கொழும்பு மாநகரம் அதன் வரலாற்றில் மிக மோசமான வெள்ள அச்சுறுத்தல்களில் ஒன்றைச் சந்தித்துப் போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மழை சற்று ஓய்ந்திருக்கலாம் அல்லது வானம் தெளிவாகத் தோன்றலாம், ஆனால் ஆபத்து இன்னும் விலகவில்லை என்பதே தற்போதைய யதார்த்தமாகும். மழை பெய்யாத நேரத்திலும் ஆபத்து அமைதியாக வந்து சேரும் ஒரு மிகக் கடுமையான கட்டத்தை நாடு இப்போது எதிர்கொள்கிறது. நீர்மட்டம் மாறி, குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கும் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையில் நகரத் தொடங்கும் இந்தத் தருணத்தில்தான் புதிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்கள் உருவாகின்றன. இந்த அனர்த்தத்தின் இந்தக் கட்டத்தில், விழிப்புணர்வு என்பது வெறும் எச்சரிக்கையல்ல, அதுவே உயிரைக் காக்கும் கவசமாகும்.
தற்போதைய சூழலில் நிலவும் மிக முக்கிய பிரச்சினையாக, வெள்ளம் வடிந்த பின்னரான அல்லது மழை குறைந்த பின்னரான பாதுகாப்புத் தன்மை குறித்த தவறான புரிதல் காணப்படுகிறது. மழை குறைந்தவுடன் ஆபத்து நீங்கிவிட்டது என்று கருதுவது ஒரு பொதுவான மனித உளவியலாகும். ஆனால், வெள்ளநீர் அமைதியாகத் தெரிந்தாலும் அது கணிக்க முடியாத ஆபத்துகளைத் தன்னுள் கொண்டுள்ளது. நேற்று பாதுகாப்பாகத் தெரிந்த வீதிகள் இன்று அப்படியே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தரைக்கு அடியில் உள்ள மண் அரிக்கப்பட்டு, வீதிகள் எப்போது வேண்டுமானாலும் உள்வாங்கும் அபாயம் உள்ளது. இது ஏற்கனவே பல முக்கிய வீதிகளிலும் பாலங்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. மேற்பரப்பு பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், அடியில் உள்ள மண் முற்றாக அரித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.
இத்தகைய நீரில் மூழ்கிய வீதிகளில்
நடப்பதோ அல்லது வாகனங்களைச் செலுத்துவதோ தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். மலையகப்
பிரதேசங்களில் நிலைமை இன்னும் மோசமானது. கண்டி மாவட்டம் சுமார் 180 மிமீ
மழைவீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், அங்குப் பாரிய
மண்சரிவு அபாயம் இன்னும் நீடிக்கிறது. ரம்புக்-எல, ஹசலக, பதுளை மற்றும்
புளத்கொஹுபிட்டிய போன்ற பகுதிகளில் ஏற்கனவே உயிரிழப்பை ஏற்படுத்திய சரிவுகள்
பதிவாகியுள்ளன. மண்சரிவுகள் மழைக்காகக் காத்திருப்பதில்லை. மலைச்சரிவுகள்
முழுமையாக நீர் நிரம்பிய நிலையில் (Saturation point) இருக்கும்போது,
மழை நின்ற
பின்னரும் கூட மண்சரிவுகள் ஏற்படலாம். இதுவே இலங்கை தற்போது நிற்கும் ஆபத்தான
நிலையாகும்.
சிலர், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீண்ட காலம் வசிப்பவர்கள், தங்களுக்கு அந்த நிலப்பரப்பு நன்கு தெரியும் என்றும், மழை நின்றுவிட்டதால் வெள்ள நீரைக் கடப்பதிலோ அல்லது வீடுகளுக்குத் திரும்புவதிலோ ஆபத்து இல்லை என்றும் வாதிடலாம். "நாங்கள் பல வெள்ளங்களைக் கண்டவர்கள், எங்களுக்குத் தெரியும் எங்கே கால் வைப்பது என்று" என்ற வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு தவறான நம்பிக்கையாகும். இயற்கையின் சீற்றம் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கலா ஓயா மீட்பு நடவடிக்கையின் போது, சில குடியிருப்பாளர்கள் பீப்பாய்கள் மற்றும் பலகைகளைப் பயன்படுத்தித் தற்காலிகத் தெப்பங்களை அமைத்து வெள்ளத்தைக் கடக்க முயன்றது ஒரு தவறான மற்றும் ஆபத்தான முன்னுதாரணமாகும்.
இத்தகைய தற்காலிக ஏற்பாடுகள் எளிதில் கவிழ்ந்துவிடக்கூடியவை.
பேருந்துகளையே அடித்துச் செல்லும் அளவுக்கு நீர்வேகம் இருக்கும்போது, இத்தகைய
பாதுகாப்பற்ற முறைகள் மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்குவதுடன், பொதுமக்களின்
உயிரையும் காவுகொள்ளும். அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் மீட்புக்
குழுக்களின் எச்சரிக்கைகளை மீறி, சொந்தத் தீர்மானங்களை எடுப்பது என்பது விவேகமற்ற செயலாகும்.
மீட்புக் குழுக்கள் உடனடியாக வர முடியாத சூழ்நிலையில், பாதுகாப்பான
உயரமான இடத்தில் தங்கியிருந்து சைகை காட்டுவதே புத்திசாலித்தனமே தவிர, ஆபத்தான நீரில்
இறங்குவது அல்ல.
எமது பார்வையில், இந்த அனர்த்த காலத்தின் இரண்டாம் கட்டம் என்பது முதல் கட்டத்தை விடவும் அதிக விழிப்புணர்வு தேவைப்படும் ஒன்றாகும். சுவர்களில் வெடிப்புகள், சாய்ந்த மரங்கள், தரையிலிருந்து விசித்திரமான ஒலிகள் அல்லது திடீரென ஏற்படும் சேற்றுத் கசிவு போன்றவை மண்சரிவின் முன்னெச்சரிக்கை அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். இரண்டாவது அறிகுறிக்காகக் காத்திருப்பது உயிராபத்தை விளைவிக்கும். மேலும், வெள்ளம் வடிந்த பிறகு ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் ஒரு நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம்
அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதும், பல மாவட்டங்களில் கிணறுகள்
மாசுபட்டிருப்பதும் குடிநீர் விநியோகத்தில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள
நீர் கழிவுநீருடனும், குப்பையுடனும் கலந்துள்ளதால், நீரினால் பரவும்
நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. "குழாய் நீர் சுத்தமாகத்
தெரிகிறது" என்ற காரணத்திற்காக அதைக் கொதிக்க வைக்காமல் பருகுவது, நோய்களுக்கு நாமே
அழைப்பு விடுப்பதாகும். இதில் குறுக்குவழிகளுக்கு இடமில்லை; விதிவிலக்குகளுக்கு
அனுமதியில்லை. கொதித்தாறிய நீரை மட்டுமே பருகுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இத்தகைய சூழலில் நடைமுறைச் சாத்தியமான மற்றும் அவசியமான
தீர்வுகள் எவை என்பதை நோக்குவது அவசியம். முதலாவதாக, வீடு திரும்புதல்
என்பது ஒரு அவசரமான செயலாக இருக்கக்கூடாது; அது நிதானமான,
பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டும். 65,000 க்கும் மேற்பட்ட
மின்சாரத் துண்டிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பல வீடுகளில்
வயரிங் மற்றும் ஜங்ஷன் பெட்டிகள் நீரில் மூழ்கியுள்ளன. அருகில் மின்கம்பி அறுந்து
விழுந்திருந்தால், ஆழமற்ற நீர் கூட மின்சாரம் பாய்ந்து ஆபத்தை விளைவிக்கலாம்.
எனவே, இலங்கை மின்சார சபை (CEB) அல்லது தகுதியான மின்சார நிபுணர்கள் பரிசோதிக்கும் வரை,
வீடு திரும்பும்
எவரும் பிரதான மின்சார இணைப்பை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பெரிய
வெள்ள நிகழ்வின் போதும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்கள் அதிகம் என்பதை வரலாறு
நமக்கு உணர்த்துகிறது.
இரண்டாவதாக, கட்டடங்களின் உறுதித்தன்மை மிக முக்கியம். நாட்கணக்கில்
நீரை உறிஞ்சிய வீடுகள் கட்டமைப்பு ரீதியாகப் பலவீனமடைந்திருக்கலாம். சுவர்களில்
வெடிப்புகள், தரை பெயர்வது அல்லது கூரை தொங்குவது போன்ற அறிகுறிகளை
உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, நீர்நிலைகள்
மற்றும் மலைச்சரிவுகளுக்கு அருகில் உள்ள வீடுகள் அதிக ஆபத்தில் உள்ளன. எனவே,
வீடு
பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்படும் வரை உள்ளே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வெறுமனே நீர் மட்டம் குறைந்துவிட்டது என்பதற்காக அவசரமாக வீட்டுக்குள் நுழைவது
கூடாது.
மூன்றாவதாக, இடப்பெயர்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும்
பொதுவானது. வெள்ளம் காரணமாகப் பாம்புகள், கொறித்துண்ணிகள் மற்றும் பிற விலங்குகள்
வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்திருக்கலாம். மீட்புக் குழுக்கள் ஏற்கனவே
வீடுகளுக்குள் பாம்புகள் இருப்பதையும், உலர்வான இடங்களில் விலங்குகள்
கூடுவதையும் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, வீட்டிற்குள் நுழையும்போது ஒவ்வொரு
மூலையையும், அறையையும், பொருட்களையும் கவனமாகச் சோதிக்க வேண்டும். சேமித்து
வைக்கப்பட்ட ஆடைகள் அல்லது படுக்கைகளுக்குள் கூட விலங்குகள் மறைந்திருக்கலாம்.
நான்காவதாக, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் மீது கூடுதல் கவனம்
செலுத்தப்பட வேண்டும். கடந்த 48 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடினமான மீட்புப்
பணிகள் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை உள்ளடக்கியதாகவே
இருந்தன. நிலையற்ற தரை அல்லது வெள்ள நீரைக் கடக்கும்போது குடும்பங்கள் ஒன்றாக
இருப்பது அவசியம். ஒரு கணம் பிரிந்தாலும் அது விபரீதத்தில் முடியலாம்.
இலங்கை தற்போது பல வருடங்களில் இல்லாத அளவுக்குச்
சீர்குலைவை ஏற்படுத்திய வானிலை நிகழ்வைச் சந்தித்து வருகிறது. குடும்பங்கள்
சோர்வடைந்துள்ளன; குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர்; மீட்புக்
குழுக்கள் பல மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றன. பலர் வீடுகளையும் உடமைகளையும்
இழந்துள்ளனர். மழையின் தீவிரம் நாட்டின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், அதனைத் தொடரும்
மணித்தியாலங்களும் நாட்களும் அதே அளவு ஆபத்தானவை. இந்தக் கட்டம் அமைதி, எச்சரிக்கை
மற்றும் விழிப்புணர்வை வேண்டி நிற்கிறது. வெள்ள நீர் நகரலாம், ஆனால் அபாயங்கள்
அப்படியே இருக்கின்றன. மலைநாட்டின் நிலையற்ற சரிவுகள் முதல் மேல் மாகாணத்தின்
அசுத்தமான நீர் மற்றும் தாழ்நிலங்களில் கணிக்க முடியாத வெள்ளப்பெருக்கு வரை
ஒவ்வொரு பிரதேசமும் தனக்கே உரிய சவால்களைக் கொண்டுள்ளது. விழிப்புடன் இருப்பது,
கவனமாக நகர்வது
மற்றும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது ஆகியவைதான் வரவிருக்கும் நாட்களில்
இலங்கை எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும். அனர்த்த
முகாமைத்துவம் என்பது அரசின் கடமை மட்டுமல்ல, அது ஒவ்வொரு
தனிமனிதனினதும் பொறுப்பாகும். விழிப்புணர்வே எமது முதல் பாதுகாப்புக் கவசம்.


0 comments:
Post a Comment