ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்க, நாடு எதிர்கொள்ளும் சவாலின் ஆழத்தை நாட்டு மக்களுக்கான தனது விசேட
உரையின்போது நேரடியாகவே ஏற்றுக்கொண்டுள்ளமையானது அவரது நேர்மையான தலைமைத்துவத்தின்
வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கிறது. 'ஒரு
நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை
பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு
உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது' என்று அவர்
நிலைமையின் தீவிரத்தை உணர்த்தினார். இந்த வெளிப்படையான ஒப்புதல், இக்கட்டான தருணங்களில் தலைமைத்துவம் ஒளிவுமறைவின்றி மக்களுடன் உரையாட
வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
இந்த
மாபெரும் சவாலை முகாமைத்துவம் செய்யவும்,
விரைவான மற்றும் திறமையான மீள்கட்டமைப்புக்குத் தேவையான சட்டப்
பாதுகாப்பையும் வளங்களையும் வழங்கவும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு முக்கியமான நிர்வாக முடிவாகும். எனினும், இந்த
அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களை உணர்ந்த ஜனாதிபதி, 'இந்த அனர்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும், நமது
நாட்டை செயற்திறனுடன் கட்டியெழுப்புவதற்காக அன்றி வேறு எந்த அடக்குமுறை
நடவடிக்கைக்கும் இந்த அவசரகால நிலையைப் பயன்படுத்த மாட்டோம்' என்று உறுதியளித்தது, மக்களின் நம்பிக்கையைப்
பேணுவதற்கான ஒரு முக்கிய அரசியல் சமிக்ஞையாகும். அனைத்துச் சேவைகளையும் ஒரே
இடத்தில் மையப்படுத்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்
நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய சேவை அலுவலகங்கள்
24 மணி நேரமும் இயங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மனிதநேயத்தின் குரலும், இழப்பின் வலியும்
பேரழிவின்
போது, புள்ளிவிவரங்கள்
மனித உணர்வுகளை மறைத்துவிடக்கூடாது. ஜனாதிபதி திசாநாயக்கவின் உரையில் இந்த
மனிதநேயப் பார்வை ஆழமாகப் பதிந்திருந்தது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடிய
வாய்ப்புகள் உள்ள நிலையில், இழந்தவர்களை மீட்க
முடியாவிட்டாலும், அவர்களின் குடும்பங்களுக்கான வேதனை
என்றென்றும் எம்முடன் இருக்கும் என்றும், 'இறந்தவர்கள்
அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது' என்றும்
அவர் மனிதநேயத்துடன் குறிப்பிட்டார். காணாமல் போனவர்கள் அனைவரும் உயிருடன்
இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த
வார்த்தைகள், ஒரு
தேசியத் தலைவரின் அனுதாபத்தையும், இழப்பின் வலியைப்
புரிந்துகொள்ளும் உணர்வையும் வெளிப்படுத்துகின்றன. அனர்த்தத்தின் முதல் நாட்களில்,
முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச
ஊழியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், நாட்டு மக்களின்
மனிதநேயமும் உறுதியும் தான், பல உயிர்களைக்
காப்பாற்றியது. இனம், மதம், கட்சி
வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒருவருக்கொருவர் உதவிய இந்தத் தருணங்கள், இலங்கையர் என்ற கூட்டு அடையாளத்தின் வலிமையை மீண்டும் ஒருமுறை
நிரூபித்துள்ளன.
பொருளாதாரத்தின் மீதான ஆழமான தாக்கம்
இந்த
இயற்கை அனர்த்தத்தின் ஆபத்தான விளைவுகள் மனித உயிர்களுக்கு அப்பால் நாட்டின்
பொருளாதாரத்தின் மீதும் ஆழமாகப் பதிந்துள்ளன. பொருளாதாரம் மீண்டெழுந்து
கொண்டிருந்த முக்கிய சந்தர்ப்பத்தில் இந்தச் சவால் ஏற்பட்டதால், அதன் தாக்கம்
இரட்டிப்பாகியுள்ளது. சிறு சுயதொழில் முயற்சிகள் முதல் பாரிய கைத்தொழில்கள் வரை
வருமானத்தை இழந்து, விவசாயிகள், கால்நடை
வளர்ப்போர் எனப் பலதரப்பட்ட மக்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விவசாய
நிலங்கள் நீரில் மூழ்கியதால் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மீன்பிடித் துறைமுகங்கள் சேதமடைந்துள்ளதால், கடற்றொழிலாளர்களின்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச்
சூழலைச் சீர்செய்ய, துரித திட்டம் அவசியமாகிறது. அதற்குரிய அவசரமான நடவடிக்கைகளும் தேவையாக
இருக்கின்றன. ஜனாதிபதி சுட்டிக்காட்டியது போல, அடுத்து
வரும் நாட்கள் கடினமானவை. ஒருபகத்தில் பொருளாதாரத்தினை சமாளிக்க வேண்டியுள்ளது.
மறுபக்கத்தில் அன்றாட வாழ்க்கையை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே சவால்கள்
இப்போது இரண்டு மடங்காகியுள்ளன. இந்தச் சவாலை எதிர்கொள்ள, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிதி உதவி, வரிச்
சலுகைகள் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் அவசியமாகின்றன.
உட்கட்டமைப்புச் சேதமும், நிர்வாகச் சீர்திருத்தங்களும்
அத்தியாவசிய
சேவைகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. 'பல பகுதிகளில் மின்சார
வலையமைப்பு சேதமடைந்துள்ளது. தகவல் தொடர்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரவேச
வீதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள்
அழிக்கப்பட்டுள்ளன' என்று ஜனாதிபதி தனது உரையில் ஆபத்தின்
அளவை விளக்கினார். சேதமடைந்துள்ள பிரதான வீதிகள், பாலங்கள்,
கிராமிய வீதிகள் ஆகியவற்றைத் துரிதமாக மீள்நிர்மாணம் செய்ய
வேண்டிய பாரிய சவால் உள்ளது.
இந்த
மீள்கட்டுமானப் பணிக்கு நிதியும்,
நிர்வாகத் துரிதமும் அத்தியாவசியம். நிவாரணப் பணிகளை
விரைவுபடுத்தும் முகமாக, நிர்வாகத் தடைகளை நீக்க
அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
வழங்குவதில் இருந்த சுற்றறிக்கைத் தடைகளை நீக்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி,
'அந்த சுற்றறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் மாற்றியமைத்து.
அனைவருக்கும் அரசாங்க நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு திட்டத்தைத்
தயாரித்துள்ளோம்' என்று உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், நிதி அதிகாரப்
பரவலாக்கலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, 'ஒரு பிரதேச
செயலாளருக்கு 500 இலட்சம் ரூபா வரை செலவிட அனுமதி
அளித்துள்ளோம்' என்றார். அத்துடன், 'கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 3,000
கோடி ரூபாய் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் பாராளுமன்றத்தின்
அனுமதி இல்லாமல் செலவிட முடியும். அதனை இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளோம்'
என்றும் நிதி ஒதுக்கீட்டில் இருந்த நம்பிக்கையை
வெளிப்படுத்தினார். இந்த நிர்வாக மற்றும் நிதிச் சீர்திருத்தங்கள், அனர்த்த முகாமைத்துவத்தில் உள்ள பாரம்பரிய தாமதங்களைக் குறைக்கும் ஒரு
முற்போக்கான நடவடிக்கையாகும்.
கூட்டுப் பொறுப்பும், தேசத்தைக் கட்டியெழுப்பும் நிதியமும்
இந்த
மாபெரும் சவாலை அரச இயந்திரத்தால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை ஜனாதிபதி
தெளிவாக வலியுறுத்தியுள்ளார். அரசு-தனியார் கூட்டு முயற்சியில் 'இலங்கையை உருவாக்குவோம்'
என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். 'நாம் இந்த அழிவிலிருந்து மீள்வதற்கு எமக்கு பாரிய நிதி உதவிகள்
தேவைப்படுகின்றன' என்ற யதார்த்தத்தை அவர்
சுட்டிக்காட்டினார்.
'அரச
நிறுவனங்களால் மாத்திரம் தனித்து இதனை எதிர்கொள்ள முடியாது. எனவே அரசு சார்பற்ற
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள்,
வர்த்தக சமூகம் உள்ளிட்ட பலரிடமிருந்து இதற்கான ஒத்துழைப்புகளை
கோர எதிர்பார்த்துள்ளோம்' என்று அனைத்துத்
தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த நிதியத்தை நிர்வகிக்க தனியார் துறை,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நிதி
அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் அடங்கிய கூட்டு முகாமைத்துவக் குழு
நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வாழும்
இலங்கையர்கள் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில்
வாழும் புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு இந்த மீள்கட்டுமானப் பணியில் மிக
முக்கியமானது. அவர்களின் நிதி மற்றும் நிபுணத்துவ உதவிகள், 'மீண்டும் சிறந்ததாய்
கட்டியெழுப்புதல்' என்ற இலக்கை அடையப் பேருதவியாக
இருக்கும். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் துல்லியமான தரவுகள் மற்றும்
தகவல்கள் அவசியம் என வலியுறுத்தி, அனைத்து அரச
நிறுவனங்களும் அதற்கான பட்டியலைத் தயாரிக்கப் பணியாற்றி வருவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தேசியப் பணி
இந்த
இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதி விடுத்த இறுதி அழைப்பு, தேசிய ஒற்றுமையின்
முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இருந்தது. 'இந்த
பேரழிவு நடந்துள்ள தருணத்தில், நாட்டிற்காக அனைத்து
அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம்' என்று தேசத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
'எமக்கு
அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள அதிக நேரம்
கிடையாது. ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்' என்ற
அவரது கூற்று, அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய நலன்களை
ஒதுக்கிவைத்து, தேசியப் பணியில் கவனம் செலுத்த வேண்டியதன்
அவசியத்தை உணர்த்துகிறது. இந்த அனர்த்தம், இலங்கையின்
அரசியல் வர்க்கத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது: பிரிவினைகளை மறந்து, பொதுநலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை
மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு அது.
நம்பிக்கையின் விதை: சுபீட்சமான தேசத்தை நோக்கி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது உரையை நிறைவு செய்யும்போது, 'இந்த இருண்ட நாட்
கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்துவோம். சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை விதைத்தார்.
இந்த
மாபெரும் சவாலை ஏற்று, பூச்சியத்தில் இருந்து கூட ஒரு சிறந்த நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப
முடியும் என்ற உறுதியான நம்பிக்கை அவர் தலைமையில் தெளிவாகிறது. அதற்குரிய
ஏற்பாடுகளும் வரவேற்கத்தக்கதாகவே உள்ளன. ஆனால், இந்த
நம்பிக்கையும், முன்மொழிவுகளும் வெறும் வார்த்தைகளாக
நின்றுவிடாமல், நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டியது
அவசியமாகின்றன.
அடுத்து
வரும் நாட்கள் கடினமானவை. பொருளாதாரச் சவால்கள், அன்றாட வாழ்க்கையை உறுதிப்படுத்துதல், மற்றும் மீள்கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துதல் எனப் பல முனைகளில்
போராட வேண்டியுள்ளது. இந்தச் சவால்களை எதிர்கொள்ள, தலைமைத்துவத்தின்
நேர்மை, நிர்வாகத்தின் செயல்திறன், மற்றும் மக்களின் கூட்டுப் பொறுப்பு ஆகிய மூன்றும் கைகோர்க்க வேண்டும்.
தித்வா சூறாவளி ஏற்படுத்திய அழிவு, ஒரு புதிய, பலமான, அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறன்
கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக அமையட்டும். இந்தத் தேசியப்
பணியில் ஒவ்வொரு இலங்கையரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதே, நாம் இழந்த உயிர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
தேசம் கண்ணீர் விடுகிறது; ஆனால், அந்தக் கண்ணீரில் இருந்துதான் புதியதோர் எழுச்சி பிறக்க வேண்டும்.


0 comments:
Post a Comment