இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகும் விடயம், நம் அனைவருடைய வாழ்க்கையிலும் தினசரி நடக்கக்கூடிய, ஆனால் நாம் பெரிதாகக் கவனிக்கத் தவறிய ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியது. அதுதான் "நாம் யாரோடு சேர்ந்து பயணிக்கிறோம்?" என்பது.
நாம் யாருடன் நேரத்தைச் செலவிடுகிறோம் என்பது நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இதை ஒரு அறிஞர் மிக அழகாகக் கூறுகிறார்:
நான்கு சிறந்த வியாபாரிகளோடு நீங்கள் தொடர்ந்து சேர்ந்திருந்தால், வியாபாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத நீங்களும் விரைவில் ஒரு சிறந்த வியாபாரியாக மாறிவிடுவீர்கள்.
நான்கு அரசியல்வாதிகளோடு நீங்கள் கூடினால், எப்படியும் நீங்களும் ஒரு அரசியல்வாதியாகி விடுவீர்கள்.
அதேபோல, நான்கு குடிகாரர்களோடு ஒருவன் சேர்ந்தால், காலப்போக்கில் அவனும் குடிகாரனாகி விடுவான்.
இதன் அர்த்தம் என்ன? நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் குணாதிசயங்களும், சிந்தனைகளுமே நமக்கும் தொற்றிக் கொள்கின்றன. உளவியல் ரீதியாகவும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நல்லவர்களுடைய கூட்டமும், அவர்களது நல்ல விவாதங்களும், ஒரு கெட்டவனைக் கூட நல்லவனாக மாற்றக்கூடிய அபாரமான சக்தி கொண்டவை. ஒருவருடைய இயல்பை, அவர் சேர்ந்திருக்கும் கூட்டமே தீர்மானிக்கிறது.
இதைத்தான் நம் முன்னோர்கள், "பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்" என்று மிக அழகாகக் கூறியுள்ளார்கள். இயல்பாக எவ்வித வாசனையும் இல்லாத நாரானது, மணக்கும் பூக்களோடு சேர்ந்து கட்டப்படும்போது, எப்படி அந்தப் பூக்களின் நறுமணத்தைப் பெற்று தானும் மணக்கிறதோ, அதுபோலவே நல்லவர்களோடு நாம் சேரும்போது நாமும் அந்த நற்பண்புகளைப் பெற்றுச் சிறப்படைகிறோம்.
இதையே நம் கிராமங்களில் உள்ள பெரியவர்கள் இன்னொரு பழமொழியாகவும் சொல்வார்கள்:
"பெரு மரத்தைச் சுற்றிய பல்லியும் உயிர் வாழும்"
ஆம்! ஒரு பெரிய, பலமான மரத்தைச் சார்ந்து வாழும் ஒரு சிறிய பல்லி கூட, அந்த மரத்தின் கம்பீரத்தால் எவ்வித ஆபத்துகளுமின்றிப் பாதுகாப்பாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடும். அதுபோலத்தான், சிறந்த மனிதர்களின் சேர்க்கை நம்மையும் வாழ்வில் பாதுகாப்பாக உயர்த்தும்.
ஆகவே நண்பர்களே, நாம் வாழும் இந்தக் குறுகிய காலக்கட்டத்தில் நமது நட்பு வட்டம் எப்படி இருக்க வேண்டும்?
நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களோடு நாம் சேர வேண்டும்.
ஆரோக்கியமான விஷயங்களையும், எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றியும் சிந்திக்கின்ற மனிதர்களோடு கைகோர்க்க வேண்டும்.
சமூகத்திற்குப் பயனுள்ள, ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பேசும் மனிதர்களோடு நமது கூட்டினை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட மனிதர்களோடு நாம் வைத்திருக்கும் நட்பு, தனிப்பட்ட முறையில் நமக்கு மட்டுமன்றி, நம்மைச் சார்ந்த சமூகத்திற்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
எனவே, அடுத்தவர்களின் குறைகளைப் பேசுவதையும், கடந்த காலத்தை நினைத்து நேரத்தை வீணடிப்பதையும் இன்றோடு கைவிடுவோம்.
நல்லவற்றை மட்டுமே பேசுவோம்! நல்லவற்றை மட்டுமே செவிமடுப்போம்!
வாய்ப்பளித்தமைக்கு நன்றி, வணக்கம்.



0 comments:
Post a Comment