ADS 468x60

10 July 2025

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்

 வணக்கம்! அன்பின் உறவுகளே!

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பது வெறும் வார்த்தையல்ல; அது உலகின் உயிர்நாடி. ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான விதை. அந்த விதையை நாம் எவ்வாறு வளர்க்கின்றோமோ, அவ்வாறே நாளைய உலகம் வடிவம் பெறும். இன்று நாம் இங்கு கூடியிருப்பது, குழந்தைகளின் ஆற்றலைப் புரிந்து, அவர்களை நேர்மறையாக வழிநடத்துவதற்கு ஒரு உறுதி மொழி எடுப்பதற்காகவே.

கற்பனை செய்யுங்கள்! ஒரு சிறு பையன், தாமஸ் அல்வா எடிசன். பாடசாலையில் ஆசிரியர் ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்து, “இதை உன் அம்மாவிடம் கொடு” என்கிறார். அந்தக் கடிதத்தில், “உன் மகன் புத்தியில்லாதவன், இனி பாடசாலைக்கு வரவேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், எடிசனின் அம்மா அதைப் படித்துவிட்டு, உனக்கு அபரிமிதமான அறிவு இருக்கிறது, நீ மற்றவர்களைவிட விசேடமானவன், வீட்டில் இருந்து படிக்கலாம்” என்று கூறினார். அந்த ஒரு நேர்மறையான வார்த்தை, அந்த ஒரு தட்டிக்கொடுப்பு, உலகை ஒளிரவைத்த ஒரு விஞ்ஞானியை உருவாக்கியது. இதுதான் நேர்மறை வழிகாட்டலின் வல்லமை.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு தாமஸ் எடிசனாக இருக்கலாம். அவர்களது தனித்துவம் தான் அவர்களின் அடையாளம். ஒரு குழந்தையை மற்றவரோடு ஒப்பிடுவது, ஒரு மலரை மற்றொரு மலரோடு ஒப்பிடுவதற்கு ஒப்பாகும். ரோஜாவை மல்லிகையோடு ஒப்பிட முடியுமா? இரண்டும் அழகு, ஆனால் வெவ்வேறு வகையில். அதுபோலவே, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான ஆற்றல் படைத்தவர். பரீட்சை மதிப்பெண்கள், அவர்களின் ஆற்றலை அளவிட முடியாது. பரீட்சை ஒரு கருவி, ஆனால் அது குழந்தையின் முழு மதிப்பையும் தீர்மானிக்க முடியாது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதை நினைவு கூர்வோம்: எல்லோரும் ஒரு மேதை. ஆனால் ஒரு மீனை மரம் ஏறும் திறனால் மதிப்பிட்டால், அது தன் வாழ்நாள் முழுவதும் தோல்வியாளராகவே உணரும்.” இதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு குழந்தை கணிதத்தில் பின்தங்கினாலும், அவர் இசையில், கலையில், அல்லது மனிதநேயத்தில் மேதையாக இருக்கலாம். அவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவற்றை வளர்க்க வேண்டியது நம் கடமை.

இன்று, சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. சில குழந்தைகள் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்று மகிழ்கின்றனர். சிலர் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறாமல் துவண்டிருக்கலாம். இந்தத் தருணத்தில், நாம் அவர்களைத் திட்டுவதற்குப் பதிலாக, தட்டிக்கொடுக்க வேண்டும்.நீ முடியும்” என்று உற்சாகப்படுத்த வேண்டும். ஒரு தோல்வி, அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யாது. மாறாக, அது ஒரு புதிய தொடக்கமாக இருக்கலாம்.

நம் சமூகத்தில், குழந்தைகளை மதிப்பிடுவதற்கு பரீட்சைகளை மட்டுமே அளவுகோலாக வைத்திருக்கிறோம். ஆனால், உலகப் புகழ் பெற்ற கல்வியாளர் கென் ரொபின்சன் கூறியது போல, கல்வியின் நோக்கம், குழந்தைகளை ஒரே மாதிரியாக உருவாக்குவது அல்ல; அவர்களின் தனித்துவத்தை வெளிக்கொணர்வதே.” இதை நாம் உணர்ந்து, ஒவ்வொரு குழந்தையையும் அவரவர் பாதையில் வழிநடத்த வேண்டும்.

அன்பின் பெற்றோரே, ஆசிரியர்களே, சமூகமே! குழந்தைகளை நம்புங்கள். அவர்களின் கனவுகளுக்கு இறக்கைக் கொடுங்கள். அவர்களைத் தட்டிக்கொடுத்து, “நீ முடியும்” என்று சொல்லுங்கள். ஒரு நேர்மறையான வார்த்தை, ஒரு சிறு உற்சாகம், ஒரு குழந்தையை உலகை மாற்றும் மேதையாக உருவாக்கும். இன்று நாம் விதைக்கும் நம்பிக்கை, நாளை உலகை ஒளிரவைக்கும்.

நன்றி!

 

0 comments:

Post a Comment