ADS 468x60

12 March 2026

அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் பட்டதாரிகளில் 50 சதவிகிதம் பேர் இந்த நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

 வணக்கம்! அன்பின் உறவுகளே!

அன்பின் உறவுகளே, கட்டுநாயக்க விமான நிலையத்தின் நெரிசலான புறப்பாடு முனையங்களில், ஒவ்வொரு நாளும் எத்தனையோ கனவுகள் கண்ணீரோடு விடைபெறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது வெறுமனே வேலை தேடிச் செல்லும் மனிதர்களின் பயணமல்ல; எமது தேசத்தின் அறிவுச் சொத்துக்களின் நிரந்தரமான தேய்மானம்!

சில தினங்களுக்கு முன் 'சிலோன் பப்ளிக் அஃபயர்ஸ்' (Ceylon Public Affairs) ஊடகத்தில் வெளிவந்த, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வறிக்கையொன்று எமது தேசத்தின் மனச்சாட்சியை உலுக்க வேண்டும். அந்த அறிக்கை எமக்கு ஓர் அபாயச் சங்கை மிக உரக்க ஊதியிருக்கிறது. இன்று எமது அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் பட்டதாரிகளில் 50 சதவிகிதம் பேர் இந்த நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிடப் பேரவலம் என்னவென்றால், எமது வாழ்வியலின் ஆணிவேர்களான மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற மிக முக்கியமான, நெருக்கடியான துறைகளில் இந்த வெளியேற்றம் 80 தொடக்கம் 90 சதவிகிதம் வரை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அவர்கள் ஒருபோதும் தமது தாய்மண்ணுக்குத் திரும்பப் போவதில்லை என்ற கசப்பான உண்மையையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இன்று எம் கண்முன்னே அரங்கேறும் மிகப்பெரிய வரலாற்று அவலம் என்னவென்றால், 24.5 சதவிகிதம் வறுமை விகிதத்தில் சிக்கித் தவிக்கும் எமது தாய்நாடு, உலகின் பணக்கார மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை மேலும் வளர்ப்பதற்கான ஒரு 'அபிவிருத்தி உதவித் திட்டத்தை' இலவசமாக நடத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான். ஆம் உறவுகளே! ஒவ்வொரு வருடமும் சுமார் 87 பில்லியன் ரூபாய்களை எமது அரசாங்கம் பல்கலைக்கழகக் கல்விக்காகச் செலவிடுகிறது. தேயிலைத் தோட்டங்களில் அட்டை கடித்து இரத்தம் சிந்தும் தொழிலாளியின் வியர்வையிலும், கொதிக்கும் வெயிலில் உழைக்கும் விவசாயியின் வரிப்பணத்திலும் உருவான இந்த இலவசக் கல்வியை உள்வாங்கித்தான், இங்கு உலகத்தரம் வாய்ந்த ஒரு டொக்டர் அல்லது பொறியியலாளர் உருவாகிறார். ஆனால், அவர் தனது சேவையை எமது மண்ணுக்கு வழங்காமல், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரச் சக்கரத்தைச் சுழற்றச் செல்கிறார். வறுமையின் பிடியில் மூச்சுத்திணறும் ஒரு தேசம், தனது ஆகச்சிறந்த மூளைகளை உலக வல்லரசுகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது.

வருடாந்தம் 42,000 பட்டதாரிகள் எமது தேசத்தில் பல்வேறு துறைகளில் உருவாக்கப்படுகிறார்கள். இவர்களில் கலைத்துறையில் 25 சதவிகிதம், முகாமைத்துவம் சார்ந்த துறைகளில் 20 சதவிகிதம், பொறியியலில் 13 சதவிகிதம், மருத்துவத்தில் 10 சதவிகிதம் எனப் பல மூளைசாலிகள் உருவாகிறார்கள். ஒரு கிராமத்துப் பாடசாலை ஒன்றின் உடைந்த கரும்பலகையில் ஆரம்பிக்கும் ஒரு மாணவனின் பயணம், இன்று உலக வல்லரசுகளின் ஆய்வுகூடங்களில் முடிகிறதே தவிர, எமது தேசத்தின் கட்டமைப்புக்களையோ, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையோ சீரமைக்கப் பயன்படுவதில்லை. படித்தவர்கள் பறக்கிறார்கள், பாமரர்கள் தவிக்கிறார்கள் என்பது போல், விஞ்ஞானம் சார்ந்த பட்டதாரிகள் கொத்துக் கொத்தாக வெளியேறுகிறார்கள். இந்தச் சதவிகிதம் வெறும் காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட எண்களல்ல; இவை எதிர்கால இலங்கைத் தீவின் மரண சாசனங்கள்!

இந்த மூளைசாலிகளின் வெளியேற்றத்திற்கு யார் காரணம்? இது ஏதோ ஒரு நாளில் நடந்த விபத்தல்ல. இது பல வருடங்களாக நாம் கட்டியெழுப்பிய பொருளாதார மற்றும் சமூக யதார்த்தங்களின் கொடூரமான விளைவு. எமது இளைஞர்கள் ஏன் தமது தாய் மண்ணை விட்டு ஓடுகிறார்கள்? மிகக் குறைந்த ஊதியம் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியன எமது இளைஞர்களின் கழுத்தை இறுக்கி நெரிக்கின்றன. அண்மையில் எமது நாடு சந்தித்த பாரிய பொருளாதார வீழ்ச்சி, வரலாற்றில் முதல் முறையாக நாம் எதிர்கொண்ட அரச கடன் மீளச் செலுத்தாமை (sovereign default), மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் நீண்டகாலத் தாக்கங்கள் எனத் தொடர்ச்சியான சவால்கள் எமது பட்டதாரிகளை நாட்டை விட்டு ஈவிரக்கமின்றித் துரத்துகின்றன.

பொருளாதார அறிஞர்கள் இதனையே 'நடுத்தர வருமானப் பொறி' (middle-income trap) என்று கூறுகிறார்கள். எமது நாடு இந்த நடுத்தர வருமானப் பொறிக்குள் சிக்கித் தவிக்கிறது. உலகளாவிய சந்தையோடு போட்டிபோடக்கூடிய, ஒரு கௌரவமான ஊதியத்தை வழங்குவதற்கு எமது அரச துறையோ அல்லது தனியார் துறையோ இன்று கடுமையான போராட்டத்தை எதிர்கொள்கிறது. அரச திணைக்களம் ஒன்றிலோ அல்லது ஒரு தனியார் நிறுவனத்தின் உயர்மட்டப் பதவியிலோ அமரும் ஓர் இளைஞனால், தனது எதிர்காலக் கனவுகளை இந்த மண்ணில் நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை இன்று முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் தோமஸ் சோவெல் (Thomas Sowell) மிக ஆழமாக ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார்: "பொருளாதாரத்தின் முதல் பாடம் வளங்களின் பற்றாக்குறை; ஆனால் அரசியலின் முதல் பாடமோ அந்தப் பொருளாதாரப் பாடத்தை வசதியாக மறந்துவிடுவதாகும்." எமது தலைமுறையும் எமது நிர்வாகக் கட்டமைப்புகளும், ஒரு கல்விச் சபை தொடக்கம் உயர்மட்ட அமைப்புகள் வரை இந்த மூளைசாலிகளின் பற்றாக்குறையை மிக அலட்சியமாகவே கையாண்டு வந்திருக்கின்றன. வளங்களின் முகாமைத்துவம் பற்றிப் பேசும் நாம், மனித வளத்தின் முகாமைத்துவத்தை முற்றாகக் கோட்டைவிட்டுவிட்டோம்.

ஒரு நோயாளியின் துடிப்பைக் கேட்டு மருந்து கொடுக்க எமது வைத்தியசாலையில் ஒரு டொக்டர் இல்லாதபோது, விவசாயம் செழிக்கப் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்க ஒரு நிபுணர் இல்லாதபோது, எமது உற்பத்திகளுக்குச் சரியான விலை கிடைக்காமல் இடைத்தரகர்கள் இலாபமடையும்போதுதான், இந்த மூளைசாலிகளின் வெளியேற்றம் எமது தேசத்திற்குச் செய்யும் எவ்வளவு பெரிய துரோகம் என்பதை நாம் உணர்கிறோம். இன்று எமது தேசத்தின் ஒவ்வொரு வீதி எங்கும் திறமைகள் அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளன. மூளைகளின் முடக்கம் எமது தேசத்தின் தேய்மானமாக மாறிக்கொண்டிருக்கிறது.

நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்கள் தனது தேசத்தைக் கட்டியெழுப்பும்போது ஒரு சத்தியத்தைக் கூறினார், "ஒரு நாட்டின் உண்மையான செல்வம் அதன் நிலத்தடியில் இல்லை, அதன் மக்களின் மூளைகளுக்குள்ளேயே இருக்கிறது" என்று. எமது நிலத்தடி வளங்களை நாம் வெளிநாடுகளுக்கு விற்பதைவிடக் கொடூரமானது, எமது மக்களின் மூளைகளை நாம் இலவசமாக ஏற்றுமதி செய்வது!

ஆனால் உறவுகளே, நாம் வீழ்ந்துவிட்டோம் என்று வெறும் குறைகளை மட்டும் பேசிக் கொண்டு இருளில் அழுதுகொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை. சவால்களை எதிர்கொள்ளும் திறன் எமது இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. நாம் இழந்துகொண்டிருக்கும் இந்த மூளைசாலிகளைத் தக்கவைக்கவும், எமது தேசத்தைக் கட்டியெழுப்பவும் நாம் சில தீர்க்கமான முடிவுகளை உறுதியாக எடுத்தாக வேண்டும்.

முதலாவதாக, எமது இளைஞர்கள் டொலர் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து, அந்த டொலர் வருமானத்தை எமது மண்ணுக்கே கொண்டுவர வேண்டும். ஒரு மாபெரும் தகவல் தொழில்நுட்ப வலயம் ஒன்றையோ அல்லது நவீன அறிவுசார் பொருளாதார வலயம் ஒன்றையோ நாம் மிகத் துரிதமாக நிறுவியாக வேண்டும். எமது இளைஞர்கள் இங்கிருந்தபடியே உலகத்தோடு ஒண்லைன் ஊடாகத் தொடர்புகொண்டு தமது சேவைகளை வழங்கக்கூடிய அதிவேகக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.

சுதந்திரமான இ கொமர்ஸ் (e-commerce) வர்த்தகங்களை ஊக்குவிப்பதன் மூலம், எந்தவொரு இடைத்தரகர்கள் இடையூறுமின்றி, எமது கிராமத்து உற்பத்திகளையும், சேவைகளையும் நேரடியாக உலகச் சந்தைக்குக் கொண்டுசெல்ல முடியும். இதற்கான சட்ட வரைபுகளைப் பேச்சளவில் மட்டும் வைத்திருக்காமல், சரியான முறையில் அமுலாக்கம் செய்ய வேண்டும். கொள்கைகளின் நேர்மையான அமுல்படுத்தல் மூலமாக மட்டுமே எமது இளைஞர்களின் நம்பிக்கையை நாம் மீட்டெடுக்க முடியும்.

இரண்டாவதாக, அரச மற்றும் தனியார் கட்டமைப்புகளில் வெளிப்படைத்தன்மையும், திறமைக்கான அங்கீகாரமும் உறுதிசெய்யப்பட வேண்டும். அரசியல் தலையீடுகள் அற்ற, முழுக்க முழுக்கத் தகுதியின் அடிப்படையில் இயங்கும் ஒரு சுதந்திரமான முகாமைத்துவம் ஒவ்வொரு துறையிலும் உருவாக்கப்பட வேண்டும்.

நாம் எத்தனையோ பெருந்துயரங்களைக் கடந்து வந்தவர்கள். சுனாமியின் பேரலைகளையும், முப்பது வருடப் போரின் வடுக்களையும், பொருளாதாரத்தின் இருண்ட காலங்களையும் தாண்டி உயிர்த்தெழுந்தவர்கள் நாம். எமது மரபணுவிலேயே ஆழமாகப் பதிந்துள்ள ஒரு மகத்தான குணம் உண்டு. அதுதான் எந்தவொரு வீழ்ச்சியிலிருந்தும் மீண்டும் உறுதியாக எழும் 'மீண்டெழு' திறன்! அந்த மீண்டெழு திறனைக் கொண்டு இந்த மூளைசாலிகளின் வெளியேற்றப் பிரச்சனையையும் சரியான திட்டமிடலால் நாம் வென்றெடுக்க முடியும்.

எமது நாட்டை விட்டுப் பறந்து சென்ற அறிவுப் பறவைகள் மீண்டும் எமது மரங்களில் வந்து அமரும்படியான ஒரு வசந்த காலத்தை நாம் உருவாக்குவோம். வறுமையிலும் செழுமையைத் தேடும் எமது மக்களின் எதிர்காலம், எமது கைகளில்தான் தங்கியிருக்கிறது. உங்களிடம் இருந்து விடைபெறும் முன்பு ஒன்றை மட்டும் எனது மனதின் ஆழத்திலிருந்து அழுத்தமாகக் கூறுகிறேன். எமது கல்வி வெறுமனே வெளிநாடுகளுக்குப் பணியாட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையல்ல; அது எமது தேசத்தைக் காக்கும் அறிவு ஆயுதக் கிடங்கு. அந்த அறிவாயுதங்களை எமது மண்ணின் பாதுகாப்பிற்கும், எமது மக்களின் முன்னேற்றத்திற்குமே நாம் பயன்படுத்துவோம். ஒரு புதிய, வளமான, மீண்டெழுந்த தேசத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம்!

நன்றி! வணக்கம்!

உங்கள் அன்பின், சி.தணிகசீலன்

0 comments:

Post a Comment