ADS 468x60

01 January 2026

ஆழம் தேடும் இளமையின் விழித்திரை!

வணக்கம்! அன்பின் உறவுகளே!

"நேரம் என்பது நொடிகளில் கடப்பது அல்ல; அந்த நேரத்தில் என்ன உணர்ந்தோம், என்ன சாதித்தோம் என்பதே!"

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத ஒரு பெரும் சவாலை, எங்கள் இளைஞர்கள் சமூகம் இன்று எதிர்கொண்டு நிற்கிறது. உலகில் அதிக கனவுகளைச் சுமந்து, தங்கள் வாழ்வை நகர்த்தும் கூட்டம் எங்கள் இளையோர் கூட்டம் தான். இவர்களின் இமைக்கா நொடிகள் இதயங்களையும், இமயங்களையும் நோக்கிய வண்ணமாகவே உள்ளன. மாற்றங்கள் விரும்பும் உலகில், மாற்றத்தின் துளிர்கள் இந்த இளைஞர்களே என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.

என்னதான் வாழ்க்கை அழுத்தத்தைக் கொடுத்தாலும், அடுத்த நொடியே விடியலைத் தேடி ஓடத் தொடங்கிவிடுகின்றனர் எங்கள் தோழர்கள். ஆனால், இத்தகைய இளையோர் வாழ்வில் ஓர் இடியாக, இன்றைய சமூக ஊடகங்களின் "30 நொடிக் கலாசாரம்" வாழ்வியலை மாற்றி வருகின்றது. எதிலும் முழுமையானக் கவனம் அதிகம் வருவதில்லை.

சும்மா கடந்துபோகும் நேர்மறை எண்ணத்தைத் தவிர்த்து, அனைத்தையும் கடந்து, எதிலும் ஆழமும், அழுத்தமும் பெறாமல் வாழும் வாழ்க்கை, இறுதியில் ஒரு வெறுமையிலும், விரகத்தியிலுமே முடிவடைகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று, நான் எங்கள் இளைஞர்களோடு பொழுதுப்போக்காகக் கேட்ட போது, அவர்களின் விடை என் விழிகளைப் பிதுக்கியது. அவர்களின் மனதில் இன்று ஒரு எண்ணம் ஓடுகின்றது:

“வாழ்க்கையில் அனைத்தும் 30 நொடிகள் மட்டுமே!”

ஆம், அன்புக்குரிய தோழர்களே! அனைத்தும் 30 நொடிகள். அதுவே இன்று அதிகமாக உள்ளது. நம் இளம் தோழர்கள் அனைத்தையும் 30 நொடிகளுக்குள் நிறைவு காணவே விரும்புகின்றனர். பெரியவர்கள் 30 நொடிகளுக்கு மேலாகப் பேசினால் அது ‘அறுவை’ என்கிறார்கள். காணொளிகள் 30 நொடிகளுக்கு மேலாக இருந்தால் அது ‘மொக்கை காணொளி’ என்கிறார்கள். வகுப்புகள் 30 நிமிடங்களுக்கு மேல் போனால், "போதும்!" என்கிறார்கள். எந்தக் கூட்டமாக இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு மேல் சென்றால், நம் கைகள் அவசியமின்றி அலைப்பேசியைத் தேடி அலைப்பாய்கின்றது.

பொழுதுப் போகவில்லை என நினைத்து பொழுதைப் போக்கிறோம். ஆனால், காலம் நம்மையும், நம் கனவுகளையும் விட்டுக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது என்பதை உணர மறுக்கிறோம், மறக்கிறோம். விளைவு? வாழ்க்கையிலும் நாட்டமில்லை, சமூகத்திலும் பொறுப்பில்லை. நாட்டிற்கும், உலகிற்கும் அடையாளமின்றி நாம் கடந்துச் செல்கிறோம்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) ஒருமுறை சொன்னார், "நான் என் பத்து வருட முடிவுகளை ஒரு நாளின் முடிவில் எடுக்க மாட்டேன்; நான் இன்று எடுக்கும் முடிவுகள் என் அடுத்த பத்து வருடங்களுக்கானவை."

அவர் வெற்றிக்குக் காரணம், ஆழமான, நீடித்த ஆலோசனைக்கு நேரத்தை ஒதுக்கினார்! ஆனால், நாமோ இலக்கு தெளிவு இல்லா வாழ்க்கை வாழ்ந்து, இருந்து பயனற்ற வாழ்க்கை வாழ்கிறோம்.

தோழர்களே! இத்தகைய மனநிலை மாறிட, அந்த 30 நிமிடங்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திட வேண்டும். விபத்திலிருந்து தப்பி வந்த ஒருவரிடமும், இறுதி நொடியில் வென்ற தடகள வீரர்களிடமும் நாம் கேட்டுப் பார்த்தும் அறிந்துக் கொள்ள வேண்டும். ஒரு விபத்தில், வைத்தியசாலைக்குச் செல்ல நீங்கள் எடுத்துக் கொண்ட 30 நிமிடங்கள் உங்களை வாழ வைத்திருக்கும். ஒரு தடகள வீரனின் வெற்றி, பாய்ச்சலை முடிவு செய்த 30 விநாடிகளின் ஆழமான பயிற்சியின் விளைவு!

வெற்றி என்பது 30 நொடிக் காணொளி அல்ல; அது 30 நிமிடங்களின் மன உறுதியால் பின்னப்படுவது!

அமைதி என்னும் நண்பரை யாருக்கும், குறிப்பாக பெருவாரியான இளையோருக்குப் பிடிப்பதில்லை. தனிமையில் சில மணித்துளிகள் என்பது, ஆழ்கடலில் அரிதாகக் கிடைக்கும் முத்திற்குச் சமமாகும். அதை கடினப்பட்டு எடுத்திட அல்லது வாழ்ந்திட முடியாமல் இளைஞர்கள் திணறுகின்றனர்.

எனவே, உங்களின் வாழ்வு வளமாக, அடுத்தவருக்கு நீங்கள் வரமாக மாற, நான் சில வழிகளை முன்வைக்கிறேன்:

  1. ஓவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் 5 நிமிடங்கள் அமைதியில் இருக்கப் பழகுங்கள். உங்கள் கவனம் முழுவதும் உங்களை ரீங்காரமிடட்டும். எந்தப் பணியைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம்.

  2. உங்களில் எழும் உங்களைப் பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களை முற்சார்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

  3. நேர்மறை எண்ணங்களை எந்தவித அழுத்தமின்றி அன்றாடம் கவனமுடன் வளர்த்துக் கொள்ளுதலும், எதிர்மறை எண்ணங்களை ஏற்று இனி அவற்றை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  4. அலைப்பேசியில் அன்பைத் தேடுவதைத் தவிர்த்துவிட்டு, அடுத்தவரோடு நேரம் செலவழித்து, அன்போடு வாழப் பழகுங்கள். உங்கள் உண்மையான உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

உறுதியாகச் சொல்லுகிறேன், இந்தச் சின்னஞ்சிறிய பழக்கங்கள் உங்களில் ஆழமான அழுத்தத்தையும், அமைதியான தெளிவையும் உருவாக்கும். நம் வாழ்வு வளமாகும். அடுத்தவருக்கு நாம் வரமாவோம்!

நன்றி!

0 comments:

Post a Comment