ADS 468x60

27 August 2026

நேபாளப் பேரழிவு உணர்த்தும் பாடம்

நேபாளத்தின் திபெத் எல்லையை ஒட்டியுள்ள ராசுவா மாவட்டத்தில் (Rasuwa District) உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் சற்றும் எதிர்பாராத விதமாக உருவான பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கு, இமயமலைப் பிராந்தியத்தின் சூழலியல் பலவீனத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உலுக்கி உணர்த்தியுள்ளது. இடிபாடுகளுக்குள்ளும் சேற்றுக் கூளங்களுக்குள்ளும் 600 இற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருப்பதும், 1900 இற்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதுமான உத்தியோகபூர்வ தகவல்கள், இந்தப் பேரிடரின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. பாட்டேகோஷி (Bhote Koshi) மற்றும் திரிசூலி (Trisuli) ஆகிய ஆறுகளின் வழியாக பெருக்கெடுத்து வந்த பாறைகள், மண், சேறு மற்றும் குப்பைகள் கலந்த பேரலைகள், சியாப்ருபேசி (Syabrubesi) மற்றும் திமுரே (Timure) உள்ளிட்ட இயற்கை எழில்மிக்க மலைக் கிராமங்களையும், பல்வேறு கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்த பகுதிகளையும் கண்மூடித் திறப்பதற்குள் துடைத்தெறிந்துள்ளன.

கட்டடங்கள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் வீதிகள் யாவும் பல அடி உயரத்திற்குச் சேற்றில் அரைகுறையாகப் புதையுண்டு கிடக்கின்றன. உள்நாட்டு மக்கள் மட்டுமன்றி, பெருமளவிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், இந்திய நாட்டவர்களும் இந்த அனர்த்தத்தில் (Disaster) சிக்கியுள்ளனர். 3,253 இற்கும் மேற்பட்டோர் ஹெலிகொப்டர் வான்வழி மீட்பு நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள போதிலும், சேற்றினால் நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ள நீர்மின் திட்டச் சுரங்கங்களுக்குள் சிலர் முடங்கியுள்ளமை மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நாசகார நிகழ்வானது வெறும் தற்செயலான ஒரு இயற்கைச் சீற்றம் என்ற எல்லையைக் கடந்து, புவி வெப்பமயமாதல் (Global Warming), கட்டுப்பாடற்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பிராந்திய எல்லைகடந்த நீர் ஆதார முகாமைத்துவம் (Transboundary Water Resources Management) ஆகிய முதன்மை அம்சங்கள் குறித்து ஆழமான உரையாடலையும் அவசர மறுபரிசீலனையையும் கோரி நிற்கின்றது.

இந்தக் கொடூரமான வெள்ளப் பெருக்கிற்கான அறிவியல்பூர்வமான பின்னணியை ஆராயும் போது, இமயமலைப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் அபாயகரமான மாற்றங்கள் தெளிவாகப் புலப்படுகின்றன. இமயமலையின் பனிப்பாறைகள் சீரான முறையில் உருகி நதிகளாகப் பாய்வது வழக்கமான ஒரு இயற்கைச் செயற்பாடாகும். இருப்பினும், காலநிலை மாற்றம் (Climate Change) மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக அண்மைய காலங்களாகப் பனிப்பாறைகள் முன்பை விட அதிவேகமாக உருகத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறு வேகமாக உருகும் நீரானது, தளர்வான மண் மற்றும் பாறைச் சிதைவுகளினால் சூழப்பட்ட பலவீனமான இயற்கை ஏரிகளாக (Glacial Lakes) மலை உச்சிகளில் தேங்குகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (United States Geological Survey - USGS) ஆரம்பகட்ட அறிக்கையில், ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான நிலநடுக்கமே (Earthquake) இந்த வெள்ளத்திற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், பின்னரான விரிவான ஆய்வுகள் அதனை மறுத்துள்ளன. செயற்கைக்கோள் ஒளிப்படத் தரவுகள் (Satellite Imagery Data) மற்றும் நில அதிர்வு அலை ஆய்வுகள் (Seismic Wave Analysis) மூலமாகப் பெறப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், நிலநடுக்கம் எதுவுமின்றி பெரும் பனிப்பாறை ஒன்று திடீரென உடைந்து சரிந்தமையே (Glacial Avalanche) இந்த அனர்த்தத்திற்கு முதன்மைக் காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் விளக்கியுள்ளது. அந்தப் பனிப்பாறைச் சரிவினால் ஏற்பட்ட அதிர்வே ரிக்டர் அளவுகோலில் 5.2 அலையாகப் பதிவாகியுள்ளது. பனிப்பாறை உடைந்து விழுந்த வேகம், ஏரியின் கரைகளை நொடிப்பொழுதில் சேதப்படுத்தி, சுமார் 20 இலட்சம் கனமீட்டர் தண்ணீரைச் சேற்றுடன் கலந்து கீழ்நோக்கிப் பாயச் செய்துள்ளது. இது அறிவியலில் பனிப்பாறை ஏரி உடைப்பெடுக்கும் வெள்ளப்பெருக்கு (Glacial Lake Outburst Flood - GLOF) என்று அழைக்கப்படும் அதிதீவிர அனர்த்த வடிவமாகும்.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சில மணிநேரங்களிலேயே, சீன எல்லையில் உள்ள பனிமலை உடைந்ததற்குக் காரணம் சீனா நிர்மாணித்து வரும் உலகின் மிகப்பெரிய அணைக்கட்டுச் செயற்திட்டமே (Mega Dam Project) என்ற குற்றச்சாட்டுக்கள் பிராந்திய ரீதியாகக் கிளம்பின. சீனாவின் திபெத் பிராந்தியத்தில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட அணையின் தடுப்பு உடைந்ததாலேயே பெருமளவு நீர் நேபாளத்திற்குள் பாய்ந்தது என்ற வதந்திகள் பரவியதுடன், நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள பகுதியில் அமையப்பெறும் இத்தகைய அணைகள் எதிர்காலத்தில் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்து உடைந்தால், இந்தியாவின் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவைச் சந்திக்கும் என்ற அச்சமும் உக்கிரமடைந்தது. இதற்கு பதிலளித்த நேபாளத்திலுள்ள சீனத் தூதரகம், தங்கள் நாட்டின் அணை உடைந்ததாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என்றும், நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்த பனிச்சரிவு மற்றும் மண்சரிவுமே வெள்ளத்திற்குக் காரணம் என்றும், தேவையில்லாமல் குற்றம்சாட்டுவதை விடுத்து ஒத்துழைப்பு மட்டுமே உயிர்களைக் காக்கும் என்றும் விளக்கமளித்தது. இத்தகைய அரசியல் அறிக்கைகளுக்கு அப்பால், தற்போதைய அறிவியல் ஆய்வுகளும் அவதானிப்புகளும் சீனத் தூதரகத்தின் விளக்கத்தையே பகுதி அளவில் உறுதிப்படுத்துகின்றன. அதாவது, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்குச் சீனா கட்டும் அணை நேரடியாகக் காரணமில்லை என்பது சான்றுகள் மூலம் புலப்படுகின்றது. ஆயினும், உயர் நிலநடுக்க அபாய வலையமைப்பில் (High Seismic Risk Zones) சீனா மேற்கொண்டு வரும் பாரிய நீர்மின் அணைக்கட்டுக் கட்டுமானங்கள் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன என்ற கவலையை முற்றாக நிராகரித்துவிட முடியாது. போதிய நீரியல் தரவுப் பகிர்வு இல்லாமையும், வெளிப்படைத்தன்மையற்ற திட்டடமிடல்களுமே திபெத் பகுதியில் நீர்த்தடுப்பு உடைந்ததாக மீண்டும் வதந்திகள் பரவி ஆற்றங்கரைகளில் வாழும் மக்கள் அச்சத்துடன் இடம்பெயரும் நிலையைத் தோற்றுவிக்கின்றன.

இமயமலைப் பிராந்தியத்தில் நிகழும் அனர்த்தங்கள், மனித சமூகத்தின் சுற்றுச்சூழலுக்கு எதிரான கட்டுப்பாடற்ற தலையீடுகளின் நேரடி விளைவாகும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நேபாள அரசாங்கமும் ஏனைய பிராந்திய நாடுகளும் இத்தகைய பேரிடர்களை "எதிர்பாராமல் நடந்த இயற்கை அனர்த்தம்" என்று கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. இமயமலையின் மென்மையான சூழலியல் மண்டலத்தில் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment - EIA) முறையான அமுல்படுத்தல் (Implementation) இன்றி, நிதிப் பலத்தையும் தொழில்நுட்பத்தையும் மட்டும் நம்பி மேற்கொள்ளப்படும் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் நீர்மின் திட்டச் சுரங்கங்களும் ஆபத்தையே இரட்டிப்பாக்குகின்றன. பனிப்பாறைகள் உருகும் வேகத்தைக் கண்காணிப்பதற்கான தொடர்ச்சியான அறிவியல் முகாமைத்துவம் (Scientific Assessment Management) இல்லாமையும், நதிப் பள்ளத்தாக்குகளில் வாழும் பொதுமக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் நேரத்தோடு தகவல்களைக் கொண்டு சேர்க்கும் ஆரம்ப எச்சரிக்கை முறைமை (Early Warning System - EWS) போதியளவில் தொழிற்படாமையுமே பலியானோர் மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை இந்தளவிற்கு உயர்வடைவதற்குக் காரணமாகும். இயற்கைச் சீற்றங்களை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், அறிவியல் பூர்வமான திட்டமிடல் மற்றும் முன்ஆயத்த நிலைகள் மூலம் இழப்புக்களைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தப் பின்னணியில், எதிர்காலத்தில் இத்தகைய அழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான வழிமுறைகள் உடனடியாக முன்மொழியப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். முதலாவதாக, தெற்காசிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே எல்லைகடந்த நீரியல் மற்றும் சூழலியல் தரவுப் பகிர்வு உடன்படிக்கை (Transboundary Hydrological Data Sharing Agreement) அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். திபெத் மற்றும் இமயமலை உயர்நிலப்பகுதிகளில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் நீர்மட்டம், பனிச்சரிவு அபாயங்கள் மற்றும் அணைக்கட்டுகளின் நீர்வெளியேற்றம் குறித்த உண்மையான நேரத் தரவுகள் (Real-time Data) நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே தடையின்றிப் பகிரப்படுவதை சட்டபூர்வமாக்க வேண்டும். இரண்டாவதாக, அதிநவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த கண்காணிப்பு திணைக்களங்கள் மூலம் இமயமலை முழுவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த ஆரம்ப எச்சரிக்கை வலையமைப்பை நிறுவ வேண்டும். மூன்றாவதாக, அனர்த்த ஆபத்துக் குறைப்பு (Disaster Risk Reduction - DRR) செயற்திட்டங்களின் கீழ், நதிக்கரையோரக் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்ட அமுல்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத்தான சூழலியல் வலையமைப்புகளில் (Eco-sensitive Zones) பாரிய கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கப்படுவதோடு, சமூகம் சார்ந்த அனர்த்த முகாமைத்துவம் (Community-Based Disaster Risk Management) திட்டங்கள் உள்ளூர் மொழிகளில் முன்னெடுக்கப்பட்டு மக்கள் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் என்பது ஏதோ ஒரு நாட்டின் எல்லைக்குள் நடந்த தனிப்பட்ட இயற்கை அனர்த்தம் அல்ல; மாறாக, அது முழு இமயமலைப் பிராந்தியத்திற்கும் விடுக்கப்பட்ட தீவிரமான இயற்கையின் எச்சரிக்கை மணி (Nature's Warning Sign) ஆகும். புவிசார் அரசியல் போட்டிகளையும் குற்றச்சாட்டுகளையும் தாண்டி, சூழலியல் பாதுகாப்பிலும் மனித உயிர்களைக் காப்பதிலும் பிராந்திய நாடுகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மட்டுமே ஒரே தீர்வாக அமைய முடியும். காலநிலை மாற்றத்தின் கொடூரமான சவால்களை எதிர்கொள்வதற்கு அறிவியல்பூர்வமான முகாமைத்துவம், வெளிப்படையான தகவல் பகிர்வு மற்றும் சூழலியல் நட்புடை அபிவிருத்திப் பாதை ஆகியவற்றை உடனடியாகத் தேர்ந்தெடுப்பதே மனிதகுலம் இப்பேரிடரிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய தலையாய பாடமாகும்.

0 comments:

Post a Comment