ADS 468x60

26 January 2026

எனது எழுத்து; வெறும் மையல்ல... அது நம் சமூகத்தின் விடியலுக்கான மெய்யான தேடல்!"

வணக்கம்! அன்பின் உறவுகளே!

"ஆசை" - இந்த ஒரு வார்த்தைதான் மனித இனத்தின் அத்தனை ஓட்டங்களுக்கும் அடிப்படை. புத்தர் பெருமான் "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்றார். ஆனால், அதே ஆசை தனிமனிதனுக்காக இல்லாமல், இந்த சமூகத்தின் விடிவுக்காக இருக்கும்போது, அது துன்பத்தை அல்ல, மாற்றத்தையே தரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்று உங்கள் முன் நான் ஒரு சாதாரண மனிதனாக நிற்கவில்லை; கனவுகளைச் சுமந்த ஒரு கர்ப்பிணிப் பையாக, என் எழுத்துக்களைச் சுமந்து நிற்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அது சிலருக்குச் சிறிதாகத் தெரியலாம், சிலருக்குப் பெரிதாகத் தோன்றலாம். ஆனால், என் ஆசை இந்தச் சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடும் ஒரு சிறிய முயற்சி மட்டுமே.

எனது இந்த எழுத்துப் பயணம், "வெள்ளிச்சரம்" ஊடாக நான் விதைத்த விதைகளில் இருந்து தொடங்குகிறது. ஆம், வெள்ளிச்சரத்தில் நான் ஆக்கபூர்வமாக வடித்து வருகின்ற படைப்புகளை, காலத்தால் அழியாத புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்கின்ற 'பேரவா' என் மனதிற்குள் கனன்று கொண்டே இருக்கின்றது.

உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம், அல்லது அறிந்திருப்பீர்கள். 2017-ம் ஆண்டு, 'ஊர்க்குருவியின் உலா' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தேன். என் வாழ்நாளில் நான் அடைந்த எத்தனையோ வெற்றிகளை விட, அந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வு எனக்குத் தந்த மகிழ்ச்சி, ஈடு இணையற்றது. ஒரு தாய் தன் பிள்ளையை உலகுக்கு அறிமுகம் செய்யும் அந்தத் தருணத்தில் கொள்ளும் பூரிப்பு அது.

ஆனால் உறவுகளே, கவிதை என்பது மனதின் மெல்லிய தென்றல். இன்று சமகாலச் சூழலுக்குத் தேவைப்படுவதோ அறிவார்ந்த புயல்!

அந்தக் கவிதை நூலை விட ஆயிரம் மடங்கு கனதியான, சமூகத்திற்குத் தேவையான விடயங்கள் என் வசம் உள்ளன. இந்தச் சமூகத்திற்கான நற்போதனைகள் அடங்கிய வழிகாட்டல் கட்டுரைகள், சரிந்து கிடக்கும் நம் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பொருளாதார வழிகாட்டுதல்கள் (Economic Guidance), மனிதவள மேம்பாடு (Human Resource Development) சார்ந்த ஆழமான சிந்தனைகள் எனப் பல பொக்கிஷங்கள் என்னால் எழுதப்பட்டு, அவை அச்சுவாகனத்தில் ஏறக் காத்திருக்கின்றன.

குறிப்பாக, இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையான "அனர்த்த முகாமைத்துவம்" (Disaster Management) பற்றிப் பேச விரும்புகிறேன். அனர்த்தம் வந்த பின் அழுவதை விட, அனர்த்தம் வரும் முன் காப்பதும், அதிலிருந்து விடுபடுவதற்கான முன்னாயத்தங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக 'மீண்டெழுதல்' (Resilience) என்கின்ற தத்துவமும் மிக முக்கியமானது. விழுவது இயல்பு, ஆனால் விழுந்த இடத்திலேயே கிடக்காமல், பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுவது எப்படி என்பதை விளக்கும் பல கட்டுரைகளை நான் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

அமெரிக்காவின் அறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin) ஒருமுறை சொன்னார்: "ஒன்று படிக்கத் தகுந்ததை எழுதுங்கள், அல்லது எழுதுவதற்குத் தகுந்ததைச் செய்யுங்கள்."

நான் இந்த இரண்டையும் இணைக்க முயற்சிக்கிறேன். என் அனுபவத்தில் நான் கண்டதையும், கற்றதையும், உணர்ந்ததையும் எழுதுவதற்குத் தகுந்த செயல்களாக மாற்ற விரும்புகிறேன்.

ஆனால், இந்தச் சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறுவது என் கையில் மட்டும் இல்லை. இவை வெறும் புத்தகங்கள் அல்ல; இவை நாளைய சந்ததிக்கான வழிகாட்டிகள். இதை வெளிக் கொணர, எனக்குத் தேவையான பலத்தையும், இடைவிடாத உழைப்பையும், தளராத தைரியத்தையும் அந்த ஆண்டவன் எனக்குத் தர வேண்டும் என்று, உங்கள் சாட்சியாக வேண்டிக் கொள்கிறேன்.

என் அன்பின் உறவுகளே!

எழுத்து என்பது ஒரு தவம். அந்தத் தவத்தின் பலன் மக்களைச் சென்றடையும் போதுதான் அது முழுமை பெறுகிறது. சவால்கள் நிறைந்த இந்த உலகில், என் எழுத்துக்கள் உங்களுக்கு ஒரு கைவிளக்காக, ஒரு ஊன்றுகோலாக இருக்க வேண்டும் என்பதே என் அவா. இதற்கு உங்கள் அனைவரின் அன்பும், ஆசியும் எனக்கு வேண்டும்.

என் சிந்தனைகள் உறங்கும் ஏடுகளாக இல்லாமல், சமூகத்தை உசுப்பும் ஆயுதங்களாக மாறட்டும்!

இவண், உங்கள் அன்பின், சி.தணிகசீலன்

0 comments:

Post a Comment