அவர்தான் அல் அஹமது. சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் 43 வயதுடைய சாதாரண மனிதர். அவர், துப்பாக்கிச் சூடு நடத்திய கொடூரனைச் சாமர்த்தியமாக மடக்கிப் பிடிக்கத் துணிந்தார். அவரது கையில் துப்பாக்கியோ, கூர்மையான ஆயுதமோ இருக்கவில்லை. ஆனால், இருந்தது என்ன தெரியுமா? மனிதநேயத்தின் மீதான ஆழமான விசுவாசமும், அசாத்தியமான தைரியமும்!
அவர் பின்னால் இருந்து பாய்ந்து, எந்த ஆயுதமும் இல்லாமல், வெறும் கரங்களால் அந்தப் பயங்கரவாதியைத் தாக்கி, அவன் கையில் இருந்த துப்பாக்கியையும் பிடுங்கி எறிந்தார். ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்; இது வெறும் வீரச் செயல் அல்ல, இது ஒரு தலைவனின் அடையாளம்! தனது இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அவர் சிந்தித்து, பயந்து ஓடியிருக்கலாம். ஆனால், அவர் ஓடவில்லை; எதிர்த்து நின்றார்!
இந்த அசாத்தியத் துணிவு குறித்த காணொளிக் காட்சிகள் உலகம் முழுவதும் பரவியபோது, உலகம் அவரைப் பார்த்து வியந்து நின்றது. ஆம், அன்பின் உறவுகளே, மனித குலத்தின் மிகச் சிறந்த பக்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.
இன்று, அல் அஹமது அவர்கள் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருகிறார். அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சென்று அவரை விசாரித்து, "அஹமதுவை அவுஸ்திரேலியாவின் ஹீரோ" என்று மனதாரப் பாராட்டினார். சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட ஏனைய உலகத் தலைவர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இதைவிட முக்கியமானது ஒன்று. பல உயிர்களைக் காப்பாற்ற அவர் காட்டிய துணிவுக்காக, சமூக நன்கொடைகளாகச் சேகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆம், 25 இலட்சம் டொலர்கள்! அவர் தனது மருத்துவமனைப் படுக்கையிலிருந்தே இந்தக் காசோலையைப் பெற்றார்.
இந்தப் பரிசு எதைக் குறிக்கிறது? இது வெறுமனே டொலர்கள் அல்ல; இது துணிவுக்கான மரியாதை! உலகில், நீதிக்குக் குரல் கொடுப்பவர்களுக்கும், உயிர்களைக் காக்கத் துணிபவர்களுக்கும் சமூகம் துணை நிற்கும் என்பதற்கான உன்னதமான சான்று இது.
மகாத்மா லூதர் கிங் ஜூனியர் அவர்கள் ஒருமுறை சொன்னார்: "ஒரு மனிதனின் இறுதி அளவுகோல், சௌகரியம் மற்றும் வசதியின் தருணங்களில் அவன் எங்கே நிற்கிறான் என்பதில் இல்லை; சவால் மற்றும் சர்ச்சையின் காலங்களில் அவன் எங்கே நிற்கிறான் என்பதில்தான் உள்ளது."
அல் அஹமது, சவால் நிறைந்த அந்தத் தருணத்திலே நீதிக்காக உறுதியாய் நின்றார்.
எனவே, நாம் அனைவரும், அல் அஹமதுவின் அசாத்தியத் தைரியத்தையும், மனிதநேயத்தையும் போற்றுவோம்! இவரே, எமது எதிர்காலச் சவால்களை வென்றெடுக்கச் சாத்தியமான வழிகாட்டி. இத்தகைய துணிவும் சமூகப் பொறுப்புணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதே நான் உங்களுக்கு விடுக்கும் உறுதியான அறிவுரை!
நன்றி.


0 comments:
Post a Comment