2025 ஆம் ஆண்டு தமிழக
அரசின் அயலகத் தமிழர் தின விழாவிலும் மு.க.ஸ்டாலின், “நாடு,
நில எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள்
நம்மைப் பிரித்தாலும் தமிழ் மொழி தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால்
ஒன்றாக இருக்கிறோம்! தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி! அந்த உணர்வோடு
உறவோடு தாய் மண்ணாம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரையும், உங்களில் ஒருவனாக வருக… வருக… என்று வரவேற்கிறேன்!” என அழைத்திருந்தார்.
இவ்வாறானதொரு வரலாற்றுப் பெருமையுடனும், உலகத் தமிழர்களுடனான
உறவை வலியுறுத்தும் கூற்றுக்களுடனும் தமிழ்நாட்டு அரசியல் செயற்பாடுகள்
அமைந்திருக்கும் நிலையில், சில வாரங்களுக்கு முன் சென்னை
உயர்நீதிமன்றம் ஓர் ஈழத் தமிழ் அகதி தொடர்பான வழக்கில் வெளியிட்ட தீர்ப்பும்,
அதன்பால் தமிழக அரசியல் மட்டத்தில் எழுந்த மௌனமும் ஆழமான கேள்விகளை
எழுப்பியுள்ளன.
ஈழத்தமிழர்களின் வரலாற்றில்
கனதியான வலியைச் சுமந்த மே மாதத்தில்,
தொப்புள் கொடி உறவாக நினைத்துக் கொண்டுள்ள தமிழகமும், 2025 ஆம் ஆண்டு பெருவலியை அளித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 2018
ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஓர் ஈழத்தமிழரின் மேல்முறையீட்டு வழக்கே இது. இந்த
வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு
விசாரிக்கப்பட்டு, அவரது சிறைத் தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, தண்டனை முடிந்ததும்
இலங்கைக்கு நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிராக அவர்
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து
இருப்பதாகவும், தனது மனைவி, குழந்தைகள்
இந்தியாவில் குடியேறிவிட்டதாகவும் கூறி, தன்னை நாடு கடத்தும்
நடவடிக்கைகளைத் தவிர்த்து இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் எனக்
கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை
உயர் நீதிமன்ற நீதிபதிகள், “உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கனவே நாங்கள் 140 கோடி மக்களுடன் இருந்து போராடி
வாழ்ந்து வருகிறோம். இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும்
வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல. இந்தியாவில்
குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இலங்கையில் உயிருக்கு
ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்” எனக்
கூறி, மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இத்தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சொல்லாடல்கள் ஈழத்தமிழர்களை வெகுவாகப்
பாதித்துள்ளன. ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் நிலைமைகளுக்கும் முரண்பாடுகளுக்கும்
பின்னால் தமிழக – ஈழத்தமிழர் புவியியல் தொடர்பு கணிசமான தாக்கத்தைச்
செலுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.
இலங்கையின் தேசிய
இனப்பிரச்சினையின் பின்புலம், தமிழகத்தை ஈழத்தமிழருடன் பின்னிப் பிணைந்த புவியியல் – பண்பாட்டு –
வரலாற்றுப் பின்னணியில் வைத்து யதார்த்த நிலமைகளுக்கு ஊடாக அணுக வேண்டிய அவசியத்தை
அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். மனிதனது அரசியல்
வாழ்வானது அவன் சார்ந்த சூழ்நிலைகளினாலும் பின்னணிகளினாலும்
நிர்ணயிக்கப்படுகின்றது என்பது தெளிவானது. அப்படிப் பார்க்கையில் புவியியல்
அமைவிடம் சார்ந்த தர்க்கரீதியான யதார்த்தபூர்வ நிலமைகளின்படி தமிழகம்தான் ஈழத்
தமிழர்களின் குருவிக்கூடு.
அதேவேளை, ஈழத்தமிழர்கள் வாழும் மண்தான்
இந்தியாவின் மூலைக்கல் அல்லது மூலக்கல் (Corner Stone) என்பதனையும்
கருத்திற்கொள்ளத் தவறமுடியாது. நவீன வரலாற்றிலும் இலங்கையின் ஆயுதப்போராட்டத்தின்
ஆரம்பத்திலும், 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில்
ஈழத்தமிழர்களின் தமிழகம் தொடர்பான எதிர்பார்க்கையும் அதனையே உறுதி செய்கின்றது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால இயக்கங்களுக்கு தமிழகமே
பாதுகாப்பளித்தது. போராட்ட இயக்கங்கள் தமிழகத்தில் காலூன்றி, தமிழகத்தை ஒரு குருவிக்கூடாகக் கொண்டிருந்த காலத்தில்தான் விடுதலைப்
போராட்டம் வளர்ந்து சென்றது.
தமிழகத்திலிருந்து
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அந்நியப்பட்டபோது விடுதலைப் போராட்டம்
எதிர்நிலையைக் கொண்டது. குறிப்பாக 1987
இற்குப் பின்னர் தமிழக – ஈழத்தமிழர் உறவில் விரிசல் அடையாளம்
காணப்படுகின்றது. அதன் விளைவே 2009 இல் ஆயுதப் போராட்டத்தின்
தோல்வியாகும். ஒத்த இன சகோதரத்துவம் (Ethnic Brotherhood) சர்வதேச
அரசியலில் நிர்ணயகரமான சக்திகளில் ஒன்றாகும். குறிப்பாக நாடுகடந்த இஸ்லாமிய
சகோதரத்துவ அரசியலிலும், கனடாவின் கியூபெக் பிரஞ்சின
சகோதரத்துவ அரசியலிலும் நாடுகடந்த சகோதரத்துவ அரசியல்களின் வெற்றிகளைக் காணலாம்.
ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றிலும் தமிழகம் கனதியான வகிபாகத்தை வகித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் விடுதலையை மையப்படுத்தி 1995 ஆம் ஆண்டில்
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரவூப் தீக்குளித்து உயிரை
மாய்த்துக்கொண்டார். இந்த வரிசையில் தாயகத்துக்கு வெளியே தமிழகத்தில் 15 பேர் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உயிரை மாய்த்துள்ளனர். இவ் உறவுநிலை
மேன்மையானதுடன், ஈழத்தமிழ் மற்றும் தமிழக உறவின் வலிமையைப்
பறைசாற்றுகின்றது.
இந்தியா, தனது சட்ட மற்றும் இறையாண்மை
நிலைப்பாட்டின்படி அகதிகளை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது தொடர்பான
முடிவுகளை எடுக்க உரிமை கொண்டுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்படலாம். மேலும்,
இந்தியாவிற்கு அதன் சொந்த மக்கள் தொகை மற்றும் வள மேலாண்மை சவால்கள்
இருப்பதால், அனைத்து வெளிநாட்டினரையும் வரவேற்பது நடைமுறைச்
சாத்தியமற்றது என்றும் கூறப்படலாம். நீதித்துறை சுதந்திரமானது என்றும், நீதிமன்றத் தீர்ப்புகளில் அரசியல் தலைமைகள் தலையிட முடியாது என்றும் சிலர்
வாதிடலாம்.
ஆனால், இத்தகைய வாதங்கள் சென்னை
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் பயன்படுத்தப்பட்ட “இந்தியா
தர்ம சத்திரம் கிடையாது” போன்ற உணர்வுபூர்வமான மற்றும்
இழிவுபடுத்தும் சொல்லாடல்களை நியாயப்படுத்த முடியாது. இத்தகைய கூற்றுக்கள்,
தமிழகத்தின் "தொப்புள் கொடி உறவு" என்ற வாய்மொழி
அறிக்கைகளுக்கும், மனிதாபிமான மரபுகளுக்கும் முரண்படுகின்றன.
சீனா திபெத்தை
ஆக்கிரமித்தபோது, தலாய்லாமாவை
இந்திய எல்லைக்கே சென்று அப்போதைய பிரதமர் நேரு வரவேற்று அடைக்கலம் கொடுத்த வரலாறு,
இந்தியாவின் அகதி கொள்கைகளில் மனிதாபிமானக் கோணம் இருந்ததைக்
காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வந்த
குடியுரிமை திருத்த சட்டத்தில், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்து, சீக்கிய,
பௌத்த, பார்சி, கிறிஸ்தவ
மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஆவணமற்ற மக்களுக்கு குடியுரிமை வழங்க ஏதுவான
சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் சிறுபான்மை
இந்து மத சமூகங்கள் ஒடுக்கப்படுவதனையே குறிக்கின்றது.
இந்தப் பின்னணியிலேயே
இலங்கையும் அரசியலமைப்பு ரீதியாகவே பௌத்த பெரும்பான்மை நாடு ஆகும். அதேவேளை, சிறுபான்மை தேசிய இனமான
ஈழத்தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். இந்தியா அயல்நாடு என்ற அடிப்படையிலும்,
தமிழகம் மொழியாலும் பண்பாட்டாலும் ஒத்த இனம் என்ற அடிப்படையிலும்
ஈழத்தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமிழகத்தில் தஞ்சம் கொள்கின்றனர்.
அரசியலமைப்பு ரீதியாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்து மதக் குடும்ப மக்களை ஏற்றுக்கொள்ளும் இந்திய அரசு,
ஈழத்தமிழர்களை வேறு நாட்டுக்கு செல்லுமாறு நிந்திப்பதை ஒத்த சகோதர
இனத்துவமான தமிழகம் அமைதியாக ஏற்றுக்கொள்கின்றது.
இது தமிழக அரசியல்
தலைமைகளின் தமிழர்கள் மீதான அக்கறையின்மையையே உணர்த்துகின்றது. சமகாலத்தில்
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற சூழலில் வங்காள இந்து மக்கள்
ஒடுக்கப்படுவதற்கு எதிராக இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் அரசியல் தலைவர்களும்
மக்களும் ஒன்று திரண்டார்கள். அத்தகையதொரு கூட்டு ஆதரவை ஈழத்தமிழர்களுக்குத்
திரட்டக்கூடிய அரசியல் திராணியைத் தமிழக தலைவர்கள் வெளிப்படுத்த தவறியுள்ளார்கள்.
இதுவொரு வகையில் தமிழக – ஈழத்தமிழர் உறவை பலவீனப்படுத்துவதில் தமிழக அரசியல்
தலைவர்களின் விருப்பையும் அடையாளப்படுத்துகின்றது.
ஈழத்தமிழ் அகதிக்கு எதிரான
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் தமிழக அரசியல் மட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஊடக சந்திப்பில் கருத்துரைத்திருந்தார். “இலங்கை தமிழர் ஒருவர் கொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது, பிறநாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு இடம் கொடுக்க இந்திய சத்திரம்
அல்ல என்று சொல்லியிருப்பது, மனிதாபிமானத்திற்குப் புறம்பாக
இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே உலகத்
தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அளவுகடந்த வேதனையை அளிக்கிறது.
புத்தரும், மகாவீரரும், காந்தியும் பிறந்த இந்த மண்ணில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தமிழர்களின் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது” எனத்
தெரிவித்துள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அறிக்கை அரசியல் செய்துள்ளனர். ஊடக
சந்திப்பில் கருத்துப் பகிர்வும், அறிக்கை அரசியலுமே தமிழக
அரசியல் தரப்பில் உயர்ந்தபட்ச எதிர்வினையாக உள்ளது. குறைந்தபட்சம் தமிழக
மக்களிடையே ஈழத்தமிழ் அகதி புறமொதுக்கப்படுவதை செய்தியாகக் கொண்டு சேர்த்து,
தமிழக மக்களிடையே பொது எதிர்ப்பை உருவாக்குவதைக் கூட தமிழக அரசியல்
தலைமைகள் செய்யத் தயாராகவில்லை.
ஈழத் தமிழர்களை மலினமாக
கையாளும் நடவடிக்கையினை சென்னை உயர் நீதிமன்றம் மாத்திரம் கொண்டிருக்கவில்லை.
தமிழகத்தின் அரசு இயந்திரங்கள் யாவும் ஒரே எண்ணப்பாங்கிலேயே பெருமளவு
இயங்குகின்றது. குறிப்பாக தமிழகத்தின் சாஸ்திரி பவனுக்கு ஈழத்தமிழர்கள் தமது
இந்திய அரசிடமிருந்தான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளச் செல்கின்ற போது, அங்குள்ள உத்தியோகத்தர்கள்
ஈழத்தமிழர்களை உதாசீனம் செய்யும் நிலைமைகளே காணப்படுகின்றன. ஆங்கிலத்தில் அல்லது
சிங்களத்தில் உரையாடுகையில் மரியாதை கொடுக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன என்பதனை
பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
அவ்வாறே சென்னை விமான
நிலையத்தில் ஈழத்தமிழர்களை தரக்குறைவாக நோக்கும் நிலைமைகளே காணப்படுகின்றன.
ஈழத்தமிழர்களின் பொதிகளைக் கிளறுவது,
தாமதப்படுத்துவது என்பது சாதாரண நிகழ்வாக அமைகின்றது. இங்கே
தமிழகத்தின் சாஸ்திரி பவனிலும் மற்றும் சென்னை விமான நிலையத்திலும் தமிழையே
புறமொதுக்குகின்றனர். இதனை எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் கேள்வி கேட்கத்
தயாரில்லை. எனினும் தம்மைத் தமிழினத்தின் தலைவர்களாகச் சித்தரிக்க
போட்டியிடுகின்றார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தின்
நீதிபதிகளின் அறிவிப்பு, தமிழகம் தமிழரின் தாய் நிலமாகச் சித்தரித்துவரும் வடிவத்தைச் சிதைப்பதாகவே
காணப்படுகின்றது. இதனை தமிழக அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொள்வது, தமிழைத் தமிழக எல்லைக்குள் சுருக்கும் அவர்களது குறுகிய நலன்களையே
உணர்த்துகின்றது. தமிழக அரசின் அயலகத் தமிழர் தினம் போன்ற நிகழ்வுகளும் அங்கு
நிகழும் உரையாடல்களும் வெறுமனே போலிகளால் நிறைந்தவை என்பதையே உறுதி செய்கின்றது.
2025 ஆம் ஆண்டு அயலகத்
தமிழர் தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஐம்பதுக்கும்
மேற்பட்ட நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில்
இருந்தும் வருகை தந்திருக்கும் உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாட்டு ஒன்று நினைவிற்கு வருகிறது. “எங்கும்
பாரடா இப்புவி மக்களை – பாரடா உனது மானிடப் பரப்பை! பாரடா உன்னுடன் பிறந்த
பட்டாளம்! ‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து
மகிழ்ச்சி கொள்” என்று பாவேந்தர் பாடினார். அப்படிப்பட்ட மகிழ்ச்சிதான் இப்போது
என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது!” எனத் தனது உரையை ஆரம்பித்தார். எனினும்
நீதிமன்றம் தன்குலத்தை அவமானம் செய்து, வெளியேற
நிர்ப்பந்தித்துள்ளதைக் கண்டு சினங்கொள்ளாதது, தமிழக அரசின்
போலித் தன்மையையே கேள்விக்குட்படுத்துகிறது.
இந்தியா தனது குடியுரிமைத்
திருத்தச் சட்டம் மூலம் அண்டை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க முன்வரும்போது, இன ஒடுக்குமுறைக்கு ஆளாகித்
தஞ்சம் புகும் ஈழத்தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் மறுப்பது
இரட்டை வேடமாகும். தமிழக அரசியல் தலைமைகள் வெறும் அறிக்கை அரசியலுக்கு அப்பால்
சென்று, இந்திய நடுவண் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான
பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஈழத்தமிழர்களின் புகலிட மற்றும்
குடியுரிமை உரிமைகளுக்கு உரிய தீர்வைக் காண வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு
திணைக்களங்கள் மற்றும் நுழைவுப் புள்ளிகளில் ஈழத்தமிழர்கள் மீது காட்டப்படும்
பாரபட்சமான அணுகுமுறைகளைக் களைந்து,
அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட
வேண்டும். அதேபோல, ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழக
மக்களின் உணர்வுகளை வினைத்திறனாக ஒருங்குசேர்த்து, தமிழக
அரசியல் பரப்பில் ஈழத்தமிழர் நீதிக்கான குரலை வலுவாக ஒலிக்கும் திறனை
வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின்
இந்தத் தீர்ப்பும், தமிழக அரசியல் மட்டத்தின் அதன் மீதான மென்மையான எதிர்வினையும், தமிழகம் தன்னை "தமிழர்களின் தாய் நிலம்" எனச் சித்தரிக்கும்
வாதத்தில் உள்ள ஆழமான முரண்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இது
வெறும் சட்டரீதியான பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு வரலாற்று,
பண்பாட்டு, மற்றும் இனரீதியான பிணைப்பின் மீது
விழுந்த அடியாகவும் அமைகின்றது. தமிழக அரசியல் தலைவர்கள் தமது குறுகிய அரசியல்
எல்லைகளைத் தாண்டி, உலகத் தமிழினத்தின் தலைமையாக உண்மையிலேயே
நிலைபெற விரும்பினால், இத்தகைய சந்தர்ப்பங்களில்
வெளிப்படையான, உறுதியான, மற்றும்
மனிதாபிமான அடிப்படையிலான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களும் இத்தகைய
நிகழ்வுகளிலிருந்து விழித்துக்கொண்டு, வெறும் வாய்மொழி
ஆதரவுக்கு அப்பால், உறுதியான அரசியல் செயற்பாடுகளின்
அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக – ஈழத்தமிழர் உறவு வெறுமனே
உணர்ச்சிபூர்வமான முழக்கங்களாக இல்லாமல், பரஸ்பர நீதிக்கும்
கண்ணியத்திற்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே இச்சூழலின் அத்தியாவசியத்
தேவையாகும்.
0 comments:
Post a Comment