ADS 468x60

03 December 2025

தித்வா எனும் பேரிடியும் ஆட்டம் காணும் சுற்றுலாத்துறை


கடந்த வாரம் இலங்கைத் தீவை ஊடறுத்து வீசிய 'தித்வா' சூறாவளியானது, எமது தேசம் கடந்த பல வருடங்களில் கண்டிராத ஒரு கோரத்தாண்டவத்தை நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் குடியிருப்புகள், துண்டிக்கப்பட்ட பிரதான வீதிகள், சிதைந்து போன வாழ்வாதாரங்கள் என எங்கு நோக்கினும் அழிவின் சுவடுகளே எஞ்சியிருக்கின்றன. குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டும், உழைத்துச் சேர்த்த உடைமைகள் அனைத்தும் சலனமற்று ஓடும் வெள்ள நீரில் கரைந்து போனதும் ஒரு தேசிய சோகமாகும். அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கு அப்பால், முதலில் இந்த மனித அவலத்தை நாம் பணிவுடனும், ஆழமான அனுதாபத்துடனும் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் பின்னால் ஒரு கனவு இருந்தது, ஒரு குடும்பம் இருந்தது. இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

எனினும், இந்தக் கட்டுரையின் நோக்கமானது அந்த அழிவின் மற்றுமொரு பரிமாணத்தை—அதாவது இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் சுற்றுலாத்துறையின் மீதான தாக்கத்தை—ஆய்வு செய்வதாகும். ஒரு தசாப்த காலமாகத் தொடர்ச்சியான அதிர்ச்சிகளைச் சந்தித்து, அதிலிருந்து இப்போதுதான் மெல்லத் தலைதூக்க ஆரம்பித்திருந்த எமது சுற்றுலாத்துறை, இந்தச் சூறாவளியினால் மீண்டும் ஒரு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இதனைப் பேசுவது பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைக் குறைத்து மதிப்பிடுவதாகவோ அல்லது உணர்வற்ற ஒரு செயலாகவோ அர்த்தப்படாது. மாறாக, எமது மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு மத்தியில், எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இத்துறையை நாம் நேர்மையாகவும், தொழில்முறை நேர்த்தியுடனும் கையாளத் தவறினால், நாம் கஷ்டப்பட்டு மீட்டெடுத்த அந்தத் துளி நம்பிக்கையும் மீண்டும் கரைந்துபோகும் ஆபத்து உள்ளது என்ற அக்கறையின் வெளிப்பாடே இந்தத் தேடலாகும்.

தித்வா சூறாவளி தாக்குவதற்கு முன்னரான காலப்பகுதியைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். இலங்கையின் சுற்றுலாத்துறை உண்மையானதொரு மீட்சியின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், 2019 ஈஸ்டர் தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து வந்த கோவிட் பெருந்தொற்று, பின்னர் மக்கள் எழுச்சிப் போராட்டம் (அரகலய), எரிபொருள் வரிசைகள், மின்வெட்டு மற்றும் 2022 இல் ஏற்பட்ட முழுமையான பொருளாதாரச் சரிவு என அத்தனை பேரிடிகளையும் தாங்கி நின்றது இத்துறை. பல வருடங்களுக்குப் பிறகு, கடந்த ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு சாதனை அளவைத் தொட்டிருந்தது. இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து குளிர்காலத்திற்கான முன்பதிவுகள் நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்தன. ஹோட்டல் உரிமையாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். இலங்கை மீண்டும் உலகப் பயணிகளின் வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது என்ற உணர்வு—அது பலவீனமானதாக இருந்தாலும் உண்மையானதாக—எல்லோர் மனதிலும் துளிர்விட்டிருந்தது.

சரியாக அந்தத் தருணத்தில்தான் 'தித்வா' தாக்கியது. இயற்கையின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான். சூறாவளிகள் உருவாவதை மனித சக்தியால் தடுக்க முடியாது. ஆனால், அத்தகைய அனர்த்தங்களை நாம் எதிர்கொள்ளும் விதம், அதற்காக நாம் செய்யும் முன்னாயத்தங்கள் மற்றும் உலகுக்கு நாம் வெளிப்படுத்தும் செய்திகள் என்பன முற்றுமுழுதாக எமது கட்டுப்பாட்டில் உள்ள விடயங்களாகும். இந்த விடயத்தில்தான் நாம் சறுக்கியிருக்கிறோம் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

சுற்றுலாத்துறையில் உள்ள பலரை அதிருப்திக்குள்ளாக்கிய பிரதான விடயம் யாதெனில், சூறாவளி தாக்கும் என்பது குறித்துப் பல நாட்களுக்கு முன்னரே தெளிவான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், நாம் ஏதோ திடீரெனத் தாக்கியது போலத் திக்குமுக்காடியமையே ஆகும். வெளிநாட்டு அரசுகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாப் பயண முகவர்கள் (Tour Operators) உற்றுநோக்குவது அனர்த்தத்தை அல்ல, மாறாக அனர்த்தம் வரும்போது ஒரு தேசம் அதனை எவ்வளவு ஒருங்கிணைப்புடன் கையாளுகிறது என்பதையே. அந்த ஒருங்கிணைப்பும் தயார்நிலையும் தான் எதிர்கால முன்பதிவுகளையும், பயண ஆலோசனைகளையும் (Travel Advisories) தீர்மானிக்கின்றன. ஆனால், தித்வா விவகாரத்தில் நாம் புறக்கணிக்க முடியாத பல இடைவெளிகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளோம்.

நாட்டின் பெரும்பகுதிகள் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் தொடர்ச்சியான 'சிவப்பு' எச்சரிக்கைகளை எதிர்கொண்டிருந்த நிலையில், நவம்பர் 27 ஆம் திகதியன்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்ட ஒரு அறிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. "நாடு பாதுகாப்பாகவும் பயணங்களுக்குத் திறந்தும் உள்ளது" என்றும், முக்கிய சுற்றுலாத் தலங்கள் "வழமை போன்று இயங்குகின்றன" என்றும், ஹோட்டல்கள் "எவ்வித இடையூறும் இன்றிச் செயற்படுகின்றன" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சுற்றுலாத்துறையைப் பாதுகாக்கும் நல்ல நோக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால், உலகம் முழுவதும் ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட காட்சிகளுக்கும் இந்த அறிவிப்புக்கும் இடையில் பாரிய முரண்பாடு இருந்தது. வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள், இடையில் சிக்கித் தவித்த பேருந்துகள், திசைதிருப்பப்பட்ட விமானங்கள் போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருந்தன. அதேவேளை, வெளிநாட்டுத் தூதரகங்களின் பயண ஆலோசனைகள் மணித்தியாலத்திற்கு ஒருமுறை வெள்ளம் மற்றும் போக்குவரத்துத் தடைகள் குறித்து எச்சரித்துக் கொண்டிருந்தன.

உள்ளூர்ச் செய்திகளுக்கும் சர்வதேச இடர் மதிப்பீடுகளுக்கும் இடையில் இத்தகைய முரண்பாடு ஏற்படும்போது, அது தவிர்க்க முடியாமல் எமது நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது. 2004 சுனாமி அனர்த்தத்தின் போது நாம் கற்றுக் கொண்ட பாடம் இது. அன்று மாலைதீவு தனது தெளிவான மற்றும் நிலையான தகவல் தொடர்பாடல் மூலம் மிக விரைவாக மீண்டெழுந்தது. ஆனால், இலங்கையோ முன்னுக்குப் பின் முரணான மற்றும் தற்காப்புத் தன்மையான செய்திகளை வெளியிட்டதால் மீண்டெழப் பல மாதங்கள் எடுத்தன. அந்தத் தவறுகளை மீண்டும் ஒருமுறை இழைக்கும் நிலையில் நாம் இல்லை.

உண்மையில் சுற்றுலாப் பயணிகள் கடந்த வாரம் எத்தகைய அனுபவத்தைப் பெற்றார்கள்? சமூக ஊடகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மலையக ஹோட்டல் உரிமையாளர்களுடன் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்கள் ஒரு தெளிவான சித்திரத்தைத் தருகின்றன. வெள்ளம் மற்றும் தடைப்பட்ட வீதிகள் காரணமாகப் பல சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தைச் சென்றடைய முடியாமல் தவித்தனர். கண்டி, நுவரெலியா, எல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்சரிவு அபாயம் காரணமாக வீதிகள் மூடப்பட்டதால் பலர் அங்கேயே முடங்கினர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், தொலைத் தொடர்பு கோபுரங்கள் செயலிழந்ததாலும், விமானங்களை மீள் முன்பதிவு செய்யக் கூட முடியாத நிலையில் அவர்கள் நிர்க்கதியாகினர். சில விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்குத் திசைதிருப்பப்பட்டன அல்லது தாமதப்படுத்தப்பட்டன, பயணிகளுக்குத் போதிய தகவல்கள் வழங்கப்படவில்லை. "எந்தச் சாலை திறந்திருக்கிறது என்றே தெரியவில்லை" என்று பல சுற்றுலாப் பயணிகள் விரக்தியுடன் பதிவிட்டிருந்தனர்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம், அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருந்தன. குடிவரவுத் திணைக்களம் விசா காலாவதியான பயணிகளுக்குச் சலுகைக் காலத்தையும், விசா கட்டண விலக்களிப்பையும் வழங்கியது. சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை விமான நிறுவனங்களிடம் பயணத் திகதி மாற்றுக் கட்டணங்களை (Change fees) நீக்குமாறு கோரியது. 1912 என்ற அவசர அழைப்பு இலக்கம் செயற்பாட்டில் இருந்தது. இவை அனைத்தும் நல்ல நடவடிக்கைகள் தான், ஆனால் இவை அனைத்தும் பாதிப்பு ஏற்பட்ட பின்னரான 'எதிர்வினை' (Reactive) நடவடிக்கைகளே தவிர, பாதிப்பை முன்கூட்டியே திட்டமிட்ட 'முன்னெச்சரிக்கை' நடவடிக்கைகள் அல்ல.

இப்போது எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி, நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய உத்வேகம் (Momentum) மீண்டும் தடைப்படுமா? கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, எமது தகவல் தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவத்தை நாம் உடனடியாகச் சீர்செய்யாவிட்டால், எதிர்பார்க்கப்பட்ட உயர் பருவ கால (High-season) தேவையில் 5 முதல் 10 வீதம் வரை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இந்த வீழ்ச்சியானது, அதிக செலவு செய்யும் சுற்றுலாப் பயணிகளின் (High-yield segment) வருகையிலேயே அதிகமாக எதிரொலிக்கும். சூறாவளிக்குப் பிந்தைய நாட்களில் வரவிருந்த பலர் ஏற்கனவே தமது பயணங்களை இரத்துச் செய்துள்ளனர் அல்லது ஒத்திவைத்துள்ளனர். சிலர் தமது பயணத்தை பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்கு மாற்றக்கூடும்.

ஒரு சுற்றுலாத் தலம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பது அனர்த்தத்தின் போது அது வெளிப்படுத்தும் தயார்நிலையைப் பொறுத்தே அமைகிறது. எச்சரிக்கைகள் எவ்வளவு விரைவாக விடுக்கப்படுகின்றன, சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார்கள், இடையூறுகள் எவ்வளவு வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகின்றன என்பதை வைத்தே முகவர்கள் எம்மீது நம்பிக்கை வைக்கிறார்கள். எந்தவொரு சுற்றுலாப் பயணியும் அனர்த்த வலயத்திற்குள் (Disaster zone) விடுமுறையைக் கழிக்க விரும்பமாட்டார்கள். அதிலும் குறிப்பாக, மாநாடுகள் மற்றும் ஊக்குவிப்புப் பயணக் குழுக்கள் (MICE) இத்தகைய இடர்பாடுகள் விடயத்தில் மிக அதிக உணர்திறன் கொண்டவை.

இந்தச் சவாலான நேரத்தில், கூட்டுப் பொறுப்புணர்வு என்பது மிக முக்கியமானது. தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் இந்த நெருக்கடியின் போது மிகச் சிறப்பாகச் செயற்பட்டுள்ளன. அவர்கள் தமது விருந்தினர்களைப் பாதுகாப்பதில் காட்டிய அக்கறை பாராட்டுக்குரியது. எனினும், இது தனிப்பட்ட நிறுவனங்களின் முயற்சியாக மட்டும் இருந்துவிடக் கூடாது. தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது. புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கையர்களும் சரியான தகவல்களைப் பரப்பி, தேசத்தின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உதவ வேண்டும்.

இறுதியாக, அரசியல் மற்றும் சமூக ரீதியாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுள்ளது. நாம் இயற்கை அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நாம் எவ்வாறு தொடர்புகொள்கிறோம், எமது ஆலோசனைகள் எவ்வளவு துல்லியமானவை, எமது நிறுவனங்கள் எவ்வளவு ஒருங்கிணைப்புடன் பேசுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த முடியும். இது சுற்றுலாத்துறையின் மீட்சி மீதான எனது தனிப்பட்ட அக்கறையினால் எழுதுவதாகும். வேறு எந்த ஏற்றுமதித் துறையையும் விடச் சுற்றுலாத்துறையால் மிக வேகமாக மீண்டெழ முடியும் என்பது வரலாறு காட்டும் உண்மை. ஆனால், அந்த மீட்சிக்கு அடிப்படைத் தேவை 'நம்பிக்கை' (Confidence) மட்டுமே.

இந்தத் தருணத்தைச் சரியாகக் கையாண்டால், இது மற்றுமொரு பின்னடைவாக மாறாது. மாறாக, எமது அனர்த்த முகாமைத்துவத்தின் திறனை உலகுக்குக் காட்டும் வாய்ப்பாக அமையும். தவறாகக் கையாண்டால், அது இப்போதைய தேவையை மட்டுமல்ல, நீண்ட கால நம்பகத்தன்மையையும் பாதிக்கும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் சுற்றுலாத்துறை, இலங்கையின் உடனடிப் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

 

0 comments:

Post a Comment