ADS 468x60

18 January 2026

கிழக்குமாகாணப் பொங்கல் விழா ஆர்பரிப்பும், கல்வி எழுச்சியும்: சங்கமம்

மட்டக்களப்பின் அந்த மங்கலக் கூத்திசை என் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 2026ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் நாள். திக்கோடை கணேச மகாவித்தியாலயத்தின் வாயிலில் நான் காலடி எடுத்து வைத்தபோது, அந்த அதிகாலைப் பொழுது எனக்குள்ளே ஒரு புதுவிதமான சிலிர்ப்பை உண்டாக்கியது ,அது வெறும் ஒரு பாடசாலை விழாவிற்குச் சென்ற உணர்வல்ல எனது வேர்களைத் தேடி, எனது ஆதி அடையாளங்களைத் தழுவிக் கொள்ளப் போகிறேன் என்ற ஒரு ஆத்மார்த்தமான பயணத்தின் தொடக்கம்.

எமது கிழக்குப் பிராந்திய பொங்கல் நிகழ்வானது திக்கோடையில் உள்ள கணேச மகாவித்தியாலயத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி நண்பகல் 12மணிக்கு இனிதே நிறைவுற்றது.


இதன் நோக்கம் என்னவென்றால், அனர்த்தங்களாலும் பொருளாதார நலிவுறலாலும் பாதிக்கப்பட்ட, மிகவும் பின்தங்கிய அந்தப் பிரதேசத்துத் தமிழ் மாணவர்களின் கல்வியில் ஒரு வலுவான அடித்தளத்தை இடுவதுதான். வறுமையால் ஒரு பிள்ளையின் கல்வி இடைவிலகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் காட்டிய அந்தத் தீவிரத்தன்மை என்னை நெகிழ வைத்தது.

தேர்வு செய்யப்பட்ட அந்தப் பிள்ளைகளுக்கு அடிப்படைப் பாடவிதான வசதிகளை வழங்கியபோது, அவர்களின் முகத்தில் தெரிந்த அந்த நிம்மதி இருக்கிறதே... அதுதான் உண்மையான வெற்றி. "மன அழுத்தத்தில் உறைந்து கிடக்கும் அந்தப் பிஞ்சு உள்ளங்களை விடுவித்து, அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை வடிவமைத்துக் கொடுப்பதே" அந்தப் பொங்கல் விழாவின் சாரமாக இருந்தது. கிழக்கின் முதல் பாடசாலைப் பொங்கல் நிகழ்வு, அட்சரம் பிசகாத ஒரு பண்பாட்டுப் படையலாக அங்கே நிலைநிறுத்தப்பட்டது.

இதில் அதிதிகளை வரவேற்றல் முற்றிலும் தமிழ்பண்பாடு மாறாத ஒரு அழகிய நிகழ்வாக இருந்தது. இப்பாடசாலையின் அதிபர் தலைமைதாங்க, அதிதிகள், கௌரவிக்கபர்படுவோர், தழிழர் முறைப்படி தலைப்பாகை அணிவிக்க அந்த வேளையில் மட்டக்களப்பின் மங்கல கூத்திசை முழக்கம் ஒரு பக்கமும் மேள இசை இன்னொரு பக்கமும் முழங்க, அதனோடு தொடர்ந்து மாலை அணிவித்து கூத்துப்பாடலுடன் முன்னே மங்கல குத்துவிழக்கேந்திய சிறுமிகள் அணிவகுக்க குருத்துகள் பின்னி அலங்கரிக்கப்பட்ட வாழைமரத்தோரணங்களின் இடையே அழைத்துச்செல்லப்பட்டனர். இது வெறும் கௌரவ அழைப்பல்ல, எமது ஆதி அடையாளங்களின் மீட்சிக்கான ஒரு கலாசார அழைப்பு” என்பதை அந்த நொடியே நான் உணர்ந்து கொண்டேன்.  அந்த நொடி என் மேனி பல முறை சிலுர்த்துக்கொண்டது, மனதோ பேரெழுச்சிகொண்டது, தமிழர்களுக்கென இத்னை அடையாளங்களா? நாம் தனித்துவமானவர்கள் என்பதற்கு இன்னும் எத்தனை எத்தனை இருக்கின்றது என ஒரு துள்ளலில் என்னை நான் மறந்த கணங்களாக பொங்கல்போல பொங்கி வழிந்தது மகிழ்சி.

உழைப்பின் வாசனையும், மரபுகளின் மீட்டெடுப்பும்

பாடசாலைக் வளாகம் மற்றும் கலையரங்கம் அன்றைக்கு ஒரு வாழும் அருங்காட்சியகமாகவே காட்சியளித்தது. எமது முன்னோர்களின் உழைப்பைச் சொல்லும் கருவிகள் அங்கே வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. நவீன இயந்திரங்கள் எமது விவசாய வாழ்வை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், காளைமாடுகள், மாட்டு வண்டில்கள், புரிகட்டிய முக்காலி, வேலகாரன் கம்பு, மரைக்கால், தாக்கத்தி (அருவி வெட்டும் கத்தி), சுழகு, உரல், உலக்கை, பாரம்பரியப் பொங்கல்ப்பானை மற்றும் உப்பட்டிக்கயிறு என்பன ஒரு பக்கத்தில் கம்பீரமாக வைக்கப்பட்டிருந்தன.

மறுபுறம் சிறுமிகள் கோலம் போட, பெண்கள் புதிய நெற்கதிர்களை உரலில் போட்டு மாறி மாறி இடித்துக்கொண்டிருந்தனர். அங்கு ஒலித்த தாளத்துக்கிசைவாய் அந்த உலக்கையின் ஓசையும், உரலின் ஆழமும் வெறும் தானியத்தை இடிக்கவில்லை, எம்முடைய அழிந்து வரும் பண்பாட்டையே உரமிட்டுப் புதுப்பித்துக் கொண்டிருந்தன.” அந்த அதிகாலை வெயில், மரங்களின் இடைவெளியில் புகுந்து அந்தப் பொங்கற்பானையின் மீது விழுந்தபோது, அது ஒரு தெய்விகக் காட்சியாகவே எனக்குத் தெரிந்தது.

குரவை ஒலிக்க, கொட்டுமேளம் அதிர, அந்தத் தலைப்பாகை கட்டிய ஆண்களும், பாரம்பரிய உடையணிந்த பெண்களும் பொங்கலைத் தொடங்கிய அந்தத் தருணம், 2026ஆம் ஆண்டின் ஒரு நன்நிமித்தமாகவே எனக்குப் பட்டது. அது வெறும் அரிசி வெந்த வாசனையல்ல; அது அந்த மண்ணின் வாசனை, எம்முடைய இரத்தத்தில் ஊறிய நன்றியுணர்வின் வாசனை.

"ஒரு பிள்ளையைச் செதுக்க ஒரு கிராமமே தேவை என்பார்கள்; அன்று திக்கோடையில் அந்த உண்மையை நான் கண்கூடாகக் கண்டேன்." அனைவரும் இணைந்து அந்தப் பாரம்பரியப் பொங்கல் படையலைப் பண்பாட்டோடு நடாத்தியபோது, அது ஒரு சடங்காகத் தெரியவில்லை. மாறாக, ஆருத்துப் போகும் (அழிந்து போகும்) எமது தமிழர் பண்பாட்டை எமது பிள்ளைகளின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கும் ஒரு வடிவமைப்பாகவே (Shaping) எனக்குத் தெரிந்தது.

கடல் கடந்தும் கரம்கொடுத்த ஒரு சிற்பி

இந்த மாபெரும் நிகழ்வின் பின்னணியில் இருக்கும் உந்துசக்தி பற்றி நாம் ஆழமாகப் பேச வேண்டும். கனடாவிலிருந்து இயங்கும் "உறங்காவிழிகள்" (Urangavzhigal) தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகரும், தன்னிகரற்ற சமூகச் செயற்பாட்டாளருமான திருவாளர் சு. சோமசுந்தரம் அவர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. அவர் கனடாவில் வசித்தாலும், அவரின் எண்ணங்களும் இதயமும் எப்போதும் திக்கோடை போன்ற குக்கிராமங்களின் முன்னேற்றத்திலேயே லயித்திருக்கின்றன.

அவர் இந்த நிகழ்வை ஒரு 'நன்கொடை வழங்கும் நிகழ்வாக' மட்டும் பார்க்கவில்லை; மாறாக, தமிழை, தமிழ் சொந்தங்களை, அவர்களின் கலை கலாசார விழுமியங்களை மீட்டெடுக்கும் ஒரு வேள்வியாக” இதனை முன்னெடுத்திருக்கிறார். அவரின் இந்தத் தூரநோக்

குச் சிந்தனையைத் தரைமட்டத்தில் செயல்படுத்திய இலங்கைக்கான இணைப்பாளர் திரு. கஜேந்திரன், மற்றும் சேனாதி ஜெகன், அம்பாறை மாவட்டச் சமூகச் செயற்பாட்டாளர் பிரதீபன் ஆகியோரின் உழைப்பு பாராட்டுக்குரியது. இவர்கள் அந்தப் பிள்ளைகளின் அருகில் நின்று, அந்தத் தியாகங்களை ஒருங்கிணைக்கும் விதம், புலம் பெயர்ந்தோரின் நிதியுதவி எவ்வாறு முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.

"உண்மையான தொண்டாண்மை என்பது அருகில் இருப்பதில் இல்லை; தூரத்தில் இருந்தாலும் அந்த மக்களின் தேவையை உணர்ந்து, அவர்களின் வலியைப் போக்கும் வழியைச் செதுக்குவதில்தான் இருக்கிறது."

அல்லும் பகலும் அயராது உழைத்து, நிதி திரட்டி, எங்களைச் சரியான பாதையில் வழிப்படுத்திய அவரின் முயற்சியை வெறும் ஒரு 'நன்றி' என்ற வார்த்தையோடு மட்டும் கடந்துவிட முடியாது. அது ஒரு மனிதர் தன் இனத்தின் மீது கொண்ட தீராத காதலின் அடையாளம்.

கல்வியின் வறுமையும், ஒரு தலைமை ஆசிரியரின் இதயத்துடிப்பும்


இதன்பின் சம்பிரதாயபூர்வமான குத்துவிளக்கேத்தும் நிகழ்வு இடம்பெற தேவாரம் ஒலிக்கப்பட்டு அதன்பின் வரவேற்புரையினை திரு கலைச்செல்வன் ஆசிரியர் தொடங்க அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனமொன்றினை அந்தப் பாடசாலை மாணவிகள் ஆற்றுகைப்படுத்தினர். அந்த நடனம் பல தாளக்கட்டுகளைக்கொண்ட வௌ;வேறுபாடல்களின் தொகுப்பாக கலாசாரத்தை சாறுபிழிந்து தரும் அளவுக்கு அழகாக அனைவரையும் கவர்ந்தது. சிறுமியர்கள் மிக நேர்தியாக அதனை அழிக்கை செய்து இன்னும் இன்னும் கலாசார பிணைப்பை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

விழாவின் கொண்டாட்டங்களுக்கு அப்பால்ஒரு கசப்பான உண்மையை அந்தப் பாடசாலையின் அதிபர் நித்தியானந்தம் அவர்கள் முன்வைத்தார். அந்த வார்த்தைகள் இன்றும் என் மனதில் ஒரு பாரத்தை உண்டாக்குகின்றன. அவர் சொன்னது இதுதான்:

எமது பிள்ளைகளிடம் ஆர்வம் இருக்கிறது, ஆனால் அவர்களுக்கு வழிகாட்டத் தேவையான கணித, ஆங்கில, விஞ்ஞான ஆசிரியர்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தத் துறைகளில் உயர்கல்வியைத் தேர்வு செய்ய முடியாத ஒரு ‘கல்வியின் வறுமை’ எமது பிரதேசத்தில் நிலவுகிறது.”

இது என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. வெறும் பாடப்புத்தகங்களையும், பாதணிகளையும் வழங்குவதுடன் எமது கடமை முடிந்துவிடுகிறதா? இல்லை. ஒரு நவீன உலகில் எமது பிள்ளைகள் போட்டியிட வேண்டுமானால், அவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியான வசதிகள் தேவை. ஒரு ஸ்மார்ட் போர்ட் (Smart Board) அல்லது ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தால் கூட, இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு வினைத்திறனான கல்வியை வழங்க முடியும்” என அவர் கேட்டபோது, அது ஒரு கோரிக்கையாகத் தெரியவில்லை, அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான ஒரு ஏக்கக் குரலாகவே இருந்தது.

அதேபோல இந்தக் கிராமத்து பிள்ளையார் ஆலயத்தலைவரும் மட்.பட்.சுரவணையூற்று பாடசாலை அதிபருமான திரு திருவருட்செல்வன் பேசுகையில் நீங்கள் 'எமது குக்கிராமத்தையும் எங்கோ தொலைவில் இருந்து எம் மண்ணோடும், மக்களோடும் தொடர்பினை ஏற்படுத்தி இப்பெரும் நிகழ்வை செவ்வனே செய்ய உதவிய அனைவரையும் நன்றிகூறிப் பாராட்டி இந்த மக்கள் சார்பில் உங்களை எல்லாம் இங்கு வரவேற்று வாழ்த்த ஆர்வமாக நிற்கின்றோம்' எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கொண்டுவந்து வைத்த மாணவர்களுக்கான இந்த வருடத்துக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் ஒரு தொகுதியை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் உறங்காவிழி அமைப்பின் பிரதிநிதிகளாக வருகைதந்த இலங்கைக்கான இணைப்பாளர் திரு கஜேந்திரன், மற்றும் சேனாதி ஜெகன், அம்பாரை மாவட்ட சமுக செயற்பாட்டாளர் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு அவர்களின் பொற்கரங்களால் வழங்கிவைத்தனர். இவர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டு சிறப்புரை நிகழ்த்திவைத்தமை முத்தாய்பாய் இமைந்தது.

மூத்தவர்களின் கௌரவமும், மூச்சடக்கிய வித்தகமும்

இந்த நிகழ்வில் எனக்குப் பிடித்தமான, மிக நெகிழ்வான தருணம் எதுவென்றால், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த எமது பாரம்பரியக் கலைஞர்களும் நாட்டு வைத்தியர்களும் கௌரவிக்கப்பட்ட அந்த நிமிடம் தான். இது ஒரு நெகிழ்வான தருணமாக பெருமைப்படும் பண்பாட்டின் அம்சமாக இருந்தது.

·        திரு. சீனித்தம்பி சுந்தரலிங்கம் (80 வயது): தனது 80 வயது முதிர்ந்தும், நாட்டு வைத்தியத்திலும், சோதிடத்திலும், விஷக்கடி வைத்தியத்திலும் இன்றும் சேவையாற்றி வருபவர். அவர் பேசியபோது, எமது பாரம்பரியம் எம்மைப் போல் வயதாகி ஒரு மூலையில் உறங்கிவிடுமோ என்று அஞ்சினேன், ஆனால் இன்று அது மீண்டும் ஒளிர்கிறது” என்றார். அந்த வார்த்தைகளில் இருந்த ஆசுவாசம் எனக்குள் ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்தது.

·        திருவாளர் மகாலிங்கம் அண்ணாவியார்: 65 வயதைக் கடந்தும், அவரின் குரல் இன்னும் 8 கட்டை சுருதியில் கணீர் என்று ஒலிக்கின்றது. சினிமாப் பாடகர்களால் ஈடு செய்ய முடியாத ஒரு வீரம் அந்த நாட்டுக்கூத்துப் பாடல்களில் இருந்தது. ரீவிகளில் வராத இவர்கள் தான் தமிழின் உண்மையான வரலாற்றுச் சுவடுகள், கல்லில் பொறிக்கப்பட வேண்டிய சேவகர்கள்.” இவரது பல தாளக்கட்டுகளை எமக்கு அரங்கம் அதிர இசைத்துக்காட்டியமை நரம்புகளை முறுக்கேற்றும் தமிழ் இசைக்கு ஈடேதும் இல்லை, இதனால்தான் காடுகளிலும் மேடுகளிலும் அல்லும் பகலும் ஊனுறக்கம் இல்லாது உழைத்தவர்கள் பிறசரும், சீனியும் பெரிய வருத்தங்களும் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்பது பொய்யல்ல.

·        திரு. எஸ். சிவகுணம்: பல நாட்டுக்கூத்துகளில் இராமன், இலட்சுமணன் பாத்திரங்களை ஏற்று, விடிய விடிய கலையை அரங்கேற்றியவர். டிவி, ரேடியோக்கள் கோலோச்சாத காலத்தில் எமது இதிகாசங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த புதையல்கள் இவர்கள்.

எதிர்காலச் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்வது என்ன?

இந்த நிகழ்வின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் பல. திக்கோடை போன்ற ஒரு பின்தங்கிய கிராமத்தில் இவ்வளவு நேர்த்தியான ஒரு பண்பாட்டு விழாவை நடத்த முடியும் என்றால், எம்மால் எதையும் சாதிக்க முடியும். இது வெறும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல;

·        எமது கலாசாரத்தை மீட்டெடுக்கும் ஒரு எழுச்சி.

·        பின்தங்கிய பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிக்கும் சிறகு.

·        புலம்பெயர் உறவுகளுடன் மண்ணைப் பிணைக்கும் இணைப்பு.

·        மூத்த கலைஞர்களைக் கௌரவிப்பதன் மூலம் எமது அடையாளத்தைப் பறைசாற்றுதல்.

·        மாணவர்களிடத்தில் தலைமைத்துவப் பண்பையும், நன்றியுணர்வையும் விதைத்தல்.

எனது கருத்தாக, இது ஒரு சராசரி நிகழ்வுக்கு அப்பால் எமது கடமை என உணரும் சிலரால் செய்யப்படும் ஒரு வேள்வித்தீ. அதன் ஒரு சிறு பொறியாக நானும் இணைந்து இதனைச் சாதித்தோம் என மகிழ்வடைகின்றேன். இந்த நிகழ்வு உண்மையில் பல தமிழ்தலைமைகள் சேர்ந்து செய்யவேண்டிய பெரிய நிகழ்வு, ஆனால் அவர்களையெல்லாம் காத்திருந்து செய்து சாதித்தவை ஒன்றுமில்லை என்பதற்காக நாங்கள் எமது பாரம்பரியத்தை எமது சமுகத்தைக்கைவிடலாகாது என்பதற்கான உதாரணமே இந்த பிராந்திய எழுச்சிவிழா.

இதில் குறிப்பாக ஆசிரியர் ஈழவேந்தன் ஆசிரியர் கலைச்செல்வன்  என்போரின் அளப்பிய பங்களிப்பை யர்ரும் மறந்துவிடலாகாது. இவர்கள் இந்த நிகழ்வை செவ்வனே செய்து முடிக்க தீயாய் வேலை செய்தமையினை நன்றியுணர்வோடு பாராட்டுகின்றோம்.

முடிவாக ஒரு எண்ணம்...

அன்றைக்கு அந்தப் பாடசாலைக் கலையரங்கை விட்டு வெளியே வரும்போது, என் கைகளில் எமது பாரம்பரியத்தின் ஒரு சிறு பொறி இருந்தது போன்ற ஓர் உணர்வு. எமது மொழியும் கலாசாரமும் அழிந்துவிட்டால், எமக்கென ஓர் இன அடையாளம் இல்லாமல் போய்விடும்.” அதனை கட்டிக்காப்பது அத்தனை இலகுவானதல்ல இந்த திறந்த பொருளாதார வெளியில், அடக்குமுறை பேரின இடரில், நாகரிகமோகப் பரப்பில், இத்தனை சவாலையும் தாண்டி இந்த அடையாளங்களை நாம் கொண்டுவந்துள்ளோம் என்றால் நாங்கள் அதனை இன்றும் அழியவிடமாட்டோம் அதற்காக ஒன்றிணைவோம், அதற்காக எமது சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவோம், பாரம்பரியச் சேவையாளர்களைக் கலைஞர்களைக் கண்டறிவோம் ஊக்குவிப்போம், அதனைக் கடத்துவோம் வாழவைப்போம் என்ற உறுதிமொழி நாம் ஒவ்வொருவரிடமும் மிகையாக இருந்ததை அவதானித்தமை இந்நிகழ்வு கொண்டுவந்த 100 வீத வெற்றியைப் பறைசாற்றுகின்றது.

எனது கருத்தாக, இது ஒரு சராசரி நிகழ்வுக்கு அப்பால் எமது கடமை என உணரும் சிலரால் அந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சிலரால் செய்யப்படும் ஒரு வேள்வித்தீ. அதனை பரவச் செய்யும் ஒரு சிறு பொறியாக நானும் இணைந்து இதனை சாதித்தோம் என மகிழ்வடைகின்றேன். உறங்காவிழிகள் பெயருக்கேற்ற சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது.  

திக்கோடை மாணவர்களின் கண்களில் தெரிந்த அந்த ஒளி, எமது எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை எனக்குச் சொல்லியது. ஆனால், அந்த ஒளியைச் சுடராக மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கையிலும் தான் இருக்கிறது.












































































 

0 comments:

Post a Comment