ADS 468x60

30 August 2026

செயற்கை நுண்ணறிவு விளம்பரங்கள்: படைப்பாற்றலே பிராண்ட் பெறுமதியைத் தீர்மானிக்கிறது

இணையவழி வர்த்தக தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் தோன்றும் பெரும்பாலான விளம்பரங்கள் இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்படுகின்றன அல்லது மேம்படுத்தப்படுகின்றன. சில நொடிகளில் எழுதப்பட்டு, ஒவ்வொரு நுகர்வோரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு, சரியான நேரத்தில் சரியான வாடிக்கையாளரை சென்றடையும் இந்த விளம்பர முறை, வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தையே மாற்றி வருகிறது.

இது இனி பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் உரித்தான ஒரு நடைமுறையல்ல. இலங்கையிலும் வர்த்தக நிறுவனங்கள் விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கவும், பொருட்களை பரிந்துரைக்கவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், நுகர்வோர் செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்படும் விளம்பரங்களை விரும்புகிறார்களா, இந்த விளம்பரங்கள் ஒரு பிராண்டை (Brand) பலப்படுத்த முடியுமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையின் நுகர்வோர் விரைவான தேவைப் பொருட்கள் (Fast-Moving Consumer Goods – FMCG) துறையில், செயற்கை நுண்ணறிவு விளம்பரங்களுக்கு நுகர்வோர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர் என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, 335 நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தெளிவான ஒரு பாணியை வெளிப்படுத்தியுள்ளது.

படைப்பாற்றல் மிக்கதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும், தமது தேவைகளுக்கு பொருத்தமானதாகவும் விளம்பரங்களை நுகர்வோர் கருதும்போது, அவர்கள் அந்த பிராண்ட் மீது சாதகமான மனநிலையை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த சாதகமான மனநிலை, இறுதியில் பிராண்ட் பெறுமதியை (Brand Equity) — அதாவது ஒரு பிராண்ட் மீது நுகர்வோர் வைத்திருக்கும் ஒட்டுமொத்த பெறுமதி உணர்வைபலப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் விளம்பரத் துறை பாரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி அல்லது விளம்பரப் பலகைகள் போன்ற பாரம்பரிய ஊடகங்களை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை மாறி, தரவு பகுப்பாய்வு (Data Analytics) மூலம் நுகர்வோர் விருப்பங்களையும் இணையவழி நடத்தைகளையும் புரிந்துகொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட (Personalized) செய்திகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. ஒரே விளம்பரத்தை அனைவருக்கும் வழங்குவதற்குப் பதிலாக, வெவ்வேறு நுகர்வோர் பிரிவுகளுக்கு ஏற்ப வெவ்வேறு விளம்பரங்களை உருவாக்க முடிகிறது. இது வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிப்பதுடன், பிரச்சார செலவையும் நேரத்தையும் குறைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

ஆய்வின் கண்டுபிடிப்புகள் மேலும் தெளிவுபடுத்துவது என்னவெனில், செயற்கை நுண்ணறிவு விளம்பரங்களின் வெற்றி, தொழில்நுட்ப மேம்பாட்டில் மட்டும் தங்கியிருக்கவில்லை; உருவாக்கப்படும் உள்ளடக்கத்தின் தரம் மற்றும் பொருத்தப்பாட்டிலும் தங்கியுள்ளது. நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும், பயனுள்ள தகவல்களை வழங்கும், இனிமையான அனுபவத்தை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மட்டுமே பிராண்ட் மீதான நுகர்வோர் மதிப்பீட்டை சாதகமாக மாற்ற முடியும்.

பெரும்பாலான வர்த்தக முகாமைத்துவ (Management) வல்லுநர்கள், ஏற்கனவே பிராண்ட் மீது நம்பிக்கை (Brand Trust) வைத்திருக்கும் நுகர்வோர் மத்தியில் மட்டுமே செயற்கை நுண்ணறிவு விளம்பரங்கள் சாதகமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கருதுகின்றனர். இயந்திரத்தால் உருவாக்கப்படும் உள்ளடக்கம் மனிதத் தொடர்பை இழக்கக்கூடும் என்றும், முன்னரே பிராண்டு மீது நம்பிக்கை இல்லாத நுகர்வோரிடையே இது சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் இந்த கருத்து முன்வைக்கப்படுகிறது.

எனினும், மேற்குறிப்பிட்ட ஆய்வின் தரவுகள் இதற்கு மாறான ஒரு உண்மையை வெளிப்படுத்துகின்றன. பிராண்ட் நம்பிக்கை, செயற்கை நுண்ணறிவு விளம்பரங்களுக்கும் பிராண்ட் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் தமது முன்னைய பிராண்ட் நம்பிக்கையை பொருட்படுத்தாமல், படைப்பாற்றல் மிக்கதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் விளம்பரங்களுக்கு சாதகமாகவே பிரதிபலிக்கின்றனர். இது, நுகர்வோர் விளம்பரத்தை உருவாக்கியது மனிதனா அல்லது இயந்திரமா என்பதைக் காட்டிலும், அது வழங்கும் தரத்தையும் பயனையுமே முதன்மையாகக் கருதுகின்றனர் என்பதைக் காட்டுகிறது.

எனினும், இதன் பொருள் பிராண்ட் நம்பிக்கை முக்கியத்துவமற்றது என்பதல்ல. நீண்டகால வாடிக்கையாளர் உறவுகளையும், விசுவாசத்தையும், நம்பகத்தன்மையையும் கட்டியெழுப்புவதில் பிராண்ட் நம்பிக்கை இன்றியமையாததாகவே தொடர்கிறது. ஆகவே, குறுகிய கால விளம்பர பயனுக்காக மட்டும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதைவிட, சீரான மற்றும் வெளிப்படையான வர்த்தக நடைமுறைகள் மூலம் நம்பிக்கையை தொடர்ந்து பலப்படுத்தும் அணுகுமுறையே வர்த்தக நிறுவனங்களுக்கு பொருத்தமானதாக அமையும்.

செயற்கை நுண்ணறிவு, மனித படைப்பாற்றலுக்கு மாற்றாக அல்லாமல், அதனை பலப்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே தரவுகள் வழங்கும் தெளிவான வழிகாட்டல். எண்ணங்களை உருவாக்கவும், நுகர்வோர் நடத்தையை பகுப்பாய்வு செய்யவும், பிரச்சார திறனை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு உதவக்கூடும். எனினும், அர்த்தமுள்ள கதைகளை உருவாக்குதலும், உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்துதலும் மனித படைப்பாற்றலிலேயே தங்கியுள்ளன.

இலங்கை வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக நுகர்வோர் விரைவான தேவைப் பொருட்கள் துறையினைச் சேர்ந்தவை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்போது சில கட்டமைப்பான நடைமுறைகளை அமுல்படுத்தல் சிறந்ததாக அமையும். முதலாவதாக, செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் உள்ளடக்கத்தை மனிதவள படைப்பாற்றல் குழுக்கள் மறுஆய்வு செய்து, உள்ளூர் கலாசார பொருத்தப்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு கூட்டு பணி முறைமையை (Human-in-the-loop) அறிமுகப்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். இரண்டாவதாக, விளம்பரங்கள் செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்டவை என்பதை வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் நடைமுறையை பின்பற்றுவது, நுகர்வோர் தனியுரிமை மற்றும் நேர்மை தொடர்பான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். மூன்றாவதாக, தரவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் தனியுரிமை தொடர்பான தெளிவான கொள்கைகளை வகுத்து, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதற்கு உட்பட்டதாக நடத்துவது நீண்டகால நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.

மேலும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு கருவிகளை அணுகக்கூடிய வகையில் வழங்கும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை, தொழில்துறை சார் நிறுவனங்களும் அரச திணைக்களங்களும் இணைந்து முன்னெடுப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமமான பங்கேற்பை உறுதிப்படுத்த உதவும்.

செயற்கை நுண்ணறிவு நவீன சந்தைப்படுத்தலின் இன்றியமையாத அங்கமாக மாறி வருகிறது, மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அதன் தாக்கமும் விரிவடையும். இலங்கை நுகர்வோர், படைப்பாற்றல் மிக்கதாகவும், பயனுள்ளதாகவும், தமது தேவைகளுக்கு பொருத்தமானதாகவும் அமையும் செயற்கை நுண்ணறிவு விளம்பரங்களை ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளனர் என்பதை ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

தொழில்நுட்பத்தில் மட்டும் முதலீடு செய்வது வெற்றியை உறுதி செய்யாது; மனித படைப்பாற்றலையும், மூலோபாய சிந்தனையையும், நுகர்வோர் எதிர்பார்ப்புகள் மீதான உண்மையான புரிதலையும் இணைத்தே அதிக பெறுமதியை உருவாக்க முடியும். இந்த சமநிலையை அடையும் வர்த்தக நிறுவனங்களே, எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தில் பலமான பிராண்டுகளை கட்டியெழுப்பி, வெற்றிகரமாக போட்டியிட முடியும்.

0 comments:

Post a Comment