இந்த ‘அயன் சென்சியா’ நகரம், ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து அமைப்புகள், ஸ்மார்ட் வீடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் எரிசக்தி என அனைத்திற்கும் AI-அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மையமாக, MAIA எனும் கையடக்க தொலைபேசி செயலி இருக்கும். இந்த செயலி, நகரத்தில் வசிப்பவர்களை இணைத்து, அனைத்து சேவைகளையும் ஒரே குடையின் கீழ் வழங்கும் ஒரு அமைப்பாகச் செயற்படும். பாரம்பரிய AI தளங்களைப் போலன்றி, இந்த செயலி பயனர்களைப் பற்றிய தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் தளமாகச் செயற்படும். எடுத்துக்காட்டாக, வருடத்தில் இரவு உணவிற்கு எங்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைப் பயனருக்குப் பரிந்துரைப்பதுடன், பயனரை குழப்பமடையச் செய்யாமல் தானாகவே முன்பதிவு செய்யும் என்றும் டேனியல் மரினெல்லி விளக்கினார். இயக்கம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கியதாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. AI இன் முழுத் திறனையும் பயன்படுத்தி, மனித வாழ்வை இலகுவாக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை இந்த நகரம் தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய முழுமையான செயற்கை நுண்ணறிவு சார்ந்த நகரங்கள், உலகெங்கிலும் உள்ள நகர திட்டமிடுபவர்களிடையே ஒரு உற்சாகமான விவாதத்தை எழுப்பியுள்ளன. இத்தகைய நகரங்கள் மனிதர்களுக்குச் சிறந்த வாழ்வியல் தரத்தை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. போக்குவரத்து நெரிசல் குறைதல், எரிசக்திச் சிக்கனம், மேம்பட்ட சுகாதார சேவைகள், தனிப்பயனாக்கப்பட்ட கல்வி வாய்ப்புகள் மற்றும் வினைத்திறனான பொதுச் சேவைகள் போன்ற எண்ணற்ற நன்மைகளை இத்திட்டங்கள் கொண்டுவரும் என்பது மறுக்க முடியாதது. AI மூலம் நகர முகாமைத்துவம் உகந்ததாக்கப்பட்டு, வளங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்படும், குற்றங்கள் குறைக்கப்படும், அவசரகாலச் சேவைகள் மேம்படுத்தப்படும். இந்தச் சாத்தியக்கூறுகள் மனிதகுலத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கான படிகள் என வாதிடலாம்.
எனினும், மறுபுறத்தில், இத்தகைய AI-மைய நகரங்கள் தொடர்பான பல முக்கியமான கேள்விகளும், கவலைகளும் எழுகின்றன. முதலாவதாக, இத்தகைய நகரங்களில் தனியுரிமை (Privacy) எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. MAIA செயலி பயனர்களின் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள், நடமாட்டம் போன்ற தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து முடிவுகளை எடுக்கும் என்பது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்காதா?
இந்தத் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படும், யார் அணுகுவார்கள், தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பன போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் தேவை. இரண்டாவதாக, AI அமைப்புகளில் உள்ள பிழைகள் அல்லது ஓரங்கட்டப்பட்ட தன்மை (Bias) பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக, ஒரு AI போக்குவரத்து அமைப்பு தவறுதலாக ஒரு குறிப்பிட்ட பாதையைத் தவிர்க்குமாறு பரிந்துரைத்தால், அது நகரத்தின் ஒரு பகுதிக்குத் தொடர்ச்சியான தாமதங்களை ஏற்படுத்தலாம். மூன்றாவதாக, மனிதத் தலையீடு குறைந்து, AI மீதான முழுமையான சார்புநிலை, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும்போது பெரும் சவால்களை உருவாக்கலாம்.
ஒரு பெரிய AI செயலி முடங்கிப் போனால், ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பித்துப் போகுமா? நான்காவதாக, இத்தகைய நகரங்கள் பெரும் முதலீட்டையும், அதிநவீன தொழில்நுட்பத்தையும் கோருவதால், அவை சமத்துவமின்மையை அதிகரிக்கலாம். இத்தகைய வசதிகளை அணுகக்கூடியவர்கள் யார்? குறைந்த வருமானம் கொண்டவர்கள் அல்லது தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் எவ்வாறு இத்தகைய நகரங்களுடன் ஒருங்கிணைவார்கள்? "டிஜிட்டல் பிளவு" மேலும் ஆழமாகலாம். இவையனைத்தும் வெறும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் மட்டுமல்ல, ஆழமான சமூக, அரசியல், மற்றும் அறநெறி சார்ந்த வினாக்களாகும்.
இந்தக் கவலைகளுக்குத் தீர்வு காணாமல், AI நகரங்கள் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறக்கூடும். எதிர்கால AI நகரத் திட்டங்கள் வெறும் தொழில்நுட்ப மேம்பாட்டை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மனிதநேய விழுமியங்கள் மற்றும் சமூக சமத்துவத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். தனியுரிமை பாதுகாப்புக்கு கடுமையான சட்டக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தரவுச் சேகரிப்பு மற்றும் பயன்பாடு வெளிப்படையானதாகவும், பயனர்களின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். AI அமைப்புகளை வடிவமைக்கும்போதும், நடைமுறைப்படுத்தும்போதும் பல்வேறு தரப்பு மக்களின் பங்கேற்பையும், பின்னூட்டங்களையும் பெற வேண்டும். இதன் மூலம், ஓரங்கட்டப்பட்ட தன்மையையும், பிழைகளையும் குறைக்கலாம். தொழில்நுட்பக் கோளாறுகளைச் சமாளிக்க காப்புப் பிரதிகள் மற்றும் மனிதத் தலையீட்டிற்கான தெளிவான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய நகரங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்ய, தொழில்நுட்பக் கல்வியையும், பயன்பாட்டுப் பயிற்சியையும் பரவலாக்க வேண்டும். அபுதாபி தனது அயன் சென்சியா திட்டத்தை உலகெங்கிலும் விரிவுபடுத்தும்போது, இந்த அறைகூவல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு சிறந்த முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு நகரங்கள், மனிதகுலத்தின் எதிர்கால வாழ்வியலை மறுவரையறை செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன. அபுதாபியின் அயன் சென்சியா போன்ற திட்டங்கள், இந்தத் தொழில்நுட்பத்தின் வரம்புகளை ஆராய்ந்து, புதிய சாத்தியக்கூறுகளைத் திறக்கின்றன. ஆனால், இந்த முன்னேற்றங்கள் வெறும் வசதிகளைப் பற்றி மட்டும் இருக்கக்கூடாது. அவை மனித நேயத்தையும், தனியுரிமையையும், சமூக சமத்துவத்தையும் மையமாகக் கொண்டு, பொறுப்புணர்வுடன் வடிவமைக்கப்பட வேண்டும். தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டுமே தவிர, மனிதகுலத்தை அடிமைப்படுத்தக்கூடாது. அயன் சென்சியா திட்டம், உலக AI தலைமையகமாக அபுதாபியை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த நகரம் மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான ஒரு மாதிரியாகவும், உலகிற்கு ஒரு பாடமாகவும் அமைய வேண்டுமானால், அதன் வடிவமைப்பாளர்கள் தொழில்நுட்பச் சிறப்பிற்கு அப்பால், ஆழமான அறநெறி சார்ந்த கேள்விகளுக்கும் விடைகாண வேண்டும்.
0 comments:
Post a Comment