ADS 468x60

31 October 2026

ஒத்திவைக்கப்பட்ட சீர்திருத்தம்; ஒத்திவைக்க முடியாத விவாதம்

ஆட்சிகள் மாறுகின்றன; அடித்தளங்கள் மாறுவதில்லை. இது இலங்கையின் பல தசாப்த கால அனுபவம். அரசாங்கம் மாறும்போது சுலோகங்களும் சுவரொட்டிகளும் மாறுகின்றன. ஆனால் நாட்டின் நீண்டகாலப் பொருளாதார, சமூக வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அமைப்புகள் பெரும்பாலும் தொடப்படாமலேயே இருக்கின்றன. அந்த அமைப்புகளில் கல்வி முதன்மையானது. அன்றாட அரசியலின் இரைச்சலுக்கு மேலே எழுந்து, கல்விச் சீர்திருத்தம் குறித்த உரையாடலைத் தெளிவாக முன்னெடுப்பதே இங்குள்ள சிரமம்.

6ஆம் தரத்துக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் 2026இல் அமுல்படுத்தப்படவிருந்தது. இப்போது அது 2027க்குத் தள்ளிப்போயுள்ளது. இதனைத் தடங்கலாகக் கருதுவதை விட, சிந்திப்பதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதலாம். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இலங்கையின் கல்வி முறை எத்தகைய மனிதர்களை உருவாக்க வேண்டும், எத்தகைய பொருளாதாரத்தைத் தாங்கி நிற்க வேண்டும் என்ற அடிப்படை வினாவை ஆராய்வதற்கு இப்போது அவகாசம் உள்ளது.

அரசின் புதிய கொள்கையின்படி, 1ஆம் தரத்துக்கான பாடத்திட்ட மீளாய்வு 2026இலும், 2ஆம், 6ஆம் தரங்களுக்கானது 2027இலும் இடம்பெறும். காலவரிசை தெளிவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் காலவரிசை என்பது வியூகம் (Strategy – நீண்டகாலத் திட்டம்) அல்ல. சீர்திருத்தங்களைத் தாங்கி நிற்க வேண்டிய கொள்கைகளும் விழுமியங்களும் குறித்து நீடித்த, அர்த்தமுள்ள உரையாடல் நடைபெறுகிறதா என்பதே முக்கிய வினா.

வியூகம் என்பது 3 வினாக்களுக்கான விடை: எதற்காகக் கற்பிக்கப்படுகிறது, யாருக்காகக் கற்பிக்கப்படுகிறது, எவ்வாறு அளவிடப்படும்? இம்மூன்றும் தெளிவற்ற நிலையில் பாடநூல்களை மாற்றுவது, புதிய அட்டைப் படத்துடன் பழைய நூலை வெளியிடுவதற்குச் சமம். கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் (National Institute of Education – NIE), பரீட்சைகள் திணைக்களம் ஆகிய அமைப்புகள் ஒரே இலக்கை நோக்கி இணையும்போதே சீர்திருத்தம் ஆழமாக வேரூன்றும்.

கல்விச் சீர்திருத்தம் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் மாணவர், ஆசிரியர், பெற்றோர் ஆகியோரைச் சுற்றியே சுழல்கின்றன. உண்மையில், அதன் விளைவுகள் ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்தையும், வணிகத்தையும், நிறுவனத்தையும் தொடுகின்றன. வகுப்பறைச் சுவர்களுக்குள் தொடங்கும் தீர்மானங்கள், சந்தை, தொழிற்சாலை, அலுவலகம் ஆகிய இடங்களில் தம் முடிவுகளை வெளிப்படுத்துகின்றன.

அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் தொழில்வல்லுநர்கள், தொழில்முனைவோர், முகாமையாளர்கள் ஆகியோர் பாடத்திட்ட வடிவமைப்பு விவாதங்களில் எப்போதும் பங்கேற்பதில்லை. ஆனால் அதன் விளைவுகளை நாளாந்தம் சுமப்பவர்கள் இவர்களே. பட்டதாரிகளைப் பணிக்கமர்த்துவதும், வணிகத்தை நடத்துவதும், உலகச் சந்தையில் போட்டியிடுவதும் இவர்களின் பொறுப்பு. ஊழியர்களின் தரம், பயிற்சிச் செலவு, புத்தாக்கத் திறன், வணிகப் போட்டித்தன்மை ஆகிய அனைத்தையும் கல்விச் சீர்திருத்தமே வடிவமைக்கிறது.

மாறும் உலகுக்கு ஈடுகொடுக்கும் நடைமுறைத் திறன்களையும் மீண்டெழு ஆற்றலையும் (Resilience) வழங்கும் கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நடுத்தரக் குடும்பங்களிடையே வளர்ந்து வருகிறது. ஆனால் சீர்திருத்தம் நடுத்தர வர்க்கத்தின் தனியுரிமை அல்ல. கிராமப்புறச் சமூகங்களுக்கும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களுக்கும் பிள்ளைகளின் அறிவை வளர்க்கும் உயர்தரக் கல்வி தேவை. சமூக, பொருளாதாரப் பின்னணி எதுவாயினும், ஒவ்வொரு பிள்ளைக்கும் தன் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் உரிமை உண்டு.

ஏற்றத்தாழ்வு குறித்த வினாவையும் தவிர்க்க முடியாது. நகர்ப்புறப் பிரபல பாடசாலைகளுக்கும் தொலைதூர, பின்தங்கிய பாடசாலைகளுக்கும் இடையிலான வளப் பற்றாக்குறை, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலும் மலையகத் தோட்டப் பகுதிகளிலும் குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. சீர்திருத்தம் அனைத்து வகுப்பறைகளையும் சென்றடையாவிட்டால், அது ஏற்கனவே முன்னேறியவர்களை மேலும் முன்னேற்றும் கருவியாகவே மாறக்கூடும்.

இந்த எதிர்பார்ப்புகளை ஒரு தேசிய நோக்கமாக (National Purpose) ஒருங்கிணைப்பதே சவால். “உலகை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக வலிமையான ஆயுதம் கல்வி” என்றார் Nelson Mandela (நெல்சன் மண்டேலா). ஆயுதம் வலிமையானதாக இருக்கும் அளவுக்கு, அதைக் கையாளும் கவனமும் கூர்மையாக இருக்க வேண்டும்.

சீர்திருத்தத்தின் மையத்தில் விழுமியங்கள் (Values) இருக்க வேண்டும். நேர்மை, பொறுப்புணர்வு, பன்மைத்துவத்தை மதித்தல், ஒருவருடன் ஒருவர் இணைந்து செயற்படுதல் ஆகியவை பாடநூல்களில் அச்சிடப்படும் சொற்களாக அன்றி, பாடசாலை நடைமுறையில் பயிலப்படும் பழக்கங்களாக மாற வேண்டும். பல்லின, பல்சமய சமூகமான இலங்கையில், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் திறனே சமூக ஒருமைப்பாட்டின் அடித்தளம்.

இன்று பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளில் தொழிற்சந்தை, தொழிற்பயிற்சி, உயர்கல்வி ஆகியவற்றுக்குள் நுழைவர். அவர்கள் பெறும் திறன்களே இலங்கையின் பெரும் பொருளாதார மாற்றக் காலத்தின் தொழிற்படையை (Workforce) வடிவமைக்கும்.

இலங்கையின் மக்கள்தொகை வடிவமும் இவ்விவாதத்துக்கு அவசரத்தைச் சேர்க்கிறது. மக்கள்தொகை மூப்படையும் வேகம் அதிகரித்து வருவதால், உழைக்கும் வயதினரின் ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையை விட அதிக உற்பத்தித்திறனுடன் இயங்க வேண்டிய நிலை உருவாகிறது. சிறிய தொழிற்படை பெரிய சுமையைத் தாங்க வேண்டுமாயின், ஒவ்வொருவரின் திறனும் உயர வேண்டும். இதுவே கல்விக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான நேரடிப் பாலம்.

குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட தொழில்களை நம்பி உள்நாட்டுப் பொருளாதாரம் நீண்டகாலம் பயணிக்க முடியாது. கல்வியை முடித்தவுடன் மாணவர்கள் தானாகவே வேலைக்குத் தகுதியானவர்களாகிவிடுவர் என்ற எடுகோளும் பாதுகாப்பானதல்ல. வணிகங்கள் நாடுவது மேம்பட்ட தொடர்பாடல் திறன், டிஜிட்டல் திறன் (Digital Skills), புதிய பணிமுறைகளை விரைவாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே.

விவசாயம், சுற்றுலா, சிறு, நடுத்தர தொழில் முயற்சிகள் ஆகிய துறைகளுக்கும் இது பொருந்தும். தொழில்நுட்பம் சார்ந்த விவசாயம் (Agri-tech), தரவு அடிப்படையிலான சுற்றுலா முகாமைத்துவம், ஒண்லைன் வணிகம் என்பவற்றுக்கு இன்று தேவைப்படும் அறிவும் திறனும் பழைய பாடத்திட்டத்தால் வழங்கப்படுவதில்லை. கிராமங்களில் வாழும் இளையோர் இத்துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமாயின், அதற்கேற்ற கல்வி அவர்களுக்கு வகுப்பறையிலேயே கிடைக்க வேண்டும்.

உற்பத்தி, சுற்றுலா, அவற்றோடிணைந்த சேவைத் துறைகள் அனைத்திலும் இது பொருந்தும். தொழில்நுட்பத்தில் ஏற்படும் தொடர் புத்தாக்கம் தொழிற்றுறைகளை மாற்றியமைக்கிறது. தன்னியக்கமும் (Automation) செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence – AI) வணிகங்கள் இயங்கும் விதத்தையே மாற்றிவிட்டன. உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2025ஆம் ஆண்டு “Future of Jobs” அறிக்கை, 2030க்குள் தொழிலாளர்களின் தற்போதைய திறன்களில் சுமார் 39 சதவிகிதம் மாற்றமடையும் அல்லது காலாவதியாகும் எனக் கணிக்கிறது.

ஆங்கிலமும் டிஜிட்டல் கல்வியறிவும் (Digital Literacy) இன்றைய உலகில் வாய்ப்புகளின் வாயில்கள். ஆனால் அவை வெறும் பாடப் பிரிவுகளாக அன்றி, சிந்தனை, ஆராய்ச்சி, தொடர்பாடல் ஆகியவற்றுக்கான கருவிகளாகக் கற்பிக்கப்பட வேண்டும். கற்றல் உள்ளடக்கம் ஒண்லைன் தளங்களுடன் இணையும்போது, உள்ளடக்கத் தரக் கண்காணிப்பு (Quality Assurance) மேலும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதையே அண்மைய அனுபவம் சுட்டுகிறது.

கல்வி நிறுவனங்களில் வேலைக்குத் தயாரான மாணவர்களை உருவாக்கும் முனைப்பு அதிகரித்துள்ளது. இருந்தும் பல கற்பித்தல் முறைகள் இன்னும் மனனம் செய்து ஒப்புவிப்பதை மையமாகக் கொண்டுள்ளன; விமர்சன சிந்தனையையும் ஆழ்ந்த புரிதலையும் ஊக்குவிப்பது குறைவு. மனனம் நினைவாற்றலைச் சோதிக்கிறது; புரிதல் வாழ்க்கையைத் தயார்ப்படுத்துகிறது.

மாணவர்கள் விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், தர்க்க ரீதியாக ஊகிக்கவும், கற்பனை வளத்துடன் செயற்படவும், பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை உருவாக்கவும் கற்க வேண்டும். உயர்ந்த கல்வி என்பது தகவல்களை வழங்குவதுடன் நின்றுவிடாமல், வாழ்வை அனைத்து உயிர்களோடும் இசைவுபடுத்துவது என்ற கருத்தை Rabindranath Tagore (ரவீந்திரநாத் தாகூர்) முன்வைத்தார். கற்றல் விளைவுகள் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் பெறுமதியுள்ள சிந்தனையையும் செயலாற்றலையும் வளர்க்க வேண்டும்.

உண்மையான கல்விச் சீர்திருத்தம், மாணவர்கள் சமூகத்தை வளப்படுத்தும் ஆற்றலை எவ்வளவு வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதாலேயே அளவிடப்பட வேண்டும். வாழ்நாள் முழுவதும் பொருத்தமான, பெறுமதியான விளைவுகளை அடையும் ஆற்றல் மாணவர்களுக்குக் கிடைத்ததா என்பதே இறுதி அளவுகோல்.

இலங்கையில் பரீட்சைகள் வாய்ப்புகளுக்கான பாதையாகக் கருதப்படுகின்றன. 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் ஆகியவை குறித்துப் பலர் ஆழ்ந்த உணர்வுகளைக் கொண்டுள்ளனர். இவ்வுணர்வுகள் கல்வியின் மீதான மதிப்பிலிருந்தும், சமூக நகர்ச்சியின் (Social Mobility) முக்கியத்துவத்திலிருந்தும் எழுபவை. அவற்றை இழிவுபடுத்த வேண்டியதில்லை; ஆனால் அவற்றுக்கு மாற்றுப் பாதைகளும் தேவை.

ஒரு மாணவரின் மதிப்பை ஒரு பரீட்சைப் பெறுபேற்றுக்குள் அடைத்துவிடுவது, ஒரு நதியின் ஆற்றலை ஒரு குவளை நீரால் அளப்பதற்கு ஒப்பானது. தொடர் மதிப்பீடு (Continuous Assessment), செயற்றிட்டங்கள், திறன் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பல்கோண மதிப்பீடு (Multi-dimensional Assessment) ஒரு மாணவரின் முழுப் படத்தையும் வழங்கும்.

புள்ளிவிவரங்கள் இதனை வலியுறுத்துகின்றன. 2025 க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகளில் 83,094 மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெறவில்லை; 7,199 பேர் எல்லாப் பாடங்களிலும் சித்தியடையவில்லை. இவை வெறும் தோல்விகளின் எண்ணிக்கை அல்ல. மாற்றுப் பாதைகள் போதாத ஒரு கட்டமைப்பின் அடையாளங்கள்.

தொழில்நுட்பம், வடிவமைப்பு, விவசாயம், பொறியியல், விருந்தோம்பல், கைத்தொழில்கள் போன்ற துறைகளில் திறமையுள்ள மாணவர்களுக்குப் பாடசாலைக் காலத்திலிருந்தே மாற்றுப் பாதைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறே கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களும் தொடர்பாடல், தலைமைத்துவம், நடைமுறைப் பிரச்சினை தீர்க்கும் திறன்கள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். பரீட்சைகள் ஒரு விரிந்த கட்டமைப்பின் பகுதியாக இருந்து, பல்வகைத் திறன்களையும் அடையாளம் காண வேண்டும்.

இளைஞர் ஆற்றல் இலங்கையின் மிகப் பெரிய, ஆனால் குறைவாகப் பயன்படுத்தப்படும் சொத்து. இளையோர் வேலை தேடுபவர்களாக மட்டுமன்றி, வேலை உருவாக்குபவர்களாகவும் மாற வேண்டுமாயின், தொழில்முனைவுக் கல்வி (Entrepreneurship Education), நிதியறிவு (Financial Literacy), குழுப்பணி ஆகியவை பாடசாலைக் கட்டத்திலேயே விதைக்கப்பட வேண்டும். வேலை தேடும் தலைமுறையை வேலை தரும் தலைமுறையாக மாற்றுவதே கல்வியின் உயர்ந்த இலக்கு.

பிற நாடுகளின் அனுபவம் இதற்குத் துணை நிற்கிறது. ஜேர்மனியின் இரட்டை முறைமை (Dual System – வகுப்பறைக் கல்வியும் தொழிலிடப் பயிற்சியும் இணைந்த முறை) தொழிற்பயிற்சியை இளையோருக்கான உறுதியான வேலைவாய்ப்புப் பாதையாக மாற்றியுள்ளது. சிங்கப்பூர், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்குச் (Institute of Technical Education – ITE) சமூக மதிப்பை வழங்கி, தொழிற்கல்வியை இரண்டாம்தரத் தெரிவாக இல்லாமல் நம்பகமான தெரிவாக நிலைநிறுத்தியது.

பாடசாலைகள், தொழில்வழங்குநர்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே வலுவான கூட்டுறவு அவசியம். அப்போதுதான் பொருளாதாரத்தின் மாறும் தேவைகளுக்கும் சமூக எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற திறன் வீச்சு உருவாகும். தொழிற்கல்வியும் பயிற்சியும் (Technical and Vocational Education and Training – TVET) கௌரவமான தொழில், தொழில்முனைவு, மேலதிக கல்வி ஆகியவற்றுக்கான பாதைகளாக அமைய வேண்டும். ஒடுங்கிய கல்விச் சாதனைகளை மட்டும் ஊக்குவிக்கும் நாடு, தன் மனித ஆற்றலின் பெரும்பகுதியை அடையாளம் காணத் தவறும்.

கல்விச் சீர்திருத்தம் உலகளாவிய வேலைவாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. மத்திய கிழக்கில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்ப வருமானத்துக்கும் வெளிநாட்டுச் செலாவணிக்கும் பெரும் பங்களிக்கின்றனர். அண்மைய ஆண்டுகளில் அவர்கள் அனுப்பிய பணம் 6 பில்லியன் டொலரை அண்மித்தோ கடந்தோ உள்ளது. அவர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, தாதியர், பொறியியலாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் போன்ற திறன்சார் தொழில்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர் பலர் உள்ளனர். அத்தகைய துறைகளில் ஊதியம் கணிசமாக அதிகம்; அது பணவனுப்பல்களையும் (Remittances) அதிகரிக்கும். எனவே திறன்சார் புலப்பெயர்வு (Skilled Migration) ஒரு பொருளாதார வாய்ப்பாக அணுகப்பட வேண்டும்.

எனினும், தேசிய வேலைவாய்ப்பைப் பலிகொடுத்து இளையோரை “ஏற்றுமதி” செய்யும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையிலோ வெளிநாட்டிலோ கௌரவமான, நிறைவான வாழ்வையும் தொழிலையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஒவ்வொரு இலங்கையருக்கும் இருக்க வேண்டும். இதற்கு இளையோருக்கு உறுதியான கல்வி, தொழில்நுட்ப, தொழிற்பயிற்சி அடித்தளம் அவசியம். ஒரு துறையில் தேர்ச்சிக்கான அடித்தளம் குறுகிய காலத்தில் உருவாவதில்லை. இன்று எடுக்கப்படும் கல்வித் தெரிவுகளே, இலங்கைத் தொழிற்படையின் சர்வதேச வேலைவாய்ப்புத் திறனையும் உலகப் பொருளாதாரத்தில் அது போட்டியிடும் தளத்தையும் தீர்மானிக்கும்.

புவிசார் அரசியல் (Geopolitics) சூழலும் இதனோடு பிணைந்துள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மாறுகின்றன; நாடுகள் திறமையான, நம்பகமான தொழிற்படையுள்ள இடங்களைத் தேடுகின்றன. ஏற்றுமதிச் சந்தையிலும் முதலீட்டு ஈர்ப்பிலும் இலங்கை போட்டியிடப் போகும் அடிப்படை ஆயுதம் வெறும் குறைந்த கூலி அல்ல; திறன், நம்பகத்தன்மை, கற்றுக்கொள்ளும் வேகம் ஆகியவையே.

6ஆம் தரச் சீர்திருத்தம் ஆங்கில மொழிக் கற்றல் பகுதி தொடர்பான கவலைகளால் ஒத்திவைக்கப்பட்டது. பொருத்தமற்ற இணையத் தொடுப்பு ஒன்று கண்டறியப்பட்டதும் அவற்றில் அடங்கும். இவை கற்றல் வளங்களின் தரம் குறித்த நியாயமான கவலைகளைக் காட்டுகின்றன. பிரச்சினை எழும்போது ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும், அனைவருக்கும் மேலாகப் பிள்ளைகளுக்கும், நியாயமான தயார்ப்படுத்தலும் தெளிவான தொடர்பாடலும் கிடைக்க வேண்டும். குறைபாடு கண்டறியப்பட்டுத் திருத்தப்படுவது ஆரோக்கியமான முகாமைத்துவத்தின் அடையாளம்.

ஆசிரியர்கள், பெற்றோர், ஏனைய பங்குதாரர்கள் அனைவரையும் உள்ளடக்கிய செயன்முறை மூலம் உண்மையான சீர்திருத்தம் நிகழும் என எதிர்பார்க்கலாம். அதில் முக்கியமானது பொறுப்புக்கூறல் (Accountability). குறைபாடற்ற முறைமை வாக்குறுதியளிக்கப்பட்டதால் அல்ல, மேம்பாடுகளும் திருத்தங்களும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்களின் நம்பிக்கை வளரும்.

பெற்றோரின் நம்பிக்கை சீர்திருத்தத்தின் மறைமுக மூலதனம். பிள்ளையின் எதிர்காலம் பரீட்சைப் புள்ளிகளில் மட்டுமே தங்கியுள்ளது என்று நம்பும் வரை, புதிய மதிப்பீட்டு முறைகளை அவர்கள் அச்சத்துடனேயே நோக்குவர். புதிய முறையில் பிள்ளை எவ்வாறு மதிப்பிடப்படும், அது எந்தப் பாதைகளைத் திறக்கும் என்பதைத் தெளிவாக விளக்கும் தொடர்பாடல் இங்கே தீர்மானகரமானது.

கல்விச் சீர்திருத்தங்கள் அரசியல் தொடர்ச்சியின்மைக்கு எளிதில் இலக்காகின்றன. ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி, அமுல்படுத்தி, மதிப்பிடுவதற்குத் தேவையான காலத்துக்கும், ஓர் அரசாங்கம் பதவியில் இருக்கும் காலத்துக்கும் இடையே இடைவெளி உள்ளது. இதன் விளைவாக, மாணவர்கள் எதிர்பாராத ஆனால் தவிர்க்க முடியாத பாதிப்பாளர்களாகின்றனர்.

கல்வியில் முதலீடு செய்வது செலவல்ல; அது எதிர்காலத் தொழிற்படையின் மீதான முதலீடு. திறன்மிக்க ஊழியர் குழாமின் பயன் உயர் வரி வருமானம், குறைந்த வேலையின்மை, வலுவான ஏற்றுமதித் திறன் எனப் பல தசாப்தங்களுக்கு நீளும். இத்தகைய நீண்டகாலக் கணக்கீடு தேர்தல் காலக் கணக்கீட்டுடன் முரண்படும்போதுதான் சீர்திருத்தங்கள் சிக்கலில் மாட்டுகின்றன.

பின்லாந்தின் அனுபவம் இங்கே நினைவுகூரத்தக்கது. ஆசிரியர் கல்வியில் முதலீடு, ஆசிரியர்கள் மீதான நம்பிக்கை, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த கொள்கை ஒருமித்த கருத்து ஆகியவை அங்கு கல்வியின் தரத்தை நிலைநிறுத்தின. தென்கொரியா 1960களிலிருந்து மனித மூலதனத்தில் (Human Capital) தொடர்ந்து முதலீடு செய்து பொருளாதார மாற்றத்தை எட்டியது. இவை அப்படியே நகலெடுக்கத்தக்க மாதிரிகள் அல்ல. ஆனால் தொடர்ச்சியே சீர்திருத்தத்தின் அடிநாதம் என்பதை இவை உணர்த்துகின்றன.

வாழ்நாள் கற்றல் (Lifelong Learning) என்ற கருத்தும் இங்கே முக்கியம். தொழில்நுட்ப மாற்றம் வேகமடையும் காலத்தில், பாடசாலைக் கல்வி ஒரு முடிவுப் புள்ளி அல்ல; கற்கும் பழக்கத்தின் தொடக்கப் புள்ளி. ஒருமுறை பெற்ற சான்றிதழ் நாற்பது ஆண்டு வாழ்க்கைக்குப் போதும் என்ற எண்ணம் மறைய வேண்டும். கற்கக் கற்றுக்கொடுப்பதே (Learning to Learn) நவீன கல்வியின் மிகச் சிறந்த பரிசு.

வியட்நாமின் அனுபவம் இன்னொரு பாடம். குறைந்த வருமான நிலையிலிருந்து தொடங்கிய அந்நாடு, அடிப்படைக் கல்வியின் தரத்திலும் ஆசிரியர் பயிற்சியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தியதால், சர்வதேச மாணவர் மதிப்பீடுகளில் தன் வருமான மட்டத்துக்குரிய எதிர்பார்ப்பை விடச் சிறப்பாகச் செயற்பட்டது. வருமானம் குறைவு என்பது கல்வித் தரம் குறைவாக இருக்க வேண்டியதற்கான காரணம் அல்ல என்பதை இது காட்டுகிறது.

இலங்கைக்குத் தேவையானது நன்கு வடிவமைக்கப்பட்ட தேசியக் கொள்கைச் சட்டகமும் (Policy Framework), அதனோடு இணைந்த உள்ளடக்கமான, பல்துறை சார்ந்த, தொழில்சார், சான்றுகளின் அடிப்படையிலான அணுகுமுறையும் ஆகும். கொள்கை மாற்றங்கள் சான்றுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் விளைவுகள் முறையாக மதிப்பிடப்பட வேண்டும். பாடத்திட்டம், கற்பித்தல், வசதிகள், கற்றல் வளங்கள், மதிப்பீட்டு முறைகள், பொது விழிப்புணர்வு ஆகியவை ஒருங்கே மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு அறிவையும் திறன்களையும் புதுப்பிக்கும் பயிற்சி வழங்கப்படாவிட்டால், சீர்திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் பயன் முழுமையாகக் கிடைக்காது. புதிய மதிப்பீட்டு முறைகளுக்கும் இதுவே பொருந்தும்.

தனியார் துறையும் இதில் பொறுப்புள்ள பங்காளியாக மாற முடியும். பயிற்சி இடங்களை வழங்குதல், பாடத்திட்ட மீளாய்வுகளில் தொழில்துறைத் தேவைகளைத் தெரிவித்தல், ஆசிரியர்களுக்குத் தொழிலிடப் பார்வையை வழங்குதல் என்பன செலவு குறைந்த, ஆனால் பயன் மிகுந்த ஒத்துழைப்பு வடிவங்கள். இத்தகைய கூட்டுறவு (Public-Private Partnership) வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்போது, கல்வியின் பொதுநலன் நோக்கமும் பாதுகாக்கப்படும்.

ஆசிரியரே சீர்திருத்தத்தின் இறுதிப் பாலம். பாடத்திட்டம் எவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டாலும், அதை வகுப்பறையில் உயிர்ப்பிப்பவர் ஆசிரியரே. எனவே தொழில்சார் பயிற்சி, கற்பித்தல் வளங்கள், ஆசிரியர்களின் கருத்துகளுக்குச் செவிமடுக்கும் பின்னூட்டச் சுழற்சி (Feedback Loop) ஆகியவை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகவே திட்டமிடப்பட வேண்டும்; பின்னர் இணைக்கப்படும் துணைப்பகுதியாக அல்ல.

முன்னோடித் திட்டங்கள் (Pilot Programmes) வழியாகச் சிறிய அளவில் சோதித்து, கற்ற பாடங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து, படிப்படியாக விரிவாக்குவது ஆபத்தைக் குறைக்கும் வழி. ஒத்திவைப்பால் கிடைத்த காலத்தை இத்தகைய சோதனைக்கும் பயன்படுத்தலாம். அப்போது சீர்திருத்தம் ஒரு திடீர் அறிவிப்பாக அன்றி, படிப்படியாக முதிர்ச்சியடையும் செயன்முறையாக அமையும்.

இறுதியில் கொள்கைகள் மாணவர்களின் கற்றலுக்கு வழிவகுக்க வேண்டும். அதற்கான அளவுகோல்கள் எளிமையானவை. மாணவர்களின் வாசிப்பும் கணிதத் திறனும் மேம்படுகிறதா? தொடர்பாடலில் அவர்கள் தன்னம்பிக்கை பெறுகிறார்களா? பாடசாலைகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு குறைகிறதா? பட்டதாரிகள் உயர்கல்விக்கும் தொழிற்பயிற்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் மேலும் தயாராகின்றனரா? இந்த வினாக்கள் பொது அறிக்கையிடலையும் எதிர்காலக் கொள்கைத் திருத்தங்களையும் வழிநடத்த வேண்டும்.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் தேசிய கல்வி முன்னேற்ற அறிக்கை (National Education Progress Report) இதற்கு உதவும். பாடசாலை மட்டத்திலும் வலய மட்டத்திலும் தரவுகள் பகிரப்படும்போது, வளங்கள் எங்கே தேவை என்பது ஊகத்தின் அடிப்படையில் அன்றி, சான்றுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

இலங்கையர்கள் பொருளாதாரம், அரச நிதி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவு ஆகியவை குறித்துக் கவலை கொள்வது இயல்பே. ஆனால் இவை அனைத்துக்கும் அடிப்படை கல்வியே. உற்பத்தித்திறனை உயர்த்தவும் திறன்மிக்க ஊழியர் குழாமை விரிவாக்கவும் கல்வி முறை வழிவகுக்க வேண்டும். தோல்வியடையும் கல்வி முறை ஏற்றத்தாழ்வை ஆழமாக்கி, வாய்ப்புகளைத் தேக்கமடையச் செய்யும்.

கல்வியாளர்களுக்கே பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் முதன்மைப் பொறுப்பு என்றாலும், தொழில்முனைவோரும் தொழில்வல்லுநர்களும் இளையோரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் செயற்பாட்டுப் பங்கு வகிக்க வேண்டும். Malala Yousafzai (மலாலா யூசுப்சாய்) “ஒரு பிள்ளை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு எழுதுகோல் உலகை மாற்றும்” என்றார். அந்த 4 அலகுகளுக்கும் நாட்டின் முன்னுரிமை கிடைக்கும்போதே அந்த மாற்றம் சாத்தியமாகும்.

பாடசாலைகளுக்கு ஆதரவாகப் பழைய மாணவர் சங்கங்கள், சமூக அமைப்புகள், உள்ளூர் தொழில்வழங்குநர்கள் ஆகியோர் ஒன்றிணையும்போது, அரச வளங்களுக்கு அப்பாலும் ஒரு ஆதரவு வலையமைப்பு உருவாகிறது. நூலகம், ஆய்வுகூடம், வழிகாட்டல் நிகழ்ச்சிகள் போன்றவை இத்தகைய கூட்டு முயற்சிகளால் வலுப்பெற்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இத்தகைய பங்களிப்பு அரசின் பொறுப்பைக் குறைப்பதற்கல்ல; அதனை நிறைவு செய்வதற்கே.

ஆகவே, 6ஆம் தரச் சீர்திருத்தம் 2027க்குத் தள்ளிப்போனாலும், தேசிய விவாதம் தள்ளிப்போகக் கூடாது. தொழிற்றுறைகளை உருவாக்கவும், உயர்வருமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், பொதுச் சேவைகளை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை இணைக்கவும் ஆற்றல் கொண்ட தொழிற்படை தேவை. அதற்குத் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் கல்விச் சீர்திருத்தங்களே வழி. வழமையாகச் சீர்திருத்தங்கள் நெருக்கடிக் காலங்களில்தான் நடைபெறுகின்றன; மீண்டெழு (Resilient) திறன் கொண்ட தேசம் நெருக்கடிக்கு முன்பே சீர்திருத்துகிறது. அடுத்த தலைமுறையை இலங்கையின் உற்பத்தித்திறனையும் செழிப்பையும் உலக அரங்கில் அதன் பங்களிப்பையும் உயர்த்தத் தயார்ப்படுத்தத் தேசம் தயாரா என்ற வினாவுக்கான விடை காலப்போக்கில் தெளிவாகும். ஆனால் அந்த விடையை எழுதுவது இன்றைய தெரிவுகளே.

0 comments:

Post a Comment