இந்தோனேசியாவில்
593க்கும் மேற்பட்ட
உயிரிழப்புகள், மலேசியாவில்
37,000க்கும்
அதிகமானோர் பாதிப்பு என, இந்தப்
பிராந்தியத்தின் மீது மரணத்தின் நிழலைப் பதித்துவிட்டுச் சென்றுள்ளது இந்த
முக்கூட்டுச் சீற்றம். இலங்கைத் தீவில் டிசம்பர் 8ஆம் திகதி நிலவரப்படி,
635க்கும் குறையாதோர் மரணித்துள்ளனர்,
192 பேரைக் காணவில்லை,
600,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 2.1 மில்லியன் மக்கள்
வெவ்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வெறும் கணக்கு அல்ல; இது, கடந்த இரண்டு
தசாப்தங்களாக உலகின் பல பகுதிகளைத் துரத்தி வரும் காட்டுத்தீ முதல் சூறாவளிகள்
வரையிலான தீவிர வானிலை நிகழ்வுகளின் சமீபத்திய, மிக மோசமான அத்தியாயமாகும். நாம் காலங்காலமாகச் சந்தேகித்து
வந்ததை, இப்போது
விஞ்ஞானபூர்வமான ஒரு புதிய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. பூகோள வெப்பமயமாதல்
காரணமாக, இலங்கை
மற்றும் மலாக்கா நீரிணைப் பிராந்தியத்தில் தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் அதிக
வீரியமடைந்து வருகின்றன என்பதே அந்த உண்மை.
இந்த
இக்கட்டான தருணத்தில் தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகள், எமது அடுத்த
தலைமுறையின் பாதுகாப்பை உறுதிசெய்யும். மத்திய மலைநாட்டில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்தபோது, அங்குள்ள கிராம
மக்கள் தமது கிராமங்களுக்குச் செல்லும் வீதிகளையும் பாலங்களையும்
மீளக்கட்டியெழுப்புமாறு கோரினர். அதற்கு ஜனாதிபதி அளித்த பதில் ஆழமான ஒரு கொள்கைத்
தீர்மானத்தைக் கொண்டிருந்தது. சில பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடத்திலேயே மீண்டும்
கட்டமைப்பதை விட, முழு
கிராமத்தையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதே சிறந்த வழி என்று அவர் கூறியபோது, கிராம மக்கள்
அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர். இந்தப் பதிலில் வெறும் நிவாரணம் வழங்குவதற்கான
தற்காலிக அணுகுமுறை இல்லை. மாறாக,
அனர்த்தத்தின் மூல காரணத்தை உணர்ந்து,
'மீண்டெழுதலை'
(Resilience) உறுதிசெய்யும் ஒரு நிரந்தரமான, துணிகரமான அரசியல்
முடிவு பொதிந்திருந்தது.
வருடாவருடம்
அழிவைச் சந்திக்கும் பகுதியில் மீண்டும் அரசாங்கத்தின் நிதியையும் மக்களின்
உயிர்களையும் பணயம் வைக்க முடியாது என்ற உண்மையை இந்தத் தலைமைத்துவம்
உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. எனினும்,
இந்தக் கொள்கை முடிவை நாடு முழுவதும்,
அரசியல் எதிர்ப்புகள் மற்றும் சமூகப் பதட்டங்கள் இன்றி நடைமுறைப்படுத்துவதே
அரசாங்கத்தின் முன் உள்ள மிக முக்கியமான சவாலாகும்.
இந்த
அனர்த்தத்தின் மனிதாபிமானக் கோணம்,
நாம் இதுவரை கடந்து வந்த எல்லா துயரங்களின் சுருக்கமாகவும் அமைந்துள்ளது.
டிசம்பர் 8ஆம் திகதி
நிலவரப்படி, சுமார் 600,000 குடும்பங்கள் தமது
கூரைகளை இழந்துள்ளனர். 2.1 மில்லியன்
மக்களின் அன்றாட வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. 2004 சுனாமிக்குப் பின் அதிகபட்ச உயிரிழப்புகள் என்ற கசப்பான
வரலாற்றுப் பதிவுக்குப் பின்னால்,
நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த தாய்மார்களின் ஓலங்களும், வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்ட விவசாயிகளின் வியர்வையும், வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களின் வெறுமையும்
நிறைந்திருக்கிறது. உலக வானிலை பங்களிப்பு அறிக்கை (WWAP) சுட்டிக்காட்டியபடி, இலங்கையிலும்
இந்தோனேசியாவிலும் ஏற்பட்ட இந்தத் தீவிர சேதத்திற்கு ஒரு காரணம், தாழ்நில வெள்ளச்
சமவெளிகள் மற்றும் டெல்டாக்களில் அதிக மக்கள் செறிவடைந்து வாழ்வதும், அடிக்கடி வெள்ளம்
வரும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்ததுமே ஆகும். அதாவது, இந்தோனேசியா முதல்
இலங்கை வரை, புவி
வெப்பமடைதலின் தீவிரம் என்பது,
மனிதனின் முறையற்ற நகர்ப்புறமயமாக்கல் மற்றும் வாழ்விடத் திட்டமிடல் என்ற தவறுகளுடன்
கைகோர்த்துள்ளது. இந்தத் துயரத்தின் பின்னால், நமது அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட உயிர்களின் ஓசைகள் ஓயாமல்
ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பொருளாதார
ரீதியாக, இந்த
அனர்த்தம் ஒரு குறுகிய கால அதிர்வை விட,
எமது எதிர்கால நிதி நிலைமைக்கே விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும். உலக வானிலை
பங்களிப்பு அறிக்கையின் தரவுகள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. பூகோள சராசரி
மேற்பரப்பு வெப்பநிலை 1.3°C
அதிகரித்துள்ளதன் விளைவாக,
இலங்கையில் ஐந்து நாள் தொடர் மழைப்பொழிவு நிகழ்வுகள் இப்போது சுமார் 28% முதல் 160% வரை அதிக
வீரியத்துடன்
இருக்கின்றன. அனர்த்தத்திற்கான எரிபொருளாக வட இந்தியப் பெருங்கடலின் கடல்
மேற்பரப்பு வெப்பநிலை 1991-2020
சராசரியை விட 0.2°C அதிகமாக
காணப்பட்டது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த அதிக வெப்பநிலை, சூறாவளியின்
வளர்ச்சிக்கும், அதிக
மழைவீழ்ச்சியை ஏற்படுத்தும் ஆவியாதலுக்கும் கூடுதல் சக்தியை வழங்குகிறது. காலநிலை
மாற்றம் ஒரு அச்சுறுத்தல் மட்டுமல்ல;
அது எமது நாட்டின் கடன் சுமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடியோடு
தகர்க்கும் ஒரு நிரந்தரமான அனர்த்த நிதி நெருக்கடியாகும். அதிக மக்கள் செறிவும், பெறுமதியான
சொத்துக்களும் வெள்ளம் வரும் பாதைகளில் குவிந்திருப்பது, எதிர்காலத்தில்
இதேபோன்ற பல மடங்கு அதிக பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தும் அபாயத்தை
அதிகரிக்கிறது.
இந்தச்
சூறாவளியால் ஏற்பட்ட உட்கட்டமைப்புச் சேதம் என்பது வெறும் வீதிகள் மற்றும்
பாலங்களின் சிதைவு மட்டுமல்ல;
அது எமது அனர்த்த
எச்சரிக்கை அமைப்பின் கட்டமைப்பு ரீதியான தோல்விகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கையிலும் இந்தோனேசியாவிலும் முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட
போதிலும், தகவல்
மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப (ICT)
உட்கட்டமைப்பின் தோல்விகளால் அவை சரியான மக்களைச் சென்றடையவில்லை.
எச்சரிக்கையைப் பெற்றவர்கள்கூட,
வெள்ளத்தின் வீரியத்தை ஊகிக்க முடியாததால் பெரும் இழப்புகளைச்
சந்தித்துள்ளனர். மொழித் தடைகள்,
வெள்ளம் வரும் நேரம் மற்றும் சில சமூகங்களின் தொலைதூர இருப்பிடம் ஆகியவை
கூடுதல் சவால்களை அளித்துள்ளன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2004 சுனாமிக்குப் பிறகு
உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட எஸ்.எம்.எஸ். (SMS) அமைப்பு இன்னமும்
நடைமுறையில் உள்ளதா என்பதில் தெளிவு இல்லை. இந்த நிறுவன ரீதியான இடைவெளிகள், மக்களைத் தக்க
நேரத்தில் காப்பாற்ற முடியாமல் செய்துள்ளன.
இந்த
விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வைச் சீரியஸாக எடுத்துக்கொண்டு, எமது நாட்டின்
எதிர்காலத்தை வரையறுக்கக் கூடிய அவசரகாலச் சீர்திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக
அமுல்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தின் பின்னணியில், எமது தேசியக் கொள்கைகள்
கூர்மையாக்கப்பட வேண்டும். முதலாவதாக,
2030 ஆம் ஆண்டிற்குள் தேசிய மின்சாரத் தேவையில் 80 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
மூலம் பூர்த்தி
செய்ய வேண்டும். இது முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 70 சதவீத இலக்கிலிருந்து ஒரு துணிச்சலான 10 சதவீத
அதிகரிப்பாகும். இரண்டாவதாக,
நிலக்கரி மற்றும் அனல் மின் நிலையங்களை 2035
ஆம் ஆண்டளவில் கட்டாயம் நிறுத்திவிட வேண்டும். மூன்றாவதாக, மின்சார
ஸ்கூட்டர்கள்/மோட்டார் சைக்கிள்கள்,
முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் வாகனங்களின் இறக்குமதிக்கும் உள்ளூர்
உற்பத்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன், இந்த வாகன
உரிமையாளர்கள் முடிந்தவரை
சூரிய சக்தியைப் பயன்படுத்தி சார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும்
விதிக்க வேண்டும். மேலும்,
2035ஆம் ஆண்டிற்குப் பின் புதிய உள் எரி என்ஜின் (ICE) வாகனப் பதிவுகளை நிறுத்தும் காலக்கெடுவில் எவ்வித மாற்றமும்
இருக்கக் கூடாது. 2050 'நெட் ஜீரோ' (Net Zero) இலக்குகளை
அடைவதற்கு, கிரீன்ஹவுஸ்
வாயுக்களை வெளியிடும் அனைத்து ஆதாரங்களையும் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இந்தச்
சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. சேதமடைந்த
உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதில்,
நாம் கடந்த வாரம் வலியுறுத்திய
"Built Back
Better" என்ற
கொள்கையைப் பின்பற்றுவது அவசியம். அதாவது,
எதிர்கால அனர்த்தங்களால் பாதிக்கப்படக்கூடிய அதே இடங்களில் சில உட்கட்டமைப்பு
வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவது சாத்தியமில்லை. இதைப் பூர்த்தி செய்ய, தனியார் துறையினர், தன்னார்வ
நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம். குறிப்பாக, ஊழல் மற்றும்
ஏமாற்றங்களால் நம்பிக்கை இழந்துள்ள புலம்பெயர் தமிழர்கள், இந்தச்
சீர்திருத்தங்களின்
வெளிப்படைத்தன்மையைக்
கண்டு, மீண்டும்
தமது நிபுணத்துவத்தையும், நிதியையும்
தேசத்தைக் கட்டியெழுப்ப வழங்க முன்வர வேண்டும். காலநிலை மாற்றம் இனம், மதம், அரசியல்
வேறுபாடுகளைக் கருத்தில் கொள்வதில்லை. எனவே,
'மீண்டெழுதல்' என்ற
இலக்கை அடைய தேச ஒற்றுமை மட்டுமே ஒரே ஆயுதமாகும்.
ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்கவின் மட்டளை கிராமத்தை இடமாற்றும் முன்மொழிவு, அரசியல் லாபத்தை
விட மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு துணிச்சலான சமூகச் செய்தியை
வழங்குகிறது. அரசியல் மற்றும் சமூக ரீதியாக,
இந்த அனர்த்தம் எமது எல்லாப் பிரிவினைகளையும் கடந்து, இந்த பூகோள அச்சுறுத்தலை
ஒரு பொது எதிரியாக எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. சீர்திருத்தங்கள்
வடக்கு-தெற்கு என்ற பாகுபாடு இன்றி,
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பு
மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
காலநிலை
மாற்றம் என்பது இப்போது ஒரு அச்சுறுத்தும் கணிப்பு மட்டுமல்ல, அது 635 உயிர்களைப் பறித்த
ஒரு மரண ஓசையாகும். உலகளாவிய வெப்பநிலையில் 1.3°C
உயர்வு, எமது
மழைவீழ்ச்சி நிகழ்வுகளை 160%
வரை வீரியப்படுத்தியுள்ளது என்ற விஞ்ஞான உண்மை, எமது சிந்தனையைத் தலைகீழாக மாற்ற வேண்டும். மீண்டெழுதல்
என்பது வெறுமனே சேதமடைந்த வீடுகளைச் செப்பனிடுவது அல்ல; அது ஜனாதிபதி
கூறியது போல, பாதுகாப்பற்ற
இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு முழு கிராமத்தையும் மாற்றுவதாகும். அது 80% புதுப்பிக்கத்தக்க
எரிசக்தியை அடைவது என்ற உறுதியான இலக்கை நோக்கிய பயணமாகும். தொழில்நுட்பத்தின்
மூலம் (புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கை அமைப்புகள்) நாம் உயிர்களைக் காக்க முடியும்
என்ற நம்பிக்கையும், உறுதியான
அரசியல் முடிவுகளும் இணைந்து,
எமது தேசத்தின் தலையெழுத்தை மீள எழுத முடியும். இந்த முத்துப் போன்ற தீவை அதன்
பழைய தவறுகளிலிருந்து விடுவித்து,
காலநிலை-தாக்குப்பிடிக்கும் ஒரு புதிய தேசத்தைக் கட்டமைப்பதே எமது தலையாய
கடமையாகும்.


0 comments:
Post a Comment