கறுப்பு
ஜூலையின் கொடூரம்
தமிழர்களுக்கு
எதிராக 1956, 1958,
1977, 1981 ஆகிய ஆண்டுகளில் இனவாதிகளினதும், பேரின
ஆட்சியாளர்களினதும் ஆசிர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவர வன்முறைச்
சம்பவங்களின் தொடர்ச்சியாகவே, அடுத்த கட்டமாக, 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. ஜூலை 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின்
தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக
தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்தத் தமிழினப் படுகொலை
அரசினால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டது.
ஜூலை 23, 24, 25, 26 ஆகிய
தினங்களில் திட்டமிட்டுத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘ஜூலைக் கலவரம்’
எனப்படும் தமிழினப்படுகொலை, இலங்கைத் தமிழர்களின் மனங்களில்
ஆறாத ரணமாக, தீராத வலியாகக் கனன்று கொண்டிருக்கின்றது.
வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய
சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துக் தமிழர்களை அடையாளம்
கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சிங்களக்
கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட, வல்லுறவுக்கு
உள்ளாக்கப்பட்ட கொடூரங்களும், கடைகளில் 'தமிழனின் கறி கிடைக்கும்' எனப் பலகையில் எழுதி
வைத்துக் கேலி செய்த கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்துவிடும்.
தமிழ்
மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின்
அனைத்துத் தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள்,
தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள்
என்பன அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன.
வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள்,
நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்;
தீயிட்டுக் எரிக்கப்பட்டனர்.
இந்தத் தமிழினப்
படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் காடைக்கூட்டத்துக்கு சட்ட ரீதியான முகமூடியையும், இராணுவ, பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகால சட்டம்
பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி, கொலை செய்யப்பட்டவர்களை
மரண அல்லது நீதி விசாரணை இல்லாமல் தகனம் செய்ய அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள்
அமுல் செய்யப்பட்டன. தமிழினப் படுகொலைகளைத் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென
முன்கூட்டியே தயார் செய்யப்பட்டது என்பதற்குச் சான்றாக, யாழ்ப்பாணம்
திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பு கனத்தையில் தகனம்
செய்யப்படும் என அரசு அறிவித்தது. இது சிங்களக் காடையர்கள் தமிழினப் படுகொலைக்காக
அணிதிரள விடுக்கப்பட்ட அரசின் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாகவே இருந்தது.
ஜூலை 23ஆம் திகதியில் இருந்து
காடையர் கும்பல்களும், அவர்களுடன் இணைந்து தமிழினப்
படுகொலைகளில் ஈடுபட்ட பொலிஸாரும், இராணுவமும் ஒன்றரை நாட்கள்
சுதந்திரமாகத் தமிழர்களைத் தேடித் தேடிக் கொல்லவும், தமிழ்
பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்யவும், தமிழர் சொத்துக்களை
அடியோடு அழிக்கவும் இடமளித்ததன் பின்னர், ஜூலை 25ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கே ஜனாதிபதி கொழும்பில்
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியாகும்
விதத்தில் அன்று மாலை 6 மணிக்கே ஊரடங்குச் சட்டம்
பிறப்பிக்கப்பட்டது. முதலில் கொழும்பிலும், பின்னர் மேல்
மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், காடையர்கள் மாகாணங்களுக்குள் ஊடுருவித் தமது படுகொலைகளை முன்னெடுக்க
வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகவே இருந்தது. ஜூலை 26ஆம் திகதி
கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருநாகல், இரத்தினபுரி, பலாங்கொடை
முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராகத் தமது காடைத்தனங்களை
அரங்கேற்றினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது. இந்தக் கொடூரத்
தாக்குதல்கள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில்
எனத் தொடர்ந்து ஏழு நாட்களாக அரங்கேற்றப்பட்டன.
அதுமட்டுமன்றி, கொழும்பு வெலிக்கடைச்
சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை,
குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள், பொலிஸார், சிறைக்காவலர்களின் ஒத்துழைப்புடன்
சிங்களக் கைதிகள், காடையர்களினால் கண்கள் தோண்டப்பட்டும்,
கொடூரச் சித்திரவதைகள் செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தத் தமிழினப்படுகொலையால் தலைநகரில் உள்ள பாடசாலைகள், கோவில்கள்
தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கப்பலேற்றி
"உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்" எனக் கூறி யாழ்ப்பாணத்துக்கு
அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை
விட்டும் வெளியேறினர்.
மனிதாபிமானத்தின்
ஒளிக்கீற்று மற்றும் மாற்று கருத்துக்கள்
தமிழர்களை
அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த
மனிதாபிமானமுள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டமையும், பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம்
கொடுத்து உதவியமையும் இன்றும் தமிழர்களால் நன்றியுடன் நோக்கப்படுகின்றது. என்
தந்தையார் வெந்தோட்டையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு
அதிகம் சிங்கள மக்கள் வாழும் ஒரு பிரதேசமாக இருந்தபோதும், இந்தக்
கலவரத்தின் போது அங்குள்ள சிங்கள மக்கள் அவரை மிக பத்திரமாகப் பாதுகாத்து, கொழும்பு வரை கூட்டி வந்து, மட்டக்களப்பு
புகையிரதத்தில் ஏற்றி அனுப்பிய பின்பே அவர்கள் வீடு திரும்பியதாக அவர் சொல்லக்
கேட்டிருக்கிறேன். ஆகையால், அரசியல் நோக்கத்துக்காகச்
செய்யப்பட்ட விடயங்களில் சில பல அப்பாவி சிங்கள மக்களைச் சேர்த்து இந்தக் கொடூரச்
செயலுடன் கூறிவிட முடியாது. இருப்பினும், இது வாழ்க்கையில்
மறக்க முடியாத ஒரு கொடூரச் செயல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சிலர் இந்தக்
கலவரத்தை, இராணுவத்தினர் மீதான தாக்குதலின் உடனடிப் பிரதிபலிப்பாகக் கருதுகின்றனர்.
இருப்பினும், 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கு
அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பொது மக்கள் பாதிக்கப்பட்ட
சம்பவங்களுக்கு அளிக்கப்படவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. அந்தச் சம்பவங்கள்
பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன. அதனால் ஊடகங்களின் ஊடாக உண்மை
நிலைமையை உடனுக்குடன் அறிய முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அப்போது கொழும்பில்
இருந்த வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டார்கள். அவர்கள்
தங்களுடைய ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியில் வருவதற்கும் சில நாட்கள் அனுமதி
மறுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்ட வெளிநாட்டுச்
செய்தியாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவை அனைத்தும், இந்தக் கலவரம் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, மாறாக,
திட்டமிட்ட படுகொலை என்பதற்கான வலுவான ஆதாரங்கள்.
ஜூலை கலவரத்தின்
நீண்டகால விளைவுகள் மற்றும் தீர்வுக்கான பாதை
இந்த 1983 ஜூலைக் கலவரம் என்ற
பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையே பல வரலாறுகளை எழுதியது,
பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்
புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது.
தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்தனர். இந்த நாட்டிலே
சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்ற நிலைமையை ஜூலைக் கலவரம்
ஏற்படுத்தியது. அந்த நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது.
கறுப்பு
ஜூலையின் பின்னர், தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விடப் பிரதான
பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. 42 வருடங்களுக்கு முன்னர்
அப்போதைய அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இதுவரை நீதி
கிடைக்காதது போலவே, இலங்கையின் தேசியப் பிரச்சினையாக மாறிய
தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளும்
குறைவாகவே உள்ளன.
இனங்களுக்கு
இடையிலான நல்லிணக்கமும், புரிதலும் மேம்பட வேண்டுமானால், 1983 கறுப்பு
ஜூலையில் நடந்த கொடூரங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டு, எதிர்காலத்தில்
இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படுவதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
வரலாற்றின் கசப்பான பக்கங்களை நேர்மையுடன் எதிர்கொண்டு, உண்மைகளை
அங்கீகரிப்பது மூலமே நிரந்தர அமைதியை எட்ட முடியும். வெறும் நினைவுகூரல்கள்
மட்டும் போதாது; நீதியும், நல்லிணக்கமும்,
மறுசீரமைப்பும் என்பதே இன்றைய தேவையாகும். இந்த இனப்படுகொலையின் நினைவுகள், எதிர்காலத்தில்
இத்தகைய வன்முறைகள் நிகழாவண்ணம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு படிப்பினையாக அமைய
வேண்டும். இனவாதத்தை முற்றாக ஒழித்து, சகவாழ்வுக்கான
அத்திவாரத்தை அமைப்பது சிங்களத் தலைவர்களின் கைகளில் உள்ளது.
0 comments:
Post a Comment