"ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்!" என்ற எம் மூதாதையரின் மிக ஆழமான, அதேநேரம் கூர்மையான தத்துவத்தோடு இன்றைய என் உரையாடலைத் தொடங்க விழைகின்றேன். ஒவ்வொரு நாளும் விடியும் போது, நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி இதுதான்: நீங்கள் மக்களை வெல்கிறீர்களா? இல்லை, மனிதர்களின் மனதைக் கொல்கிறீர்களா?
அன்பின் உறவுகளே, அண்மையில் எனது அவதானத்திற்கு வந்த, வீதியோர யதார்த்தங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது வெறும் வார்த்தைகளின் விளையாட்டு அல்ல; இது மனித உளவியலின், எமது சமூக முகாமைத்துவத்தின் மிக ஆழமான வெளிப்பாடு.
ஒரு சாதாரண டீக்கடை. அங்கே ஒரு சிறிய பலகையில் இப்படி எழுதப்பட்டிருந்தது: "இருவடை எடுத்து ஒருவடை என்பார், திருவோடு ஏந்தித் தெருவோடு போவார்." மாஸ்டர் சுடச்சுடத் தேனீர் போடுகின்ற அந்தச் சிறு பரபரப்பான இடைவெளியில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டைக் கபளீகரம் செய்துவிட்டு, ஒரு வடைக்கு மாத்திரம் காசு கொடுப்பவர்களைக் கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. இது கேட்பதற்குச் சுவாரஸ்யமாக இருக்கின்றதா? இருக்கலாம். ஆனால், நேர்மையாக ஒரு வடையை எடுத்துச் சாப்பிடும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், இந்த வாசகத்தைப் படிக்கும் போது மனதிற்குள் ஒருவித சங்கடமும், தர்மசங்கடமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தவறு செய்பவனைத் திருத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அந்த வார்த்தைகள், நேர்மையானவர்களையும் காயப்படுத்துகின்றன. இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி நான் கூறப்போகும் வரிகளைப் படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தை மிக நுட்பமாகக் கவனியுங்கள்.
ஒரு சாதாரண முச்சக்கர வண்டியின் (ஆட்டோ) சாரதி இருக்கையின் முதுகில் எழுதப்பட்டிருந்த வாசகம் இது: "உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கைச் செலவு." எவ்வளவு பெரிய வித்தியாசம்! இந்த வாசகத்தைப் படித்துவிட்டு இறங்கும் எந்தவொரு வாடிக்கையாளரும், பயண முடிவில் அந்தச் சாரதியிடம் ஒருபோதும் பேரம் பேச மாட்டார். மீற்றருக்கு மேல் ஒரு ஐந்து ரூபாய் மேலதிகமாகக் கேட்டாலும், முகம் சுளிக்காமல் கொடுப்பார். "காசைக் கொடு" என்று அதிகாரமாகக் கேட்பதற்கும், "இது என் வாழ்க்கைக்கான ஆதாரம்" எனத் தன் தேவையை உணர்த்துவதற்கும் இடையில் எத்தனை பெரிய வேறுபாடு இருக்கிறது! அதனால் தான் சொல்கிறேன் உறவுகளே, சொல்லும் விதத்தில் உலகையே வெல்லலாம்.
இதேபோல, ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தைப் பாருங்கள்: "மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்... மீனவன் சாப்பிட வேண்டாமா?" வாடிக்கையாளரின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் எவ்வளவு அழகான கேள்வி இது! இதையெல்லாம் விட, ஒரு பெரிய ஹோட்டலின் வாசலில் மாட்டியிருந்த பலகை சொல்கிறது: "வீட்டுச் சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்." இங்கே "எங்கள் கடையில் வந்து சாப்பிடுங்கள்" என்ற சுயநலம் இல்லை, மாறாக "உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள்" என்ற அக்கறை தொனிக்கிறது.
டீக்கடையின் வரிகளும், முச்சக்கர வண்டியில் எழுதப்பட்ட வரிகளும், மீன் கடையின் வாசகமும் அடிப்படையில் ஒரே விடயத்தைத் தான் சொல்கின்றன—அது, "என் பொருளை வாங்கு, எனக்கு நியாயமான பணத்தைக் கொடு" என்பதுதான். ஆனால், அந்த வார்த்தைகள் வெளிவரும் விதத்தில்தான் முழு வெற்றியும் தங்கியிருக்கின்றது. வார்த்தைகளில் இல்லை வெற்றி; அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது. சொல்ல வந்ததை அழகாகச் சொல்வது ஒரு மாபெரும் கலை.
எமது அரச கட்டமைப்பிற்குள் ஒரு சாதாரண திணைக்களம் எவ்வாறு இயங்குகிறது, அங்கு எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் எமது பொருளாதாரத்தின் சதவிகிதங்களை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதைச் சற்று ஆழமாகப் புரிந்து கொண்ட நிலையில், நான் ஒரு விடயத்தை உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். எமது அன்றாட வாழ்வில் எத்தனையோ அரச செயற்திட்டங்கள், பாரிய அபிவிருத்திப் பணிகள் அமுலாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், ஒரு திட்டத்தின் நன்மைகளை விட, அது மக்களிடம் சொல்லப்படும் விதமே அதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது. கோப்புகள், வரவு செலவுத் திட்டங்கள் என அனைத்தையும் விட, ஒரு சபை நடுவே அதிகாரிகளால் உதிர்க்கப்படும் வார்த்தைகளே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கின்றன அல்லது சிதறடிக்கின்றன. திட்டங்கள் காகிதங்களில் எவ்வளவு நேர்த்தியாக இருந்தாலும், முகாமைத்துவம் மிகச் சிறந்த முறையில் அமைந்திருந்தாலும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வார்த்தைகள் முள்ளாக இருந்தால், அந்தத் திட்டத்தின் முழுமையான அமுலாக்கம் தோல்வியில்தான் முடியும். ஒரு சிறந்த முகாமைத்துவம் என்பது வெறுமனே இலக்கங்களை நிர்வகிப்பது அல்ல; அது மனிதர்களின் உணர்வுகளை, வார்த்தைகளால் நிர்வகிப்பதாகும்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை சொன்னார், "ஒரு குடம் கசப்பான மருந்தை விட, ஒரு துளி தேன் அதிக ஈக்களை ஈர்க்கும்." இது எமது அன்றாட வாழ்விற்கும், அரச நிர்வாகத்திற்கும், வர்த்தகத்திற்கும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருந்தக்கூடிய ஒரு பேருண்மையாகும். நாம் நினைக்கும் விடயங்களை எல்லாம் அப்படியே வார்த்தைகளாகக் கொட்டிவிடாமல், அதைச் சற்றுச் செம்மைப்படுத்திப் பேசிப் பாருங்கள்.. வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும்.
இன்று எமது தேசம் ஒரு பாரிய பொருளாதாரச் சவாலுக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இந்த நிலையிலிருந்து ஒரு மீண்டெழு தேசமாக நாம் உருவெடுக்க வேண்டுமானால், எமது அணுகுமுறைகளில் காத்திரமான மாற்றங்கள் தேவை. இன்று உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. எமது இளைஞர்கள் ஒண்லைன் (Online) ஊடாகப் பல புதிய தொழில்களை உருவாக்குகிறார்கள். இ கொமர்ஸ் (E-commerce) தளங்களின் ஊடாக எமது உள்நாட்டு உற்பத்திகளை உலகச் சந்தைக்கு விற்று, நாட்டுக்குத் தேவையான டொலர் வருமானத்தைக் கொண்டுவரப் போராடுகிறார்கள். மறுபுறம், வயல்வெளிகளில் சேற்றுக்குள் இறங்கி வியர்வை சிந்தும் எமது விவசாயி, இடைத்தரகர்கள் இன்றித் தனது உற்பத்தியை நேரடியாகச் சந்தைப்படுத்தப் படாதபாடு படுகின்றார்.
இந்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைவதற்கு வெறும் மூலதனமும், தொழில்நுட்பமும் மாத்திரம் போதாது; வாடிக்கையாளர்களை ஈர்க்கும், அவர்களின் நம்பிக்கையை வெல்லும் பண்பான வார்த்தைகளும், தொடர்பாடல் திறனும் மிகவும் அவசியமாகும். நீங்கள் ஒரு சர்வதேசச் சந்தையில் உங்கள் பொருளை விற்கும்போது, உங்களின் வார்த்தைகளே உங்களின் முதலாவது தயாரிப்பு. உங்கள் முகாமைத்துவத் திறமையின் வெளிப்பாடே உங்கள் சொற்கள். கோபத்தில் பேசிவிடுவதும், அவசரத்தில் வார்த்தைகளை வீசிவிடுவதும் மிக எளிது. ஆனால் ஒரு நல்ல சொல், ஒரு தேசத்தின் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் சக்தி கொண்டது.
எமது வார்த்தைகளுக்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதற்கு, வரலாற்றில் மறக்க முடியாத ஒரு உதாரணத்தை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். உலகிற்கு ஒளியைக் கண்டுபிடித்துக் கொடுத்த மாபெரும் விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசனின் சிறுவயதுக் கதை இது. அவர் சிறுவனாக இருந்தபோது, பாடசாலை ஆசிரியர் ஒரு கடிதத்தைக் கொடுத்து, "இதை உன் தாயாரிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்" என்று கண்டிப்புடன் அனுப்பினார். சிறுவன் தோமஸ் ஓடிச் சென்று அந்தப் கடிதத்தைத் தன் தாயிடம் கொடுத்தான். அந்தத் தாய் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அவரது கண்கள் கலங்கின. சிறுவன் தோமஸ், "அம்மா கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது? ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டான்.
அந்தத் தாய் கண்ணீரைத் துடைத்துவிட்டு, தன் மகனின் தலையைக் கோதியபடியே சத்தமாகப் படித்தார்: "உங்கள் மகன் ஒரு அதிமேதாவியாக இருக்கிறான். அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு எங்கள் பாடசாலை பெரியதும் அல்ல, இங்குள்ள ஆசிரியர்களுக்கு அந்தளவுக்குத் திறமையும் இல்லை. அதனால் அவனுக்கு நீங்களே வீட்டில் பாடம் சொல்லிக் கொடுங்கள்."
பல வருடங்கள் உருண்டோடின. அந்தத் தாய் மரணித்துவிட்டார். சிறுவன் தோமஸ் அல்வா எடிசன் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக, ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராக உயர்ந்திருந்தார். ஒருநாள் தனது பழைய பெட்டியைத் தேடிய போது, அன்று ஆசிரியர் கொடுத்த அந்தக் கடிதம் அகப்பட்டது. அதை ஆவலோடு பிரித்துப் படித்த எடிசன், வாய்விட்டுப் கதறி அழுதார். காரணம், அந்த உண்மையான கடிதத்தில் பாடசாலை நிர்வாகம் இப்படி எழுதியிருந்தது: "உங்கள் மகன் ஒரு மூளை வளர்ச்சி குறைந்த முட்டாள். அவனால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அவனை இனிமேலும் எங்கள் பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது."
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் உறவுகளே! அன்று அந்தத் தாய், கடிதத்தில் இருந்தவாறே "நீ ஒரு முட்டாள், உன்னை பாடசாலையை விட்டுத் துரத்திவிட்டார்கள்" என்று சொல்லியிருந்தால், உலகம் ஒரு மாபெரும் விஞ்ஞானியை என்றென்றைக்குமாக இழந்திருக்கும். இருளிலேயே மூழ்கியிருக்கும். ஆனால், அந்தத் தாயின் கனிவான வார்த்தைகள், தன்னம்பிக்கை ஊட்டிய சொற்கள், பாடசாலையால் நிராகரிக்கப்பட்ட ஒரு முட்டாளைப் பேரறிஞனாக மாற்றியது. வார்த்தைகள் மனிதனை அழிக்கும் ஆயுதமாகவும் இருக்கலாம்; அவனை உருவாக்கும் உளியாகவும் இருக்கலாம். எமது சமூகத்தில் ஒவ்வொரு கல்வி வலயம் ஊடாகவும் சேவையாற்றும் ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமூகத் தலைவர்களும் இந்த உண்மையை மிக ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எமது பிள்ளைகளிடம், எமது சக மனிதர்களிடம் பேசும் வார்த்தைகள் அவர்களை ஊக்குவிக்கின்றதா அல்லது முடக்குகின்றதா? ஒரு வீதி விபத்தின் போதோ, அல்லது ஒரு சிறிய முரண்பாட்டின் போதோ, நாம் பயன்படுத்தும் ஒரு கனிவான சொல், பெரிய வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும். எமது வார்த்தைகளில் இருக்கும் நிதானமே எமது பண்பாட்டின் அடையாளம்.
எனவே, எனது அன்பான இளைய சமுதாயமே! உங்களை வழிநடத்தும் ஒருவனாக நான் கூறும் அனுபவப் பகிர்வு இதுதான்: உங்கள் நாக்கை ஒரு கூர்மையான வாளாகப் பயன்படுத்தாதீர்கள். அதை ஒரு மென்மையான தூரிகையாகப் பயன்படுத்துங்கள். அந்தத் தூரிகை கொண்டு மனித மனங்களில் அழகான ஓவியங்களைத் தீட்டுங்கள். உங்களின் ஒவ்வொரு சொல்லும் பிறருக்கு நம்பிக்கையை விதைக்கட்டும்.
ஒரு சிறந்த தலைவன் என்பவன், வாள் முனையில் உலகை ஆள்பவன் அல்ல; தன் சொல் முனையால் மக்களின் இதயங்களை ஆள்பவன். எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்! பண்பான சொற்களால் பகைமையையும் வெல்வோம்! கனிவான வார்த்தைகளால் மனித மனங்களை வென்று, எமது தேசத்தின் சுபீட்சத்தைக் கட்டியெழுப்புவோம்!
நன்றி.
உங்கள் அன்பின், சி.தணிகசீலன்


0 comments:
Post a Comment