்பெற்ற வரிகள் இங்கு நினைவுகூரத்தக்கவை:

"கல்வி ஒன்றே உலகத்தை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகச் சக்திவாய்ந்த ஆயுதம்." (Education is the most powerful weapon which you can use to change the world.)

அந்த ஆயுதத்தை மிகச் சரியாகத் தன்வசம் வைத்திருப்பவர் எமது சுரேஷ்.

பல்கலைக்கழகத்தின் எல்லையைத் தாண்டிய சமூகப் பார்வை

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், பல்கலைக்கழகத்தில் சுரேஷைச் சந்தித்த போது நான் அவனிடம் உரிமையோடு ஒரு கருத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

"ஏன் இந்த பீடாதிபதிப் பொறுப்பை நீ எடுத்துச் செய்யக்கூடாது? பல்கலைக்கழகம் என்பது வெறுமனே காலத்தை ஓட்டுகின்ற, பாடத்திட்டங்களை மாத்திரம் கற்பிக்கின்ற ஒரு நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிடும் இடமாக இருந்துவிடக் கூடாது. இந்தச் சமூகம் முன்னேறுவதற்கான ஆற்றுப்படுத்தல், வழிகாட்டுதல் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார-சமூக அபிவிருத்திக்கான கொள்கை முன்மொழிவுகளை (Policy Proposals) அரசாங்கத்திற்கும் உலகிற்கும் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு களமாக அது மாற வேண்டும். அதற்கு உன்னைப் போன்ற ஆளுமைகளே தலைமை தாங்க வேண்டும்!"

சுரேஷிடம் இருக்கும் ஆளுமை, தலைமைத்துவம், தொடர்பாடல் திறன், குழு முகாமைத்துவம் என்பன வெறும் ஏட்டுக் கல்வி அல்ல; அவை களத்திலும், முடிவெடுக்கின்ற தளத்திலும் அவர் பெற்ற ஆழமான அனுபவங்களின் திரட்சி. அந்த அனுபவமே இன்று இறைவனின் அருளால் இந்த உயர் பதவியின் மூலம் முழுமை பெற்றுள்ளது.

இருநூறுவில் பாடசாலை உபகரணம் வழங்கிவைப்பு

சுரேஷ் எனக்கு வெறும் பேராசிரியர் மட்டுமல்ல, எனது அறைத்தோழன் (Roommate), உற்ற நண்பன். நாங்கள் இருவரும் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்ட காலங்கள் பசுமையானவை. காடுகளையும் மேடுகளையும் கடந்து, எமது தாயகக் குழந்தைகள் எங்கெல்லாம் கல்வியில் பின்தங்கி இருந்தார்களோ, அங்கெல்லாம் தேடித்தேடிச் சென்று கல்வித் திட்டங்களைச் செயற்படுத்திய ஒரு நல் உள்ளம் படைத்தவர் சுரேஷ். சமூகத்தை நேசிக்காத ஒருவனால் சிறந்த கல்வியாளனாக இருக்க முடியுமே தவிர, சிறந்த தலைவனாக இருக்க முடியாது. சுரேஷிடம் இந்த இரண்டும் கலந்திருப்பதுதான் எமது சமூகத்தின் அதிர்ஷ்டம்.

புதிய விடியலும் பழைய சவால்களும்

கடந்த காலங்களில் கலை கலாசார பீடம் எதிர்கொண்ட சில கசப்பான சம்பவங்களை நாம் மூடிமறைக்க முடியாது. பொருத்தமில்லாதவர்களின் கைகளில் தலைமைத்துவம் சென்றபோது, அது ஒரு சாபக்கேடாக மாறியதை நாம் வேதனையுடன் பார்த்திருக்கிறோம். ஆரோக்கியமான விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் களமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகத்தின் உள்விவகாரங்கள், சமூக வலைத்தளங்களில் தரம் தாழ்ந்த விமர்சனங்களாக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டன. ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இன்றி, புறம் பேசுவதிலும் மற்றவர்களை வீழ்த்துவதிலும் காலத்தைக் கடத்திய ஒரு பிற்போக்குத்தனமான கலாசாரம் அங்கு நிலவியது.

அறிஞர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கூறுவார்கள்:

"ஒரு சிறந்த தலைவன் என்பவன், தான் சாதிப்பதை விடவும் பிறரைச் சாதிக்க வைப்பதில் மகிழ்ச்சி காண்பவனாக இருக்க வேண்டும்."

தும்பங்கேணி விநாயகர் பாடசாலை மாணவர்கள் விழிப்பூட்டல்

அந்த வகையில், சுரேஸின் இந்த நியமனமானது கலை கலாசார பீடத்தை அத்தகைய தேக்க நிலையில் இருந்தும், சாபக்கேட்டில் இருந்தும் விடுவிக்கும் ஒரு புதிய விடியலாகவே நான் பார்க்கின்றேன். பிற்போக்குத்தனங்களைக் கடந்து, முற்போக்கான, தூய்மையான, நேர்மையான கல்விப் புலம் மீண்டும் அங்கே துளிர்விடும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு.

சமூகத்தின் எதிர்பார்ப்புகளும் எதிர்கால இலக்குகளும்

நண்பா சுரேஸ்! வாழ்த்துக்களுடன் சேர்த்து உனக்கு முன்னால் இருக்கும் பாரிய பொறுப்புகளையும் நாம் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இந்தச் சமூகம் உன்னிடமிருந்து சில முக்கிய நகர்வுகளை எதிர்பார்க்கின்றது:

  1. பல்கலைக்கழகம்-சமூக இடைவெளியைக் குறைத்தல்: பல்கலைக்கழகத்தின் அறிவார்ந்த சமூகம் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டு, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும்.
  2. பழைய மாணவர் ஒருங்கிணைப்பு: உலகம் முழுவதும் பரந்து வாழும் எமது கலை பீடத்தின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து, பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மாணவர் நலன் சார்ந்த நிதியங்களை உருவாக்க வேண்டும்.
  3. பிராந்திய மாநாடுகளும் கொள்கை முன்மொழிவுகளும்: எமது நாட்டின், குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் சமகாலப் பொருளாதார, சமூக சவால்களை எதிர்கொள்வதற்கான ஆய்வுகள் உனது தலைமையில் வெளிவர வேண்டும்.

இதுவரை காலம் இந்தச் சமூகம் எதிர்பார்த்து ஏமாந்து போன அத்தனை விடயங்களையும், உனது நிர்வாகத்தின் கீழ் நீ முறியடிப்பாய் என நான் உறுதியாக நம்புகின்றேன். உனது ஒவ்வொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கும் உனது தோழனாகவும், எமது மண்ணின் உறவாகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்.

மீண்டும் ஒருமுறை உனக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா! உனது பதவிக்காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொற்காலமாக அமையட்டும்!

 

0 comments:

Post a Comment