ADS 468x60

24 July 2025

சந்திரலிங்கம் எமக்கு சரித்திரலிங்கம்

இன்று, ஒரு ஆழ்ந்த துக்க செய்தியோடு உங்களை சந்திக்கவிருக்கின்றேன்.  எம்மைவிட்டுப் பிரிந்த ஒரு மாமனிதரின் மறைவு, எம்மனைவரையும் உலுக்கியுள்ளது.

இறையடி சேர்ந்த முருகப்பன் சந்திரலிங்கம் மைத்துணர், முன்னாள் வங்கி பிரதி முகாமையாளராகவும், தற்போதைய தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய பரிபாலன சபை செயலாளராகவும், பேனாச்சி சாகிய தலைவராகவும், இந்து இளைஞர் மன்ற நிரந்தர உறுப்பினராகவும், சிறந்த சேவையாளராகவும், தொண்டராகவும், சமூக சிந்தனையாளராகவும் – இவ்வாறு பல பரிணாமங்களில் மிளிர்ந்த அன்பாக, செல்லமாக தங்கராசா  என்று அழைக்கப்படும் எங்கள் உறவு ஒன்று காலமான செய்தி காதுகளில் வந்து பாய்ந்த பொழுது, அது தீப்பிழம்பாக என் இதயத்தை எரித்தது.

//ஒரு தலைவனை மக்கள் தெரிவு செய்தும் அந்த மக்களின் அபிலாசைகளை மீறி செயற்படுவோர் மத்தியில், மக்கள் சார்பாக அந்த மக்களின் நம்பிக்கக்குப் பொறுப்பாக தலைமைதாங்கி, அந்த மக்களின் எதிர்பார்ப்பை மீறாமல், அந்த மக்களின் உரிமைகளுக்காக அவர்களின் குரலாக சொந்த மக்களின் மனங்களில் இடம்பிடித்த "ஒரு சிறந்த தலைவர்” என்றால், இவரைவிட யாரையும் சொல்லிவிட முடியாது. "அண்ணன் பாத்துக்குவாண்டா! சித்தப்பன் பாத்துக்குவான்டா!" என்ற நம்பிக்கைக்குப் பாத்திரமாய் நடந்த மக்கள் தலைவன்.//

சென்ற வாரம் தான் அவரோடு தொலைபேசியில் அழைத்து உரையாடினேன். "கொஞ்சம் சுகம் இல்லை மச்சான், இப்பொழுது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கின்றேன்" என்று ஓரிரு நிமிடங்கள் மாத்திரம் பேசினார். அவரும் நானும் பேசுகின்ற பொழுது மணித்தியாளக் கணக்கில் பேசுவதுண்டு. ஆனால் அன்று மட்டும் வழமைக்கு மாறாக வெறும் ஓரிரு நிமிடங்களில் "சரி மச்சான், பிறகு பேசுகின்றேன்" என்று சொல்லி வைத்தார். இனிய எப்போது பேசுவாய்? தப்பாய் கணக்கு போட்டு விட்டேன். வளமையாக எனக்குத் தெரிந்தவரையில், இந்த கிளினிக், ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் செல்லுகின்ற ஒருவர் என்பதனால், அவ்வளவு சீரியஸாக நான் அதை எடுக்கவில்லை. அதனால், இந்த சோகமான செய்தி கேட்பதற்கு இன்னும் எனது மனம் தயாராக இல்லை.

முருகப்பன் சந்திரலிங்கம் மைத்துணர், வெறும் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் மக்கள் வங்கி பிரதி முகாமையாளராக இருந்து எண்ணற்ற குடும்பங்களுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சியவர். தேற்றாத்தீவு கொம்புசந்தி பிள்ளையார் ஆலய செயலாளராக, ஆன்மீகத்தையும் சமூகத்தையும் இணைத்தவர். தேற்றாத்தீவு பேனாச்சி குடி தலைவராக, பாரம்பரிய விழுமியங்களைக் காத்தவர். இந்து இளைஞர் மன்றத்தின் நிரந்தர உறுப்பினராக, இளைய தலைமுறைக்கு வழிகாட்டியவர். அவர் ஒரு சேவையாளர், ஒரு தொண்டர், ஒரு சமூக சிந்தனையாளர். அவரது வாழ்வு, பிறருக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெருவாழ்வு.

ஒரு தலைவனை மக்கள் தெரிவு செய்தும் அந்த மக்களின் அபிலாசைகளை மீறி செயற்படுவோர் மத்தியில், மக்கள் சார்பாக அந்த மக்களின் நம்பிக்கக்குப் பொறுப்பாக தலைமைதாங்கி, அந்த மக்களின் எதிர்பார்ப்பை மீறாமல், அந்த மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒரு சிறந்த தலைவர் என்றால், இவரைவிட யாரையும் சொல்லிவிட முடியாது. "அண்ணன் பாத்துக்குவாண்டா! சித்தப்பன பாத்துக்குவான்டா!" என்ற நம்பிக்கைக்குப் பாத்திரமாய் நடந்த மக்கள் தலைவன்.

வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா? 

வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா? 

கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா? 

கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா? 

கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா? 

கொடுப்பவன் எவனடா அவனே மனிதன்!

இந்த வரிகள், தங்கராசா மைத்துணர் போன்ற மனிதர்களைத் தான் அடையாளப்படுத்துகின்றன. அவர் வாழ்ந்த காலம் முக்கியமல்ல, அவர் வாழ்ந்த விதம் தான் முக்கியம் என்பதை அவர் நிரூபித்தார். அவரது ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சொல்லும், மக்கள் நலன் சார்ந்தே இருந்தது. ஒருமுறை மகாத்மா காந்தியடிகள் சொன்னார், "உங்களை நீங்கள் கண்டறிய சிறந்த வழி, மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உங்களை இழப்பதே." தங்கராசா மைத்துணர் இந்த வரிகளுக்கு ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தார்.

அவரது மறைவு, வாழ்வின் நிலையாமையை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளது. எப்போது, யாருக்கு, எப்படி மரணம் வரும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. "வாழ்க்கை என்பது நாம் திட்டமிடும்போது நடப்பதல்ல, அது நாம் வாழும்போது நடப்பது" என்பார் ஜான் லெனன். ஆம், வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் விலைமதிப்பற்றது.

நாம் இன்று ஒரு பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம். ஆனால், இந்த இழப்பு நமக்கு ஒரு பாடத்தையும் புகட்டுகிறது. சவால்கள் நிறைந்த இந்த உலகில், தங்கராசா மைத்துணர் போன்ற மனிதநேயமிக்க தலைவர்கள் மிக அவசியமானவர்கள். அவரது வாழ்வு, நாம் அனைவரும் நீதிக்காகவும், நடுநிலைமைக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு உந்துசக்தி. 

இன்று நாம் எதிர்நோக்கும் பல சவால்களுக்கு, அவரது சேவை மனப்பான்மையும், சமூக சிந்தனையும் ஒரு வழிகாட்டியாக அமையும். நாம் ஒவ்வொருவரும், நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும். "மனிதனின் உண்மையான செல்வம், அவன் உலகில் செய்யும் நன்மையே" என்ற நபிமொழிக்கேற்ப, நாம் அனைவரும் நற்பணிகளில் ஈடுபட வேண்டும்.

தங்கராசா மைத்துணர், தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்குச் சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்தார். அவரது மறைவு, தேற்றாத்தீவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிராத்திப்போம்.

எங்கள் தங்கராசா - நீ இனியாய் தூங்கராசா!


சந்திரலிங்கம் எமக்கு சரித்திரலிங்கம்! 

சாதனையதிகம் ஊரில் சாதித்தலிங்கம்! 

சாதிக்க நீயும் முன்னே வாதிட்டலிங்கம்! 

நீதிக்காக உன்னை என்றும் நேரிட்டலிங்கம்!


உறவுகள் வேணுமென்று ஊற்றெடுத்தலிங்கம்! 

ஊழியம் ஆலயத்தில் ஊற்றெடுத்தலிங்கம்! 

நேர்மையாய் பலசெயல் நிகழ்த்தியலிங்கம்! 

கூர்மையாய் கொடும்செயல் கொளுத்தியலிங்கம்!

மீண்டும் ஒருமுறை, அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். அவரது நினைவுகள் என்றும் நம்முள் வாழும். நன்றி.

0 comments:

Post a Comment